privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

-

ஒரு மாபெரும் வெற்றிச் செய்தி!

“தீட்சிதர் சொத்து அல்ல தில்லைக் கோயில்!
தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை
தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்!”

என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இன்று(02.02.09) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும், அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. பானுமதி. (பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியவர்) ”தாங்கள் மேல்முறையீடு செய்ய உதவியாக, தீர்ப்பின் அமலாக்கத்தை 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு தீட்சிதர்கள் கோரினர்”

“ஒரு நிமிடம் கூட நிறுத்தி வைக்க முடியாது” என்று மறுத்து விட்டார் நீதிபதி.

சுமார் 20 ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த இந்த வழக்குக்கு உயிர் கொடுத்து இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள்தான். “அர்ச்சகனின் உரிமை அல்ல, வழிபடுபவரின் உரிமைதான் முதன்மையானது” என்ற எமது வாதம்தான் இந்தத் தீர்ப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறோம்.

யாரும் சாதிக்க இயலாது என்று கூறிய வெற்றியை எமது அமைப்புத் தோழர்கள் சாதித்திருக்கின்றனர்.  முதலில் சிற்றம்பல மேடையில் தமிழின் உரிமையை நிலைநாட்டினோம். இன்று கோயிலின் மீது தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டியிருக்கிறோம். எம்முடைய விடாப்பிடியான போராட்டத்திற்கும், எமது தோழர்களின் கடும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி இது. ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் தியாகம் செய்த இந்த காலத்தில், தமிழ் மக்களை தலைநிமிரச் செய்துள்ள இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. தமிழுக்கென்று உயிரையும் கொடுப்போமென வெற்றுச் சவுடால் அடிக்கும் திராவிட, தமிழினவாதிகள் இத்தனை ஆண்டுகள் செய்ய முடியாத செயலை புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் செய்திருக்கிறோம். கம்பீரமாக இந்த வெற்றியை அனைவருக்கும் அறிவித்து கொண்டாடுமாறு தோழர்களையும், பதிவர்களையும், வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வெற்றிக்கு முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள பிரசுரத்தை தேவை கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

பல்லாயிரம் ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும், பொன்னோடு வேய்ந்த கருவறையும் கொண்ட தில்லை நடராசர் கோயில், தீட்சிதர்களின் தனிச்சொத்தாக இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் தொடங்கி பழனி, திருச்செந்தூர், உள்ளிட்ட தமிழகத்தின் பெருங்கோயில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. ஆனால் தில்லைக் கோயிலை மட்டும் 300 தீட்சிதர் குடும்பங்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.

இந்தியாவில் எந்தக் கோயிலாக இருந்தாலும் மடாதிபதியாக இருந்தாலும் அவர்களைக் கணக்கு கேட்கும் அதிகாரமும் கண்காணிக்கும் அதிகாரமும் இந்து அறநிலையத்துறைக்குத உண்டு. தில்லைக்கோயில் தீட்சிதர்களின் தனிச்சொத்து அல்ல என்று 1888 இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வழக்கிலேயே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் 1952 இல் பெற்ற ஒரு காலாவதியான தீர்ப்பை வைத்துக் கொண்டு, நீதிமன்றத்தை ஏமாற்றியும், அரசாங்கங்களை அவ்வப்போது சரிக்கட்டிக் கொண்டும் நடராசர் கோயிலையும் அதன் சொத்துகளையும் தீட்சிதர்கள் ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.

கோயிலில் அம்மனின் கழுத்தில் உள்ள தாலியையே காணவில்லை. கோயில் கலசத்தில் உள்ள தங்கத்தை சுர்டி விற்றுவிட்டார்கள். கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நகைகள் கணக்கில் வரவில்லை. தமிழகத்திலேயே இந்தக் கோயிலில் மட்டும்தான் உண்டியலே கிடையாது; பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை தீட்சிதர்களே தமக்குள் பங்கிட்டு எடுத்துக் கொள்கிறார்கள்..

கோயிலுக்குள் தீட்சிதர்கள் மது, மாது, அசைவ உணவு, காமக்களியாட்டங்கள், கிரிமினல் குற்றங்களை கேட்பாரின்றி நடத்துகிறார்கள். கோயிலுக்கு உள்ள ஜிம் வைத்திருக்கிறார்கள். இரவு 10 மணிக்கு கோயிலை இழுத்து மூடிவிட்டு அதனை விடுதியாக மாற்றி கும்மாளமடிக்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கோயிலுக்கு உள்ளே நாய் வளர்க்கிறார்கள். காலையில் கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் அங்கே இரைந்து கிடக்கும் பான்பராக் பாக்கெட்டுகளையும் சீமைச்சாராயப் புட்டிகளையும் பார்த்துப் பதறுகிறார்கள். இந்த அநீதிகளைத் தட்டிக் கேட்ட ஒரு தீட்சிதர் உள்ளிட்ட 3 பேர் கோயிலுக்குள் மர்ம்மான முறையில் இறந்திருக்கிறார்கள். தீட்சிதர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற புகார் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இவர்களுக்கு எதிராக இதுவரை மொத்தம் 15 கிரிமினல் வழக்குகள் சிதம்பரம் காவல்நிலையத்தில் இருக்கின்றன. திருட்டு, அடிதடி குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட தீட்சிதர்கள் இன்னுமும் ‘பகவானுக்கு’ பூசை செய்து கொண்டிருக்கிறார்கள். நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்களே கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இத்தனைக்குப் பிறகும் அரசாங்கம் ஏன் தீட்சிதர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை, கோயிலின் நிரவாகத்தை அறநிலையத்துறை ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் ஆச்சரியமடையலாம். இந்தக் கோயிலை அரசாங்கத்தால் ஏன் மேற்கொள்ள முடியவில்லை, தீட்சிதர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதிசயம்தான். எனினும் இதுதான் உண்மை.

பல முறைகேடுகள் நடந்து, தீட்சிதரக்ளிலேயே ஒரு பிரிவினர் இந்த அயோக்கியத்தனங்களைச் சகிக்க முடியாமல் போலீசுக்கும் அரசாங்கத்துக்கும் புகார் கொடுத்த்தன் அடிப்படையில் 1997 இல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இக்கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியை நியமித்த்து. அந்த நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினார்கள் தீட்சிதர்கள். இது தொடர்பான கிரிமினல் வழககு கூட இன்று வரை நிலுவையில்தான் இருக்கிறது அதிகாரிகளையும் அரசாங்கங்களையும் சரிக்கட்டிக் கொள்வதன் மூலம்தான் தில்லைக் கோயிலில் தமது ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ள தீட்சிதர்களால் முடிந்திருக்கிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள்தான் தீட்சிதர்களின் கொட்டத்துக்கு முடிவு கட்டினோம்.

8 ஆண்டுகளுக்கு முன் நடராசர் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து கையை முறித்து வீசினார்கள் தீட்சிதர்கள். தேவாரமும் திருவாசகமும் பாடப்பட்ட அதே சிதம்பரத்தில் அந்த தமிழிலக்கியங்களை அன்று கரையானுக்கு இரையாக்கிய தீட்சிதர்கள், அவற்றைப் பாடுவதற்குக் கூட தடை விதித்தார்கள். இந்தத் தடைக்கு எதிராகத் தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடினோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக சிவனடியார் ஆறுமுகசாமி மட்டுமின்றி, பக்தர்கள் அனைவரும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி இறைவனை வழிபடலாம் என்ற ஆணையைப் பெற்றோம்.

அந்த அரசாணையின் அடிப்படையில் திருவாசகம் பாடச்சென்ற சிவனடியாரையும், அவருக்குப் பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை உயரதிகாரிகளையும் தடுத்துத் தாக்கிய தீட்சிதர்களையும் அவர்கள் நடத்திய காலித்தனங்களையும் தொலைக்காட்சியில் இந்த நாடே கண்டது. சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடி வழிபடும் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு ஆணை பிறப்பித்திருந்தும், அதை மீறி பக்தரக்ளிடம் 50, 100 என்று பணம் வசூலிக்கிறார்கள் தீட்சிதர்கள். அரசாணை பிறப்பிக்கப் பட்ட பிறகும், சிற்றம்பல மேடையில் நின்று தமிழ்பாட ஆறுமுகசாமி அன்றாடம் தீட்சிதர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

பக்தர்களின் தமிழ் பாடி வழிபடும் உரிமையை ஆமல்படுத்துவதற்கே ஆலயத்தை அறநிலையத்துறை மேற்கொண்டால் மட்டும்தான் முடியும். அது மட்டுமல்ல, கோயில் சொத்துக்கள் களவு போவதைத் தடுக்கவும் இது ஒன்றுதான் வழி. சிதம்பரம் நகரப் போருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைக் கள்ளத்தனமான விற்றிருக்கிறார்கள் தீட்சிதர்கள். இதற்கான ஆதாரங்களை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம். தீட்சிதர்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கு போட்டிருக்கிறோம்.

மக்களுடைய பக்தி உணர்வைப் பயன்படுத்தி தமது சொந்த ஆதாயத்துக்காக கோவிலில் வழிப்பறிக் கொள்ளை நடத்தும் தீட்சிதர் கும்பலிடமிருந்து தில்லை நடராசர் கோயிலை அரசு கைப்பற்ற வேண்டும். கொள்ளையடிக்கும் உரிமையை மத உரிமை என்ற பெயரில் நிலைநாட்டிக் கொள்ள அரசு அனுமதிக்க்கக் கூடாது. ஒரு தனிச்சட்டம் இயற்றி இக்கோயிலை  அறநிலையத்துறையின் கீழ் அரசு கொண்டுவர வேண்டும். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கோருகிறோம்.