privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபாக் தீவிரவாதம்: எழவு வீட்டில் கிரிக்கெட் கவலை !

பாக் தீவிரவாதம்: எழவு வீட்டில் கிரிக்கெட் கவலை !

-

கிரிக்கெட்டில் கூட அரசியலா, தீவிரவாதமா என பலரும் பாக்கில் நடந்த இலங்கை அணி மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து பேசுகிறார்கள். எந்த நாட்டிலும் அதன் அரசியல் சமூக வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கும் போது அதன் தாக்கங்கள் விளையாட்டில் மட்டுமல்ல அன்றாடம் நடக்கும் எல்லா வாழ்க்கை இயக்கத்திலும் இருந்தே தீரும். இதை தூங்கிய ஒருவன் கனவில் விழித்து என்ன தீவிரவாதமா என்று அதிர்ச்சியடைவதில் பலனில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் ஏழை நாடுகளின் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அவர்களின் கவலையை போக்கும் நவீன மதமாக கிரிக்கெட் இருந்தது, இனி அதுவும் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அன்றாட அரசியல் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் எல்லா துயரமான நேரங்களிலும் கிரிக்கெட் எதிர்மறையில்தான் பங்காற்றியிருக்கிறது. கிரிக்கெட் நட்சத்திரங்களும், வாரிய முதலாளிகளும் அதன் பிரம்மாண்ட வருவாய்க்காக மட்டுமே புதிது புதிதாக பல போட்டிகளை நடத்தி வருகிறார்கள். கிரிக்கெட் மீதான வெறி எல்லா சமுகக் கடமைகளிலிருந்தும் விடுபடும் ஒரு மயக்க நிலையையே மக்களிடத்தில் ஏற்படுத்துகிறது.

இதைத்தாண்டி இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் இருக்கும் மக்கள் தத்தமது தேசிய எல்லைகளைத் தாண்டி அருகாமை நாடுகளில் இருக்கும் மக்களை ஒரு விளையாட்டின் மூலம் நெருக்கத்தை -அது வரம்புக்குட்பட்டதாக இருந்தாலும்- உருவாக்கியதை மட்டும் கிரிக்கெட்டின் பல கெட்டதுகளில் இருக்கும் ஒரு நல்லது எனலாம். இதையும் தீவிரவாதிகள் நிறுத்திவிட்டார்கள் என்பதற்காக மட்டும் நாம் இந்தச் சம்பவம் குறித்து வருத்தப்படலாம்.

மும்பையில் 26/11 தாக்குதல் தொடர்பாக ஊடகங்கள், கட்சிகள் அனைவரும் பாக்கிஸ்தானை வறுத்தெடுத்தார்கள். ஏதோ பாக்கிஸ்தான் மக்களும் அரசும் தீவிரவாதத்தை முழுநேரத் தொழிலாக கொண்டிருப்பது போல சித்தரித்தனர். உண்மையில் தீவிரவாதத்தினால் அன்றாடம் பல அப்பாவி பாக் மக்கள் இறப்பதைப் பார்க்கும் போது இந்தியாவை விட பாக்தான் அதிகம் பாதிப்படைந்த நாடு. மேலும் இத்தகைய ஜிகாதி தீவிரவாதம் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் யூனியனை விரட்டுவதற்காக அமெரிக்கா உருவாக்கி அதன் புரோக்கராய் பாக் ராணுவ சர்வாதிகாரிகள் அமல்படுத்தியதின் தொடர் விளைவுதான் இத்தகைய நெருக்கடிக்கு பாக் ஆளாகியிருப்பதன் அடிப்படை.

கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா விளையாட்டுக்களும் இசுலாத்திற்கு விரோதமானது என்பது தாலிபானின் கொள்கை அதனால்தான் இந்த தாக்குதல் என சில ஆங்கில தொலைக்காட்சிகள் ஒரு கற்பிதத்தை பிரச்சாரம் செய்கின்றன. இது மட்டுமல் இன்னும் பல பிற்போக்குத்தனங்களை மதத்தின் பெயரால் அமல்படுத்திய தாலிபான் இயக்கமே அமெரிக்க சி.ஐ.ஏ மற்றும் பாக்கின் ஐ.எஸ்.ஐ சேர்ந்து பெற்றெடுத்த கள்ளக் குழந்தைதான். இதற்காகவே பாக்கிஸ்தான் முழுவதும் மதராசாக்கள் உருவாக்கப்பட்டு அதில் அப்பாவி இளைஞர்கள் மதத்திற்காக அல்லது இசுலாமிய சர்வதேசியத்திற்காக போராட வேண்டும் என்றொரு நிலைமையை உருவாக்குவதற்கு பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டன.

அந்தத்தீவிரவாதம் இன்று வளர்த்தவனையே எதிர்த்து நிற்கிறது. இந்தச்சூழலில்தான் ஒரு முப்பது ஆண்டுகளாய் பாக்கில் இராணுவ சர்வாதிகாரம் அமெரிக்காவின் தயவில் வாழ்ந்ததோடு எல்லா ஜனநாயக அமைப்புக்களையும் சீர் குலைத்திருக்கிறது. அதனால்தான் பாக்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, உண்மையான அதிகாரமின்றி இராணுவ அமைப்புக்கள் மற்றும் உளவுத் துறையின் செல்வாக்கில்தான் நாட்டின் தலையெழுத்து சிக்கியிருக்கிறது. இதிலும் தாலிபான் ஆதரவு, அமெரிக்க ஆதரவு, இந்திய எதிர்ப்பு என பல குழுக்கள் இருப்பதும் உண்மை. இத்தகைய குழப்பம் அமெரிக்காவின் போர் மேலாதிக்கத்திற்கு தோதாக இருப்பதால் இன்றும் பாக்கின் பிடி அமெரிக்காவின் கையில்தான் இருக்கிறது. இந்த அமெரிக்க அஜெண்டாவில் சமீபத்திய காலத்தில் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. இத்தகைய ராஜிய சூதாட்டத்தில்தான் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சிறைபட்டிருக்கிறது.

இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவெறி அரசு கொடூரமான போரை நடத்தி தினமும் நூற்றுக்கணக்கில் மக்களைக் கொன்று வரும் நிலையில் தெற்கில் கொழும்பில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. வடக்கில் குண்டுவெடிப்புகளின் மத்தியில் மக்கள் கதறிக் கொண்டிருக்கும் போது தெற்கில் மைதானத்தில் அடிக்கப்படும் பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இத்தகைய போர்ச்சூழல் பழகிப் போனதால்தான் என்னவோ இலங்கை அணி மற்ற நாடுகளின் அணிகள் செல்லத்தயங்கும் பாக்கிற்கு சென்றதன் காரணமாக இருக்கலாம். சொந்த நாட்டில் மக்களைக் கொன்று குவிக்கும் ஒரு சூழ்நிலையில் இலங்கை அணி கிரிக்கெட் ஆடுவதும் அதை இலங்கை அரசு எற்படுத்திக் கொடுப்பதும் ஒரு ஆபாசமான செயலில்லையா?

பாக்கின் எல்லாப்பகுதிகளிலும் குண்டுகள் அன்றாடம் வெடித்து அப்பாவி மக்கள் அனுதினமும் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கும் இந்த துயரமான சம்பங்களை மறந்து கிரிக்கெட் ஆடுவதும், அதற்கு ஏற்பாடு செய்வுதும் கூட நீரோ மன்னனது சமாச்சாரங்கள்தான். பாக் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்காத ஆளும் வர்க்கங்கள் கிரிக்கெட்டில் மட்டும் தேசிய வெறிக்காக கைதட்டும் உரிமையை ரசிகர்களுக்கு அள்ளி வழங்குகின்றது. ஆக  கிரிக்கெட்டின் மேல் கைவைத்தால் உலகின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதோடு அமெரிக்காவின் ஆணைக்கேற்ப இசுலாமியத் தீவிரவாதிகளை ஒடுக்கும் பாக் அரசுக்கும் பாடம் கற்பிக்கலாம் என்பதற்காவும் இந்த தாக்குதல் மும்பையில் நடந்ததைப் போன்று நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்த செய்தி வந்ததுமே எழவு வீட்டில் அனுதாபத்தை தெரிவிப்பதை விட கிரிக்கெட்டின் வர்த்தக ஆதாயங்கள் விரிவான கவலையுடன் விவாதிக்கப்படுவதும் நிச்சயமாக ஒரு ஆபாசமான செயல்தான். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்த சி.என்.என் ஐ.பி.எனின் ராஜதீப் சர்தேசாயும், என்.டி.டி.வியின் பர்கா தத்தும் கவலைப்பட்டு கேட்ட முக்கியமான கேள்வி ஏப்ரல் மேயில் நடக்க இருக்கும் இந்தியன் பிரிமியர் லீக்கின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஏதும் பிரச்சினை வருமா என்பதுதான். சிதம்பரமும் அந்த நாட்களில் தேர்தல் நடப்பதால் 20 இலட்சம் துணை ராணுவப் படையினர் நாடு முழுக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதால் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது சிரமம் எனவும் அதனால் போட்டியை தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்தார்.

ஆனால் அதையும் அவர் உத்தரவாக சொல்லவில்லை, இது பற்றி கிரிக்கெட் வாரியத்திடம் கலந்தாலோசிப்பதாகவும சொன்னார். ஐ.பி.எல்லின் தலைவரான லலித் மோடியோ எக்காரணம் கொண்டும் போட்டிகளைத் தள்ளி வைக்க முடியாது, அப்படிதள்ளி வைத்தால் இந்த ஆண்டு முழுவதுமே விளையாட முடியாத அளவுக்கு இந்திய அணியின் ஆட்டத் திட்டம் அதிகமாக இருக்கிறது என்றார். மேலும் தேர்தல் நடக்கும் 44 நாட்களில் தேசமே முடங்கிப்போய்விடுமா எனவும் அவர் கேட்கிறார். காரணம் 20 ஓவர் போட்டிகளில் பல நூறு கோடிரூபாயை கிரிக்கெட் முதலாளிகளும், வாரியமும் சம்பாதிக்கும் வர்த்தக நோக்கம்தான். இதனால்தான் லாகூர் தாக்குதலில் யார் இறந்தார்கள் என்று கவலைப்படுவதை விட இந்தியாவின் கிரிக்கெட் முடங்கிவிடுமா என்று ஊடகங்கள் கவலைப்பட்டன.

இந்த நிலைமையைப் பார்த்தால் இந்திய ராணுவமோ – அதுவும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் முடங்கியிருக்கிறது – அல்லது அமெரிக்க ராணுவத்தை வைத்தோ கூட அந்தப் போட்டிகளை நடத்துவார்கள் போலும். அடுத்த இந்த தீவிரவாதத் தாக்குதல் காரணமாக பாக் மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றி ஆய்வதற்குப் பதில் இனி பாக்கில் கிரிக்கெட் போட்டிகளே நடக்காது, இரண்டு வருடம் கழித்து நடக்க இருக்கும் உலகக்கோப்பை போட்டி என்னாகும், இந்தியத் துணைக்கண்டத்தில் வர்த்தகரீதியாக அள்ளிக் கொடுக்கும் கற்பக விருட்சகத்துக்கு ஏற்படும் அபயாம் பற்றி அதிகம் பேசினார்கள். லாகூரில் துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகளை விட இந்த வர்த்தக பயங்கரம் கொடூரமாக இருக்கிறது.

அடுத்து இந்தியாவில் இசட் பிரிவில் வரும் அரசியல்தலைவர்களுக்கான நவீன பாதுகாப்பில் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதிநவீன துப்பாக்கிகள் அதுவும் எப்போதும் சுடத் தயாராக இருக்கும் நிலையில் பயன்படுத்தப்படுமாம். ஆனால் மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்றால் யாருக்கு அதிர்ஷடம் உள்ளதோ அவர்கள் குண்டு வெடிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பதைத் தவிர வேறு வழியில்லை. இது போக இராணுவம், துணை இராணுவத்திற்கான பட்ஜெட் சென்ற ஆண்டைவிட முப்பது சதவீதம் அதிகமாம், எல்லாம் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குத்தான்.

எனினும் ஆப்கானில் அமெரிக்கா இருக்கும் வரையிலும், காஷ்மீர்பிரச்சினை தீர்க்கப்படாத வரையிலும் அமெரிக்காவின் கூட்டாளியாக இருக்கும் பாக் மற்றும் இந்தியாவின் பகுதிகள் எதுவும் பயங்கரவாதத்திலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் இந்தியாவை தொடர்ந்து தாக்கப்போவதாக அல்கைதா அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. ஒருவேளை இந்துமதவெறியர்கள் அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் இந்த அபாயம் இன்னும் அதிகம் எனலாம். பயங்கரவாதத்தின் தோற்றமும் இருப்பும் அமெரிக்கா ஏகாதிபத்தியம் இருக்கும் வரையிலும் இருந்தே தீரும். இசுரேல் போல பாலஸ்தீன மக்களை அடியோடு கொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினாலும் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாது. ஆகவே பாக்கில் நடந்த பயங்கரவாதத்தைக் கண்டிக்கும் அதே நேரத்தில் நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் கண்டிக்க வேண்டும்.

ஈழப் பிரச்சினைக்காகவோ, காஷ்மீர் பிரச்சினைக்காவோ, பாக்கின் தீவிரவாதக் குழுக்களின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களைப் பற்றியோ நினைத்துப் பார்ப்பதற்கு சில நொடிகள் கூட ஒதுக்காத ஊடகங்கள் கிரிக்கெட் பற்றி மட்டும் பல மணிநேரம் கவலைப்படும் கொடுமையை என்னவென்று சொல்ல?