privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் - டாக்டர் ருத்ரன் !

கட்டைவிரல் கேட்கும் நவீன துரோணாச்சாரியர்கள் – டாக்டர் ருத்ரன் !

-

குருநாதர்கள் – பாகம் 2

g2புகைப்படம், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு. குடும்ப அட்டை, நிறுவனத்தில் பணிபுரியும் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமை – எத்தனையோ விதங்களில் அடையாள நிரூபணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், கட்டை விரல்தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உன் அடையாளம். உன்னையே நீ மறந்தாலும் ( மூளைச் சிதைவு நோயில் இது சாத்தியம் ) உன்னை உலகுக்கு அடையாளம் காட்டுவது உன் விரல் ரேகைதான்.

கட்டைவிரலில் சாதாரண கொப்பளம் வந்தாலும் கூட, நீ சேமித்து வைத்த உன் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. கட்டைவிரல் சரியில்லை என்றால் கையெழுத்தும் சரியாக இருக்காது. அந்தக் கட்டை விரல் வெட்டுப்பட்டால்தான் பிற விரல்களின் ரேகைகள் தேவைப்படும். உன் கட்டை விரலை இழப்பது உன் அடையாளத்தை இழப்பதாகும்.

ஏல்லோர்க்கும் தங்களை நேசிப்பதே மிகப் பெரிய விசயமாக இருக்கும். ‘ நாட்டை, குடும்பத்தை, நண்பர்களை, நேசிக்கிறேன், என்னைப் பற்றி அக்கறையே இல்லை ‘ என்று சொல்பவர்களும் அப்படி உண்மையாகவே நினைப்பவர்களும் உண்டு. நிஜத்தில், தன்னை நேசிக்காதவன் பிறரை நேசிக்க முடியாது. தியாகி கூட அந்தச் செயலில் ‘தனக்கு’ மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதால்தான தியாகம் செய்வான். ‘மற்றவர் மகிழ்ச்சிக்காக’ ஒரு காரியம் செய்தாகச் சொல்லிக் கொள்பவன் கூட உண்மையில் அதைத் ‘தன்’ சௌகரியத்திற்காக, ‘தான் தனத்னைப் பற்றி’ வகுத்துக் கொண்ட பிம்பத்திற்காகவே செய்வான். அப்படித் தன்னையே முக்கியமாக நேசிக்கும் மனிதன் – தன் உறுப்புகளிலேயே முதலில் சுவைப்பதும், சுவைப்பதால் ரசிப்பதும் தன் கட்டை விரலைத்தான். குழந்தைகள் கட்டை விரல் சூப்புவதும் இப்படித்தான். தாயின் மார்பு இதமான உணவு தரும் பாதுகாப்பு என்பதை அனிச்சையாக அறியும் குழந்தைகள், தாங்களாகவே வாயில் வைத்துக் கொள்வது கட்டை விரலைத்தான். இந்தக் கட்டை விரலுக்குத்தான் எவ்வளவு முக்கியம்?

அவ்வளவு முக்கியமான கட்டை விரலை இழக்கலாமா? ஏகலைவனுக்கு அதுதான் ‘கதை’யில் நடந்தது. நாம் இப்பொது ஏகலைவன்களாக ஏமாறாமல் இருப்பதற்கே இது எழுதப்படுகிறது. ‘அது கதைதானே’ என்று ஒதுக்கி விட முடியாது – ராமன் பாலம் கட்டியதும் கதைதான். கதை சொல்வதும், அதைக் கேட்பதும் காலங்காலமாய் இருந்து வரும் உலகளாவிய கலாச்சார வழக்கம். கதைகளைச் சொல்பவர்கள் யாருமே தங்கள் கற்பனைத் திறனையும் மொழித் திறனையும் பறைசாற்ற மட்டுமே கூறுவதில்லை. உள்ளே ஒரு செய்தி பொதிந்ததுதான் கதை. ‘இதனால் அறியப்படுவது என்னவென்றால்….’ என்று அறம் போதிக்கும் முடிவுரை இல்லாவிட்டாலும் எல்லாக் கதைகளுமே ஒவ்வொரு செய்தியைக் கூறுகின்றன. செய்தியைச் சுவையாக ஆக்குவதே கதைதான். சில கதைகள், அவற்றை எழுதும் மனிதனின் மனநிலையை மட்டுமே பிரதிபலித்தாலும் அவையும் செய்திகள்தான். இப்படியெல்லாம ஒருவன் சிந்திக்க முடியும் என்ற செய்தியையே அவை சொல்கின்றன.

செய்திகள் அவசியம்தான். நிலைமைகளையும் நிஜங்களையும் அவை நமக்குச் சுட்டிக் காட்டுவதால் அவசியம். ஆனால் நாம் உண்மைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை. சமுதாய மனநிலைக்கு ஒப்பனைகள் அலங்காரங்களாகவே தெரிகின்றன. தெருவில், வண்டியில் விற்கப்படும் மாம்பழத்தை விடவும், அழகான உறையில் அடைத்து பிரம்மாண்டமான கடையிலிருக்கும் மாம்பழத்தையே மக்கள் வாங்குகிறார்கள். இரண்டுமே நிஜ மாம்பழங்கள்தான். ஒன்று அப்பட்டம், இன்னொன்று ஆடம்பரம். கதைகளும் அப்படித்தான். அப்பட்டமான உண்மைகளைச் சொல்லும் செய்திகள் கூட அலங்கரிக்கப்பட்டு வெளிப்படுத்தப் படுவதால் அவைகள் கதைகளாகின்றன. மேலிருக்கும் உறையை எடுத்துவிட்டால் மாம்பழம் தோன்றும். அதுவரை அதைப் போர்த்தியிருந்த உறை அதன அடிப்படை எளிமையை மெருகேற்றியே காட்டும். அந்தப் பழத்தையும் தோலுரித்துத் தின்றுவிட்டு கொட்டையை வீசினால் – என்றாவது இன்னொரு மாமரம் முளைக்கும், பழம் தரும். கதைகளையும் இப்படி அணுகினால்தான அவை உதவும். ஒவ்வொரு கதையும் பழம்தான். ரசித்து சுவைத்து மறதிச் சகதிக்குள் வீசினாலும் உள்ளிருக்கும் அந்த ஆதாரச் செய்தி வருங்காலத்திற்கு மீண்டும் போய்ச் சேரும்.

மீண்டும் ஏகலைவன் கதையைப் பார்ப்போம். வெறும் கதையாக மட்டுமல்லாமல் அதில் புதைந்திருக்கும் செய்தியை, உணைமையை, விளக்கத்தை, எச்சரிக்கையை பார்ப்போம். ஏகலைவனுக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அவன் படிக்க நினைத்த பாடத்தைக் கற்றுக் கொடுப்பதிலேயே மிகச்சிறந்த ஆசிரியன் துரோணன். வாத்தியாருக்கு ஊதியமும் சன்மானமும் தருவதற்கு வழியில்லாத மாணவன் ஏகலைவன் – ஏழை. அந்த வாத்தியாருக்கோ ராஜா விட்டுப் பிள்ளைகளெல்லாம் மாணவர்கள். வருமானத்தோடு மரியாதையையும் நிறைய சம்பாதிக்கும் அந்த வாத்தியாரிடம் ஏகலைவன் எப்படிப் பாடம் கற்றுக் கொள்ள முடியும்? எனவே அவரை ‘குரு’வாக்கிக் கொண்டு, அவர் சொல்லிக் கொடுப்பதை கற்பனை செய்து கொண்டு வித்தை பழகினான்.

மேலோட்டமாக இல்லாமல் மனதாரா விரும்பி, சிரத்தையோடு பழகியதால் வித்தையில் சிறப்பாகவும் தேர்ச்சி அடைந்தான். வாத்தியாருக்கு இது தெரிந்து விட்டது. ஏகலைவனிடம் உன் படிப்பிற்கு என் சம்பளம் வேண்டுமென்றார். தன்னிடம் இருக்கும் எதையும் தருகிறேன் என்கிறான் ஏகலைவன். ‘உன் கட்டை விரலைத் தா’ என்கிறான் துரோணன். குரு என்று மனதில் நம்பிவிட்டதால் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் ஏகலைவன். அவன் கற்றது வில் வித்தை. கட்டை விரல் இல்லாமல் வில்லால் காற்றைக் கூட அடிக்க முடியாது. நமக்குச் சொல்லப்பட்ட கதை இதுதான். ஆனால் இது இவ்வளவுதானா? இதனுள் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எவ்வளவு விசயங்கள்!

ஏழை – பணக்காரன், உயர்ந்த – தாழ்ந்த சாதி – இவை இந்தக் கதையில் எளிமையாகத் தெரியும் உண்மைகள். இந்தக் கதையில் சொல்லப்பட்ட இன்னொரு விவரம், இப்படியொரு சிறந்த வில் வித்தைக் கலைஞன் இருக்கிறான் என்பதைப் பொறாமையோடு ‘குரு’விடம் முறையிட்டவன் துரோணரின் பணக்கார உயர்சாதி மாணவன்! தம்மை விடத் தாழ்ந்த நிலையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இருக்க வேண்டுமென்று தீவிரமாக நம்பும் மேலாதிக்க மனப்பான்மை இதில் தெரிகிறது. இது இன்று மட்டுமல்ல, காலங்காலமாய் இருந்து வந்த பேத வெறி. வளர்ந்து பெரியவர்களான பின்தான் இது வரவேண்டும் என்பதில்லை, வளரும், மாணவப் பருவத்திலேயே இது உள்ளூர பதிந்து விடுகிறது. இந்த சமூக அவலத்தையும் தவிர இந்தக் கதையில் இன்னொரு விசயமும் முக்கியமானது.

‘கட்டைவிரலை வெட்டித் தா’ என்று துரோணன் கேட்டான். ஏகலைவன் மனமுவந்து வெட்டிக் கொடுத்தான். அவன் கட்டை விரலில்லாமல் அம்பை எய்வது முடியாது. தெரிந்தே அந்த ‘குரு’ கேட்டான். எந்த வற்புறுத்தலுமில்லாமல் வலியவே சீடன் கொடுத்தான். கேட்டதும் கொடுத்ததும் கட்டை விரல் மட்டுமல்ல, ஒரு வருங்காலம், ஒரு வாழ்க்கை. இதிகாச காலத்தில் நடந்த இந்த அற்பத்தனத்திலும் ஒரு சின்ன நேர்மை இருந்தது, இருக்கிறது. அவன் நேரடியாகவே கேட்டான், இவன் தெரிந்தே கொடுத்தான். இன்று?

கட்டை விரல் என்பது அடையாளம், சிந்தனை, செயல், இயக்கம், பண்பு எனும் கோணத்தில் பார்த்தால், இன்றும் கட்டை விரல்கள் கேட்கப்படுகின்றன, கொடுக்கப்படுகின்றன.

இன்றைய ‘குரு’மார்கள் நேர்மையுடன் நேரடியாக “உன்னை முழுமையாய் எனக்கு கொடுத்துவிடு, கொடுத்ததன் மூலம் உன் சுய சிந்தனையை நெறியை, உழைப்பை, மனதை எனக்குக் கொடுத்து விடு”, எனும் அவர்களது விளம்பரங்களில் மோகித்து மக்கள் தாமாகவே தங்களைத் தந்து விடுகிறார்கள். வற்புறுத்தல் இல்லாமல் வலியவே தங்களை இழந்து விடுகிறார்கள். ஒன்றை இழந்தால்தான இன்னொன்றைப் பெற முடியும் எனும் போலி வியாபார வித்தை என்று வைத்துக் கொண்டாலும் தங்களையே இழப்பவர்கள் எதைப் பெறுகிறார்கள்? தன் அடையாளத்தையும் அறிவையும் இழந்தபின் பெறுவதற்கு என்ன இருக்கிறது?

காதலிப்பதும் இப்படித்தான். ஒருவன் தன்னையே இழந்து காதலியிடமும், காதலிடமும் கலந்து விடுவான். அங்கேயும் சிந்தனை அலசப்படுவதை விட உணர்ச்சியே மேலோங்கி நிற்கும். காதலின் சரணடைதல் ஒரு வளர்ச்சியாக மாறலாம். சாமியார்களிடம் சரணடைவது எப்படி வளர்ச்சியாகும்? பக்தியும் காதலும் உணர்ச்சிகளின் அடிப்படையில் இயங்குபவை. இரண்டுமே பகுத்துப் பார்க்கும் அறிவுத் திறனை மறுப்பவை. சரியான நபருடன் ஏற்படும் காதலே வாழ்வில் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் தரும். சரியான சாமியாரிடமும் அப்படி சாத்தியம் என்று வைத்துக் கொண்டால் அந்தச் ‘சரி’யான சாமியாரை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?

ஆசையோடு காதலித்து அன்போடு திருமணம் செய்து கொண்ட பிறகும் சில தம்பதியார் வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டுப் பிரிந்து விடுகிறார்கள். சட்டம் இதை அனுமதிக்கிறது. சமுதாயம் அங்கீகரிக்காவிட்டாலும் அனுசரித்துப் போகிறது. அப்படியிருந்தும் இனி இந்தத் திருமணம் தொடர்வதால் பயனோ பொருளோ இல்லை என்று தீர்மானித்த பலரும் அந்த பந்தத்தில் தொடர்கிறார்கள். முடிந்த வரை முயற்சித்துப் பார்க்கிறேன் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு உறவைத் தொடர்கிறார்கள். முயற்சி எப்போதுமே முழுதாய் முடிந்த வரைதான். ஒப்புக்குச் செய்வது முயற்சியே அல்ல. சுகமோ அமைதியோ இல்லாமல், அன்பும் அக்கறையும் கூட இல்லாமல் இப்படிப் பலர் போலியாகத் திருமண உறவில் தொடர்வது ஏன்? திருமணம் புனிதமானது என்று கூட இவர்கள் நினைப்பதில்லை. ஆனால் விவாகரத்து வெட்கப்பட வேண்டியதாக இவர்களுக்குத் தோன்றுகிறது. ‘நாளைக்கு எப்படி நாலுபேர் முன்னால் நிற்பது?’ என்றே பொய்யான வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சாமியாரைப் பின்பற்றுவதிலதும் இதே நிலைக்கு உள்ளாகிறார்கள்.

ஒத்துவரவில்லை விட்டு விடுகிறேன் என்று முடிவெடுக்க தைரியம் வேண்டும். அவசரமாக உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதால் தைரியம் – அது நிதானமாக நிலைமையைத் தெளிவாக உணர்ந்து செயல்படத் தயாராகும் மனநிலை. சமூக அங்கீகாரம் என்பது மனிதர்களில் பலருக்கு மிகவும் அவசியமானது. அந்த அங்கீகாரத்திற்காக உண்மைகளை மறுக்கவும் ஒதுக்கவும் கூட மனது தயாராகும். நம்பி வழிபட்ட சாமியார் சிறைக்குச் செல்லுமளவு குற்றம் புரிந்தவன் என்று தெரிந்தவுடன் உணர்ச்சி மிகுந்து அவனைப் பழிப்பவர்கள் உண்டு. அந்தக் கட்டம் வருவதற்கு முன்னமேயே அந்தக் கயவனின் நடவடிக்கைகள் அவர்கள் மனதை நெருடியிருக்கும். அப்போதெல்லாம் ‘கண்டு கொள்ளாமலிருப்பதும்’, அதையெல்லாம் ‘அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வதும்’ பக்தியினால் அல்ல, மிகுந்த சுயநலத்தினால்தான். பலர் தங்கள் ‘கௌரவ’த்தைக் காப்பாற்றிக் கொள்ளவே போலிகளை உணர்ந்தும் பின்பற்றுகிறார்கள்.

விவாகரத்து என்பது திருமணம் போன்றே மனம் தீர்மானிக்கும் முடிவு. இதைச் செயல்படுத்தப் பலர் தயங்குவது வெட்கத்தினால்தான். மணமுறிவை பகிரங்கமாக்கினால் தாங்கள் தோற்றுவிட்டதாகவே பலர் கருதுகிறார்கள். இதனால்தான் கசப்பையும் சகித்துக் கொள்கிறார்கள். தோற்றுவிட்டேன் என்பதன் உள்ளே தப்பாகக் கணக்கு போட்டுவிட்டேன் என்பதும் உள்ளது. போட்ட கணக்கு தப்பு என்பதை மனம் ஒப்புக்கொண்டால்தான் சரியான விடையைத் தேடும். சாமியார்கள் விசயத்திலும் இப்படித்தான். ‘போலியிடம் ஏமாந்தேன், அந்த நேரம் நான் முட்டாள்; போலி என்னை ஏமாற்றினான், அந்த நேரம் அவன் புத்திசாலி’ என்று தீர்மானிப்பதே தைரியம். நம்மில் பலருக்கு இந்த நேர்மையின் தைரியம் இல்லாததால்தான் திருட்டு சாமியார்களுக்கு இன்னும் ஏமாற்றலாம் என்ற தைரியம் வருகிறது.

இது தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. எந்த மனிதனும் அவ்வளவு தனியுமல்ல. அவனது குடும்பமும் சுற்றமும் – நெருக்கமாக இல்லாவிட்டாலும் – அவனையும், அவனாலும் பாதிப்பை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு.

ஒரு சாமியாரை நான் நம்புவதால் ‘அவரு’டைய புகழ் பற்றி நிறைய பேசுவேன். என் நண்பர்களும் குடும்பமும் நான் பேசுவதாலேயே அதைக் கேட்பார்கள். நம்பிக்கையில்லாவிட்டாலும் அவர்கள் மனம் இந்த விசயத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் சற்றேயாவது பரிசீலிக்கும். ஒரு பலவீனமான தருணத்தில் அவர்களும் இந்த நம்பிக்கை உதவுமோ என்று ஏங்குவார்கள். யதேச்சையாக அப்போது எது நடந்தாலும் அது அவர்களது நம்பிக்கையையும் ஆசையையும் வலுப்படுத்தும். நான் தனியாக இல்லாமல் ஒரு சிறு கூட்டமாக மாறுவேன். சிறு கூட்டம் சமுதாயமாக மாறும். பெரும்பான்மை போகும் திக்கில் சமூகம் போகும். கேள்விகள் அப்போது எழுந்தாலும் உதாசீனப்படுத்தப்படும். பொய் உண்மை போலாகி விடும்.

மகப்பேறு வேண்டி மரத்தைச் சுற்றி வரும் பெண்கள் இன்றும் உண்டு. கலாச்சாரம் சமூகத்தில் ஆழப் பதித்து விட்ட நம்பிக்கைகள் இன்றும் தொடர்வது உண்டு. மூட நம்பிக்கை என்பதை அறிவியல் நிரூபித்தாலும் தொடர்ந்து சில விசயங்களை நம்மில் பலர் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ‘எதற்கு வம்பு’ என்று நினைப்பது அச்சம். ‘என்ன நஷ்டம்’ என்று கேட்பது தெளிவின்மை. மூட நம்பிக்கையோடு சில பழக்கங்கள் தொடரும் போது மனத்தினுள் சலனங்களும் சபலங்களும் வளரும். ஒருவேளை இப்படியே ஜெயித்து விடலாமே என்ற கோணல் எண்ணம் தோன்றும். ‘ஒரு நாள் பண்ணினா போதாது போலிருக்கு’ என்று மனம் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும். இதுதான் நஷ்டம். இதைவிடப் பெரிய நஷ்டம் எது?

கலாச்சாரம் கற்றுத்தந்த பல விசயங்களில் ஒன்றுதான் சாமியார்களிடம் உள்ள பெரும்பான்மை மக்களின் அணுகுமுறை. சாமியார்களைப் பெரியவர்களாக்கி அவர்களை விமரிசிப்பதை சாபத்துக்குரியதாக்கி வைத்து விட்டதால்தான் இன்னும் கூட பெரும்பாலோர் மனத்தினுள் எழும் நியாயமான கேள்விகள் மௌனமாகப் புதைக்கப்படுகின்றன. சாபம் என்பது கோபத்தின் வெளிப்பாடு. கோபம் குருவின் குணமல்ல. இதைக் குறியீடாக உணர்த்துவதற்குத்தான் ஒருவன் சபித்து விட்டால் அதுவரை அவன் செய்த தவம் வீணாகி விடும் என்ற கதை சொல்லப்பட்டது. அவனுக்கு கோபம் வரக்கூடாது என்பதை ஒதுக்கிவிட்டு எந்தக் கோபம் நம்மை ஏதாவது செய்துவிடுமோ என்று அஞ்சுவதே பொதுவான சமுதாய மனநிலையாகி விட்டது. மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டிய விசயம் இதுதான்.

குருவின் தகுதி என்ன? குருவின் பண்புகள் என்ன? முதலாவது ஞானம், அடுத்தது மனித நேயம். எந்த பிரதிபலனும் லாபமும் எதிர்பார்க்காமல், எந்த விளம்பரத்தையும் வியாபாரத்தையும் நாடாமல், தனக்கிருக்கும் அறிவை எல்லா மக்களிடமும் அன்புடன் பகிர்ந்து கொள்பவரே குரு. குருவுக்கு எந்த வித த்திலும் எந்த விகிதத்திலும் பாரபட்சம் இருக்காது.

பாரபட்சம் இல்லாமல்தான் சூரியன் எல்லோருக்கும் வெப்பத்தையும் ஒளியையும் தருகிறது; இரவும் அப்படித்தான் இருளையும் குளிரையும் தருகிறது. வசதியுள்ளவன் வெயிலுக்குக்குடை, இருளுக்கு விளக்கு, குளிருக்குத் தீ என்று உருவாக்கிக் கொள்கிறான் குரு எல்லோருக்கும் ஒரே ஞானத்தைப போதித்தாலும் சிலர் அதைச் சிறப்பாகக் கற்றுக் கொண்டு பயன்படுத்துகிறார்கள். குருவும் மனிதன் என்பதால் அப்படி முன்னேறும் சீடனிடம் சற்றே அதிக அன்பு செலுத்துவது சாத்தியம். அன்பு சிலரிடம் கூடுமே தவிர எவரிடமும் குறையாதிருந்தால்தான் குரு. சிலரிடம் பாசம் கலந்த அன்பு அதிகமானாலும் எல்லாரையும் அக்கறையோடு பார்த்துக் கொள்பவரே குரு. அப்படிப்பட்ட குருவை அணுக அனுமதிக் கட்டணமோ, சிபாரிசுக் கடிதமோ தேவைப்படாது.

குருவின் ஒப்புதல் இல்லாமல் ஒரு சீடன் அவசரத்தில் விளம்பரங்களை உருவாக்கினான் என்பதற்கே இடமில்லை. குருவுக்குத் தெரியாமல், அவர் அனுமதி இல்லாமல் செயல்படுபவன் சீடனே அல்ல. அப்படிப்பட்ட சீடனை அனுசரிப்பவன் குருவும் அல்ல. உண்மையான குருவின் நற்பண்புகள் இயல்பாகவே சீடர்களிடமும் அமைந்து விடும். தான் மட்டுமல்லாமல் தன் சூழலையும் அவ்வாறே அமைத்து விடும். நேர்மையோடு இருக்க வைப்பதே குருவின் கடமை. போலிகளால் இது முடியாது.

– தொடரும்

டாக்டர் ருத்ரன் பரவலாக அறியப்பட்ட மனநல மருத்துவர், எழுத்தாளர். பரவலாக அறியப்படாத ஓவியர். ‘வினவு’க்கு வாரம்தோறும் எழுதுவதாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதனை ஆன்மீக பலவீனர்களாக உள்ள உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.
இந்தத் தொடர் ஆன்மீகச் சந்தையைப் பற்றியது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் மதம் பண்டமாக்கப்படுவது அல்லது ஆன்மீகம் கார்ப்பரேட்மயமாக்கப் படுவது பற்றியது. அதாவது இத்தொடர் குரு நாதர்களைப் பற்றியது.
உங்கள் மறுமொழிகளையும், கேள்விகளையும் மட்டுமின்றி உங்கள் “ஆன்மீக பௌதிக” அனுபவங்களையும் வரவேற்கிறோம்.
டாக்டர் ருத்ரனின் வலைப்பூ முகவரிகள் – ஆங்கிலம்: http://rudhran.wordpress.com தமிழ்: http://rudhrantamil.blogspot.com ஒலிப்பதிவு: http://www.snapvine.com/rudhran
  1. மதிப்புமிகு டாக்டர் ருத்ரன் தங்களது இந்தக் கட்டுரை மிகவும் எளிமையாகவும், எளிதில் புரிந்துக் கொள்ளும்படியும் அமைந்துள்ளது. பலருக்கு இக்கட்டுரை வாழ்க்கை வழிகாட்டுதலாய் அமையும் எனக்கு உட்பட. சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் நடக்கும் போராட்டமே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான மையப் பிரச்சனையாக முன்னுக்கு வருகிறது. அதாவது மனிதன் சமூகத்திற்கு கட்டுப்பட்டவன் என்ற பெயரில் சமூக அடிமையாக மாறிவிடுவதுதான் நடக்கிறது. இங்கே அவன் தனது சுயத்தை இழக்கிறான். எனவே, இந்த பழமைவாத சிந்தனையின் தொடர்ச்சிக்கு நிலவும் சமூக அமைப்பும், நமது கல்விமுறையும், சமூக உறவுமுறைகளும் அடிப்படையாக உள்ளது என்று எளிதாக விளக்கிவிட முடியும். இருப்பினும் இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதுதான் கேள்வியாக உள்ளது. நான் லியோ டால்ஸ்டாயின் அன்னா கரினீனா நாவலைப் படிக்கும் எவராலும் இதனை உணர முடியும் என்று நினைக்கிறேன். அதாவது, அன்னா பேரழகானவள் திருமணமானவள். இருப்பினும் கணவன் உயர்தட்டு வர்க்கம் மனைவியின் உணர்வுகளை விட தனது சமூக அங்கீகாரம் மேலானதாக கருதுபவன். இந்நிலையில் வெரோன்ஸ்கியின் அழகும் வசிகரமும் காதலாய் மலர்கிறது அன்னாவுடன் – இவர்களின் காதல் அன்னாவின் கணவருக்கு தெரிந்தாலும் அதனை சமூகத்திற்கு தெரியாமல் இருக்கும்படி மட்டுமே கேட்டுக் கொள்கிறான். இறுதியில் அன்னாவும் – வெரோன்ஸ்கியும் சமூகத்தால் எப்படி பார்க்கப்பகிறோம் என்ற கேள்வி உள்ளுக்குள் குத்திக் கொண்டேயிருக்கும். இறுதியில் அன்னா இரயில் முன்பாய்ந்து மரணத்தை தழுவுகிறாள் இந்த அழகான காதலுக்கு தடையாக இருந்தது எது? என்ற கேள்வி மிகப் பொருத்தமானதாக கருதுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கும், வினவுக்கும்.

  2. டாக்டர்.ருத்ரன் அவர்கள் தன்னுடய போரை தொடங்கிவிட்டார். இனி ஏராளமான “குரு”க்கள் ட்டவுசர் கிழின்து திசை தெரியாமல் ஓடப்போகிறார்கள் என்பது மட்டும் திண்ணம்.வாழ்த்துக்கள்

  3. சந்திப்பு ரீசண்டா அந்த நாவல படிச்சிருப்பாரு போல இருக்கு.. எப்படியோ…. படிச்சா சரிதான்….

  4. கட்டுரையை பற்றிய கருத்துக்கள், ஒரு வரியில் இருப்பது சரியல்ல! என்ன புரிந்து கொண்டோம்! எந்த விதத்தில் சரியாக இருக்கிறது என்பதையும் சொன்னால் பலருக்கும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

  5. மனநல மருத்துவர்களில் சில
    புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.
    ஆனால் இவர்களால் மனதை
    அறிந்து கொள்ளும் திறனில்
    சாமியார்களுக்கு அருகே கூட
    செல்ல முடியாது.

    சாமியார்கள் பயித்தியகாரத்தனமாக
    எதாவது செய்வார்கள்.அவை மிக
    புத்திசாலித் தனமானவை.மனநல
    மருத்துவர்கள் புத்திசாலி தனமாக
    ஏதாவது செய்வார்கள்.அவை முட்டால்
    தனமானவை.அதில் ஒன்று தான்
    ருத்திரனின் சாமியார்களை
    சிலுவையில் ஏற்றி கொள்ளும் முயற்சி.

    ஏசுவை சிலுவையில் ஏற்றிக்
    கொன்றதால் தான் அவர் உலகம்
    முழுக்க அறியப்பட்டார்.உலகின்
    70% மக்கள் பின் பற்றவும் ஆரமித்தனர்.

    • ஹஹா.. பின் பற்ற தானாக ஆரம்பிக்க வில்லை.. திணிக்க பட்டார்.. முதலில் குண்டு போட்டு கொள்கின்றார்கள் பின்னர் அந்த நாட்டை சேர்ந்தவர்களே இயேசு காப்பர் என்று பன்னாடைகளை அனுப்புகின்றனர்

  6. தலைப்பை தாண்டி தனி மனித & சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகும் வகையில்
    கட்டுரை இருக்கிறது. உண்மையில் போலி கௌரவத்தை பற்றி விளக்கியது அருமை .
    போலி கௌரவத்தை பற்றி நாம் அனைவரும் சுய பரிசோதனை செய்வது அவசியமானதாக இருக்கிறது. இந்த கட்டுரை இணையதளத்தோடு நின்றுவிடக்கூடாது நுலாக வெளிவந்தால்தான்
    எல்லோருக்கும் பயன்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    டாக்டர் தங்கள்து “உறவுகள்”-க்கு பிறகு தங்களது நூல் எதுவும் படிக்கவில்லை ,
    தங்கள்து பிற நூல்கள் & வெளியீட்டாளர் பட்டியல் தர முடியுமா.

    ““““““““““““““““““““““
    ஓவியம் டாப்பு…!

  7. டாக்டர்,

    நீங்கள் “குரு”மார்கள் பற்றி பேசும் பொழுது சமூகத்திற்குள் சிக்குண்டு எப்படி தனி மனித உறவுகள் தன் இயல்பை இழந்து, போலித்தனமான அரிதாரத்தை விரும்பாமலயே அணிந்து கொள்கிறது என்று தொட்டுச் செல்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

    தொடர்ந்து பூந்து, புறப்பட்டு எல்லா தரப்பு விசயங்களையும் இது போன்றே பிணைத்து செல்லுங்கள். ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கு!

  8. நல்ல கட்டுரை… இரண்டு, மூன்று தடவை படித்த பிறகே கட்டுரையின் முழு வீச்சையும் எனக்கு புரிந்து கொள்ள முடிந்தது…

    மக்கள் தங்களது வாழ்வு பல கோணங்களில் நிலையற்று இருக்கும் பொது.. கார்ல் மார்க்ஸ் சொன்னது போல பக்தி அவர்களுக்கு ஒரு வகை வலி நிவாரணியாக இருக்கிறது என்றே கருதுகிறேன்… இன்னொரு வகையில் சொல்வதானால் இந்த சமூகம் தோற்றுவிக்கும் உறுதியற்ற, நிலையற்ற எதிர்காலம், தோல்வி மற்றும் இறப்பு பற்றிய பயத்தின் காரணமாகவும் அவர்கள் இந்த குருமார்களை நாடுகிறார்கள் என நினைக்கிறேன்…

  9. nalla karuthukkalai dhairiyamaga eduthu vaippadharku thunichalum samuga akkaraiyum thevai. irandum kalandha pirasithi petra manidhargalai kaanbadhu aridhu.
    appadi thaangal iruppadhu sirappu. thordarndhu thangal samugap paarvaiyay padhivu seyyungal. oru vishayam, solla varuvadhai satru surukkamaga sonnal nalamayirukkum enbadhu en ennam. kaaranam, valai padhivil neetti muzhakki padippadhu siramamaga irukku. puthagam padikkum sugam angu illai. ungalukku en anbu kalandha vanakkangal. vaazhvu oru neerk kumizh…varalaru oru vaanam. varalaaru aagireergal. vazhthukkal.

  10. மிகச்சரியாக மக்களின் சிந்தனையை எழுத்தில் அளந்திருக்கிறீர்கள். தனக்கு என்ன ஆதாயம், தனக்கு இருப்பதாக நம்பப்படும் மதிப்பு இந்த இரண்டையும் கொண்டு தான் மனிதன் எதிலும் முடிவெடுக்கத்துணிகிறான். மாறாக அது சரியானதா? தவறானதா? என்பதைக்கொண்டல்ல.

    தோழர் மரணஅடியின் கேள்வியையே உங்களிடம் நானும் கேட்கிறேன். உங்கள் எழுத்தை நான் இப்போது தான் படிக்கிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி

  11. @rudran

    i respected till i read this piece of crap from you. The intetion of drohna is tat there should be nobody to oppose Arjuna. Tats it nothing beyond that. Only tamil people can Put different colors and put caste in to everything. I pity the people who does not understand the epics of india

  12. Dear Dr,Rudran,
    I am learning the thumb after the tongue(Vazha ninaithal vazhlam).
    though people like to question Nithyanadas who is dethroned by his own people.
    other gurus are not questioned or critically evaluated their teachings.
    when one guru writing about his experience with experience with the devil while constructing the temple.I was not able to differentiate between the “kovil aanndi”.

    at least now the awareness through you will help every one.
    Senthil
    (Can any one tell me how to type in Tamil)

  13. நீலன் சொல்வது போல, சாமியார்களின் முட்டாள்தனம் மருத்துவர்களின் புத்திசாலித்தனத்தை விட வலிமையாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், சாமியார்களின் வலிமை அவர்களின் மடத்தனத்தில் இல்லை. பக்தர்களின் பலவீனத்தில் இருக்கிறது.
    பைத்தியக்காரத்தனமான பக்தர்கள், தான் செய்ய நினைத்தவற்றை செய்பவனை குருவாகவும் அவதாரமாகவும் நினைக்கிறார்கள், என்பதே உண்மை.

    உண்மையில் சாமியார்கள் சமூகத்தின் உழைப்பை உறி்ஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள்.சீடர்கள் குருக்களை விட ஆபத்தானவர்கள்.

    இவர்கள்தான் பக்தர்களைக் கொண்டு வருவதிலும் அவர்களைத் தக்க வைக்கின்ற மூளைச்சலவைக் கலையிலும் கைதேர்ந்தவர்கள்.மூன்று வேளை அறுசுவை உணவு, மடிப்பு களையாத இதமான ஆடைகள், பிரம்மசாரிய முகமூடியில் தன் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுதல், இவை அனைத்தும் உழைப்பே இல்லாமல் கிடைக்க வேண்டுமெனில், அவர்களது குரு பல்லாண்டு வாழத்தான் வேண்டும்.

    பத்திரிக்கைக்காரர்கள் – சில்லறை வியாபாரிகள்.
    பாவம் பக்தர்கள்.
    பக்தர்கள் போதைக்கு அடிமையானவர்கள்.
    போதைக்கு அடிமையானவன் எதற்காகவும் அதை இழக்க மாட்டான். அதற்காக
    எதையும் இழக்கத் துணிவான். இதுதான் சாமியார்களின் சூத்திரம்.
    அவர்களின் கண்களும் காதுகளும் மூளையிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டன.
    ருத்ரனால் அவர்களுடன் தொடர்புகொள்ளவே முடியாது. சக மனிதன் மேல் கொண்ட பாசத்தினால் பதறுகிறார்.

    ருத்ரனின் எழுத்துக்கள் மயக்கத்தில் இருக்கும் பக்தர்களை மாற்றவே மாற்றாது.
    ஆனால், தெளிவாக இருப்பவர்கள் மயங்காமல் தடுக்க உதவும்.

  14. ருத்ரனின் எழுத்துக்கள் மயக்கத்தில் இருக்கும் பக்தர்களை மாற்றவே மாற்றாது.
    ஆனால், தெளிவாக இருப்பவர்கள் மயங்காமல் தடுக்க உதவும்.

  15. நல்ல குரு எதையும் எதிர் பாப்பதில்லை.
    ஆனால் தகுதியான சீடன் கிடைக்கும் வரைக் காத்திருப்பார்.
    சீடன் குருவைக் கண்டுபிடிப்பது இல்லை.
    குருதான் சீடனைக் கண்டுபிடிக்கின்றார்.
    ஏகலைவன் விஷயத்தில் துரோனாசாரியரை குருவாக நினைத்தது தவறு.
    மீதி விஷயங்களை நித்தியானந்தா அல்லது பிரேமானந்தா போன்றோரிடம் கேட்டுத்
    தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
    மேல்மருவத்தூர், புட்டப் பருத்தி போன்ற புண்ணிய ஷேத்திரங்களில்
    அறிவு, விஞ்ஞானம் போன்றவை விருத்தி செய்யப் படுகின்றது.
    கட்டைவிரலை தூகிக் கொண்டு அங்கே போகலாம்…சூப்பிக் கொண்டும்
    அங்கே போகலாம்.
    நெஞ்சு பொறுக்குதில்லையே.

Leave a Reply to Suresh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க