Skip to content

சனிக்கிழமை கவிதைகள் – 3

உங்கள் கவிதைகள் இங்கே!

பூக்காயம்

பூக்களை சும்மா
புகழ்ந்து தள்ளாதீர்கள்
ரெண்டுவேளை பாடுக்காய்
மணிக்கணக்கில் பூ கட்டி
நகக்கணுக்கள் வலியெடுக்க
அதைவிட பயங்கர ஆயுதம்
அப்போது வேறேதுமில்லை.

மல்லிகையை சரம் தொடுத்து
மரிக்கொழுந்தை காம்பொடித்து
சில்லரைக்கு ஏங்கி நிதம்
வெய்யலிலே காய்கையிலே
மனம் வாடும், பூ சுடும்.

கருவகுச்சி ஒடிச்ச கையில்
கனகாம்பரம் கட்டும்போது
உரசும் பூ இதழ்கள்
உள்ளங்கையை நோகடிக்கும்.

முல்லரும்பு எனக்கூவி
முடுக்கெல்லாம் சுற்றி வந்து
நல்லவிலை விற்பதற்குள்
நாடி நரம்பெல்லாம் – பூ வலிக்கும்.

ஈரவிறகை ஊதி ஊதி
இடையிடையே பூத்தொடுத்து
சோறுதிங்க கையெடுத்தால்
பூவாசம் குமட்டும்.

தண்ணீர் தெளித்துவைத்து
தருகின்ற பூக்களெல்லாம்
கண்ணீரால் கட்டியதால்
கசங்காமல் இருக்குதென்று
காரணம் அறிவீரா!

பூத்தொடுக்கும் போதே
முரண்டு பிடிக்குது மொட்டுகள்
வாழ்க்கை போர் தொடுத்த போதும்
பொறுமையாய் இருக்கச் சொல்லி
யாரும் எங்களுக்கு பூ சுற்ற வேண்டாம்.

-          துரை. சண்முகம் ( புதிய கலாச்சாரம், ஜனவரி’1997 )

………………………………………………………………………………….

கசியும் உயிர்

கானகத்து மிச்சமாய்
கடந்த காலத்தின் எச்சமாய்
கல்லூரியின் கருத்த மூலையில்
கம்பீரமாக
நெருப்பின் மலர்களை வீசி
காற்றைக் கொளுத்தி
கதிரவனைக் கலங்கடிக்கும்
அந்த
மஞ்சள் கொன்றை,

இன்று மௌனமாக
தலை குனிந்து
தன் உடல் வழியே
வழிய விடுவதை
மழை நீர் என்கிறாய் நீ!

இல்லை நண்பா
இல்லை!

மண்ணைத் தொட்ட
நீரின் சிலுசிலுப்பில்
வேர் சிலிர்க்கும் முன்பே,

நீரூற்று பாறைகளின்
வேர்க்கால்களை துளைத்த
பெப்சியின் ஆழ்துளை பைப்புகள்,
வானத்தின் ஈரத்தை
களவாடும் ஈனத்தை
உணர்த்த – உனக்கு
உணர்த்த
கசிய விடுகிறது
தன் உயிரை
கிளை வழியே
இலை வழியே!

- விடிவெள்ளி

http://vidivellee.wordpress.com/

………………………………………………………………………………….

ஆண்டவனிடம் சில ஐய்யங்கள்!

அன்பில்லா இறைவனுக்கு!
ஒரு வேளை
நீ இருந்துவிட்டால்
எனும் சந்தேகத்தோடு
தொடர்கிறேன்…

பாவம்,புண்ணியம்
இன்பம்,துன்பம்
நன்மை,தீமை
இவையெலாம்
உன் பார்வைக்கு
உட்பட்டவையே

நீதான் உயிர்களை
படைப்பதாய்
புராணமும் தன்
புழுகலை
காலத்தின் மீது
தடவிக்கொண்டே வருகிறது

பின் ஏன்
நல்லவன்,கெட்டவன்
உயர்ந்தவன்,தாழ்ந்தவன்
ஏழை,பணக்காரன்
நோயாளி,சுகவாசி
என்ற
துருவ வித்தியாசங்கள்?

படைக்கும் போதே
நல்ல ஜீன்களை
விதைத்து
கெட்ட ஜீன்களை
விடுக்கும்
வித்தை தெரியவில்லையா
உனக்கு?

எத்தனையோ யுகங்கள்
கழிந்த பின்னுமா
உன்
விஞ்ஞான அறிவில்
விருத்தியில்லை?

உன் பெயர்
சொல்லித்தானே
நீ படைத்த உயிரை
நீ படைத்த உயிரே
கொன்று குவிக்கிறது
இதுதான் உன்
படைப்பிலக்கணமா?

நீ மட்டும்
நினைத்த போதெல்லாம்
அவதாரம் எடுத்து
அற்புதம் நிகழ்த்தி
அசத்தல் நாயகனாய்
அச்சேறிவிட்டாய்..

காதல்,காமம்
கேலி,கிண்டல்
என
சுவாரஸ்ய வாழ்வை
தொடர்கதையாக்கினாய்

ஆனால்
உன்
தொண்டர்கள் மட்டும்
நிறைந்த ஏக்கங்களோடு
கிழிந்த கோவணங்களாய்

நடிகனுக்கும் உனக்கும்
என்ன வித்தியாசம்?
நடிகனின்
அவதாரத்தை
ரசிகன் ரசிக்கிறான்
தன் மானம் கிழிந்ததை
மற்றையோர்
ரசிப்பதுகூட தெரியாமல்

உன் தொண்டர்களும்
அப்படியே…
இருப்பினும்
நடிகன் என்பவன்கூட
நிஜமாகிறான்
கண்கூடாய் சில
நல்லவை செய்வதால்

ஆனால் நீயோ
இல்லாதவன் என்று
தெரிந்தபோதும்
இருப்பதாய்த்தானே
இலக்கியம் விரிகிறது

ராமராகவும்
யேசுவாகவும்
நபிகளாகவும்
புத்தராகவும்
என் அவதாரங்கள்
தொடர்ந்து கொண்டேதான்
இருக்கும் எனும்
உனது
கட்டுக் கதைகளை
இனி நம்பத்
தயாராக இல்லை

இது கலியுகம் அல்ல
பலியுகம்
உணர்வுகள் பிதுங்கிய
வலி யுகம்
உன்னை நினைக்கும்
அந்தக்
கணங்களில்கூட
எங்கள்
கால்களின் கீழே
குண்டுகள் வெடிக்கக் கூடும்

ஆதலால்
எங்கள்
கவனம் முழுதும்
எச்சரிக்கை நோக்கியே

ஆலயங்கள் தோறும்
அபாயங்கள்
இருப்பதாய்த்தான்
எங்கள் குழைந்தைகள்
கற்றுக்கொள்கிறார்கள்

மத அடயாளங்கள்
மரணத்தின்
வாசற் கதவுகள்
என்பதைப்
புரிந்துகொண்டுவிட்டோம்

ஆதலால்
ஒன்று செய்..
ஒன்று
நல்லதோர்
உலகைக் கொடு
இல்லையேல்
உன் ராஜினாமாவை
நீயே பகிரங்கப்படுத்து.

ஆம்!
ஒட்டுமொத்த உயிர்களும்
உன் மீது
நம்பிக்கையில்லாத்
தீர்மானம்
கொண்டுவரும் நாள்
வெகு தொலைவில் இல்லை…

-ஷான் சிவா

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

…..

தொடர்புடைய பதிவு

வினவில் இடானியாவின் கடிதத்துடன் சனிக்கிழமை வாசகர் கவிதைகள்!

சனிக்கிழமை கவிதைகள் – 2

Print

10 Comments

  1. இரங்குவோன்

    பூக்கள் சுடுகின்றன
    விரல் நுனிகளில் மட்டுமல்ல
    என் மனதினில் கூட.

    Posted on 05-Sep-09 at 1:08 pm | Permalink
  2. அர டிக்கெட்டு !

    தோழர் விடிவெள்ளி மற்றும் ஷான் சிவா, நல்ல முயற்சி வாழ்த்துக்கள், தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை இங்கே எதிர்பார்க்கிறேன்,

    Posted on 05-Sep-09 at 5:01 pm | Permalink
  3. அர டிக்கெட்டு !

    எங்கே கவிஞர் கலகம்?

    Posted on 05-Sep-09 at 5:02 pm | Permalink
    • வணக்கம் தோழர் அரை டிக்கெட்,
      சற்று பளு அதுதான் தற்போதெல்லாம் ஆரம்பத்திலே மறு மொழி பதியவும் முடிவதில்லை, படிக்கவும் முடிவதில்லை. ஏதோ நமக்கு தெரிஞ்சது….

      வறுமையும் பட்டினியும்
      விவசாயியின் சேக்காளிகள்
      கொடுமையின் துடிப்புக்கள்
      நிலத்தில் வெடிப்புக்களாய்
      உழுவதற்கு நிலமில்லை
      உழு கருவிகள் அரிக்க
      ஆரம்பித்து விட்டன….
      உழுவோம் முதலாளியின்,
      ஆளும்வர்க்கத்தின் மண்டையில் ஆழமாக
      இன்னும் ஆழமாக
      உண்மையை
      விதைப்போம்…
      பொறுமை அது நம்மை
      உழுகருவிகளோடு சேர்த்து
      அரித்து தின்று விடும்

      கலகம்

      Posted on 05-Sep-09 at 6:24 pm | Permalink
  4. மா.சே

    கவிதைகள் அனைத்தையும் ரதித்தேன். கவிஞர்களுக்கு ஒரு பட்டறை வினவு சார்பில் நடத்தமுடியுமா என தோழர்கள் பரிசீலிக்கவும். அதே போல சென்ற ஆண்டு நூல் வெளியிட்டதை போல இந்த ஆண்டு சனிக்கிழமை கவிதைகளை நூலாக தொகுக்க முடியுமா என்பதையும் பரிசீலிக்கவும். புதியவர்களை உற்சாகப்படுத்தவும் மாற்று அரசியலை இலக்கிய தளத்திலும் விவாதமாக, கொண்டு செல்லவும் அது உதவும்….. இலக்கிய மொக்கைகள் போல

    Posted on 05-Sep-09 at 5:33 pm | Permalink
  5. வினவி வின்வி ஓய்ந்து விட்டீர்களா? திடீர் கவிதை? நல்லாருக்கு, :)

    Posted on 06-Sep-09 at 4:26 am | Permalink
  6. ரெண்டு கவிதைகளுமே தை வலிக்கச் செய்கிறது…

    Posted on 06-Sep-09 at 3:44 pm | Permalink
  7. பூக்காயம் எளிய நடையில் தொழிலாளியின் வாழ்க்கையை படம் படித்து காட்டுகிறது…
    கசியும் உயிர், இயற்கையையும் விற்று லாபம் ஈட்டும் முதலாளித்துவத்தின் கோர முகத்தை எடுத்துரைக்கிறது… மிக நன்று..
    கடவுளிடம் சில கேள்விகள், எளிய மொழியில் அருமையாய் எழுதப் பட்டு இருக்கும் கவிதை.
    தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    Posted on 07-Sep-09 at 9:52 am | Permalink
  8. துரை.சண்முகம் கவிதை அருமை. இனி பூக்கட்டும் தொழிலாளர்களை பார்க்கும் பொழுதெல்ல்லாம், இந்த கவிதை நினைவுக்கு வரும்.
    மற்ற புது கவிஞ்ர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    Posted on 07-Sep-09 at 11:47 am | Permalink
  9. வழிப்போக்கன்

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    Posted on 15-Sep-09 at 12:40 pm | Permalink

One Trackback/Pingback

  1. pligg.com on 06-Sep-09 at 12:59 am

    சனிக்கிழமை கவிதைகள் – 3…

    பூக்காயம்-துரை. சண்முகம், கசியும் உயிர்-விடிவெள்ளி, ஆண்டவனிடம் சில ஐய்யங்கள்-ஷான் சிவா… http://www.vinavu.com/2009/09/05/saturday-poems-3/trackback/...

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!