Skip to content

சனிக்கிழமை கவிதைகள் – 9

காலனிச் சத்தங்கள்

என் செல்ல மகளே!
நீ பிறந்ததில் எனக்கு
மிக்க மகிழ்ச்சி.

உன் தாத்தாவிற்குத்தான்
என் மீது கொஞ்சம் வருத்தம்.
குலசாமி பெயர் விடுத்து,
மரித்தவர்களின் ஊர்ப்பெயரை
உனக்கு  சூட்டியதற்காக…
முடிந்தவரை விளக்கிவிட்டு
பிடிவாதமாய்,
வெண்மணி என்றே உனக்கு
பெயரிட்டு விட்டேன்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள்
மரிக்கவில்லை.

நகரவாழ்வின் விழுமியங்களோடு
சங்கமித்து நிறைய வருடங்கள்
உருண்டோடிவிட்டன.
அதன் தொடர்ச்சியாய் – இப்பொழுது
நீயும் வந்துவிட்டாய்…

கடந்துவந்த தூரங்களின்
நீளத்தை என்றாவது ஒருநாள்- நீ
கேட்டறிய வேண்டும் என்பதே
என் ஆவல்.

ஏனெனில்,
தழும்புகளற்ற காயங்கள்
என்னிடம் நிறைய உண்டு.
அதை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது
உனக்குள் ஒரு பண்புமாற்றம்
நிகழலாம் என்பது என் நம்பிக்கை.

முரண்களின் மூட்டையாக
இருக்கும் இந்த சமூக அமைப்பின்
சிக்கல்களை
அறுத்தெறிவதற்கான ஆயுதமாக…
அந்த நம்பிக்கை
உனக்குள்ளும் ஊடுருவலாம்.

அழகிய ஓவிய வேலைப்பாடுகளடங்கிய
பீங்கான் குவளைகளில்,
நீயும் நானும்- இப்பொழுது
தேநீர் அருந்திகொண்டிருக்கிறோம்,
இவை நாம் எட்டிய
குறைந்தபட்ச வாழ்க்கை.

இது நடந்தது கூட
உடனடி நிகழ்வல்ல,
ஒரு நெடிய போராட்டத்தின்
விளைவு.

பனை மரத்து ஓலைகள்,
செரட்டைகள்,
அலுமினிய கிண்ணங்கள்…
இவைகள்தான்
உனது முன்னோர்களின்
தேநீர் குவளைகள்

அதாவது,
‘நாகரிக’ சமூகத்தை
தலைகுனியச் செய்திடும்
இருண்ட கணங்கள்.

“மனிதர்களை ‘மனிதர்’
நாயினும் கேவலமாய்
நடத்த முடியுமா அப்பா?”
என்று நீ கேட்கலாம்.

ஆம்,
இப்பொழுதும் இந்த வன்கொடுமைகள்
தொடர்கிறது…
புதிய வடிவங்களில்.
நீ எதிர்கொள்ளும்போது
இன்னும் நவீனப்பட்டிருக்கலாம்.

ஆனாலும்,
உன் கல்விக்கூடத்தில்
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
………………………………’ என்று,
நாடே  புனித திருவுருவாய்
இருப்பதுபோல்
வெற்று வார்த்தைகளை
உன்னுள் இட்டு நிரப்புவார்கள்

அப்பொழுது
உண்மையையும், பொய்யையும்,
உரசி பார்த்துக்கொள்ள
நம் பகிர்தல் உனக்கு பயன்படலாம்.

என் செல்ல மகளே!
நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்கள் – உண்மையில்
அழகானவை, அற்புதமானவை.

எல்லா அப்பாக்களையும் போல்
அந்நிமிடங்களை மிகுந்த
ரசனையோடு விழுங்கியுள்ளேன்.

இருக்கட்டும்.
கடைவீதிக்கு சென்ற போதுதான்
உன் அம்மாவின் செல்ல கத்தல்
ஞாபகத்திற்கு வந்தது.

“குழந்தை இருக்கும் வீட்டில்
பொம்மைகளைவிட -
புத்தகங்கள்தான் அதிகமாய் உள்ளது,
அவள் எவற்றோடுதான் விளையாடுவாள்?”

உனக்கான பொம்மைகள்
விளையாட்டு பொருட்கள்,
நிறைய வண்ணங்கள்
கொஞ்சம் தூரிகைகள்…

எல்லாம் வாங்கிவிட்டேன்
குறிப்பாக,
நீ விரும்பி கேட்ட
அழுத்தி நடந்தால்
இசை எழுப்பக்கூடிய காலணிகளையும்
கவனமாய் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த வாரம்
அநேகமாய் நாம் ஊருக்கு
செல்ல நேரிடும்.

அப்பொழுது மேலத்தெரு வழியாகத்தான்
தாத்தா வீட்டிற்கு செல்வோம்.

அந்த வழியாக,
உன் கொல்லுத் தாத்தா,
தாத்தா…, ஏன் நானும் கூட
செருப்பை கையில் தூக்கியபடிதான்
கடந்து சென்றுள்ளோம்

ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!

நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்களை விட,
அப்போதைய நிமிடங்கள் இன்னும்
அழகானதாய், அற்புதமானதாய் இருக்கும்.

- முகிலன்

pic1

————————————————————————–

அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை

அரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது.
நண்பனே, உரையாடலின் பின்னர்
கடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன்.
அங்கிருந்து அகற்றப்பட்டு
தங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன்
முடிந்தவற்றை உனக்கு சொல்லியனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
நான் இனி என்ன செய்வது
என்பதை உன்னால் கூற முடியுமா?

கடற்கரை எதையோ செல்லிக்கொண்டிருக்கிறது.
அதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து
எல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது.
கடல் மகிழ்ச்சியடையவில்லை.
அது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி
எதையோ பேசிக்கொண்டிருந்தது.
விண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்களையும்
கடல்தான் முழுமையாக வாசித்துக்கொண்டிருந்தது.

கொண்டு சொல்லப்பட்ட நிரூபங்கள்
மிதித்தெறியப்பட்டதை எப்படி? வெளிக்கொணர முடியும்?
நாம் அவமானப்பட்டதை யாரிடம் பகிர முடியும்?
அதிகாரம் நாளுக்கு நாள் தீணியிட்டு
வளர்க்கப்படும் அந்த மாளிகை
எங்களை சிறிய தகரப்பேணியில் அடைத்துக்கொண்டிருக்கிறது.
காய்ந்துவிடாத எங்கள் குருதியை எங்கும் அப்பி வைத்திருக்கிறது.
அரசன் எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருக்கிறான்.

அரசனின் பெரு மகிழ்ச்சியால் மாளிகை
எப்பொழுதும் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.
கனவுகள் கிழித்து மறுபுறத்தில் உள்ள தெருவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்
கடற்கரையிலிருந்து என்னதான் சொல்ல முடியும்?
திரும்பும் பக்கங்கள் எல்லாம் தோற்கடிக்கப்பட்ட
எமது மண்மேடுகளது புகைப்படங்களின் மீதிருந்து
அரசன் சிரித்துக்கொண்டிருக்கிறான்.
அவர்களது நகரம் வெற்றியை இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
நமது வாழ்வை தின்று ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

அரசனின் அன்றைய வார்த்தைகள் எவ்வளவு குரூரமானவை என்பதை
உனக்கு உணர்த்த வேண்டியுள்ளது.
எனினும் அவற்றை மீளவும்
என்னால் உச்சரிக்க முடியவில்லை.
முகம் இறுகி நாங்கள் வார்த்தைகளற்று தவித்தோம்.
நாங்கள் அரசனுக்காக சிரித்து
கைகளை தட்ட வேண்டும் என்று மந்திரி சொன்னான்.
முடியுமானவரை சிலர் அரசனை மகிழ்ச்சிப் படுத்தினார்கள்.

எல்லோரும் கடற்கரையை பார்த்து புன்னகையையும் கைகளையும்
இழந்ததாக சொல்லிக்கொண்டு நின்றனர்.
அரசன் தனது வீட்டுக்குச் சென்று உணவருந்திய பின்னர்தான்
நாம் வாடி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டோம்.
எல்லாவற்றின் பிறகும், சில நாட்கள் கழிந்தும்
உன்னுடன் எதையும் பகிர முடியவில்லை.
நாம் தொடர்ந்து ஏமாந்துகொண்டிருக்கிறோம்.
நமது தேசம் போலன்றி இங்கு இரவுகள் முழுமையாக கிடைக்கின்றன.

இரவிரவாக எல்லாரது
புன்னகையும் கைகளும் கடல் வழியாக எங்கோ எடுத்துச் செல்லப்பட்டன.
அரசனின் நகரமும் இரவிரவாக சிரித்துக்கொண்டிருக்கிறது.
நன் கடற்கரையில் இருந்து முழு இரவையும் கடந்து கொண்டிருந்தேன்.
__________________________
(12.10.2009 இலங்கை ஜனாதிபதி, மகிந்த ராஜபக்ஷ, சந்திப்பு, கொழும்பு, பழைய பாராள மன்ற கட்டிடம், கடற்கரை)

-தீபச்செல்வன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

Print

21 Comments

  1. குழந்தைகளின் வழியே துயரம் சொல்வது தீபச்செல்வனின் பாணி. முகிலனும் அந்த பாணியில் சிறப்பாக எழுதியுள்ளார். முகிலனின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

    Posted on 24-Oct-09 at 12:16 pm | Permalink
  2. //அவர்களது நகரம் வெற்றியை இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.// இந்த வரிகள் கவலைக்குரியது.

    தீபச்செல்வனின் கவிதை அருமை. ராசபக்சேவின் குதுகல சிரிப்பு படம் ஒன்றை இணையுங்கள். பொருத்தமாய் இருக்கும்.

    Posted on 24-Oct-09 at 12:26 pm | Permalink
  3. yazhini

    Mugilan kavidhai padiththu azhudaen ! Uyar(!) Saadhiyil pirapedhuththa avamaanathaal !

    Posted on 24-Oct-09 at 3:46 pm | Permalink
  4. வினவு

    வாழ்க்கை அனுபவத்திலிருந்து நல்ல கவிதைகள் பிறக்கும் என்பதை சாத்தியமாக்கிய தோழர் முகிலனுக்கு வாழ்த்துக்கள்!

    Posted on 24-Oct-09 at 8:32 pm | Permalink
  5. prabhu

    mugilan kavithai arpudam.

    Posted on 24-Oct-09 at 8:59 pm | Permalink
  6. சக்திவேல்

    இரண்டு கவிதைகளும் மிக அருமையாக இருந்தது என்று சொல்வதைவிட இரண்டு குறும்படம் பார்த்து போன்ற உணர்வு ஏற்பட்டது.

    Posted on 24-Oct-09 at 11:36 pm | Permalink
  7. முகிலன் உங்கள் கவிதை ஒரு காலகன்னடியாக கண் முன்னே விரிகிறது எதிர் காலத்திற்கான எட்சரிகையோடு 

    Posted on 25-Oct-09 at 12:07 am | Permalink
  8. //வாழ்க்கை அனுபவத்திலிருந்து நல்ல கவிதைகள் பிறக்கும் என்பதை சாத்தியமாக்கிய தோழர் முகிலனுக்கு வாழ்த்துக்கள்!//

    முகிலனின் கவிதை மனசாட்சியை பிடித்து உலுக்கும் பலருக்கு. வாழ்க்கை அனுபவத்திலிருந்து வரும் கவிதைகள் உயிரோட்டமானவை.

    //காலனிச் சத்தங்கள்// தலைப்பில் எழுத்து பிழையா? அல்லது உள்ளடக்கத்தின் பால், சரியானது தானா?

    Posted on 26-Oct-09 at 10:45 am | Permalink
  9. முகிலனின் கவிதை !
    சிறு குழந்தையின் பிஞ்சுக்கை கொண்டு சமூகத்தின் முகத்தில் பளார் என்ற அறை !

    Posted on 26-Oct-09 at 11:43 am | Permalink
    • mughil

      dear kuruthu, athu kavithain ullakkam

      Posted on 26-Oct-09 at 11:49 am | Permalink
      • mughil

        dear kuruthu, athu kavithain ullatakkam

        Posted on 26-Oct-09 at 12:13 pm | Permalink
  10. முகிலனின் கவிதை அருமை. குறிப்பாக கடைசி வரிகள் அழுத்தமானவை. தீபச் செல்வனின் ஆழமான படிமங்கள் தொடர்கின்றன.

    Posted on 26-Oct-09 at 12:38 pm | Permalink
  11. kkr

    Good work by Mukilan. Simple yet Straight. Precise and perfection.

    Posted on 26-Oct-09 at 1:48 pm | Permalink
  12. சிறப்பான கவிதை,
    தோழர் பூதம் கூறியது போல பிஞ்சு கரங்களின் வழியே முகிலன் தடித்த கண்ணங்களில் பளார் என்று அறைந்திருக்கிறார். வெண்மணி வளர்ந்து பெரியவளாகி சாதிய சமூகத்தின் மேடு பள்ளங்களை தனது கால்களால் மிதித்து சமன் படுத்த நம்மோடு கரம் கோர்க்க வாழ்த்துக்கள்.

    தோழர் முகில‌ன் தொடர்ந்து எழுத வேண்டும் தோழருக்கு நமது வாழ்த்து.

    Posted on 26-Oct-09 at 2:26 pm | Permalink
  13. ஒடுக்கப்பட்ட மக்களின் வலி தோழர் முகிலனுடைய‌ கவிதையின் மூலம் நமக்குள் இறங்குகிறது. தொடர்ந்து எழுத‌ தோழருக்கு வாழ்த்துக்கள்.

    Posted on 26-Oct-09 at 4:24 pm | Permalink
  14. முகிலனின் வரிகள் உண்மையில் சிறப்பானவை, சுடுகின்றவை. நாம் என்ன செய்யப்போகிறோம் நாளைய மாற்றத்திற்காக?

    ……………………படிப்பிற்காக வேலைக்காக
    நான் செல்லும் இடங்களிலெல்லாம்
    பதவியும் பணமும்
    என்னை பேசாமலிருக்கச்செய்து விட்டன

    நான் மறுத்தாலும்
    ஊருக்குள் சென்றதும் என் காலணிகள்
    தானாய் கக்கத்தில் ஏறுகின்றன
    தேனீர்க்கடைகள் என்னை
    பிளாஸ்டிக் டம்ளர்களோடு
    வரவேற்கின்றன

    என் துயரங்கள் வேதனைகள்
    எல்லாம் நினைவலைகளாய்
    என்னுள் ததும்பிக்கொண்டிருக்கின்றன
    எல்லாம் உள்ளே வெடித்துக்
    குமுறிக்கொண்டிருக்கின்றன
    பயமாய் இருக்கின்றது
    எங்காவது தப்பித்தவறி
    பேசிவிடுவோமோ என்று…….

    என்னதான் முயன்றாலும் முடிவதில்லை
    சில நேரம் பேசித்தொலைக்கின்றேன்
    கனவுகளில்……………….

    Posted on 26-Oct-09 at 7:49 pm | Permalink
  15. அர டிக்கெட்டு!

    இரண்டு கவிதைகளுமே அருமை,  முகிலனிடத்திலிருந்து. குழந்தை மேலத்தெரு அதிர நடந்து சென்ற கவிதையை விரைவில் எதிர்ப்பாக்கிறேன். அன்பும் வாழ்த்துக்களும். 

    Posted on 26-Oct-09 at 7:54 pm | Permalink
  16. தோழர்களின் பின்னூட்டங்கள் வரிசையாக வ்ருகின்றன

    வினவின் புதிய வாசகர்கள் இந்த கவிதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் தங்கள் கருத்துக்களை பின்னூட்டமிட வேண்டும் என கோருகிறேன்.

    Posted on 26-Oct-09 at 9:33 pm | Permalink
  17. முதல் தலைமுறை

    பேராண்மை படம் பற்றிய விமர்சனத்தை வினவிடம் எதிர்பார்க்கிறோம்
    http://saamaaniyan.blogspot.com/2009/10/blog-post_26.html

    பேராண்மையும், ஊடகங்களின் பார்வையும்

    ‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன. சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.
    01. இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கைகோள் ஏவுவதாக தொடங்குகிறது இந்த திரைப்படம். இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கை கோள் ஏவுகிறது என்றால், குழந்தை கூட நம்பாது. விவசாயம் சார்ந்த அடிமட்ட தொழிலாளர்கள் நலனை காக்காமல் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதை மறைமுகமாக சித்தரிக்கும் காட்சியாகவே இதனை பார்க்கிறேன். எனவே இந்திய அரசை போற்றும் படமாக, தேச பக்தி படமாக கருத முடியாது.
    02. ‘காட்டுல சுள்ளி பொறுக்கிறவனை கூட விடமாட்டோம்’ என காட்டில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றும் வனத்துறை அதிகாரிகள், ‘இந்த இடத்தையும் ரியல் எஸ்டேட் போட்டு வித்துட்டீங்களா’ என அதிகாரிகளிடம் கேட்கும் பழங்குடியின மக்கள் என அரசின் உத்தரவுகளுக்கு எதிரான வசனங்கள் இந்த படத்தில் நிரம்பியுள்ளன. எப்படி இதனை தேச பக்தி படமாக பார்ப்பது?
    03. ‘என்ன சர்வாதிகாரம் பண்ணறீங்களா? உழைக்கிற மக்கள் சர்வாதிகாரம் பண்ற நாள் சீக்கிரம் வந்துடும்’ என பழங்குடியின மக்கள் பேசும் வசனங்கள், தேச பக்தி திரைப்படத்தின் வசனங்களாக எப்படி பார்க்க முடிகிறது?
    04. ‘எந்த வசதி இல்லாமலே இவங்க இவ்வளவு படிக்கறாங்களே. வசதி இருந்துட்டா அவ்வளவு தான் நம்மளை ஒதுக்கீருவானுங்க’ என்ற வசனத்திலும், ‘சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ எனும் பாடல் வரிகளிலும் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுவதை அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்திய அரசை போற்றும் படமாக கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்?
    05. படத்தின் இறுதியில் பொன்வண்ணன் விருது பெறுவது போல் காட்சி உள்ளதே, அதனை அதிகார வர்க்கத்துக்கு எதிரான காட்சியாக சித்தரிக்க முடிகிறதா, தேச நலன் காத்த வீரருக்கான விருதாக சித்தரிக்க முடிகிறதா?
    வழக்கமான திரைப்படங்களில் இருந்து முழுமையாக வேறுபடுகிறது பேராண்மை திரைப்படம்.
    01. முதலில் படத்தின் கதாநாயகன் துருவன். அம்பி, கிச்சா, ராகவன் என சிலரை மட்டுமே கதையின் நாயகர்களாக நம் முன்னிறுத்தி வந்த திரைப்படங்களில் இருந்து வேறுபடுகிறது பேராண்மை. துருவன் என்ற பழங்குடியின மக்களில் ஒருவரை கதாநாயகனாக காட்டியதற்கு இயக்குனர் சனநாதனை யாரால் பாராட்டாமல் இருக்க முடியும்.
    02. சாதி எதிர்ப்பு அரசியல். ‘அவன் என்ன சாதி, நாம என்ன சாதி, நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு’ என கதாநாயகன் துருவனை பற்றி நாயகிகள் விமர்சிக்கும் வசனங்களில் இளம் பெண்களிடம் படிந்துள்ள சாதியுணர்வை கூறியுள்ளதும், ‘எங்க ஆளுங்களுக்கு இங்கிலீஸ்ல பேசுனா புரியாது. உங்க கிட்ட பேசுன உங்களுக்கு புடிக்காது’ என நாயகிகளிடம் கூறும் இடங்களில் சாதி எதிர்ப்பு அரசியலை விதைத்துள்ளதிலும் இயக்குனர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
    03. அதிகார வர்க்க எதிர்ப்பு. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பை அப்பட்டமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் என்பதால் வனகாவலவரான கதாநாயகனிடம், தனது ‘ஷ¨’வை பாலிஸ் போட்டுவரச்சொல்லும் வன அதிகாரி, அதே காட்சியில் உயர்சாதியை சேர்ந்த கல்லூரி மாணவிகளை உட்கார வைத்து பேசுவது என பல இடங்களில் அதிகார வர்க்க எதிர்ப்பை காட்டியிருக்கிறார் இயக்குனர். இறுதியில் குடியரசுத்தலைவரிடம் பொன்வண்ணன் விருது பெறுவது அதிகார வர்க்க எதிர்ப்பை முழுமையாக அம்பலமாக்கும் காட்சி.
    04. படத்தின் பெயரில் ஆண்மையிருக்குமாறு பேராண்மை என பெயரிட்டு, பெண்மை போற்றும் வகையில் பெண்களை கதையின் நாயகிகளாகவும், சகாசம் செய்பவர்களாகவும் முன்வைத்ததற்காகவும் பாராட்டுகள். ‘கிராமத்துக்கு பெண்களுக்கு முந்தானை விலக்கியே காலம் போச்சு; நகரத்து பெண்களுக்கு முடியை விலக்கியே காலம் போச்சு’ என்பன உள்ளிட்ட வசனங்கள் ‘நச்’.
    05. தீவிரவாதிகள் என்றதும் இஸ்லாமியர்களை கண்முன் நிறுத்தும், திரைப்படங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது பேராண்மை. சர்வதேச கூலிப்படையினரின் முகத்தையும், ரசிகர்களுக்கு காட்டியது அழகு.

    சொன்னவர் சாமானியன் at 10:21 PM

    0 பின்னூட்டங்கள்:

    Posted on 27-Oct-09 at 11:18 am | Permalink
  18. mani

    முகிலன்

    எளிய மொழியில் உண்மையான சமூக அக்கறை மற்றும் கோபத்தோடு எழுதப்பட்ட கவிதை என்ற போதிலும்
    முடித்த இடத்தில் கவிதையின் பரிமாணத்தை நீங்களே சுருக்கிக் கொண்டது போலத் தெரிகின்றது. புகைப்படத்தில் உண்மையான வெண்மணியின் கால்களை புகைப்படமாக்கி செருப்பை அணிவிக்காமல் அருகில் விட்டிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

    Posted on 28-Oct-09 at 4:38 pm | Permalink
  19. dear thozar, unga kavithai migavum arumayaga irundathu.azagiyaperiyavanin oru kadai’ai ninaivoottugirathu.

    Posted on 03-Nov-09 at 2:27 pm | Permalink

Post a Comment

Your email is never published nor shared.

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!