துரை – சண்முகம் கவிதைகள்

  1. ’குடியரசு’ தயார்!
  2. எதிரி

1.  ’குடியரசு’ தயார்!

vote-012கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட
தேசிய கீதம் தயார்…
மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு
தேசியக் கொடி தயார்…

அமெரிக்க சிங்கத்தின் வாயில் தலையை விட்டு
வீரத்தைக் காட்டிட பிரதமர் தயார்…

அன்னியக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டு
இந்தியக் ’குடியரசை’ தெருவில் நிறுத்த கலைஞர் தயார்…

இந்திய இறையாண்மையின் வசூலை மறந்து
இலவசமாக நடித்துக் காட்ட ஜெயலலிதா தயார்…
குணச்சித்திர வேடத்தில் ’குடியரசை’ காப்பாற்ற
சோனியா தயார்…

அறிமுக வில்லன் ராகுல்காந்தி
அடவு கட்டி இந்திய தேசியம் ஆடத்தயார்…
பங்குச் சந்தையின் சண்டைக்காட்சியில்
ப.சிதம்பரம் கலக்கத் தயார்…

ஆடையைக் குறைத்துக்காட்ட திரைப்படம் தயார்…
ஆயுதக் கவர்ச்சிகாட்ட முப்படை தயார்…

கழனிகள் இழந்தவர் கண்டுகளிக்க
அலங்கார வண்டியில் பச்சைவயல்கள் பார்வைக்குத் தயார்…

கால்நடை இழந்தவர் மனதைத்தேற்ற
குதிரைப்படையின் அணிவகுப்பு தயார்…

எல்லை தாண்டும் ஏவுகணைகள்
எதிரியைப் பொடியாக்கும் வெடிகுண்டுகள்
பிரமிப்பூட்டும் பீரங்கிகள், துப்பாக்கிகள்
காலாட்படைகள்… கையாள்படைகள்
கண்ணாரப் பாருங்கள்.. எல்லாமே உங்களுக்காகத் தயார்..
உண்மையிலேயே உங்களுக்காகத்தான்.

நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ

நிச்சயம் முப்படையுடன்
உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!

———————————————————————–

2. எதிரி

கடற்கரையோரம்
குடியரசு தின அணிவகுப்புக்காக நின்றிருந்த
பீரங்கியைப் பார்த்துவிட்டு
பேரன் கேட்டான்;

இது எதுக்கு தாத்தா?

எதிரிங்களைச் சுட.

எதிரிங்கன்னா?

பாகிஸ்தான் மாதிரி
நம்மளோட சண்டைக்கு வந்து
நாட்டை புடிக்கப் பார்க்குறவங்கதான்.

நாட்டை புடிச்சு
என்ன பண்ணுவாங்க?

பேரனின் கேள்விகள் விரிவடைய
ஊன்றிக் கொள்ள
வார்த்தைகளைத் தேடினார் தாத்தா.

என்ன பண்ணுவாங்கன்னா…
அதாவது.. நம்ம ஊரை புடிச்சிகிட்டு
நம்பளையே அடிமையாக்கி
ஊம்… சொன்னதை செய்யுன்னு மிரட்டுவாங்க..

பயமுறுத்திய தனது பாவனைகளைப் பார்த்து
பேரனின் கேள்விகள் முடிந்துவிடும்
என எதிர்பார்த்தார் தாத்தா.

ஆராய்ச்சிப் பார்வையுடன்
அடுத்து கேட்டான் பேரன்,
அப்படீன்னா…
”எங்கிருந்தோ வந்து
நம்ம ஊரையே வளைச்சுகிட்டு
ஒழுங்கா வேலையை செய்! இல்லன்னா தூக்கிடுவேன்னு!
நோக்கியா நம்பளையே அடிமையாட்டம்
மிரட்டுறான்னு மாமா சொன்னாரே…

நோக்கியா யாரு தாத்தா…
பீரங்கி அவனையெல்லாம் சுடாதா?

பேரன் கேட்டதும்
பீரங்கியால்  சுட்டது போல்
என்ன செய்வதென்று புரியாமல்
தடுமாறிப் போனார் தாத்தா.

தடுமாறுவது தாத்தா மட்டுமா?

vote-012

தொடர்புடைய பதிவுகள்