கோவிட்-19 தாக்குதல் தீவிரமடைந்த பின்னர், இந்தியா முழுவதும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவை சரிவை சந்தித்துக் கொண்டிருக்கையில் சாதியப் படுகொலைகள் மட்டும் அதே அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேசம் மற்றும் மராட்டியத்தில் நடைபெற்ற சாதியப் படுகொலைகளே அதற்குச் சான்று.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த தோம்கெரா எனும் ஊரில், கடந்த ஜூன் 6 – சனிக்கிழமை இரவு விகாஸ் ஜாதவ் என்ற ஒரு 17 வயது தலித் சிறுவனை சுட்டுக் கொன்றிருக்கிறது ஆதிக்க சாதிக் கும்பல்.

கடந்த மே 31 – அன்று இரவு விகாஸ் ஜாதவும் அவனது உறவினரும் சேர்ந்து கோவிலுக்குச் சென்று பூஜை செய்துள்ளனர். அப்போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஹோரம் சவுகான் மற்றும் அவனது கூட்டாளிகள் அங்கு வந்துள்ளனர். விகாஸை கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதி மறுத்துள்ளனர். இதனைத் தொடந்து அங்கு வாக்குவாதம் நடந்துள்ளது, கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை ஒட்டி கடந்த ஜூன்1 அன்று காலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூன் 6 அன்று இரவு சவுகான் மற்றும் அவனது கூட்டாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்து, வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த விகாஸை சுட்டுக் கொன்றுவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர்.

இந்தக் கொலையை சாதி வெறிப் படுகொலையாக பதிவு செய்யாமல், இரு தரப்புக்கும் இடையில் இருந்த பணத் தகராறு காரணமாக நடந்த படுகொலை என்ற வகையில் மடைமாற்றி எடுத்துச் சென்றிருக்கிறது போலீசு.

***

ராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தின் தாடிப்பவனி எனும் நகரில் குன்பி எனும் ஆதிக்கசாதியைச் சேர்ந்த சாதி வெறியர்களால் தலித் செயல்பாட்டாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 27-ம் தேதியன்று சாதி எதிர்ப்புப் போராளியும், சமூக செயற்பாட்டாளருமான அரவிந்த் பன்சோட் என்ற 32 வயது இளைஞர் தனது நண்பர் ரவுத்தோடு அருகில் உள்ள தாடிப்பவனி நகரத்திற்கு ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அரவிந்த் பன்சோட், “வஞ்சித் பகுஜன் அகாதி” என்ற சாதி எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

அரவிந்த் பன்சோட்

அரவிந்த் பணம் எடுத்துக் கொண்டிருக்கையில், அருகில் உள்ள எரிவாயு உருளை முகமைக்கு (Gas Agency) ரவுத் சென்றிருக்கிறார். பின்னர் அம்முகமையின் தொடர்பு எண்கள் அதன் முகப்புப் பலகையில் இருந்ததை புகைப்படம் எடுத்துள்ளார். அதனைக் கண்டு, அந்த கடையின் உரிமையாளரான மயூரேஷ் என்பவர் ரவுத்தின் அலைபேசியைப் பிடுங்கியுள்ளார். ரவுத் இதனை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் பணம் எடுத்துவிட்டு, எரிவாயு உருளை முகமைக்குச் சென்ற அரவிந்தும் தனது நண்பர் ரவுத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். தலித் சாதியைச் சேர்ந்த உங்களுக்கு எங்களை எதிர்த்துப் பேசும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா என மயூரேஷும் அவனது நண்பர்களும் சேர்ந்து அரவிந்தையும் ரவுத்தையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர் . சாதிய ரீதியாக மிகவும் இழிவாகப் பேசியுள்ளனர்.

கடுமையான தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் இருவரையும் கடையைவிட்டு வெளியே தள்ளிவிட்டுள்ளனர். கடுமையாக தாக்கப்பட்ட அரவிந்தை அமரச் செய்து விட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்று தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட சென்றுள்ளார்.

ஐந்து நிமிடங்களுக்குள் திரும்பி வந்து பார்க்கையில் அரவிந்த் கையில் விச பாட்டிலோடு மயக்கமடைந்து கிடந்திருக்கிறார். உடனடியாக ஒருவாகனத்தை ஏற்பாடு செய்ய ரவுத் முயற்சிப்பதற்குள்ளாக மயூரேஷும் அவனது நண்பர்களும் ஒரு காரில் அரவிந்தை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர். அந்தக் காரில் ரவுத் ஏற முயற்சிக்கையில் அவரை கீழே தள்ளிவிட்டு அரவிந்தோடு கிளம்பிவிட்டனர்.

மயூரேஷ் திட்டமிட்டே ரவுத்தை காரில் ஏற்றிக் கொள்ளாமல், அரவிந்தை மட்டும் ஏற்றிக் கொண்டு அவரது மரணத்தை உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது. இல்லையெனில் ரவுத்தை அவர்கள் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

படிக்க:
♦ சென்னை மக்கள் உதவிக் குழு : 50 நாட்களைக் கடந்து தொடரும் நிவாரணப் பணிகள் !
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

மயூரேஷின் தந்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறார். மயூரேஷும் அந்தக் கட்சியின் உள்ளூர் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் இந்த வழக்கை தற்கொலை வழக்காக முடிக்க எத்தனித்தது போலீசு. பின்னர், பிரகாஷ் அம்பேத்கர், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தீப் தம்காட்கே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதி எதிர்ப்புப் போராளிகள் உள்ளிட்ட பலரும் இவ்விவகாரத்தில் தலையிட்ட பின்னரே, போலீசு இதை சாதிய வன்முறைப் படுகொலையாக பதிவு செய்துள்ளது.

***

தே மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள பிம்பிள் சௌதகர் எனும் கிராமத்தில் விரஜ் ஜக்தப் என்ற 20 வயது கல்லூரி மாணவர் ஆதிக்க சாதி வெறியர்களால் டெம்போ ஏற்றி கொல்லப்பட்டார்.

புனே அருகில் உள்ள பிம்பிள் சௌதகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விரஜ் ஜக்தப், அதே பகுதியைச் சேர்ந்த மராத்தா சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். சில மாதங்களுகு முன்னரே, இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்குத் தெரிந்து விரஜ்-ஐ மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து விரஜும் அந்தப் பெண்ணும் காதலித்துள்ளனர்.

விரஜ் ஜக்தப்

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் தந்தை ஜெகதீஷ் காடே, கடந்த ஜூன் 7 அன்று இரவு 9.30 மணியளவில், கூடுதலாக ஐந்து மராத்தா சாதிவெறியர்களோடு சென்று விரஜ் ஜக்தப்-ஐ தடிகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார். அதன் பின்னர், விரஜ் மீது டெம்போவை ஏற்றியிருக்கின்றனர். கடுமையாக காயம்பட்ட நிலையில், விரஜ் – மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒரு நாள் கழித்து இறந்துள்ளார்.

மராத்தா சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்த ‘குற்றத்திற்காக’ இந்தப் படுகொலை நடந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட 6 பேரில் 2 பேர் 18 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரத்தில் விரஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே போலீசிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் போலீசு வழக்குப் பதிவு கூட செய்ய முன்வரவில்லை. அப்போது விரஜ் மருத்துவமனையில் உயிரோடுதான் இருந்திருக்கிறார். அங்கு தனது வாக்குமூலத்தை உறவினர்களிடம் கூறியிருக்கிறார். போலீசு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை. மறுநாள் ஜூன் 8 அன்று விரஜ் இறந்த பின்னரே, வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீசு.

மராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில்தான் சாதிவெறிப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜல்னா, ஹிங்கோலி, பர்பானி ஆகிய மாவட்டங்களில் சாதி வெறிப் படுகொலைகள் அதிகம். மாராட்டிய மாநிலம் முன்னேறிய மாநிலம் என்று கூறப்பட்டாலும், சமூகம் இன்னும் சாதி வெறி ஊறிப் போன சமூகமாகவே இருக்கிறது.

இந்த நிலைமை மராட்டிய மாநிலத்தில் மட்டுமல்ல, பார்ப்பனியத்தில் ஊறிப்போன இந்தியா முழுமைக்கும் இது பொருந்தும் என்பதுதான் கசப்பான உண்மை !


– நந்தன்
செய்தி ஆதாரம்: தி வயர், இந்துஸ்தான் டைம்ஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க