privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?

-

“காக்கிச்சட்டை கிரிமினல்கள்”என நாம் போலீசாரைக் குற்றம் சுமத்தும்பொழுது, அது பற்றி முகம் சுளிப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் (மறைந்து போன) ருச்சிகா கிர்ஹோத்ரா என்ற சிறுமியின் கதையை அறிந்துகொள்ள வேண்டும்.

ருச்சிகா கிர்ஹோத்ரா 1990-இல் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகர் அருகிலுள்ள பஞ்சகுலா பகுதியில் வசித்து வந்தார்.  அச்சிறுமிக்கு, எதிர்காலத்தில் தானொரு மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வர வேண்டும் என்ற கனவு இருந்ததோடு, அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். அச்சமயத்தில்,எஸ்.பி.எஸ்.ரத்தோர் அரியானா மாநிலக் கூடுதல் போலீசு தலைமை இயக்குநராகவும், அரியானா மாநில டென்னிஸ் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தான்.  “ருச்சிகாவைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்கிக் காட்டுவதாக” அச்சிறுமியின் பெற்றோர்களிடம் கூறிவந்த ரத்தோர், இது தொடர்பாகத் தன்னை வந்து சந்திக்க ருச்சிகாவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டான்.

இதன்படி, ருச்சிகா தனது தோழி ஆராதனாவை அழைத்துக்கொண்டு, ஆகஸ்டு 12, 1990 அன்று ரத்தோரைச் சந்திப்பதற்காக, அவனது அலுவலகத்திற்குச் சென்றார். ஆராதனாவை ஏதோவொரு சாக்கு சொல்லி வெளியே அனுப்பிய ரத்தோர், அதன்பின் சிறுமி ருச்சிகாவிடம் தனது வக்கிரத்தைக் காட்டத் தொடங்கினான்.  ஆராதனா போன வேகத்திலேயே திரும்பிவிட்டதால், ரத்தோர் தனது வக்கிர விளையாட்டை நிறுத்திக் கொள்ள நேர்ந்தது.  ரத்தோரின் வக்கிரப் புத்தியைப் புரிந்து கொண்ட ருச்சிகா, தனது தோழியோடு தப்பித்து வெளியே ஓடிவிட்டார்.

ருச்சிகா, சம்பவம் நடந்து இரண்டொரு நாட்கள் கழித்து, ரத்தோரின் பாலியல் தாக்குதலைத் தனது பெற்றோரிடமும், தனது தோழி ஆராதனாவின் பெற்றோரிடம் கூறினார்.  அவர்கள் இது குறித்து மாநில அரசிற்கும், போலீசு உயர்அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர்.  அப்பொழுது அரியானா மாநிலப் போலீசு தலைமை இயக்குநராக இருந்த ஆர்.ஆர்.சிங் இப்புகார் குறித்து விசாரணை நடத்தி, அடுத்த மாதமே அது குறித்த அறிக்கையை மாநில அரசிடம் அளித்தார்.

அவ்வறிக்கை ருச்சிகாவின் புகாரை உண்மையென உறுதிப்படுத்தியிருந்த போதும், அரியானா மாநில அரசு அவ்வறிக்கையின்படி ரத்தோரின் மீது நடவடிக்கை எடுக்காததோடு, அறிக்கையினை வெளியிடவும் மறுத்துவிட்டது.  அதேசமயம், ரத்தோர் தனது வரம்பற்ற போலீசு அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டு, ருச்சிகாவின் குடும்பத்தை வேட்டையாடத் தொடங்கினான்.

ருச்சிகா ‘ஒழுங்கீனம்’ காரணமாகப் பள்ளியில் இருந்து வெறியேற்றப்பட்டார்.  அவரது சகோதரன் ஆஷு கிர்ஹோத்ரா மீது 11 திருட்டு வழக்குகள் போடப்பட்டன.  ரத்தோர் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெறுமாறு ருச்சிகா, ஆராதனாவின் பெற்றோர்கள் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராலும், ரத்தோர் ஏவிவிட்ட குண்டர்களாலும் மிரட்டப்பட்டனர்.  ஆஷு கிர்ஹோத்ரா சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டார்.  இந்தத் துன்புறுத்தல்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலையும் பொறுத்துக் கொள்ள முடியாத பதி னான்கே வயதான சிறுமி ருச்சிகா 1993, டிசம்பரில்  பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.  ருச்சிகாவின் பெற்றோர் போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, சண்டிகரை விட்டுவெளியேறி தலைமறைவாக வாழத் தொடங்கினர்.

அதேபொழுதில் காக்கிச்சட்டை கிரிமினல் ரத்தோருக்கு மாநிலப் போலீசு தலைமை இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  ஆராதனாவின் பெற்றோர் ஆனந்த் பிரகாஷும் மாது பிரகாஷும் போலீசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரித் தொடர்ந்து போராடினர்.  அரியானா மாநில உயர்நீதி மன்றமும், அதன்பின் உச்சநீதி மன்றமும் இப்புகாரில் தலையிட்ட பிறகுதான், 1999 ஆம் ஆண்டு டிசம்பரில் ரத்தோர் மீதான புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோடு, வழக்கு விசாரணையும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.  அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 21, 2009 அன்றுதான் ரத்தோருக்கு ஆறு மாதக் கடுங்காவல் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  இதற்குள் ரத்தோர் பணியிலிருந்து கௌரவமாக ஓய்வு பெற்றுக் கொண்டு போய்விட்டார்.

சட்டப்படி பார்த்தால், ரத்தோரின் மீது சுமத்தபட்டுள்ள குற்றச்சாட்டிற்கு இரண்டு ஆண்டுகள்வரை தண்டனை   அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், ரத்தோரின் வயோதிகத்தைக் காரணமாகக் காட்டி, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படாமல் கருணை காட்டப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி, ரத்தோர் மீது சுமத்தப்பட்ட மற்ற குற்றச்சாட்டுகள் – ருச்சிகாவின் பெற்றோரை மிரட்டியது, ஆஷு கிர்ஹோத்ரா மீது பொய் வழக்கு போட்டது, ருச்சிகாவைத் தற்கொலை செய்யுமாறு தூண்டியது – அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.  நீதிமன்றம் தனது சாயம் வெளுத்துப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, பேருக்கு தண்டனை அளித்திருக்கிறது.  ரத்தோர் பத்தொன்பது ஆண்டுகளாக தண்டிக்கப்படாமல் அரசின் பாதுகாப்போடு சுற்றிவந்தது மட்டுமல்ல, இந்தப் பஞ்சு மிட்டாய்த் தீர்ப்பும் அருவெறுக்கத்தக்கதுதான்!