privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் !

ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் !

-

தமிழகத்தின் தொழில் மையங்களான கோவை, ஓசூர், சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலை செய்து வருகிறது. மற்ற தொழிற்சங்கங்களை விரும்பும் முதலாளிகள் இந்தப் புரட்சிகர தொழிற்சங்கத்தை மட்டும் ஏற்பதில்லை. பணி நீக்கம், மாற்றம் முதலான நடவடிக்கைகளை எங்கள் தோழர்கள் மீது தொடர்ந்து ஏவப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் சமீப காலமாக வளர்ந்து வரும் எமது சங்கத்தின் தோழர்களும் இதை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள்.

இதை மாற்றும் முகமாக போராடும் தொழிலாளர்களுக்கு தங்களது ஆதரவையும், ஒடுக்கும் முதலாளிகளுக்கு எச்சரிக்கையையும், முதலாளிகளுக்கு எடுபிடியாக வேலை செய்யும் அரசை அம்பலப்படுத்தும் முகமாகவும் இந்த ஆண்டு மே நாள் ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் புதுச்சேரியில் நடத்துவதென ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும் (வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ) முடிவு செய்தன.

ஆரம்பத்தில் அனுமதி அளித்த புதுச்சேரி போலீஸ் பின்பு தோழர்களை அழைத்து அனுமதி இல்லை என எழுத்து மூலம் தெரிவித்தது. காரணம் என்னவாம்? புதுவை மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசின் உளவுத் துறையான ஐ.பி – இன்டிலிஜன்ஸ் பீரோ கொடுத்திருக்கும் அறிக்கையின்படி, ம.க.இ.க அமைப்புகளுக்கு அனுமதி கொடுத்தால் புதுவை மாநிலம் இன்னொரு சட்டீஸ்கார் ஆக மாறுமாம். நக்ஸ்லைட் தீவிரவாதிகளுக்கு அனுமதி கொடுப்பது மேற்கண்ட விசயம் நடப்பதற்கு உதவி செய்வதாக ஆகுமாம். ஐ.பி என்பது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் கூடாரம். ஆனால் அவர்களது மேற்பார்வையில்தான் புதுச்சேரி காங்கிரசு அரசாங்கம் குப்பை கொட்டி வருகிறது.

இதை அடுத்து புதுச்சேரியில் பிரச்சாரம் செய்து வந்த தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். நக்சலைட்டுகள் புதுவையில் ஊடுறுவியிருப்பதாக தினசரிகள் செய்தி வெளியிட்டு பயமுறுத்தின. இதை தகர்க்கும் முகமாக போலீசின் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ம.க.இ.க வழக்கு தொடுத்தது. விசாரணை செய்த நீதிபதியோ எமது வழக்குறைஞர்களின் விளக்கத்தை ஏற்காமல் ஐ.பியின் அறிக்கையை வைத்து அனுமதி அளித்த போலீசின் விளக்கத்தை ஏற்றது. இருந்தும் போலீசின் உத்திரவை ரத்து செய்யமாலும், எமது கோரிக்கையை நிராகரிக்காமலும் மீண்டும் அனுமதி கேட்டு போலீசிடம் கொடுக்குமாறு கூறினார்.

இந்த மறைமுக போலீசு ஆதரவு தீர்ப்பை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்ற போதிலும் தோழர்கள் மீண்டும் புதுவை போலீசிடம் அனுமதி கேட்டனர். எஸ்.பியோ “ஐ.பி அறிக்கையை நிராகரிக்க முடியாது, வேண்டுமானால் முதல்வர் வைத்தியலிங்கத்தை பாருங்கள்” என்று அலட்சியமாக கூறினார். தோழர்களும் ஐ.ஜியை பார்ப்பதாக சொல்லிவிட்டு திரும்பினர்.

ஏதோ நூறு, ஐம்பது பேர் வருவார்கள், கைது செய்யலாம் என்று இறுமாந்திருந்த போலீசுக்கு அதிர்ச்சியூட்டும் வண்ணம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் புதுவை பேருந்து நிலையத்தில் கூடினர். ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை கேள்விப்பட்டு வந்த ஒரு சில போலீசார் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முனைந்தனர். ஒரு இன்ஸ்பெக்டர் தோழர்களிடம் அடாவடியாக நடந்து கொண்டபோது அவரது சட்டையைப் பிடித்து தோழர்கள் தள்ளிவிட்டனர். அந்த இன்ஸ்பெக்டரை தோழர்கள் அடித்தால் அதை வைத்து கலவரம் மூட்டுவது போலீசின் திட்டம். அதை தவிர்த்த தோழர்கள் பின்னர் மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். சுமார் இரண்டுமணி நேரம் செங்கொடி சூழ ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் தோழர்களை ரிமாண்ட் செய்வதற்கு போலீசு முயன்ற போது சுமார் 35 வழக்கறிஞர் தோழர்கள் கவுன்சில்களாக ஆஜராயினர். இந்த சட்டப்பூர்வ படையையும் போலீசு எதிர்பார்க்கவில்லை.

“அமைதியான புதுச்சேரி மாநிலத்தில் எந்தக் கட்சியும் இத்தகைய ஆர்ப்பட்டங்களை செய்ததில்லை, எனவே ஒரு முப்பது தோழர்களை மட்டும் ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப் போட்டுவிட்டு மற்றவர்களை விடுதலை செய்வதாக” போலீசு எஸ்.பி கோரினார். தோழர்களோ “தாங்கள் காலையில் கைது, மாலையில் விடுதலை என்ற சம்பிரதாயமான போராட்டத்திற்கு வரவில்லையெனவும், கைது செய்தால் எல்லோரையும் கைது செய்யவேண்டும், விடுதலை செய்தால் எல்லோரையும் விடுதலை செய்யவேண்டுமெனவும்” கறாராக கூறினர்.

இரண்டாயிரம் பேரை கைது செய்து சிறையிலடைக்க வேண்டிய பிரம்மாண்டமான பணியை நினைத்து அஞ்சியோ என்னவோ, பின்னர் இரவு ஒன்பது மணிக்கு தோழர்கள் அனைவரையும் போலீசு விடுதலை செய்தது. பு.ஜ.தொ.முவின் மாநில தலைவர் தோழர் முகுந்தன் உள்ளிட்ட பத்து தோழர்கள் மீது மட்டும் சில பிரிவுகள் மீது வழக்கு போட்டிருக்கிறது. எனினும் அவர்களை கைது செய்யவில்லை.

இந்தப் போராட்டத்தில் முதன் முறையாக கலந்து கொண்ட பதிவர் மற்றும் தோழர் ஒருவரின் அனுபவத்தை இங்கே பதிவு செய்கிறோம்.

______________________________________________-          வினவு

ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்!

ஆமாம், ஒரு பறையொலியும், தொடர்ந்து ஊதப்பட்ட விசில் சப்தங்களும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை துல்லியமாக புதுச்சேரி காவல்துறையும், பொது மக்களும் உணர்ந்துக் கொண்டது மே 1 அன்று, தொழிலாளர்தினத்தில்தான். சரியாக மாலை 4.15க்கு இந்த சம்பவம் நடந்தது. ஆனால், 8 மணி நேரத்துக்கு முன்பு – அதாவது காலை 8.15 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்ட போது – இப்படியொரு சம்பவம் நடக்கப்போவது எங்களுக்கு தெரியாது.

‘வினவு’ தளத்தில் மே நாள் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் புதுச்சேரியில் நடப்பதாக வாசித்ததும் அங்கு செல்லலாம் என்று தோன்றியது. இதற்கு வசதியாக அலுவலகமும் அன்று விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே ‘வினவு’ தளத்தில் காணப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதை தெரியப்படுத்தியதும், காலை 9 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருமாறு தோழர்கள் சொன்னார்கள்.

முந்தைய நாள் இரவு ஆரம்பித்த கோடை மழை, மறுநாள் காலை சிறு தூறலுடன் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு வினவுத் தோழர்களை தொடர்பு கொண்டபோது, ‘பயணத்தில் மாற்றமில்லை. புதுச்சேரி செல்லும் பேருந்துகள் 5வது நடைமேடையிலிருந்து புறப்படும். அங்கு வந்துவிடுங்கள்’ என்றார்கள்.

கோயம்பேடு சென்று, குறிப்பிட்ட 5வது மேடையை அடைந்தபோது வினவுத் தோழர்களுடன் ஆர்வமுள்ள சில வலையுலக நண்பர்களும் நின்றுக் கொண்டிருந்தார்கள். பரஸ்பர அறிமுகம் நிகழ்ந்துக் கொண்டிருந்தபோது, ஒரு தோழர் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். திரைத்துறையில் புகழ்பெற்றிருக்கும் அந்தத் தோழருக்கு அமைப்பு இப்போதுதான் அறிமுகமாகி இருக்கிறது. ஆனால், அவரது துணைவியார், கடந்த 6 ஆண்டுகளாக இயக்கத்தில் இருப்பதாக சொன்னார்கள். அவர்களின் மகனுக்கு 3 வயதுதான் இருக்கும். சிவப்பு நிற பனியனுடன் வந்திருந்த அந்த ‘குட்டி’ தோழர், வார்த்தைக்கு வார்த்தை அனைவரையும் மழலையில் ‘சொல்லுங்க தோழர், அப்படியா தோழர், சரி தோழர்…’ என்று குறிப்பிட்டது இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறை, கோடைக்காலம், வழியில் மாமல்லபுரம் உட்பட பல சுற்றுலாதளங்கள் இருப்பது ஆகிய காரணங்களால் புதுச்சேரி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழிந்தன. தூறலும் நிற்கவில்லை.

‘பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த இந்த நிமிடம் வரை புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. என்றாலும் அனுமதி வாங்கிவிடும் மும்முரத்தில் தோழர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை மாலைவரை அனுமதி கிடைக்காவிட்டால், பேருந்து நிலையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  இதனையடுத்து கைது நடவடிக்கை தொடரும். நாம் ஆர்ப்பாட்டத்தில் மட்டும் கலந்துக் கொள்ளலாம். இதற்கு விருப்பம் இருப்பவர்கள் மட்டும் வாருங்கள்’ என்று வினவுத் தோழர்கள் சொன்னார்கள்.

வந்திருந்த அனைவரும் இதற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்ததும், பேருந்தில் இடம் பிடிக்கும் சாகசத்துக்கு தயாரானோம். ஆனால், உணர்ச்சிவசப்பட்ட வெறும் சாகசம் மட்டுமே பயனளிக்காது என்பதை பொட்டில் அறைந்துபோல் கோயம்பேடு அனுபவப்பூர்வமாக உணர்த்தியது. நான்கைந்து தோழர்கள், வாசலில் நின்றபடி வரும் பேருந்தில் ஏறி இடம் பிடிக்க செய்த அனைத்து முயற்சிகளும் பயனற்று போயின. ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அனைத்து தோழர்களும் அமர எந்த இருக்கையும் இடம் தரவில்லை. மே தினத்தில் பங்கேற்பவர்களை புறக்கணிப்பதற்கு அந்தப் பேருந்துகள் யாரிடம் உத்திரவு பெற்றிருந்தன தெரியவில்லை.சென்னையின் புறநகர் பகுதியில் வேறு எங்களின் வருகைக்காக ஒரு வலையுலக தோழர் காத்திருந்தார். கோயம்பேட்டில் எங்களுக்கே இடம் கிடைக்காதபோது, வழியில் ஏறுவதற்கு காத்திருக்கும் அந்த வலைப்பதிவருக்கு நிச்சயம் நிற்கக் கூட இடம் கிடைக்காது.

எனவே தனியாக வண்டியை ஏற்பாடு செய்யலாம் என முடிவுக்கு வந்தோம். திரைத்துறையில் இருக்கும் தோழர், தனக்கு தெரிந்த இடத்தில் தொடர்பு கொண்டார். வண்டி கிடைத்தது. வண்டி வருவதற்குள் தேனீர் அருந்தலாம் என பேருந்து நிலையத்திலேயே இருந்த கடைக்கு சென்றோம். வெளியில் ஒரு கோப்பை தேநீர் 5 ரூபாய். ஆனால், 8 ரூபாய்க்கு விற்றார்கள். சிகரெட்டும் அப்படித்தான். தெரிந்தே கொள்ளை லாபம். யாரும் எதுவும் கேட்காமல், பேரம் பேசாமல் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். புகைப்பிடிப்பவர்களிடம் கடைக்காரர், சுற்றிக் கொண்டிருக்கும் கேமராக்களை காண்பித்து, ‘இங்கு புகைபிடிக்க வேண்டாம். கேமராவின் பார்வை படாத அந்த இடத்துக்கு செல்லுங்கள்’ என வழி காட்டினார். அவர், சுட்டிக்காட்டிய திசையில், காவலர் ஒருவர் புகை பிடித்தபடி இருந்தார்!

வண்டி வந்துவிட்டதாக தகவல் வந்ததும், சாலைக்கு வந்தோம். அனைவருக்கும் போதுமான இடத்தை அந்த வண்டி தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால், வழியில் காத்திருக்கும் தோழருக்கு இடமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, ஓட்டுநர், ‘பரவாயில்லை அட்ஜஸ் செய்துக் கொள்ளலாம்’ என்றார். ஏறி அமர்ந்தோம். வண்டி புறப்பட்டது. எங்கள் பயணம் உறுதியானதாலோ என்னவோ, தூறலும் நின்றது.

கழுவிய சாலையில் வண்டி சென்று கொண்டிருக்க, தோழர்கள் மத்தியில் கேள்வி பதில் சார்ந்த உரையாடல் – விவாதம் – ஆரம்பித்தது. வர்க்கமா, சாதியா, இனமா? எதற்கு முதலிடம் தர வேண்டும்… என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, வினவு தோழர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.  ‘வர்க்க விடுதலை கிடைத்த பிறகே, மற்ற சுதந்திரங்கள் கிடைக்கும்’ என்பதை எளிமையாக, உதாரணங்களுடன் விளக்கினார். நடுநடுவில் ‘குட்டித்’ தோழர், இயக்க பாடல்களின் முதலிரண்டு வரிகளை பாட, உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது. அதற்குள் புறநகர் பகுதியும் வந்துவிட, காத்திருந்த வலையுலக தோழர் வண்டியில் ஏறினார். கிழக்கு கடற்கரை சாலையில் வண்டி சீரான வேகத்தில் செல்ல ஆரம்பித்தது.

அப்போது ‘பெண் விடுதலை’ தொடர்பான கேள்வியை ஒரு தோழர் எழுப்பினார். ஆண்களின் அதிகாரத்திலிருந்து அவர்கள் விடுதலை அடைவது முதன்மையா அல்லது வர்க்க விடுதலை முதன்மையா? இதற்கு பதிலாக ஒரு கேள்வியை எழுப்பினார் வினவு தோழர். ‘திருப்பூர், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அடித்தட்டு பெண்களின் முதன்மையான பிரச்னை என்னவாக இருக்கும்?’  ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு பதிலை சொன்னார்கள். தோழர் சிரித்தபடி, ஆனால், வேதனையுடன், கழிவறைக்காக அவர்கள் படும் துன்பங்களை விளக்கினார். அதற்குள் எரிபொருளை நிரப்புவதற்காக வண்டி நின்றது.

ஆண் தோழர்கள் சிறுநீர் கழிக்க அந்த நிலையத்தில் இருந்த கழிவறை சுத்தமாக இருந்தது. ஆனால், பெண் தோழருக்கான கழிவறை அசுத்தமாக, பயன்படுத்த முடியாதபடி காட்சியளித்தது. வசதி படைத்தவர்கள் எரிபொருளை நிரப்புவதற்காக வந்து செல்லும் நிலையத்திலேயே பெண்களுக்கான உடல் சார்ந்த கழிவுகளை வெளியேற்ற சரியான இடம் இல்லாதபோது, சேரி, காலனிகளில் வசிக்கும் அடித்தட்டு பெண்களின் சிக்கல் எந்தளவுக்கு இருக்கும் என்பதை வினவு தோழர் விளக்காமலேயே புரிந்து கொண்டோம்.

இப்படியாக அன்றாட வாழ்க்கையின் போக்கிலிருந்தே எங்கள் கேள்விகளுக்கான விடைகளை தோழர்கள் அளித்தார்கள். நடுவில் தேநீர் மற்றும் நுங்கு சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தியபோதும் விவாதங்கள் தொடர்ந்தபடியே இருந்தன. எந்தக் கேள்வியையும் இது சிறுபிள்ளைத்தனமானது என்றோ, இது கூடவா உங்களுக்கு தெரியவில்லை என்ற தொனியிலோ வினவு தோழர் பதில் அளிக்கவில்லை. நிதானமாக, எளிமையாக, புரிந்துக் கொள்ளும்படி விளக்கினார். ‘இன்னொருமுறை சொல்லுங்க…’ என ஒரு வலையுலக தோழர் கேட்டபோது கூட சிரித்தபடியே ஆரம்பத்திலிருந்து பொறுப்புடன் பதில் சொன்னார்.

இடையிடையே வினவு தோழரின் கைப்பேசிக்கு அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது. இன்னமும் பேரணிக்கும், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரிந்தது.

பேச்சு மும்முரத்தில் மதிய உணவு என்பதையே மறந்துவிட்டோம். எதேச்சையாக கடிகாரத்தை பார்த்தபோது மதியம் இரண்டு மணியை கடந்திருந்தது தெரிந்தது. பெரியவர்கள் பரவாயில்லை. ‘குட்டித்’ தோழருக்கு பசிக்காதா? “கூட்டங்களுக்கு இவன் வருவது இது முதல்முறையல்ல. எனவே நேரம் கடந்து சாப்பிட்டு இவனுக்கு பழக்கம்தான். இடையில் பிஸ்கெட் கொடுத்திருக்கிறேன். புதுச்சேரியைத்தான் நாம் நெருங்கிவிட்டோமே. அங்கு சென்று உணவருந்தலாம். அதுவரை காத்திருப்பான்” என்றார் அந்த பெண் தோழர். ‘ஆமாம் தோழர். எனக்கு பசிக்கலை…’ என மழலையில் அந்தக் ‘குட்டித்’ தோழர் சொன்னபோது அனைவரும் நெகிழ்ந்துவிட்டோம்.

புதுச்சேரி எங்களை அன்புடன் வரவேற்ற வளைவை அடுத்து வந்த உணவகத்தில் அனைவரும் சாப்பிட்டோம். அப்போது நேரம் சரியாக மதியம் 3. ஒரு தோழர் தன்னிடம் இருந்த காகிதத்தில் ஒவ்வொரு செலவையும் குறித்துக் கொண்டிருந்தார். அனைவருமே ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்றுக்கு செலவு செய்தோம். அந்த ஒவ்வொன்றும் அவரது காகிதத்தில் பதிவாகியிருந்தது. ‘கடைசியா கணக்கு பார்த்து செலவை சமமா பகிர்ந்துக்கணும் தோழர். அதுக்கு இந்தக் கணக்கு உதவும். அதேநேரத்துல போதிய பண வசதி இல்லாத தோழரை நாம தொந்தரவு செய்யாம இருக்கவும் இது பயன்படும்’ என்றார்.

அப்போது வினவு தோழரின் கைப்பேசி ஒலித்தது. அனுமதி வழங்கப்படவில்லை. தடையை மீறி போராட்டம் என்பது உறுதியானது. புதுச்சேரி பேருந்து நிலையத்துக்கு சரியாக மாலை 4 மணிக்கு வந்துவிடும்படி மறுமுனையில் பேசிய தோழர் குறிப்பிட்டார்.

3.45க்கு புதுச்சேரி பேருந்து நிலையத்துக்கு வந்தோம். பயணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பேருந்துகள் நுழைந்துக் கொண்டும், பிதுங்கியபடி வெளியேறிய படியும் இருந்தன. நுழைவு வாயிலுக்கு அருகில் நாங்கள் நிழலில் நின்றோம். சற்றுத்தள்ளி விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் சிவப்புச் சட்டை அணிந்த தோழர்கள் தென்பட்டார்கள். ஆங்காங்கே அடித்தட்டு குடும்பங்கள் நடைமேடையில் அமர்ந்திருந்தார்கள்.

‘தேநீர் அருந்தலாம்’ என்று ஒரு தோழர் அழைத்தார். பேருந்து நிலையத்தில் இருந்த தேநீர் கடையில் கோப்பையை வாங்கியபடி திரும்பினால் –

நடைமேடையில் அமர்ந்திருந்த குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் தங்கள் சட்டையை கழற்றிக் கொண்டிருந்தார்கள். வெய்யிலில் உரம் ஏறிய மார்பு, வியர்வையில் பளபளத்தது. ஆங்காங்கே கிழிந்திருந்த பையிலிருந்து சிவப்பு சட்டையை எடுத்து அணிய ஆரம்பித்தார்கள். வயதான பெண்களில் ஆரம்பித்து அவரது குடும்பத்தை சார்ந்த அனைத்து வயது பெண்களும் பைகளுக்கு கீழே இருந்த மூங்கில் குச்சியில் அமைப்பின் கொடியை கட்ட ஆரம்பித்தார்கள். விவரமறிந்த சிறுவர்கள் பேனரை விரித்தார்கள். அதில் அமைப்பின் பெயரும், எந்தப் பகுதி என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. மெல்ல மெல்ல தோழர்களின் வருகை அதிகரித்தது. பயணிகளாக அமர்ந்திருந்த பலர், தோழர்களாக சட்டென உருமாறினார்கள். அப்படியும் தோழர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் குறைவாகவே இருந்தது.

நான்கைந்து காவலர்கள் புடைசூழ இருசக்கர வாகனத்தில் புதுச்சேரியின் எஸ்.ஐ. வந்து இறங்கினார். எங்களைப் போலவே தோழர்களின் எண்ணிக்கையை அவர்களும் கணக்கிட்டிருக்க வேண்டும். உதட்டில் அலட்சியமான புன்முறுவல் அவர்களிடம் பூத்தது. ஒரு காவலர் வந்து ஒரு தோழரிடம் இருந்த துண்டு பிரசுரத்தை கேட்டார். அந்தத் தோழரும் தன்னிடம் இருந்த கத்தையான பிரசுரங்களில் இருந்து ஒன்றை எடுத்து தந்தார். அதை பயபக்தியுடன் எஸ்.ஐ.யிடம் தந்தார் அந்தக் காவலர். எஸ்.ஐ. அதை மேம்போக்காக பார்த்துவிட்டு தன் முகத்தில் பூத்த வியர்வையை விரட்ட அதையே விசிறியாக பயன்படுத்த ஆரம்பித்தார்.

மணி 4.15.

பேருந்துநிலைய வாசலில் – நெடுஞ்சாலையில் – ஒரு பறை சப்தம் கேட்டது.

அடுத்த நொடி –

பேருந்து நிலையம் முழுக்க தொடர்ச்சியான விசில் சப்தம். எட்டு திசையிலிருந்தும் சாரி சாரியாக சிவப்பு சட்டை அணிந்த தோழர்கள் கையில் கொடியுடனும், பேனருடனும், தட்டிகளுடனும் இருவர் இருவராக பேருந்து நிலைய வாசலை நோக்கி கோஷமிட்டபடியே வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் முன்னிலையில் வந்த தோழரின் கையில் எழுப்ப வேண்டிய முழக்கங்கள் அணிந்த காகிதம் இருந்தது. அனைவரும் ஒரே வாசகங்கள் அடங்கிய கோஷத்தைத்தான் எழுப்பினார்கள். எந்தப் பகுதி, எந்த அமைப்பு, எந்தக் கிளை என்பதை அவரவர் குழுவினர் உயர்த்திப் பிடித்த பேனர்கள் பறைசாற்றின.

எங்களைப் போலவே புதுச்சேரி காவலர்களும் இதை எதிர்பார்க்கவில்லை. கண்ணில் தென்பட்ட சில நூறு தோழர்களை மட்டுமே வைத்து எண்ணிக்கையை தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள். ஆனால், பேருந்து நிலையத்தில் பயணிகளாக இருந்த சரி பாதி பேர் அமைப்புத் தோழர்கள்தான் என்பதை காவலர்கள் புரிந்து, உணர்ந்து, சுதாரிப்பதற்குள் –

புதுச்சேரி பேருந்து நிலையத்தின் வாசலை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் ஆக்ரமித்துவிட்டார்கள். சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. அடிவயிற்றிலிருந்து உணர்வுப்பூர்வமாக எழுந்த கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

காவலர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மைக்கும், ஸ்பீக்கரும் தடை செய்யப்பட்டன. காவல்துறைக்கு பயந்து எந்த ஸ்பீக்கர் செட் நண்பர்களும் உதவவில்லை. தோழர்களும் அசரவில்லை. பேட்டரியில் இயங்கும் மைக், ஸ்பீக்கரில் முன்னணி தோழர்கள் கோஷம் எழுப்ப ஆரம்பித்தார்கள்.

பேருந்து நிலைய சாலையை கடப்பதற்காக – பாதசாரிகளுக்காக – நடை மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. அந்த மேம்பாலத்தின் படிக்கெட்டில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணியின் செங்கோடிகளை ஏந்தியபடி தோழர்கள் நடந்தார்கள்.

மேம்பாலத்தின் மேல் நின்றபடி நுகர்வுக் கலாசாரத்தை வலியுறுத்தி மக்களை சுரண்டும் பேனர்களின் மேல் செங்கொடியை  பறக்கவிட்டார்கள் என்றால் –

சாலை முழுக்க செங்கொடிகள். ஆண் தோழர்களுக்கு சமமாக பெண் தோழர்கள். குட்டித் தோழர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

காவல்துறையினர் அரண்டுவிட்டார்கள். அதற்குள் தகவல் பறந்து புதுச்சேரியை சேர்ந்த சாதாரண காவலர் முதல் உயரதிகாரிகள் வரை அனைவரும் பதட்டத்துடன் வந்து சேர்ந்தார்கள். போர்க்குணமிக்க உறுதியுடன் இதுவரை எந்த போராட்டத்தையும் அவர்கள் சந்தித்ததில்லை என்பதை அவர்களது படபடப்பும் முகத்தில் தெரிந்த பயமுமே உணர்த்தியது.

கல் எறிவார்கள், பேருந்தை உடைப்பார்கள், மக்களை துன்புறுத்துவார்கள்… நாம் தடியடி நடத்தலாம், கண்ணீர் புகை வீசலாம் என்றெல்லாம் காவல்துறையினர் எதிர்பார்த்தார்கள். ஆனால் –

ஒரு சின்ன அசம்பாவிதத்தைக் கூட தோழர்கள் நிகழ்த்தவில்லை. மறியல் செய்தார்கள், கோஷம் எழுப்பினார்கள். இதையே தாங்க முடியாமல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டுவிட்டது.

பேட்டரியில் இயங்கிய ஸ்பீக்கரையும், மைக்கையும் பிடுங்கினார்கள். ஆனால், தோழர்களின் வாயிலிருந்து எரிமலையாக வெடித்த கோஷங்களையும், முழக்கங்களையும் அவர்களால் நிறுத்த முடியவில்லை. அரை மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தியதும் தோழர்கள் சாலையோரமாக நின்றுக் கொண்டு வாகனங்கள் செல்ல அனுமதித்தார்கள். பயணிகளுக்கு பிரசுரங்களை விநியோகித்தார்கள்.

எதை தடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசும், காவல்துறையும் நினைத்ததோ –

அது நடக்கவில்லை. பதிலாக பேரணி நடத்த அனுமதி தந்திருந்தால் கூட புதுச்சேரி மக்களை இந்தளவு ஈர்க்க முடியுமா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு தோழர்கள் மக்களை கவர்ந்தார்கள். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அதேசமயம் அவர்களுக்காக குரல் கொடுக்கும் தோழர்களின் ஆர்ப்பாட்டத்தை, மறியலை ஆதரிக்க ஆரம்பித்தார்கள்.

இதற்கு மேலும் நாம் சும்மா இருந்தால், நம்நிலை கவலைக்கிடமாகிவிடும் என்பதை புரிந்துக் கொண்ட காவல்துறை அடக்குமுறையை கையில் எடுத்தது. ஆனால், மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களும், வழக்கறிஞர்களும் அவர்களை தடுத்தார்கள். வாதாடினார்கள். மே தின பேரணியை தடுக்க நீங்கள் மதிக்கும் சட்டபடியே உரிமையில்லை என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்கள்.

உண்மையில் காவல்துறையினரை பார்க்கத்தான் பாவமாக இருந்தது. சிரிப்பு போலீஸாக கையறுநிலையில் அவர்கள் நின்றதை பார்க்க கண்கோடி வேண்டும்.

அடுத்த அஸ்திரமாக கைது நடவடிக்கையை கையில் எடுத்தார்கள். தோழர்கள் அசரவேயில்லை. புதுச்சேரியில் இருந்த அனைத்து காவல்துறை வாகனங்களும் வந்து சேர்ந்தன. ஆனால், தோழர்களின் எண்ணிக்கை முன்பு அந்த வாகனங்கள் கடுகளவு காட்சித்தந்தன. திருவிழா காலங்களில் ஸ்பெஷல் பஸ்கள் இடைவிடாமல் டிரிப் அடிக்குமே… அதுபோல் வாகங்கள் தோழர்களை ஏற்றிக் கொண்டு டிரிப் அடித்தன. அப்படியும் சாலையில் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்த தோழர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை.

இப்படியே சென்றால், விடிய விடிய டிரிப் அடிக்க வேண்டியதுதான் என்பதை உணர்ந்த காவல்துறையினர், சவாரிக்காக பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகளை அழைத்து வந்து தோழர்களை ஏறினார்கள்.

தமிழகம் முழுக்க அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பெண் தோழர்களும், ஆண் தோழர்களும் அலை அலையாக கோஷம் எழுப்பியபடி கைதானார்கள்.

அப்படியும் கூட்டம் குறையவில்லை. ஒரு கட்டத்தில் காவலர்கள், “ஸ்டேஷன் வரைக்கும் நடந்து வர்றீங்களா?” என தோழர்களிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். ‘எங்கள் உரிமையை நிலைநாட்டவே வந்தோம். சமோசா – டீ – சாப்பிடுவது போல் கைதாகி விடுதலையாக வரவில்லை. எங்களை என்ன, ஓட்டுக்கட்சிகள் போல் நினைத்துவிட்டீர்களா?’ என்று ஆவேசத்துடன் கேட்டார்கள்.

வேறு வழி? பேருந்து நிலையத்திலிருந்த அனைத்து பேருந்துகளும் தலா ஒரு டிரிப்பாவது தோழர்களை ஏற்றிக் கொண்டு காவல்நிலையத்துக்கு சென்றன.

தொண்டர்கள் கைதானதும் ஓடி ஒளியும் தலைவர்கள் போல் இல்லாமல், இறுதி வரை அமைப்பை சேர்ந்த முன்னணி தோழர்கள் களத்திலேயே நின்றார்கள். கைதான தோழர்களுக்கு உணவு, தேநீர், குடிநீருக்கு அடுத்தகட்ட தோழர்கள் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.

காவல்துறையினரின் கணக்குப்படி கைதான தோழர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம். இதில் 40 சதவிகிதத்தினர் பெண் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மையான தோழர்கள் முன்பே ஒவ்வொரு பகுதியிலும் பலரை கைதாக வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனவே இவர்களையும் கணக்கில் சேர்த்தால், ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை எப்படியும் நான்காயிரத்தை தாண்டும்.

கைதான தோழர்களை புதுச்சேரி காவலர் பயிற்சித் திடலில் தங்க வைத்தார்கள். அங்கே ஜாம் ஜாமென்று பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. தோழர்கள் காளியப்பன், மருதையன் , ஜெயகாந்த் சிங் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஆக, எதை தடை செய்ய வேண்டுமென்று அரசும், காவல்துறையும் நினைத்ததோ அது நடக்கவே இல்லை.

“இரண்டு மணி நேரங்களுக்கு மேல் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறீர்கள். எனவே ஒருசிலரையாவது ரிமாண்டில் வைத்து வழக்கு பதிவு செய்யவேண்டும். இல்லாவிட்டால் மேலிடத்துக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே நீங்களாக பார்த்து வழக்கு போட ஆட்களை கொடுங்கள்” என உயரதிகாரி தோழர்களிடம் கெஞ்சியதை பார்க்க சிரிப்பாக இருந்தது. ஆனால், தோழர்கள் இதற்கு மறுத்துவிட்டார்கள். “வழக்கு போடுவதென்றால் அனைவரின் மீதும் போடுங்கள், இல்லையென்றால் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்” என்று உறுதியுடன் நின்றார்கள்.

இறுதியில் வேறு வழியில்லாமல் காவல்துறை அனைவரையும் விடுதலை செய்துவிட்டது.

விலை போகாத அமைப்பின் துணையுடன் நமக்கான உரிமையை, நாம்தான் உறுதியுடன் நின்று பெற வேண்டும் என்பதை இந்த மே தின நிகழ்ச்சி அழுத்தம்திருத்தமாக உணர்த்தியது.

உற்சாகத்துடன் வந்த வண்டியிலேயே சென்னை திரும்புவதற்கு முன் –

குட்டித் தோழர்களின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி கடற்கரைக்கு சென்றோம். ”காந்தி காங்கிரஸ்: ஒரு துரோக வரலாறு’ நூலை படிச்சிருக்கீங்களா தோழர்?’ என்று எங்களை வழிநடத்திச் சென்ற ஒரு தோழர் கேட்டார்.

‘நேர்லயே பார்த்தோம் தோழர்’ என்று பதில் சொன்னார் ஒரு வலையுலக தோழர். அவர் பார்வை சென்ற திசையில் –

கடற்கரையில் கைத்தடியுடன் காந்தி நின்றுக் கொண்டிருந்தார்.

_____________________________________________

– அறிவுச்செல்வன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. ஆற்றொழுக்கான நடையில் நினைவில் நிற்கக் கூடிய அனுபவப் பகிர்வு. வாழ்த்துக்க்கள் அறிவுச்செல்வன்! தொடர்ந்து எழுதுங்கள்!

  2. பாண்டிச்ச்சேரி போராட்டத்துல கலந்துக்காதவுகளுக்கு இந்த அனுபவமும், படங்களும் கலந்துகிட்ட மாதிரி உணர்ச்சியைக் கொடுக்குமுனு நினேக்கேன். வாழ்த்துக்கள்!!

  3. புகைப்படங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது தோழர்.
    நிறைய படங்கள் எடுத்திருக்கலாம்.மறியலில் தான் எவ்வளவு உணர்ச்சிகள், பாவணைகள். அவை அனைத்தையும் பதிவு செய்திருக்க‌ வேண்டும். அவை அனைத்தும் இங்கு இடம் பெற்றிருந்தால் நிகழ்ச்சிக்கு வராதவர்கள் வினவிலேயே நிகழ்வை கண்ட அனுபவத்தை பெற்றிருப்பார்கள்.

    சென்னையிலிருந்து கிளம்பியது முதல் போராட்டம் பற்றிய தோழர் அறிவுச்செல்வனின் சித்திரம் அருமையாக உள்ளது. வினவில் தொடர்ச்சியாக‌ எழுதுங்கள் தோழரே, வாழ்த்துக்கள்.

  4. குட்டித்தோழர் (களுக்கு) அவர்களுக்கு ஒரு சபாஷ். விளையும் பயிரை முளையிலே தெரியும். மாற்றம் ஒன்றை ஏற்படுத்த இன்னும் கடுமையாக தோழர்கள் உழைக்கவேண்டும். கடுமையான சவால்களை சந்திக்கவேண்டி வரும். 

  5. ””’///////ஆக, எதை தடை செய்ய வேண்டுமென்று அரசும், காவல்துறையும் நினைத்ததோ அது நடக்கவே இல்லை/////””””

    //////// பேரணி நடத்த அனுமதி தந்திருந்தால் கூட புதுச்சேரி மக்களை இந்தளவு ஈர்க்க முடியுமா என்பது சந்தேகமே./////////

    வாழ்த்துக்க்கள் அறிவுச்செல்வன்! தொடர்ந்து எழுதுங்கள்…….

  6. //தோழர்கள் காளியப்பன், மருதையன் சிறப்புரையாற்றினார்கள். ஆக, எதை தடை செய்ய வேண்டுமென்று அரசும், காவல்துறையும் நினைத்ததோ அது நடக்கவே இல்லை.//
    தோழர் வினவு அவர்கள் கவனிக்கவும்.தோழர்கள் காளியப்பன், மருதையன் சிறப்புரையாற்றினார்கள்,தோழர் ஜெய்காந்த்சிங் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

  7. நானும் சென்றிருந்தேன். புதுவைக்கு வந்த சோதனையை என்ன சொல்வது. புதுவையின் ஓட்டுச் சீட்டு அரசியல் தமிழகத்து ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளால் கூட கேலி செய்யப்படும் சூழலில் அந்த மண்ணின் தோழர்கள் மிக குறுகிய கால அவகாசத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி ஆர்ப்பாட்டம், மறியல் என அசத்தி விட்டார்கள். அந்த புதிய தோழர்களின் வேலைப்பாணியை பார்த்து பொறாமையாக இருந்த்து. ஒரு தொழிற்சங்கம் இருக்கும் இடத்தில் உள்ள தோழர்களின் ஒழுங்கும், நேர்த்தியும், எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் சித்தாந்த தெளிவும் போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்க அன்பர்கள் அவசியம் தெரிந்து அறிந்து கொள்ள வேண்டிய விசயமாகும்.

    அன்றைக்குதான் வைத்தியலிங்கத்தின் சட்டசபை வாழ்க்கைக்கு 25 ஆண்டு நிறைவாம். கொண்டாட்டத்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் வந்திருந்தார்களாம். இப்படி எல்லாம் விழா கொண்டாடும் ஊரில் தொழிலாளி வர்க்க உணர்வோடு குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும், இளைஞர்களும், எளிய கிராமத்து மனிதர்களும் அரசியல் முழக்கங்களை முன்வைத்த்தும், மைக்கை போலீசார் பறித்த போது படித்தவர்க்கம் படிக்காத வர்க்கம் உட்பட அனைத்து தோழர்களும் ஒரே நேரத்தில் உணர்வுபூர்வமாக குரல் எழுப்பியதும் பரவச படுத்தியது.

    மெய்நிகர் உலகத்தில் இருந்தே மெய்யுலகை அடைவதற்கு அரசியல் இன்னமும் ஆன்மீகமாகவில்லை என நினைக்கிறேன். ஆகவே நேரில் வந்துதான் இதுபோன்ற போராட்டங்களை அனுபவித்து புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த்து. அனைவரையும் கைது செய்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நானும் சிவப்பு சட்டை அணிந்து வெளியில் நின்று கொண்டிருந்தேன். ஓசூர் நகரத்தை சேர்ந்த ஒரு எளிய தொழிலாளி தோழர் என்னிடம் வந்து கேட்டார். ஏன் தோழர் நாம் கைது ஆவதால் என்ன அரசியல் ரீதியான பயன் என்று கொஞ்சம் விளக்க முடியுமா.. ஏதோ எனக்கு தெரிந்த மார்க்சிய லெனிய புரிதலில் இருந்து விளக்கினேன். விசயம் அதுவல்ல• தங்களது அரசியல் வேலை சரிதானா என்பதை போராட்டக் களத்தின் மத்தியில் கூட ஆய்வுசெய்து தனது ஐயங்கள் பற்றிய போலி கூச்சங்களை சுமக்காமல் தெளிவுபடுத்திக் கொண்டு மீண்டும் போராட்டக் களத்திற்கு செல்லும் இப்படிப்பட்ட மார்க்சின் எளிய மாணவர்களை தோழர்களாக பெற்ற ஒரு அமைப்பில் தொடர்பில் இருப்பதற்காக மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.

    • நான் மணி அவர்களிடம் வந்து ஒரு எளிய தோழர் விளக்கம் கேட்டார் பாருங்கள்! சந்தேகம் கேட்ட பிறகு, அவருடைய நிலைமையை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு தலை சுற்றுகிறது!

      • இதெல்லாம் தேவையற்ற வெட்டி விவாதம்தோழர் நான் மணி தனது அனுபவங்களைஅளித்திருக்கிறார்,அதிலே எது உங்களுக்கு உடனபாடில்லையேஅதை தெளிவுபடுத்துங்கள் அதைவிட்டு விட்டு எதற்கிந்த அனானி சேறடிப்பு?

  8. நானும் கலந்துகொண்டேன். மேதின பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் உணர்வுபூர்வமான மறியலாக புதுவை அரசு மாற்றிவிட்டது.

    தொழிலாளர் தின பேரணியை கூட அனுமதிக்காத அரசை, இந்த மறியல் நன்றாக அம்பலப்படுத்தியது. அரசுக்கு நீதிமன்றமும் துணை நிற்கிறது. புதுவை ‘குடிமகன்களுக்கு’ பிரபலம் என்றார்கள் பலர். இனி வருங்காலத்தில் போராட்டங்களுக்கு பிரபலமாக்க புதிய தொழிலாளர் அமைப்புக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

  9. தோழர்,
    கார்டூனில் 30 மணி நேரம்/வாரத்திற்கு என்பது போல் உள்ளது. 40 மணி நேரம்மல்லவா?

    வாழ்த்துக்கள் ‍

  10. உங்கள் முயற்சிகள் பலன் தந்துள்ளன, வாழ்த்துக்கள்.கொள்கை ரீதியாக உங்களிடமிருந்து வேறுபடுகிறேன்.வலுவான தொழிற்சங்கங்கள் தேவை என்பதை ஏற்கிறேன்.அந்த அளவில் உங்கள் முயற்சிகள் தொழிலாளர் நலனுக்கு நல்லதாக இருக்கட்டும்.

  11. என் சொந்த ஊரான புதுச்சேரியில் திரு சுப்பையா அவர்கள் மறைவுக்குப் பின் இப்படி ஒரு கூட்டம் நடந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். புதுவை அரசியல்வாதிகள் பரூக் காலம் தொட்டே காமெடியன்கள்தான்.

  12. பேரணிக்கு நானும் வந்திருந்தேன். ஆனால் வெறும் வேடிக்கை மட்டும் பார்ப்பது எந்த பலனும் அளித்து விடாது. கடமை எனும் காரணம் சொல்லி நானும் அப்படி இருந்து விடப்போவதில்லை. கூடிய விரைவில் என் முழு நேர பணியே இதுவாக காண்பீர்கள்.

  13. நானும் வந்திருந்தேன் ,
    மாலை நான்கு மணிக்கு புதுவை பேருந்து நிலையத்தில் அடித்த விசில் சத்தம்,அதைகேட்டு வெகுண்டு எழுந்து ஓரிரு நிமிடத்தில் ஆயிரகனகானோர் திரண்டு வந்து சாளையில் செங்கோடியுடன் அணிதிரண்ட காட்சி மெய்சிலிர்கவைதது.தொண்டைகிழிய கத்திய முழக்கத்தால் குடிபோதையில் மயங்கி இருந்த ஆசாமியை கூட தெளிவு படுத்தியது .
    இது போன்ற போராட்டநாட்களையும் ,பொதுக்கூட்டம் நடத்தும் நாட்களையும் தவறாமல் வெளியிடவும் .நன்றி .

  14. போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள் !

  15. திருப்பூரில் பல இடங்களில் பல சமயங்களில் இந்த செம்படையின் முழக்கங்களையும், ஊர்வலத்தை பார்த்து கடந்து போயுள்ளேன்.  ஆனால் நேற்றைய முன்தினம் நீண்ண்டுடுடுடு போய்கொண்டுருந்த பேரணியை கவனிக்கும் பொருட்டு அவசர வேலையை ஒத்திவைத்து விட்டு தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் நடந்து போய் மொத்த கூட்டத்தையும் பார்த்த போது மிரண்டு போய்விட்டேன்.  குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் முழங்க குற்ற உணர்ச்சி குறுகுறுக்கவைத்தது. எவர் எவரோ யாருக்காகவோ, எந்த உரிமைகளுக்காகவோ போராடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.  வேடிக்கைப் பார்ப்பவர்களும், வாழ்க்கை ரொம்ப டென்ஷன் என்று புலம்பிக்கொண்டுருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்?????

  16. நான் தலைநகர் டெல்லியில் இருக்கிறேன் . வினவு தளம் மூலம் மே 1 நிகழ்ச்சியை அறிந்தேன் .போராட்டத்திற்கு வர முயற்சித்தேன்.வரமுடியவில்லை.வருந்துகிறேன்.போராட்டம் மிக்க எழுர்ச்சியுடன் நடைபெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றி வினவு,போராட்டத்தை நேரில் பார்த்ததுபோல் இருக்கிறது பதிவு.

  17. புரட்சிகர அமைப்புகளின் போர்குணமிக்க போராட்டங்களை புதுச்சேரி போலீசுக்கும் முக்கியமாக ஆளும் வர்க்கங்களுக்கும் காட்டியிருக்கிறோம்!

    போராட்டங்கள் மென்மேலும் வளர புதுச்சேரி புஜதொமு வினருக்கு வாழ்த்துக்கள்..

    உன்கிட்ட அரஸ்ட் பண்ணி கூட்டிகிட்டு போகக்கூட வண்டி இல்லையே! அப்புறம் என்ன தடை? அனுமதி மறுப்பு? தோழர் சொன்னது போல புதுச்சேரி போலீஸ் சிரிப்பு போலீஸ் தான்! அவெங்கள பாத்தா சிரிப்பு தான் வரும்!

    இன்னும் கொஞ்சம் அழுத்தி பிடித்திருந்தாலோ, கூட்டம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தாலோ, நான் அழுதுடுவேன் ரேஞ்சில் பொதுக்கூட்டத்திற்க்கு அனுமதியே கொடுத்திருப்பார்கள்…
    இப்போது கூட ஆர்ப்பாட்டத்திற்க்கு பின் அனுமதி கொடுத்தால் இருக்கிற மானமும் போய் ஊரே சிரிப்பா சிரித்துவிடும் என்பதினால் தான் அரெஸ்ட் டிராமாவெல்லாம் நடத்தினார்கள் என்பதை நன்றாகவே உணரமுடிந்தது. பொதுமக்களும் உணர்ந்திருக்கிரார்கள் 🙂

  18. அருமையான பதிவு! தோழருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
    கோயம்பேடு டூ புதுச்சேரி – போராட்டம், அனுபவம், குட்டி தோழர்கள்….. அனைத்தும் அருமை!

  19. கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் சிறப்பாக படங்கள் எடுத்த தோழர்களுக்கும் சிறந்த நடையில் நிகழ்வை பதிவு செய்த தோழர்  அறிவுசெல்வனுக்கும் வாழ்த்துக்கள் 

  20. உலக பாட்டாளி மக்களுக்கு மே தின வாழ்த்துக்கள் ,இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் & போராட்டத்தில் கலந்துகொண்டு வெற்றிபெற வைத்த அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் & வாழ்த்துக்கள்.

  21. வினவு தொடர்புல சில பதிவர்கள் மே தினத்துல கலந்திருப்பது மகிழ்ச்சி.
    அடுத்து இசைவிழாவுக்கு வினவு ஒரு பஸ் பிடிச்சு வரணுன்றது விருப்பம். அறிவுச் செல்வன் இந்த போராட்டத்த அழகான அனுபவமா பதிஞ்சிருக்காரு. வாழ்த்துக்கள் !

  22. வினவு இஸ் கெட்டிங் பெட்டெர் பாட்டாளி வர்க்கம் வாழ்க முதலாளி சமுகம் ஒழிக

  23. அனுபவத் தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. நேரில் கண்டது போல் உணர்ந்தேன். நீங்கள் எழுதுவதைத் தொடர வேண்டும்.

    மே நாளின் சிறப்பை எடுத்துரைத்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  24. என்போன்ற கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு கலந்து கொண்டது போன்ற உணர்வை தருகிறது பதிவு.

    செங்கொடி தளத்தில் இதை மீள்பதிவு செய்து கொள்கிறேன்

    செங்கொடி 

  25. அவர்களின் வரலாறு புரட்சிகளின் வரலாறாயிருக்கிறது
    அவர்களின் வரலாறு தோழர்களின் வரலாறாயிருக்கிறது
    அவர்களின் வரலாறு பூர்ஷ்வாக்களின் வரலாறாயிருக்கிறது
    இவற்றை தாண்டி அவர்களின் இருப்பில் அர்த்தங்கள் ஏதுமில்லை
    அவர்கள் புரட்சி வரும் என்று நம்பினார்கள் அல்லது நம்ப வைக்கப் பட்டார்கள்
    அவர்கள் தினந்தோறும் வினவையும்,புதிய ஜனநாயகத்தையும் புதிய கலாச்சாரத்தையும் சிரத்தையோடு வாசிக்கிறார்கள்
    புரட்சி வரும் செயதியையும் நாளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
    இந்த நம்பிக்கை தான் அவர்களை மேலும் மேலும் துடிப்புடன் இயங்க வைக்கிறது.
    எல்லா புரட்சிக்கும் போராட்டத்துக்கும் துரோகிகள் இருப்பார்கள்
    அதிர்ஷ்டவசமாக அவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்ற மருதையன் இருக்கிறார்.
    ஆனால் புரட்சி நீண்ட நாளைக்கு நீடிக்கக் கூடாது அவ்வாறு நீடித்தால் கடைசியில் வினவும் மருதையனும் மட்டுமே மீதமிருப்பார்கள்
    .
    ..
    மற்ற அனைவரும் எங்கே? அவர்கள் பூர்ஷ்வாக்களின் பட்டியலில்

  26. அருமையான பதிவு. தடையை தகர்த்து உழைப்பாளர் தினத்தை போராட்ட போர்குணத்துடன் நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வுக்கு நன்றி.புரட்சிகர வாழ்த்துகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க