privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமெல் கிப்சனின் அபோகலிப்டோ பொய்யும், மாயா-இன்கா நாகரிகத்தின் உண்மை வரலாறும்!

மெல் கிப்சனின் அபோகலிப்டோ பொய்யும், மாயா-இன்கா நாகரிகத்தின் உண்மை வரலாறும்!

-

 

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா பகுதி 2

vote-012பிரபல ஹாலிவூட் நடிகர்-இயக்குனர் மெல்கிப்சனின் “அபோகலிப்டோ”(Apocalypto) திரைப்படம், சில வருடங்களுக்கு முன்னர் உலகத் திரையரங்குகளில் சக்கை போடு போட்டது. மத்திய அமெரிக்காவில் ஸ்பானியர்கள் வருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களைக் காட்டுவதாக அந்தப் படம் அமைந்திருந்தது. பண்டைய அமெரிக்க நாகரீகம் குறித்த மக்களின் அறியாமையை மூலதனமாகக் கொண்டு, திரைப்படம் தயாரிக்கப் பட்டிருந்தது. “அழிவின் விளிம்பில் இருந்த மாயா சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் கொடூரமான மனம் கொண்டவர்கள். பிற இன மக்களின் கிராமங்களை சூறையாடி, அப்பாவிகளை அடிமைகளாக பிடித்துச் சென்று தமது தெய்வங்களுக்கு நரபலி கொடுத்தார்கள். திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் (ஸ்பானிய) கிறிஸ்தவர்கள் வந்திறங்குகின்றனர். அப்போதிருந்து மாயா காட்டுமிராண்டிகளின் சாம்ராஜ்யம் அஸ்தமித்தது.” இது தான் மெல்கிப்சன் என்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதி சொல்லும் சேதி.

இன்றைய குவாத்தமாலாவிலும், மெக்சிகோவிலும் வாழ்ந்த மாயாக்கள் உயர்ந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் மொழிக்கென எழுத்து வடிவம் இருந்தது. கற்றறிந்தோர் குழாமான மதகுருக்கள் பருவநிலை மாற்றங்களை துல்லியமாக கணித்து வைத்தனர். அந்தக் கணிப்புகள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியது. நாம் இன்று பயன்படுத்தும் நாட்காட்டி தோன்றுவதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, மாயாக்கள் 365 நாட்களைக் கொண்ட வருடத்தை கணித்திருந்தனர். அது மட்டுமல்ல, கணிதத்தில் பூஜ்ஜியத்தின் பாவனையும் அறிந்து வைத்திருந்தனர். அத்தகைய அரிய பொக்கிஷங்கள் யாவும், பின்னர் வந்த கிறிஸ்தவ மதவெறியர்களால் அழிக்கப்பட்டன. அவர்களைப் பொறுத்தவரை, “பைபிளுக்கு அப்பால் உலகில் எந்த நாகரீகமும் இருக்கவில்லை. நாளைய தலைமுறை அதைப்பற்றி எல்லாம் அறிந்து வைத்திருக்கக் கூடாது.” அதைத்தான் மெல்கிப்சனின் அப்போகலிப்டோவும் எதிர்பார்க்கிறது.

உலகின் பிற சாம்ராஜ்யவாதிகளைப் போல, மாயா இனத்தவர்களும் அயலில் இருந்த பிரதேசங்களை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டதை மறுப்பதற்கில்லை. மாயாக்களின் கோயில்களில் நரபலி கொடுக்கப்பட்டதுமுண்டு. இருப்பினும் மெல்கிப்சன் சித்தரித்ததைப்   போல நரபலி கொடுப்பது ஒரு “தேசிய விளையாட்டுப் போட்டியாக” இருக்கவில்லை. அதே நேரம் சினிமாவில் வருவதைப் போல, “ஆயிரக்கணக்கான உடல்களைப் புதைத்த புதைகுழி” இருந்ததற்கான ஆதாரம் இல்லை. காலனிய காலத்தில் இருந்து தொடரும் பூர்வீக மக்களின் இனவழிப்பை மறைப்பதற்கு மெல்கிப்சனின் அப்போகலிப்டோ என்ற அரசியல் பிரச்சாரப் படம் பாடுபடுகின்றது. வரலாற்றைத் திரிபுபடுத்தி, பொழுதுபோக்கு என்ற பெயரில் ஏகாதிபத்திய அரசியலைத் திணிக்கும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அமெரிக்காவில் ஸ்பானிய வெள்ளையர்கள் காலடி வைத்த பொழுது, பூர்வீக மக்கள் அவர்களை கடவுளின் தூதர்களாக கருதியதாக சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட கிறிஸ்தவ மதத்தின் கோணத்தில் இருந்து இதைப் பார்ப்பது தவறு. இன்றைய மெக்சிகோவில் அமைந்திருந்த அஸ்டெக் அரசவையில் நடந்த சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்தே அது எழுதப்பட்டது. அஸ்டெக் ராஜ்யத்தின் தலைநகரம் டேனோச்டிட்லான் (Tenochtitlan ) அன்றைய உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. ஒரு லட்சம் மக்கட்தொகையைக் கொண்ட நகரத்தில் அரண்மனை ஜோதிடர்களின் ஜோசியம் அமைதியைக் குலைத்தது. “பெரிய மிருகத்தின் மீதேறி வரும் வெளிறிய நிறம் கொண்ட மனிதர்கள் அஸ்டெக் ராஜ்யத்தை அபகரிப்பார்கள்.” அன்றைய அமெரிக்க கண்டத்தில் குதிரை இருக்கவில்லை. முதன்முதலாக குதிரை மீதேறி வந்த ஸ்பானிய வீரர்களை கண்ட மக்களும், மன்னனும், “கெட்சகோடல்” தெய்வத்தின் தூதுவர்களாகக் கருதினர். (பண்டைய மெக்சிக்கர்கள் பல தெய்வ வழிபாட்டைக் கொண்டவர்கள். அவர்கள் சில நேரம் ஸ்பானியர்களை எமதர்மனின் தூதுவர்களாக கருதியிருக்கலாம்.) விரைவிலேயே ஸ்பானியக் காலனியாதிக்கவாதிகளின் தங்கத்தின் மீதான பேராசை அவர்களின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்டியது.

தென் அமெரிக்கக் கண்டத்தின் அனைத்து பூர்வகுடிகளும் ஐரோப்பியரை கடவுளின் தூதுவர்களாக கருதி வணங்கி வழிவிடவில்லை. கண்டத்தின் தெற்குப் பகுதியில், (சிலி, ஆர்ஜெந்தீனா)  ஐரோப்பியரால் நிரந்தரமான காலனியை அமைக்க முடியவில்லை. பூர்வீக மக்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் காலனியாதிக்கவாதிகள் பின்வாங்கினார்கள். அந்தப் பகுதிகளை காலனிப்படுத்த இன்னும் பல நூறாண்டுகள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. போர்த்துக்கல் ஆக்கிரமித்த பிரேசிலில் வனாந்தரங்களும், விஷ ஜந்துக்களும் காலனியாதிக்கவாதிகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தன. போர்த்துக்கல்லில் இருந்து கிரிமினல் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்து குடியேற ஊக்குவித்தார்கள். அப்படி இருந்தும் பலர் அங்கு செல்லத் தயங்கினார்கள்.

ஐரோப்பிய காலனியவாதிகளின் வருகையின் போது, தென் அமெரிக்காவில் மாபெரும் சாம்ராஜ்யம் இருந்தது. அடர்ந்த காடுகளையும், மலைத் தொடர்களையும், பாலைவனத்தையும் இயற்கை அரண்களாக கொண்டிருந்தது. இன்றைய எக்குவடோர் முதல் சிலி வரை 4000 கி.மீ. நீளமான ஒரே தேசம், “இன்கா ராஜ்ஜியம்” என அழைக்கப்பட்டது. வடக்கே இருந்த மாயாக்களைப் போல, இன்காக்கள் அயலில் இருந்த இனங்களை அடக்கி ஆளவில்லை. அவர்களின் ஆட்சி அதிகாரம் குடிமக்களின் அச்சத்தின் மீது கட்டப்பட்டிருக்கவில்லை. மாறாக சிறப்பான அரச நிர்வாகம் அனைவரையும் சமமான பிரஜைகளாக உள்வாங்கியது. இன்கா ராஜ்யத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதன் பொருளாதார திட்டங்கள் பொதுவுடைமை சமூக அமைப்பை ஒத்துள்ளது.

“தவாந்தின்சுஜூ” (நான்கு திசைகளின் நாடு) ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பலம் வாய்ந்த சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. தென் அமெரிக்க கண்டத்தில், சுமார் ஒரு மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டிருந்த தேசத்தில், குறிஞ்சி, பாலை என நான்கு வகை நிலங்களைக் கொண்டிருந்ததால் அந்தப் பெயர். இன்கா மக்களின் உயரிய நாகரீகம் என போற்றப்படும் சாம்ராஜ்யம், பொதுவுடைமை சமூக- பொருளாதார  அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்தது. இன்கா இனத்தவரின் சாம்ராஜ்யம், பிற இனத்தவர்கள் மீதான அடக்குமுறையின் மீது கட்டப்படவில்லை. மாறாக சிறப்பாக செயல்படும் அரசியல் அமைப்பு முறை, அனைத்து மக்களையும் ஒரே தேசமாக இணைத்தது. சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை உலகின் முதலாவது கம்யூனிச ராஜ்ஜியம் என்றும் குறிப்பிடுகின்றனர்.

தவாந்தின்சுஜூ மக்கள் அனைவரும், “ஐய்லு” எனப்படும் நிர்வாகப் பிரிவுக்குள் அடக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரஜையும், (முன்பு சோஷலிச நாடுகளில் இருந்ததைப் போல) கூட்டுடமையாக்கப்பட்ட “கம்யூன்” சமூகத்தின் அங்கத்தவர் ஆவார். சக்கரவர்த்தியும், அரச குடும்பத்தினரும், அமைச்சர்களும் (தலைமை) ஐய்லுவை சேர்ந்தவர்கள். மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்களும் தலைமை ஐய்ளுவுக்குள் அடங்குவர். (அதாவது நமது காலத்து செனட் சபை போல.) போரில் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட வேற்றினத்தவரின் பிரதேசமாகவிருப்பினும், அந்த இனத்தை சேர்ந்த ஒரு ஆளுநர் தலைநகர ஐய்ளுவுக்கு தெரிவு செய்யப்படுவார்.

நிலம் முழுவதும் அரசுடமையாக இருந்தது. எந்தவொரு தனியாரும் நிலத்திற்கு உரிமை கோர முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும், விளை நிலங்கள் மூன்றாக பிரிக்கப் பட்டிருந்தன. ஒரு பகுதி அரச குடும்பத்திற்குரியது. இரண்டாவது பகுதி ஆலயத்திற்கு அல்லது மதகுருக்களுக்கு. மூன்றாவது பகுதி விவசாயம் செய்யும் குடும்பங்களுக்கானது. பிறப்பு, இறப்பு, புதிய குடும்பங்கள் உருவாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வருடமும் நிலம் புதிதாக பிரிக்கப்பட்டது. எல்லா நிலங்களிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டும். முதலில் அரச நிலத்திலும், இரண்டாவதாக கோயில் நிலத்திலும், மூன்றாவதாக குடிமக்கள் நிலத்திலும் வேலை செய்ய வேண்டும்.

அரச நிலத்தில் பெறப்படும் விளைச்சலால், அரச குடும்பம் மட்டும் பலனடையவில்லை. களஞ்சியத்தில் சேமிக்கப்படும் தானியம், நோயாளிகள், வயோதிபர், போன்ற சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டது. மேலும் வெள்ளம், பஞ்சம் தோன்றும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க பயன்பட்டது. இன்கா மக்கள் தமது மொழிக்கு எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் களஞ்சியப்படுத்தல், நிலப் பிரிப்பு போன்ற நிர்வாக நடைமுறைகளுக்கு சிக்கலான கணக்கெடுப்பு முறை ஒன்றை வைத்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்லும் அரச கணக்காளர் கயிறொன்றில் முடிச்சுகளைப் போட்டு கணக்கிட்டுக் கொள்வார்.

இன்கா நாகரீகத்தில் (வாகன) சில்லின் பாவனை பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. (ஒட்டகம் போன்ற) லாமா என்ற மிருகம் பொதி சுமந்து செல்ல பயன்பட்டது. இருப்பினும் கற்களைக் கொண்டு செப்பனிடப்பட்ட வீதிகள் சாம்ராஜ்யத்தின் எந்தப் பகுதியையும் தலைநகரோடு இணைத்தது. இன்கா ராஜாக்கள், தமக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இனங்களை தண்டிக்கத் தவறவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக வாழிடங்களில் இருந்து வெளியேற்றி எல்லைப்புறங்களில் குடியேற்றினார்கள். மேலும் புதிதாக வெல்லப்பட்ட பிரதேச மக்களின் தெய்வங்களை இன்கா மதத்திற்குள் உள்வாங்கினார்கள். இதனால் இந்து மதம் போன்ற புதிய மத அமைப்பு உருவாகி, ராஜ்ஜியத்தை இலகுவாக பரிபாலனம் செய்ய முடிந்தது. பிற்காலத்தில் செவ்விந்தியர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பொழுது, தமது பாரம்பரிய மத அனுஷ்டானங்களையும் தொடர்ந்து பேணி வந்தார்கள்.

ஸ்பானிய படையெடுப்பாளர்கள் இன்காக்களின் ராஜ்ஜியத்தை கைப்பற்றிய பின்னர், விவசாய நிலங்கள் கைவிடப்பட்டன. உருளைக்கிழங்கும், சோளமும் பயிரிடப்பட்ட நிலங்கள் புதர் மண்டிய காடுகளாகின. இன்கா மக்களின் பிரதான உணவாக இருந்த உருளைக்கிழங்கு, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது. புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தங்கம், வெள்ளி தோண்டுவது தான் ஸ்பானிய காலனிய எஜமானர்களின் ஒரேயொரு நோக்கமாக இருந்தது. இன்றைய பொலிவியாவில், பழைய இன்கா சாம்ராஜ்யத்திற்கு அருகில், “பொட்டோசி” என்ற நகரம் உருவானது. ஒரு காலத்தில் ஒரு லட்சம் பேர் வாழ்ந்த நகரம், அருகில் இருந்த வெள்ளிச் சுரங்கங்களுக்காகவே உருவானது. அங்கு அகழப்பட்ட வெள்ளிப்பாளங்கள் கப்பல் கப்பலாக ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன.

தென் அமெரிக்காவில் ஸ்பானியர்கள் தங்கம், வெள்ளி அள்ளிச் செல்வதைப் பற்றி கேள்விபட்ட ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் அவற்றை வழிப்பறி செய்தனர். ஒல்லாந்து, ஆங்கில கடற்கொள்ளையர்கள் ஸ்பானிய கப்பல்களை வழிப்பறி செய்து தமது தாயகத்திற்கு கொண்டு சென்றனர். 1628 ம் ஆண்டு, Piet Hein என்ற ஒல்லாந்து கடற் கொள்ளைக்காரன் அபகரித்த செல்வம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. கியூப கடலோரம் வழிப்பறி செய்யப்பட்டு ஒல்லாந்து கொண்டுவரப்பட்ட கப்பலில், 177000 கிலோ வெள்ளி, 66 கிலோ  தங்கம், 1000 முத்துக்கள் இருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட சரக்கின் மொத்த பெறுமதி எட்டு மில்லியன் யூரோக்கள்.

ஸ்பானியர்களால் உணவுப்பயிர் உற்பத்தியான விளைநிலங்கள் அழிக்கப்பட்டன. இன்று தென் அமெரிக்காவின் வறுமைக்கு அதுவும் முக்கிய காரணம். ஸ்பானியர்களால் இன்காக்களின் அரச வம்சம் அழிக்கப்பட்டது. குடி மக்களை சுரங்கங்களில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினார்கள். இன்காக்களின் காலத்திலும் கட்டாய உழைப்பு நிலவியது. இருப்பினும் அதற்கு பிரதியுபகாரமாக இன்கா அரசு பாதுகாப்பையும், உணவையும் வழங்க கடமைப் பட்டிருந்தது. ஸ்பானியர்களிடம் அப்படிப்பட்ட கடமையுணர்வு இருக்கவில்லை. செலவின்றி பலனடைய நினைத்தார்கள். அன்றைக்கு செவ்வியந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஸ்பெயினில் இருந்து வந்த மதப்போதகரான Bartolome de La Casas எழுதி வைத்துள்ளார்.

“தங்கம், வெள்ளி சுரங்கங்கங்களில் இந்தியர்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். பெண்களும் வயல்களில் வேலை செய்தனர். ஸ்பானிய எஜமானர்கள் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு உணவு வழங்கினார்கள். உறங்கும் பொது கூட, சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டாந்தரையில் படுத்து உறங்கினார்கள். என்பது அல்லது நூறு றாத்தல் எடையுள்ள பொதிகளை சுமந்து கொண்டு 200 மைல் தூரத்தை நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதே நேரம் ஸ்பானியர்கள் பல்லக்கில் தூக்கி வரப் பட்டார்கள். செவ்விந்தியர்கள் அவர்களின் சக்திக்கு மீறிய அளவு வேலை செய்ய பணிக்கப்பட்டனர். கடும் உழைப்பு காரணமாக சோர்ந்து விழுந்தால் சவுக்கடி கிடைக்கும். களைப்பால் வேலை செய்ய மறுத்தால் சித்திரவதை செய்யப்பட்டனர். அசாதாரணமான உழைப்புச் சுரண்டல் காரணமாக நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மரணமடைந்தார்கள்.”

கரீபியன் கடல் தீவுகளில் இன்று ஒரு செவ்விந்தியரைக் கூட காண முடியாது. தீவுகளில் வாழ்ந்த அனைத்து பழங்குடி இனங்களும் ஐரோப்பியரால் பூரணமாக அழித்தொழிக்கப் பட்டனர். ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளின் தங்கம் தேடும் பேராசையால் இனவழிப்புக்கு ஆளானார்கள். தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக உழைத்த பூர்வீக குடிகள், ஸ்பானிய எஜமானர்களின் இம்சை தாங்க முடியாது, தமது பிள்ளைகளை கொன்று விட்டு, தாமும் கூட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

உழைப்புச் சுரண்டலை சகிக்க முடியாது தற்கொலை செய்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களை ஸ்பானிய அதிகாரிகள் ஏளனத்துடன் பார்த்தனர். “வேலை செய்து பழக்கமற்ற சோம்பேறிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்…” என்று பரிகசித்தனர். நிச்சயமாக தென் அமெரிக்க பூர்வகுடிகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கும் தாங்க முடியாத உழைப்புச் சுரண்டலே காரணம். கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், தாம் சமமான மனிதர்களாக நடத்தப் படுவோம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஸ்பானிய எஜமானர்களைப் பொறுத்த வரை, “கிறிஸ்தவர்களோ இல்லையோ, செவ்விந்தியர்கள் அனைவருமே அடிமைகள் தான்.”

ஸ்பானியர்களின் கொடுமைகளுக்கு அஞ்சி எல்லா அமெரிக்க பூர்வீக குடிகளும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. மெக்சிகோவில் ஹிடால்கோ என்ற பாதிரியார் தலைமையிலும், பெரு நாட்டில் துபாக் அமாரு என்ற இன்கா அரச குடும்ப வாரிசு தலைமையிலும் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றன. செவ்விந்தியர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்ட ஸ்பானியர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வதும், மண்ணின் மைந்தர்கள் வறுமையில் வாடுவதும், காலனிய காலம் முதல் இன்று வரை நிதர்சனமான காட்சிகள். “எனதருமை மக்களே! ஸ்பானியர்கள் எம்மிடம் இருந்து அபகரித்த மண்ணையும், செல்வத்தையும் மீட்டெடுப்போம்.” என்று அறைகூவல் விடுத்த துபாக் அமாருவின் பின்னால் ஆயிரமாயிரம் மக்கள் திரண்டனர். 1781 ல், துபாக் அமாருவின் விடுதலைப் படை தலைநகர் Cuzco வை  முற்றுகையிடும் அளவுக்கு பெரிதாக இருந்தது. இறுதியில் சொந்த படையை சேர்ந்த தளபதி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, துபாக் அமாரு கைது செய்யப்பட்டான். காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான பூர்வீக மக்களின் புரட்சி முறியடிக்கப்பட்டது.

சிறையில் இருந்த துபாக் அமாருவை பார்க்க வந்த ஸ்பானிய அதிகாரி, கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்களை காட்டிக் கொடுத்து விட்டு விடுதலையடையும் படி ஆசை காட்டினான். ஆனால் பணிய மறுத்த துபாக் அமாரு, “இங்கே இரண்டு பொறுப்பாளிகள் மட்டுமே உள்ளனர். ஒன்று, விடுதலைப் போராளியான நான். மற்றது, ஆக்கிரமிப்பாளனான நீ. இருவருமே மரணத்திற்கு தகுதியானவர்கள்.” என்றான். தலைநகரின் மத்திய பகுதிக்கு கொண்டு வரப்பட்ட துபாக் அமாருவும், அவன் மனைவியும், பிள்ளைகளும், பலர் பார்த்திருக்கும் வண்ணம் சித்திரவதை செய்யப்பட்டார்கள். துபாக் அமாருவின் கைகளையும், கால்களையும் கையிற்றால் பிணைத்து, நான்கு குதிரைகளில் கட்டி, நான்கு திசைகளில் இழுத்தார்கள். அப்போதும் அவனது கை கால்கள் கிழியவில்லை. பின்னர் தலையையும், கை,கால்களையும் தனியாக வெட்டியெடுத்து, ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நகரத்திற்கு ஞாபகார்த்தமாக அனுப்பினார்கள். துபாக் அமாருவின் நான்காவது சந்ததி வரையில் அழிக்கப்படுவார்கள் என சூளுரைத்தார்கள்.

காலனியாதிக்கவாதிகளால் பூர்வகுடிகளின் விடுதலை வேட்கையை நான்காவது தலைமுறையிலும் அழிக்க முடியவில்லை. 22 ஏப்ரல் 1997 அன்று, “துபாக் அமாரு புரட்சி அமைப்பு”, பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் உள்ள ஜப்பானிய தூதுவராலயத்தை கைப்பற்றியது. 126 நாட்கள், 72 சர்வதேச தலைவர்களையும், உயர்மட்ட அதிகாரிகளையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். தூதுவராலயத்தை சூழ்ந்த ஊடகங்களின் உதவியுடன், (அமெரிக்க) ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக போர்ப்பிரகடனம் செய்தனர். இறுதியில் துபாக் அமாரு போராளிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு விட்டனர். இருப்பினும் துபாக் அமாருக்கள் அந்த மண்ணில் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருப்பார்கள் என்பதை, அந்த சம்பவம் உலகுக்கு எடுத்துக் காட்டியது.

(தொடரும்)

___________________________________________________

– கலையரசன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்: