vote-01219 வயது ஆஷா, சைனி (saini) எனும் சாதியைச் சேர்ந்தவர். இந்த சாதியை விட படிக்கட்டில் கீழே இருக்கும் ஜாதவ் சாதியைச் சேர்ந்தவர் யோகேஷ். பெற்றோரை இழந்த இந்த 21 வயது இளைஞர் தனது அக்கா வீட்டில் தங்கி ஒரு பழைய மாருதி காரை வைத்து வாடகை ஓட்டியாக காலத்தை கழித்து வந்தார். டெல்லியின் புறநகர் ஒன்றில் வசிக்கும் இருவரும் பழகி பின்னர் காதலித்து வந்தனர். இது அரசல் புரசலாக ஆஷா வீட்டில் தெரிய வந்ததும் வழக்கம் போல பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

ஆஷா வீட்டினர் அவளைக் கண்டித்ததோடு, யோகேஷையும் அவனது அக்கா வீட்டிற்கு சென்று எச்சரித்திருக்கின்றனர். சாதி வெறியோடு, ஒரு வாடகை கார் ஓட்டுனரோடு காதலா என்ற வர்க்க வெறுப்பும் சேர்ந்து அந்த பெண் வீட்டினரது நடவடிக்கைகளை தீர்மானித்திருக்கிறது. ஆனாலும் ஆதிக்க சாதியின் கௌரவத்திற்கு அந்த இளையோரின் காதல் கட்டுப்படவில்லை.

அவர்கள் தொடர்ந்து சந்திப்பதும், தொலை பேசியில் உரையாடுவதும் தொடர்கிறது. இடையில் ஆஷாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கின்றனர். இருந்தும் ஆஷா தனது காதலை துறக்கத் தயாரில்லை. இனி அவளை பணிய வைப்பது எப்படி?

கடந்த ஞாயிறு இரவு யோகேஷைத் தொடர்பு கொண்ட ஆஷாவின் தாய் அவனை நேரில் வருமாறும், பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாமென்றும் கூறுகிறார். இரவு சாப்பாட்டை முழுவதும் சாப்பிடாமல் ஆஷா தங்கியிருந்த அவளது தாய்மாமன் ஓம் பிரகாஷ் வீட்டிற்கு அவன் செல்கிறான். அங்கே ஆஷாவின் உறவினரான ஆண்கள் இருந்திருக்கின்றனர்.

காதலர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுகின்றனர். அலறல் சத்தம் கேட்டு அருகாமை வீட்டிலிருந்தோர் விசாரிக்க ” இது எங்கள் குடும்ப விவகாரம், யாரும் தலையிட வேண்டாம்” என்ற பதில் வந்திருக்கிறது.

விடிந்து பார்த்தால் வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு யோகேஷின் கார் வெளியே அனாதையாக நின்றிருக்கிறது. பின்னர் போலீஸ் வந்து கதவை உடைத்து பார்த்தால் காதலர்களின் பிணங்கள்!

____________________________________________

இதே டெல்லியில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் தினசரியில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளரான நிருபமா மே மாத ஆரம்பத்தில் இதே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டதை உங்களில் சிலர் படித்திருக்கலாம்.

பார்ப்பன சாதியைச் சேர்ந்த நிருபமா ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவள். தந்தை வங்கி மேலாளர். சகோதரர்கள் இருவர் வருமான வரித்துறை அதிகாரியாகவும், முனைவர் ஆய்வு படிப்பு படிப்பவராவும் இருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த பிரபலமான ஊடக கல்லூரியில் படித்த நிருபமா தனது வகுப்புத் தோழனான ரஞ்சனை காதலிக்கிறாள். ரஞ்சன் பீகாரைச் சேர்ந்தவர், கேஷ்த்தியா சாதியைச் சேர்ந்தவர். இந்த சாதியும் ஆதிக்க சாதிதான் என்றாலும் பார்ப்பனர்களை விட கீழ்தான் என்பதை விளக்கத் தேவையில்லை.

விடுமுறைக்காக பெற்றோர் வீடு வந்த நிருபமா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக போலீசுக்கு தகவல் வருகிறது. பின்னர் சவப்பரிசோதனை அறிக்கையின் படி அவள் தலையணையால் மூச்சுத்திணற கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே அவள் மூன்று மாத கர்ப்பிணி என்ற விசயமும் தெரிய வருகிறது. ஒருவேளை அவள் கர்ப்பமில்லாமல் இருந்திருந்தால் இந்தக் கொலை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம்.

பார்ப்பனப் பெண்ணின் வயிற்றில் தரமற்ற சாதியின்  கரு உருவாயிருப்பதை அந்த பார்ப்பன வெறியர்கள் விரும்பவில்லை. கொல்லப்படுவதற்கு முன்னர் அவள் தனது காதலனுடன் தொலைபேசியில் அழுது அரற்றியிருக்கிறாள். செய்வதறியாத ரஞ்சனும் கதறி அழுதிருக்கிறான். பின்னர் சகோதரர்களும் அவர்களது நண்பர்களும் நிருபமாவை கொன்றிருக்கலாம். தற்போது நிருபமாவின் தாயார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

___________________________________________

வட இந்தியாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சாதியின் ‘கௌரவத்திற்காக’ இப்படி இளம் காதலர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில் இந்த சாதிவெறிக் கௌரவத்தின் வீச்சு அதிகம். ஆண்டு தோறும் ஹானர் கில்லிங் எனப்படும் இந்த கௌரவக் கொலைகள் அதிகரித்தே வருகின்றன. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லை.

வேலை வாய்ப்பும், நகரமயமாக்கமும், படிப்பும் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை இந்த புதிய தலைமுறையினர் காதலின் மூலம் மீறுகின்றனர். அந்த மீறலின் அளவுக்கேற்ப காதலர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

முக்கியமாக பெண் ‘உயர்ந்த’ சாதியாகவும், ஆண் ‘தாழ்ந்த’ சாதியாகவும் இருந்தால் இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கண்டிப்பாக வன்முறையை மேற்கொள்கின்றன. பண்டைய இனக்குழுக்களின் கௌரவமாக பெண்ணைக் கருதுவதும், அவளது இரத்தத்தில் வேற்று இனம் கலந்து விடக்கூடாது என்ற ஆதிகாலக் காட்டுமிராண்டித்தனமும் இன்றும் தொடர்கிறது.

நிருபமா பேஸ்புக்கில் தனது அரசியல் கருத்துக்களையும், தனிப்பட்ட விசயங்களையும் பகிர்ந்து வந்தாள். ஊடக படிப்பு படிக்கும் போதே வேலைக்கு தெரிவு செய்யப்பட்டாள். குடும்பத்திலும் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒரு சகோதரர் உயிரியில் தொடர்பான முனைவர் ஆய்வு செய்து வந்தார். எனினும் இந்த படிப்பும், நவீன தொழில்நுட்பங்களும் என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது?

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்த ஆதிக்கசாதியினரின் அணிவகுப்பில்தான் பாரதிய ஜனதா தனது வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது. காதலர் தினத்திற்கு இந்துமதவெறியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், காதலித்த ‘குற்றத்திற்காக’ காதலர்கள் கொலை செய்யப்படுவதும் வேறு வேறல்ல.

நிருபமா கொலை செய்யப்பட்டாலும் அவளது தந்தை வங்கி மேலாளராக பணியாற்றுபவர், தொலைக்காட்சி நேர்காணலில் சாதி மாறி காதலிப்பது தவறு என்று பச்சையாக பேசுகிறார். இத்தகைய பார்ப்பன ‘மேல்சாதி’ வெறியர்கள்தான் அதிகார வலைப்பின்னலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் அன்றாட அரசியல் நடவடிக்கைகளில் இவர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை எப்படி நடத்துவார்கள்?

இளைய சமூகம் இணையம், செல்பேசி, ஷாப்பிங்மால் என்பதை மட்டும் நாகரிகத்தின் அளவுகோலாக வைத்து சாரமற்ற ஜடங்களாக உலாவருகிறது. அதனாலேயே காதலிப்பதில் இருக்கும் கவர்ச்சி அதற்கு தடையாக இருக்கும் பார்ப்பனிய சாதியமைப்பின் இழிவை எதிர்ப்பதில் இருப்பதில்லை. நிருபமாவிற்கும், ஆஷாவுக்கும் அத்தகைய பார்வை கொண்ட நட்பு வட்டம் இருந்திருந்தால் இந்தப் பாதக கொலைகளை தடுத்தி நிறுத்தியிருக்கலாம். ஆனால் இல்லையே?

பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்