privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆங்கிலம் - லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் !!

ஆங்கிலம் – லத்திக்கம்பை ஆதரிக்கும் வழக்கறிஞர் விஜயன் !!

-

ழக்கறிஞர் விஜயனை உங்களுக்கு நினைவிருக்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் இட ஓதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்து உருட்டுக் கட்டை அடிவாங்கி பிரபலமானவர். ஆனால் தொடர்ந்து உருட்டுக்கட்டை ஆட்சியை ஆதரிப்பவர். தமிழகத்தில் வழக்கறிஞர் போராட்டம் தொடங்கினால் போதும், விஜயனின் பேனா சீறலாய் வெடித்துக் கிளம்பும். போராட்டத்திற்கெதிரான தனது சொந்தக் கருத்தை “நடுநிலையான கருத்துப் போல” தினமணி நடுப்பக்க கட்டுரையாய் பதிவு செய்யும்.

சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழுக்காக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் குறித்தும் 05.07.2010 தேதிய தினமணியில் “பொய் சொல்லக் கூடாது” என்ற தலைப்பில் விஜயன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் விஜயன் முன்வைத்திருப்பது:

1)    உயர்நீதிமன்றத்தில் தமிழ் வந்தால் பாதிக்கப்படுவது பொதுமக்களே.
2)    உரிய உள் கட்டமைப்பு வசதியின்றி தமிழ் வழக்காடும் மொழியாக முடியாது.
3)    இந்தியா போன்ற பலமொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல.
4)    சட்டம், தீர்ப்புகள் ஆங்கிலத்தில் தான் இருந்தாக வேண்டும்.
5)    போராட்டம் அரசியலாக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட விசயங்கள் தவிர சட்டரீதியான கருத்துக்கள் சிலவற்றையும் விஜயன் தனது கட்டுரையில் முன் வைத்ததற்கு பலரும் பதில் அளித்த நிலையில் விஜயனை இக்கட்டுரை எழுதத் தூண்டிய சிந்தனை போக்கு எது? அதை ஆராய்வதே விஜயனின் கட்டுரையை அதன் உண்மை பொருளிலும், விஜயனையும் புரிந்து கொள்ள உதவும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதம் நடந்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எந்த மக்கள் விஜயனிடம் சொன்னார்கள் எனத் தெரியவில்லை பொதுவாக மக்களுக்கு பாதிப்பு என விஜயன் முன்வைப்பது, தான், தன்னைச் சார்ந்தோர், தன்னை ஒத்திருப்போரின் கருத்தை மக்கள் பெயரால் முன் வைப்பதே. இந்த நாட்டில் ஆள்வோராகவும், அதிகாரத்தில் உள்ளோராகவும் இருக்கக் கூடிய சிறு பிரிவினரின் பார்வையும் விஜயனின் கருத்தை ஒத்ததே.

நமது நாட்டிலிருக்கும் பாராளுமன்றங்கள், சட்டமன்றங்கள், உச்ச- உயர் நீதிமன்றங்கள், காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகார நிறுவனங்கள் அனைத்தும் யாருக்கானது? என்ற கேள்வியிலிருந்து விஜயனுக்கான பதில் தொடங்குகிறது. மேற்படி அரசு அதிகார நிறுவனங்களில் உள்ளோர், மக்களிடமிருந்து தங்களை பல படிகள் உயர்வாக கருதிக்கொண்டு தங்களுடைய தயவில்தான் ஒட்டுமொத்த மக்கள் சமூகமும் இயங்கி வருவதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். இதை நமது அன்றாட வாழ்வில் காவல் நிலையத்திற்கோ, கலெக்டர் அலுவலகத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ செல்லும் போது நாம் சொந்த அனுபவமாக உணர முடியும்.

நமது அரசியல் அமைப்பு முறையானது பாராளுமன்றம், சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களை எல்லோரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும், மறுத்தால் அரசு குற்றம்சாட்டி நீதித்துறை தண்டனை வழங்கும் என்ற வகையில் அமைந்திருக்கிறது. சட்டத்தின் மேலாண்மை (Supremacy of law)  குறித்து அதிகாரத்தில் உள்ளோர் அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால் மக்களின் கருத்தைக் கேட்டறியாமல் அரசாங்கம் ஒரு சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்பு அதை பின்பற்று என்று கட்டாயப்படுத்தும் வழமையே நம்மிடம் இருக்கிறது.

உதாரணத்திற்கு கடலோர மேலாண்மை சட்டத்திற்கு மீனவர்கள் கருத்தோ, சிறப்பு பொருளாதார மண்டல நிலப்பறி சட்டத்திற்கு விவசாயிகள் கருத்தோ கேட்கப்படுவதில்லை. மாறாக ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களின் நலன் கருதி சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்பு அதை பின்பற்ற கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறான நிலையில் மக்களுக்காக சட்டங்களா? சட்டத்திற்காக மக்களா? என்று கேள்வி எழுப்பி பார்த்தால் மக்களுக்காகத்தான் சட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் நமது அரசியல் அமைப்பு நடைமுறை அதற்கு முரணாக இருக்கிறது. அதை மக்கள் நலன் சார்ந்து மாற்றக் கோருவதை அதிகாரத்தில் உள்ளோர் ஏற்பதில்லை. விஜயனும் இவ்வகை கண்ணோட்டத்திலேதான் மக்கள் நலனுக்கான மாற்றங்களை ஏற்க மறுக்கிறார்.

பாராளுமன்றம், சட்டமன்றங்கள் தொடர்பான கண்ணோட்டத்தை நீதித்துறைக்கும் பொருத்திப் பார்ப்போம். மக்களுக்காக நீதிமன்றங்களா? நீதிமன்றத்திற்காக மக்களா? என்றால் நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கு வேலை தர வேண்டும், விஜயன் போன்ற வழக்கறிஞர்கள் சம்பாதிக்க வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. அதே போல நீதிமன்ற மொழியாக தமிழ் வந்தால் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், விஜயன் போன்ற வழக்கறிஞர்களுக்கு ஏற்படும் சங்கடங்களையும் நாம் கணக்கில் கொள்ள முடியாது. நீதிமன்றங்கள் மக்களுக்கானது. அங்கு மக்களுக்கு தெரிந்த மொழியில் வழக்கு நடவடிக்கையில் இருப்பதே ஜனநாயகம் என்ற முறையிலே இந்தப் பிரச்சினையை பார்க்க முடியும். வழமையான அடிமை வாழ்வில் சுகம் காணுபவர்கள் தவிர வேறு எவராலும் இவ்வாறே சிந்திக்க இயலும்.

மேலும் விஜயன் அக்கட்டுரையில் அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் 21 மொழிகள் அரசின் அலுவல் மொழிகள் என்னும் போது அவற்றை எல்லாம் உயர்நீதிமன்ற மொழியாக்க முடியுமா? என்ற கருத்தை முன்வைக்கிறார்.

உயர்நீதிமன்றங்களில் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திலும், தாய்மொழியிலேயே வழக்கு நடத்திடலாம். மாநிலங்களுக்கிடையிலான பொதுவான அரசியல் சட்டப் பிரச்சினைகள் தவிர இதர வழக்குகளை வழக்காடிகள் தாய்மொழியிலேயே நடத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் (அல்லது) இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்ற அமர்வு (Supreme Court Bench) அமைத்து அந்தந்த மாநில மொழி தெரிந்த நீதிபதிகளை நியமித்து வழக்குகளை நடத்தினால், இன்று உச்சநீதிமன்றத்தில் தேங்கி நிற்கும் பெரும்பாலான சிவில், கிரிமினல் வழக்குகளை மொழி பெயர்க்கும் தேவையின்றி டெல்லி செல்லாமலே முடித்துக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறான முறையை உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ ஏற்காது. என்ன அடிப்படையில் என்றால் தங்களுக்காகத்தான் மக்களே தவிர, மக்களுக்காக தாங்கள் இல்லை என்று கருதுவதால்.

இக்கருத்துதான் நமது சமூகத்தில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள், பெரும் முதலாளிகள் என அனைவரின் கருத்தாக இருக்கிறது. இக்கருத்தை தங்களின் சொந்தக் கருத்தாக ஏற்க கீழ்நிலையில் இருக்கும் அரசு ஊழியர்கள் கூட பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

கூடுதலாக ஆங்கிலத்தை நிர்வாக மொழியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏன் அரசுக்கும், நீதித்துறைக்கும் இருக்கிறதென்றால் ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமின்றி ஆள்வோருக்கும் அதிகாரத்தில் உள்ளோருக்கும் மக்களை மிரட்டும் கருவியாகப் பயன்படுகிறது. பெரும்பான்மை மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற நிலையில், அம்மக்கள் அரசு நீதித்துறை நிர்வாகங்களில் பங்கேற்க இயலாத நிலை இருக்கிறது. இந்நிலை திட்டமிட்டே தொடர வைக்கப்படுகிறது. பெரிய தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்களில் எல்லாம் மக்கள் நுழையக் கூட அஞ்சுவதற்குக் காரணம் ஆங்கில அறிவின்மையே. ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் அறிவாளிகள் என்ற கருத்து உளவியல் ரீதியாக மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் சாதாரண ஏழை மக்கள் கூட தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்க விரும்புகிறார்கள்.

இந்த ஆங்கில வழிக் கல்வியில் அடிமைத்தனமும் சேர்த்தே கற்றுத்தரப்படுகிறது. அதனால்தான் ஆங்கில வழிக் கல்வி கற்றவர்கள் சமூக உணர்வு குன்றியும், சுய நல உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றனர். இந்த வகையில் ஆங்கிலப் பயன்பாடு மக்களை அடிமைகளாய் வைத்திருக்க மட்டுமின்றி, அரசு அதிகாரத்திலிருந்து அந்நியப்படுத்தவும் உதவுகிறது. அதிகாரத்தில் உள்ள ஆள்வோரும் இந்நிலை தொடரவே விரும்புகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் விஜயன் ஆங்கில வழி நீதியை ஆதரிக்கிறாரே தவிர மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியல்ல.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் போரட்டத்தை வழக்கறிஞர்கள் அரசியலாக்கி விட்டனர் என்பதும் விஜயனின் குற்றச்சாட்டு. இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரையும் ஒரு கருத்து வழி நடத்துகிறது. அக்கருத்தின் பின்னணியில் ஒரு அரசியல் நிச்சயம் இருக்கும். ஒரு மனிதனின் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட அத்தனை நிகழ்வுகளையும், அவன் வாழும் சமூகத்தினை வழிநடத்தும் அரசியலே தீர்மானிக்கும்போது, அரசியலற்ற ஒரு மனிதன் இவ்வுலகில் இருக்கவே முடியாது. ஏன் வழக்கறிஞர் விஜயனை வழிநடத்தும் அரசியல் எது?

கடந்த பிப்ரவரி 19, 2009 உயர்நீதிமன்ற போலீசு வெறியாட்டத்தை ஆதரித்து விஜயன் எழுதிய “சத்யமேவ ஜெயதே” என்ற கட்டுரையில் “தமிழகத்தில் வன் கொடுமைக்கு உள்ளாகும் ஒரே சாதி பிராமணர் சாதிதான் இதனால் வன்கொடுமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும்” என்கிறார். விஜயனின் இக்கருத்துதான் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யின் அரசியல். ஆர்.எஸ்.எஸ்-சின் கருத்து விஜயனை வழி நடத்தலாமாம், மற்ற வழக்கறிஞர்களுக்கு தாய் மொழி உணர்வு கூடக் கூடாதாம். ஏன் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு, பல வழக்குகளில் அரசியல் வாதிகளின் குறுக்கீடு எனப் பல வகைகளில் நீதித்துறையில் அரசியல் புகத்தான் செய்கிறது. இதை விஜயன் என்றாவது எதிர்த்திருக்கிறாரா? இல்லை தினமணியில் நடுப்பக்க கட்டுரைதான் எழுதியிருக்கிறாரா?

வழக்கறிஞர்களின் எந்தப் போராட்டத்தையும் விஜயன் எதிர்த்தே வந்திருக்கிறார். ஈழப்போராட்டமானாலும் சரி, கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டிய போராட்டமானாலும் சரி விஜயனின் பேனா அதற்கு எதிராகவே சுழன்றிருக்கிறது. இதே விஜயன் ஜெயலலிதாவிடம் உருட்டுக் கட்டை அடிவாங்கிய போது இதே வழக்கறிஞர்கள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தினார்களே? அது சரியா? தவறா? விளக்குவாரா விஜயன்?

சுப்பிரமணியசாமி என்ற புரோக்கரை வழக்கறிஞர்கள் வெறும் முட்டையால் அடித்ததற்கு பதறித் துடித்து கட்டுரை எழுதிய விஜயன் தன்னோடு பல காலம் பணியாற்றும் வழக்கறிஞர்களின் முகத்தில் இரத்தம் வழிந்ததற்கு பதறி துடிக்காததேன்? வழக்கறிஞர்கள் சு.சாமி அளவுக்கு புனிதமானவார்கள் இல்லையா? விஜயனின் பார்வையில் சு.சாமி, போலீசார் போன்றோரின் உரிமைகள் புனிதமானவை. மண்டை உடைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குண்டு வீச்சுக்கும், கற்பழிப்புக்கும் ஆளான ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் புனிதமற்றவை. இது விஜயன் வழங்கும் மனு தர்ம நீதி போலும்!

இவ்வாறாக ஈழப்போராட்டம், இட ஒதுக்கீடு, தமிழ் உணர்வு ஆகியவற்றை எதிர்ப்பதும், சு.சாமி, கமிஷினர் இராதாகிருஷ்ணன் போன்ற ‘ஜனநாயகவாதி’களை ஆதரிப்பதும் தான் வக்கில் விஜயனின் கொள்கை. இவ்வாறு விஜயனை வழி நடத்துவது அவரது வர்க்க, சாதி நலன்களே. அதனால்தான் ஆங்கிலமா? தமிழா? என்றால் ஆங்கிலத்தின்பாலும், போலீசா? வக்கீலா? என்றால் போலீசின்பாலும், ஈழத்தமிழ் மக்களா? இந்திய அரசா? என்றால் இந்திய அரசின் பின்னாலும் வக்கீல் விஜயன் நிற்கிறார்.

இந்த அடிப்படையில்தான் விஜயனை நாம் பார்க்க வேண்டும். அவரது கட்டுரைகளையும் பரிசீலிக்க வேண்டும். சாரமாகச் சொன்னால் விஜயனின் பார்வை என்பது பார்ப்பனிய – முதலாளித்துவத்தின் அதிகாரத்தை வலுப்படுத்துவதே. அதை எதிர்க்கும் மக்கள் போராட்டம் எல்லாவற்றிலும் இத்தகைய அறிவுஜீவிகள் திறமையாக தங்கள் வாதத்தை வைத்து ஜென்டில்மேன்போல காட்டிக்கொள்வார்கள். ஆனாலும் உள்ளே இருக்கும் பூணூலும், லத்திக்கம்பும் எப்போதும் மறைந்து கொள்வதில்லை. நாமும் அதை மன்னிக்க வேண்டியதில்லை.

_____________________________________________________________________
– சே. வாஞ்சிநாதன்
வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், உயர்நீதிமன்றம், மதுரை
_____________________________________________________________________