privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!

800 கோடி வரி ஏய்ப்பு: வேதாந்தா நிர்வாகியை சிறையிலடைத்த வழக்கறிஞர் போராட்டம். வீடியோ!

-

நேற்று வேதாந்தா நிறுவனம் ஒரிசாவில் பழங்குடி மக்களின் தாலியறுக்கும் அநீதியை எழுதியிருந்தோம். அதில் பழங்குடி மக்களின் கடைசி நபர் இருக்கும் வரை அந்தப் போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அச்சாரமாக தூத்துகுடியிலிருந்து ஒரு இனிய செய்தி தற்போது வந்திருக்கிறது.

தூத்துக்குடியில் 1997ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனம் தாமிரம் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் தாமிரா உருக்காலை நிறுவனத்தை கடும் எதிர்ப்புக்கிடையில் ஆரம்பித்தது. அந்த போராட்டம் தோல்வியடைந்ததற்கு ஓட்டுக்கட்சிகள் காசு வாங்கிக்கொண்டு துரோகமிழைத்ததும், அரசியல் ரீதியில் தன்னாவர்க் குழுக்கள் போராட்டத்தை வழிநடத்தியதும் ஆகும்.

இந்நிலையில் மக்கள் விரோதமாக உற்பத்தியை ஆரம்பித்த ஸ்டெர்லைட் நிறுவனம் பல மோசடிகளை செய்து வந்தது. எல்லா மோசடிகளையும் அரசின் உதவி கொண்டும், பணபலத்தின் செல்வாக்கிலும் கையாண்டது. சிலநாட்களுக்கு முன்னர் ஒரு வரி ஏய்ப்பு வழக்கில் இந்த நிறுவனம் 1000 கோடி ரூபாய் மோசடி செய்திருந்ததற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று மத்திய கலால் துறை இந்நிறுவனம் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக மற்றொரு வழக்கு பதிவு செய்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரக் கம்பிகள், தாமிர கேத்தோடுகள் போன்ற தாமிரப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக ஆஸ்திரேலியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் இருந்து தாமிரத்தாது இறக்குமதி செய்யப்படுகிறது. தாதுப் பொருளை இறக்குமதி செய்துவிட்டு அதே நாடுகளுக்கு தாமிரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தால் இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும்.

ஆனால் இந்தியாவிலேயே தாமிரப்பொருட்களுக்கு கடும் கிராக்கி இருப்பதால் ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற்றுமதி செய்யாமலேயே செய்ததாகக்கூறி வரிச் சலுகை பெற்று வந்தது. இதன்மூல் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.750 கோடிக்கு அந்த நிறுவனம் இறக்குமதி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித் துறையினருக்கு தெரிய வந்தது. அதனால் இத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சோதனை செய்து வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இதன் பொருட்டு ஸ்டெர்லைட்டின் துணை தலைவர் வரதராஜன் என்பவரை போலீசின் உதவியுடன் கைது செய்து கலால் துறை சனிக்கிழமை காலை தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட வழக்கறிஞர்கள் பெருமளவில் கூடினர். அதில் குறிப்பாக மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு. அவர்கள் வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்ற வாயிலில் முழக்கமிட்டனர். “கோடிக்கு ஒரு நீதி, சேரிக்கு ஒரு நீதியா, வரதராஜனை தேசிய பாதுகாப்பு செட்டத்தில் அடை, ஸ்டெர்லைட்டே தூத்துக்குடி  மண்ணை விட்டு வெளியேறு” போன்ற முழக்கங்களை வழக்கறிஞர்கள் முழங்கினர்.

வேதாந்தா நிர்வாகி வரதராஜனுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ஏராளமான வழக்கறிஞர்களை இறக்கியிருந்தது. ஆயினும் முற்போக்கு வழக்கறிஞர்களின் போராட்டக்குரலை செவியுற்ற நீதிபதி மோசடி செய்த நிர்வாகி வரதராஜனை சிறையில் அடைக்குமாறு உத்திரவிட்டார். சமூக அக்கறையுடன் குழுமிய வழக்கறிஞர்களை பாராட்டவும் செய்தார்.

பின்னர் போலீசார் வரதராஜனை வெளியே கொண்டு வந்த போது வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் புகைப்படம் எடுக்க முயன்றபோது, ஸ்டெர்லைட் குண்டர் படை காவல்துறையுடன் தடுத்தது. இதனால் ஆத்திரமுற்ற வழக்கறிஞர்கள் முழக்கமிட்டவாறே வரதராஜனை அடிப்பதற்கு முயன்றனர். பெரும் முயற்சிக்கு பின்னரே காவல்துறை வரதராஜனை மீட்டது. இதனால் நீதிமன்றம் பெரும் பரபரப்பிற்குள்ளானது. இந்த வழக்கிற்காக இலண்டனில் இருக்கும் வேதாந்தா தலைவர் அனில் அகர்வாலை கைது செய்ய வேண்டுமென்றும் வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

இலண்டனில் இருக்கும் அனில் அகர்வாலுக்கு இந்த வரதராஜன் மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு சாதாரண வரியைக்கூட கட்டாமல் இப்படி 750 கோடிக்கு ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?

போராட்டத்தை முன்னெடுத்து ஒரிசா மக்களின் நீதிக்கு உதவிடும் வண்ணம் செயல்பட்ட தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!!

_________________________________________________________________
– தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி.
_________________________________________________________________