privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசொக்கலிங்கம் தேநீர்க் கடை!

சொக்கலிங்கம் தேநீர்க் கடை!

-

தேநீர் யாவர்க்கும் பரிச்சயமான வார்த்தை. சுமை தூக்கும் தொழிலாளி தொடங்கி, அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் வரைக்கும் தமது பணிநிமித்தமான களைப்பை நீக்கி புத்துணர்வு பெறுவது தெருவோர தேநீர் கடைகளில்தான். ஒரு முறை வந்துசென்ற அனுபவத்திலேயே, ஆளைப்பார்த்ததும் ஸ்ட்ராங், மீடியம், லைட், சர்க்கரை கம்மி, நுரைபோட்டு, கட்டன் டீ என  நம் குறிப்பறிந்து தேநீர் வழங்கும் அவர்களின் வேலைநயமே தனிக்கலைதான்.

அதிகாலை, நான்கு மணியிலிருந்து துவங்கும் அவர்களது உழைப்பு, நள்ளிரவில்தான் முடிவடைகிறது. எட்டுமணிநேரம் பன்னிரண்டு மணிநேரம் என்பதெல்லாம் கிடையாது, பட்டறையை மாற்றிவிட பணியாள் எவருமில்லாத பட்சத்தில் இருபது மணிநேரமும் அவர்களுக்கு வேலைநேரம்தான். மீண்டும் அடுத்த நாள் நான்கு மணிக்கு எழுந்தாக வேண்டும் என நச்சு சுழலாய் சுழலுகிறது இவர்களது வாழ்க்கை. நடுத்தரமான தேநீர் கடைகளில் கூட “பன்னிரண்டு மணிநேர” ஷிப்டு முறை உண்டு. ஆனால், தானே முதலாளியாகவும் தானே தொழிலாளியாகவும் தனியாளாய் நின்று நடத்தும் தெருவோர தேநீர் கடைகளின் நிலைமைகளோ வார்த்தைகளில் வடித்திர முடியாத ரணங்களை கொண்டிருக்கிறது.

ஐந்து ரூபாயை பெற்றுக்கொண்டு வாடிக்கையாளருக்கு புத்துணர்வை பரிமாறும் இத்தொழிலாளர்கள், தூக்கமிழந்து, சுக-துக்கமிழந்து, தன் உணர்விழந்து நடைபிணமாய் நடைபாதையில் படுத்துறங்கும் அவலத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? இதோ, நாம் அன்றாடம் கடந்து செல்லும் வழிநெடுக நிரம்பியிருக்கும் தெருவோர தேநீர் கடையொன்றின் துயரக்காவியம்.

_____________________________________________________

வடபழனி கோவிலுக்கும் லிபர்டி திரையரங்கிற்கும் இடைப்பட்ட பேருந்து நிறுத்தமான கோடம்பாக்கம் பவர்ஹவுஸ்-க்கு அருகாமையில் இருக்கிறது, சென்னை மாநகராட்சியின் வணிகவளாகம். இரண்டு தளங்களை கொண்ட இவ்வளாகத்தில் நூற்று இருபது கடைகள்-அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆற்காடு சாலையையொட்டி நீண்டிருக்கும் இந்த மாநகராட்சி வணிக வளாகத்தின் நடைபாதையில் தேநீர் கடைநடத்தும் இருபத்தியெட்டு வயது இளைஞன் சொக்கலிங்கம்.

இதே கடையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாளொன்றுக்கு அறுபது ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்த சொக்கலிங்கம், தற்போது இந்த கடைக்கு முதலாளியாகியிருக்கிறார், கூடவே ஏறத்தாழ ஒன்றரை லட்சத்துக்கு கடனாளியாகியுமிருக்கிறார்.

சென்னையை நோக்கிவரும் ஒவ்வொரு சராசரி இளைஞனுக்கும் இருக்கும் அனைத்து துடிப்புகளும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையும், இலட்சியக் கனவுகளும், கந்துவட்டி என்ற வலைக்குள் விழுவதற்கு முன்பு வரை சொக்கலிங்கத்திற்கும் இருந்தன. இன்றோ, கந்துவட்டியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி, தன் இளமையை இழந்து, எப்போதும் துருதுருவென்றிருந்த தன்னியல்பையிழந்து, தன்உறவுகளிலிருந்து தூர விலகி, நடைபிணமாய் வாழ்ந்து வருகிறார் சொக்கலிங்கம்.

தேயிலைத் தூளும் பாலும் இல்லாத தேநீர்க்கடையை எப்படி நினைத்துப் பார்க்க முடியாதோ, அது போலத்தான் கந்துவட்டி என்ற வார்த்தை புழங்காத தேநீர் கடையையும் நாம் பார்க்க முடியாது, என்ற நிலை வந்து எவ்வளவோ நாளாகிவிட்டது. இத்தொழிலாளியினது உழைப்பை உறிஞ்சி, அவனது குருதியை குடித்துத்தானே பெருத்திருக்கிறது இந்த கந்துவட்டி வலைபின்னல்.

_____________________________

சொக்கலிங்கத்திற்கு சொந்த ஊர் தேவகோட்டைக்கு அருகேயுள்ள பகையணி. அண்ணன் தம்பி மூன்று பேர், திருமணமான அக்கா ஒருவர், மற்றும் வயதான பெற்றோர்கள், இவர்கள்தான் இவரது குடும்பம். தண்ணியில்லா மாவட்டம் என்பதால் இங்கு பெரும்பாலும் விவசாயக் கூலிகள்தான். கால்நடை வளர்ப்பு உபதொழில். இவர்களுக்கு சொந்த நிலமென்று எதுவுமில்லை. எப்போதாவது குத்தகைக்கு விவசாயம் செய்வதுண்டு. அவ்வாறு குத்தகை விவசாயம் செய்தால் ஏதோ ஆறு மாதத்துக்கு வீட்டு அரிசி சோறு சாப்பிடலாம். இல்லையெனில் வருசம் முழுதும் ரேசன் அரிசிதான்.

ஊரில் இளைஞர்கள் எவரையும் பார்க்க முடியாது. இவர்களெல்லாம், சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கும், புரோக்கர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி வெளிநாடுகளுக்கும் சென்று கொத்தடிமைகளாய் காலந்தள்ளுகின்றனர். மூன்றுவேளை சாப்பாடும், தங்குவதற்கு இடமும் கிடைப்பதனால், இவர்களது முதன்மையான தெரிவு திருப்பூர்தான். இதைத்தவிர வேறு வழியில்லை என்பதால், இந்த நரக வாழ்க்கைக்கு இவர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர்.

லிங்கம் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். படிப்பில் லிங்கம் மக்காம் (ஆசிரியர்களின் வார்த்தைகளில்). அதனால் ஒன்பதாவது பெயில் ஆக்கப்பட்டிருக்கிறார். தன் சக நண்பர்கள் பத்தாம் வகுப்புக்கு செல்கையில் தான் மட்டும் ஒன்பதாம் வகுப்புக்கே மீண்டும் போக இவருக்குப் பிடிக்கவில்லை. நண்பர்களின் கேலியும் இவரை காயப்படுத்தியிருக்கிறது. அத்தோடு இவரது பள்ளிபடிப்பும் முடிந்துவிடுகிறது.

படிப்பில் லிங்கம் “மக்கு” என்று ஆசிரியர்களால் முத்திரைக் குத்தப்பட்டாலும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விசயமும் உண்டு. ஆம், லிங்கம் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். கபடி, கோகோ, ஈட்டி எரிதல், குண்டு எரிதல் என பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்திய லிங்கம், ஈட்டி எரிதலில் சீனியர் பிரிவில் மாநில அளவில் மட்டுமல்ல, டெல்லிவரை சென்று விளையாடி தேசிய அளவில் இரண்டாம் இடத்தைகூட பிடித்திருக்கிறார். இந்த விசயத்தை அவர் சர்வசாதாரணமாக சொன்ன போது அதை எனக்கு வேதனையாக இருந்த்து.

பள்ளிக்குப் போகாமல் நின்றுவிட்ட பிறகு இவர் தொடங்கிய முதல் தொழில், ஆடுமாடு மேய்ப்பதில் தொடங்குகிறது. பின் இவரது ஊர்க்காரர் ஒருவரது சிபாரிசின் பேரில் சென்னை குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியிலுள்ள தோல்பதனிடும் நிறுவனமொன்றில் வேலைக்கு சேர்கிறார். ஒரு சிப்டுக்கு வெறும் மூன்று தொழிலாளிகளை மட்டுமே கொண்டு இயங்கும் சிறுதொழில் நிறுவனம் அது. பதப்படுத்தப்பட்டு வரும் தோல்களை குறிப்பிட்ட நிறத்திற்கு மாற்றித்தருவது (மேட்சிங்) இவர்களது வேலை. அமிலக்கரைசல்களை வெற்றுக்கைகளால் கலக்குவது, பாய்லருக்குள் இறங்கி நிறம் மாற்றப்பட்ட தோல்களை வெளியே எடுத்துப் போடுவது, அந்த நச்சுக்கழிவுகளை இரும்பு வாளிகளால் அள்ளி வெளியேற்றுவது என்பதுதான் இவருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள். நாசியை துளைத்தெடுக்கும் நாற்றத்தையும், அருவெறுப்பையும், சகித்துக்கொண்டு ஒன்பது மாதங்களை ஓட்டியிருக்கிறார். பணிச்சூழலும், பணிச்சுமையும் கொடுத்த நெருக்கடியில் அங்கிருந்து ஊருக்கே திரும்பிவிடுகிறார்.

இந்த ஒன்பது மாதங்களில் இவர் சம்பாதித்தது மாதமொன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய். இந்த அற்பத்தொகையோ அறை எடுத்து தங்கியதற்கும், மெஸ்ஸில் சாப்பிட்டதற்குமே சரியாய் போனது. ஊருக்குப் போகக்கூட பணமில்லாமல் சொந்தகாரனிடம் கடன்வாங்கிக் கொண்டும், தங்கியிருந்த அறையிலிருந்த சக தொழிலாளியினுடைய பேண்ட்-சர்ட்டை போட்டுக்கொண்டும், காலில் செருப்பு கூட இல்லாமல் வெறும் ஆளாய் ஊருக்குத் திரும்பியிருக்கிறார்.

ஏதோ, சென்னையில் பெரிய ஆளாய் உருவெடுத்து நிற்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை சொக்கலிங்கம் தவறவிட்டு, விட்டேத்தித்தனமாய் சொந்த ஊருக்கே திரும்பிவந்துவிட்டதாக அவரது பெற்றோர்கள் நினைத்தார்கள். திரும்பி வந்த சொக்கலிங்கத்திடம் முகம் கொடுத்து பேசக்கூட எவரும் தயாரில்லை. ஒருவருடத்தை வீணடித்து விட்டோமே என்ற கவலை சொக்கலிங்கத்திற்கு.

கிராமத்தில், இரண்டு மாதங்கள் பழையபடி மாடு மேய்ச்சல் பணியை தொடர்கிறார். அதன்பின்னர், மீண்டும் சென்னை வருகிறார். முதலில் ஓட்டலில் கிளீனிங் பாயாக வேலையை தொடங்குகிறார், பிறகு தமது உறவினர்களின் தொடர்பில், ஒரு டீக்கடையொன்றில் உதவியாளராக வேலையை தொடர்கிறார். மூன்று வேளை சாப்பாடு, தங்குமிடம் இலவசம், தினமும் அறுபது ரூபாய் சம்பளம். இந்த வேலை இவருக்குப் பிடித்து விடுகிறது.

___________________________________________

எச்சில் கிளாஸ் கழுவுவது, மாஸ்டர் போட்டுத் தரும் தேநீரை அலுவலகங்களுக்கும், கடைகளுக்கும் எடுத்து செல்வது, தண்ணீர் எடுப்பது, உள்ளிட்டவைதான் இவருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள். எந்த மாஸ்டரும் இவரை பட்டறைப் பக்கமே அனுமதிப்பதில்லை. இதிலேயே இரண்டு வருடங்களை ஓட்டி விடுகிறார்.

இந்நிலையில்தான், தற்பொழுது இவர் நடத்திவரும் இந்த பிளாட்பார கடையின் முன்னாள் உரிமையாளர் அறிமுகமாகிறார். அவரும் இவர் ஊருக்கு பக்கத்து ஊர்க்காரராம். ஏற்கெனவே வேலை செய்து வந்த கடையிலிருந்து விலகி, இந்த கடையில் சேர்கிறார். இந்த கடை உரிமையாளர்தான் இவருக்கு முறையாக தேநீர் போடும் விதத்தை கற்றுத்தருகிறார். இவரும் ஆர்வத்தோடு கற்றுத் தேறுகிறார். இவரது சம்பளமும் அறுபதிலிருந்து நூற்று இருபதாக உயர்ந்து விடுகிறது.

முன்னைப்போல, எச்சில் கிளாஸ் மட்டுமே கழுவிவந்த சொக்கலிங்கமல்ல. இப்போது அவர் தேநீர் போடத்தெரிந்த மாஸ்டர் ஆகிறார். வியாபாரத்திலுள்ள நீக்கு போக்குகளையும் கற்றுக்கொள்கிறார். கடை உரிமையாளர் ஊருக்குச் சென்றாலும் தனியாளாய் கடையை நடத்துமளவுக்கு பக்குவமாகிறார். இத்தருணத்தில்தான், உண்மையில் தன்னை நினைத்து சந்தோசப்படுகிறார். நம்மாலும் விசயங்களை கற்றுக்கொள்ளமுடியும். நமக்கு தெரிந்த தொழில் ஒன்று இருக்கிறது, இனி கவலையில்லை என்ற தன்னம்பிக்கை பிறக்கிறது.

இதனூடாக இக்கடையின் உரிமையாளர்கள் மாறுகிறார்கள். ஆனாலும், இதே கடையில் இவர் தன் பணியைத் தொடர்கிறார். இதற்கு முன் இருந்த கடை உரிமையாளர்களெல்லாம், தாமும் பட்டறையில் நாள் முழுவதும் நின்று, எச்சில் கிளாஸ் கழுவி வந்திருக்கின்றனர். ஆனால், இறுதியாக வந்த உரிமையாளர், ஒரு பட்டதாரி இளைஞர். அவர் முதலுக்கு மட்டுமே சொந்தக்காரர். கடைக்கு வந்து போவது சில மணிநேரங்கள்தான். அவ்வாறு வந்தாலும் கல்லாவை மட்டுமே கவனிப்பார். மற்ற எல்லா வேலைகளையும் சொக்கலிங்கம் ஒருவர் மட்டுமே கவனித்தாக வேண்டும். பிளாக்கில் சிலிண்டர் வாங்குவது, தண்டல் காரனுக்கு பதில் சொல்வது, உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இவர் மட்டுமே கவனித்து வந்திருக்கிறார். சொல்லப்போனால், இந்தக் கடைக்கென தான் தன் பணத்தை போடாதிருந்தாலும், இந்த கடையை நிர்வகித்தது சொக்கலிங்கம்தான். ஆனாலும் இவருக்கு சம்பளம் அதே நூற்று இருபதுதான்.

இந்நிலையில், இப்புதிய பட்டதாரி இளைஞரான அந்த உரிமையாளரும், தினமும் இருநூற்றைம்பது மட்டும் கொடுத்துவிட்டு, கடையை சொக்கலிங்கத்தையே பார்த்துக்கொள்ளச் சொல்கிறார். சொக்கலிங்கமும் , இப்புதிய உரிமையாளர் கடையில் இல்லாதுபோனால், நட்டமேதும் இல்லை. எல்லா வேலையும் தான் மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது, எனக்கருதி, இந்த ஒப்பந்தப்படி கடையை பொறுப்பேற்று நடத்த சம்மதிக்கிறார். ஒரு ஆறுமாதங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஓடுகிறது.

ஒரு கட்டத்தில், பட்டதாரி இளைஞரான இப்புதிய உரிமையாளர், கடையின் மொத்தப் பொறுப்பையும் சொக்கலிங்கத்திடம் விட்டுவிட முடிவு செய்கிறார். அதாவது, இந்தக் கடைக்கு என தான் போட்ட முதல் அனைத்தையும் சொக்கலிங்கம் தனக்கு பணமாக திருப்பித் தந்து விடுவது, கடையை தொடர்ந்து சொக்கலிங்கமே நடத்திக்கொள்வது, என்பது அவ்வொப்பந்தம்.

“தினமும் எப்பாடு பட்டேனும் ஒரு நாள் தவறாமல் உங்களுக்கு இருநூற்றைம்பதை தந்து விடுகிறேன். நீங்க போட்ட முதல் அப்படியே இருக்கட்டும். நமக்கு இப்ப கிடைக்கிற வருமானமே போதும். என்கிட்ட முதல் போட காசு இல்ல. பின்னாடி கஷ்டமாயிடும்” என முதலில் மறுத்துவிடுகிறார் சொக்கலிங்கம்.

அப்பொழுதுதான், “சொக்கலிங்கம் மெட்ராசுக்கு வந்து இத்தனை வருசம் நாயா உழைச்சுட்டோம் இந்நேரம் நம்ம கையில காசு இருந்திருந்தா இந்த அருமையான வாய்ப்பை விட்டிருக்க மாட்டோம். அழகா, இந்த கடையை எடுத்து நடத்தியிருக்கலாம். இப்படி பொழைக்கத்தெரியாம இருந்திட்டோமே,” என உண்மையிலேயே வருந்துகிறார்.

பட்டதாரி இளைஞரோ, எப்படியேனும் இந்த கடையை சொக்கலிங்கத்திடம் கைமாற்றிவிட்டு, இக்கடைக்கென தான் போட்ட முதல் அனைத்தையும் திரும்பப் பெற்றுவிடுவது என்பதில் உறுதியாயிருக்கிறார்.

சொக்கலிங்கத்திடம் பக்குவமாகப் பேசி, “கடையை நீயே கவனிச்சுக்க. இனிமே எனக்கு காசு எதுவும் தரவேண்டாம். கடைக்கு கொடுத்திருக்கிற அட்வான்சை கொடுத்திடு. அப்புறம் மெட்டீரியலுக்கு இருபதாயிரம் கொடுத்திடு. அவ்வளவுதான். அப்புறம் மாசாமாசம் வாடகை மட்டும் கட்டிட்டு கடையை நடத்திக்க. உங்கிட்ட காசு இல்லாட்டி என்ன லிங்கம், பைனான்சுக்கு நான் ஏற்பாடு பன்னுறேன். தினமும் கல்லா கட்டுற காச வச்சு தண்டல் கட்டினேனா நூறுநாள்ல முடிஞ்சுடும். அப்புறம் மொத்தகாசும் உனக்குத்தான்,” என தூண்டில் போடுகிறார்.

சொக்கலிங்கமும் இதற்கு சம்மதிக்கிறார்.  கடைக்கான அட்வான்சுக்கும், கடையில் உள்ள மெட்டீரியலுக்குமாக மொத்தம் எழுபதாயிரத்துக்கான தண்டல் சொக்கலிங்கத்தின் பெயருக்கு மாறுகிறது. சொக்கலிங்கம் இப்போது “முதலாளி”யாகிறார்.

சொக்கலிங்கம் தனது தேநீர்க் கடையில்

____________________________________________

சும்மா பத்துக்குப் பத்து கூட தேறாதா இடம். நாலுபலகையை ஒன்னாவச்சு சும்மா நாலு ஆணி அடிச்சிருக்கிற பட்டறை. அப்புறம் ஒரு ஓட்ட கேஸ்டவ்வு, ரெண்டு பால் பாத்திரம், ரெண்டு கப்பு, நாலு பிஸ்கட்டு பாட்டிலு, பன்னிரண்டு கண்ணாடி டம்ளரு இதுதான் மொத்த மெட்டீரியலு. இந்த பிளாட் பாரத்துக்கு அட்வான்சா? மாத வாடகையா?

இந்த கதையை சொக்கலிங்கம் என்னிடம் சொல்லும் போது எனக்கும் அதுதான் தோன்றியது சொன்னா நம்ப மாட்டீங்க, இன்னைக்கு சொக்கலிங்கம் இந்த கடைக்கு எவ்வளவு தெரியுமா மாத வாடகை செலுத்துகிறார்? ஆறாயிரம் ரூபாய். அட்வான்சு நாற்பதாயிரம் ரூபாய்.

இதை விடக்கொடுமை? இந்த கடை இருக்கிற மாநகராட்சி வணிக வளாகத்திலேயே, 800 சதுர அடி கொண்ட கடைக்கே மாத வாடகை ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறுக்குள்தான். ஆனா பிளாட்பாரத்துக்கு வாடகை ஆறாயிரம். உடஞ்ச பலகைக்கு இருபதாயிரம்.

வேறு ஒன்றுமில்லை, எல்லாம் ரிஸ்க்குத்தான் காசு. ஆமாம். இந்த கடை இருக்கிற இடத்தை ஆக்கிரமிச்சு, வளைச்சுப்போட்ட தி.மு.க.வைச் சேர்ந்த உள்ளூர் புள்ளியின் (கோடம்பாக்கம் பகுதி கவுன்சிலர் வெல்டிங்மணியின் மச்சான் என்ற பெயரில் வசூலிக்கும்) அல்லக்கைக்கு போய்ச்சேருகிறது இந்தப் பணம். அதுவும் அவ்வப்போது வந்து செலவுக்கு அம்பது கொடு நூறு கொடு என்று கேட்டால் மறுவார்த்தையின்றி தந்தாகவேண்டும். இல்லையெனில் கடையை காலி பண்ண வேண்டியிருக்கும். இது மட்டுமா, மாநகராட்சி அதிகாரிகளின் மிரட்டலுக்கும் ரெய்டுக்கும் உட்பட்டுதான் கடை நடத்தியாக வேண்டும்.
_____________________________________________________________

சென்னைக்கு வந்த பிறகு, தண்டல் என்ற வார்த்தைகள் அறிமுகமான பிறகு, சொக்கலிங்கம் முதன் முதலாய் வாங்கிய தண்டல் தொகை இதுதான். இந்த எழுபதாயிரத்துக்கு தினமும் எழுநூறு ரூபாய் தினத்தவணை கட்டியாக வேண்டும். கடைக்கான தினவாடகை இருநூறும் தினமும் செலுத்தியாக வேண்டும். ஆக நாளொன்றுக்கு குறைந்த பட்சம் தொள்ளாயிரம் ரூபாய் இலாபமாக கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால், நிலைமையோ தலைகீழ். இந்த கடையின் ஒருநாள் டர்ன்ஓவரே ஆயிரத்திலிருந்து ஆயிரத்து முன்னூறுக்குள்தான். அதிலும் பெருந்தொகை பீடி, சிகரெட்டுக்கானது.

10-லிருந்து 12 லிட்டர் பாலை ஓட்டினால் தான் செலவுபோக ஐநூறிலிருந்த அறுநூறு ரூபாய்வரை இலாபமாக நிற்கும். தினமும் தொள்ளாயிரம் வேண்டுமானால், பயன்படுத்தும் பாலின் அளவு இருமடங்காக வேண்டும். ஆனால், ஏதோ காரணங்களால் நாளொன்றுக்கு எட்டு லிட்டருக்குமேல் போகாமல் வியாபாரம் தேங்கிவிடுகிறது. தினமும் ஐநூறை தேற்றுவதே பெரும்பாடாகி விடுகிறது.

இந்நிலையில்தான், அந்த விபரீதமான முடிவை எடுக்கிறார் லிங்கம். கந்துவட்டிக்காரனின் கடுஞ்சொற்களை எதிர்கொள்ள முடியாமல் மனஉளைச்சலுக்குள்ளான லிங்கம், அதிலிருந்து விடுபட இன்னோர் கந்துவட்டிக்காரனையே நாடிச்செல்கிறார். சுழற்சிக்காக இருபதாயிரம் ரூபாய் தண்டல் வாங்குகிறார். கமிசன் தொகை போக இவர் கைக்கு சேர்ந்தது பதினேழாயிரம் ரூபாய்.

இப்போது முன்னர் வாங்கியிருந்த எழுபதாயிரத்துக்கான தினத்தவணை எழுநூறு, கடைக்கான வாடகைக்கு இருநூறு, இறுதியாக சுழற்சிக்கென வாங்கிய இருபதாயிரத்துக்கான தினத்தவணை இருநூறு என தினமும் இவர் ஆயிரத்து நூறு ரூபாய் கட்டியாக வேண்டும். கடையிலிருந்து லாபமாக கிடைப்பது அதிகபட்சம் ஐநூறு தான். மீதம் செலுத்த வேண்டிய அறுநூறு ரூபாயை கையிலிருக்கும் பதினேழாயிரத்திலிருந்து எடுத்து கொடுக்கிறார்.

இந்த பதினேழாயிரமும் இருபத்தியெட்டு நாளில்  தீர்ந்து விடுகிறது. பின் மீண்டும் வேறொரு தண்டல்காரர் அதே இருபதாயிரம். அதே சுழற்சி. இவ்வாறு தண்டல் காரனை மாற்றியும், ஒரே தண்டல் காரனிடம் வேறொருவர் பெயரில் கணக்கு ஆரம்பித்தும் இருபது, அம்பது என தண்டல் வாங்கியே தண்டல் கட்டுகிறார்.

காலை எட்டு மணிக்கு இருபதாயிரம் தண்டல், மதியம் ஒரு மணிக்கு இன்னொரு இருபதாயிரம் தண்டல், இரவு எட்டு மணிக்கு அம்பதாயிரம் தண்டல், இடையிடையே பால், டீத்தூள், சர்க்கரையும், பீடி-சிகரெட்டும், பிஸ்கட்டும் வாங்கியாக வேண்டும். நாளை எண்ணி அல்ல, ஒவ்வொரு மணிநேரத்தையும் எண்ணி அதற்குள்ளாக ஒரு குறிப்பிட்ட தொகையை கல்லாவில் சேர்த்தாக வேணடும்.

இத்தருணங்கள் மிகக்கொடூரமானது. ஒரு நிமிடம் லிங்கத்திற்கு பதிலாக நம்மை அவ்விடத்தில் வைத்து நினைத்துப் பார்க்கவே, நெஞ்சம் பதைக்கிறது. ஆனால், இதனையெல்லாம் எதிர்கொண்ட லிங்கத்தின் மனவலிமை அசாத்தியமானது.

எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இடைவேளை நேரங்களில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு தேநீரை உறிஞ்சிக்கொண்டு லிங்கத்தின் கடைக்கு முன்பாக அரட்டையடிப்பது வழக்கம். “வரவர லிங்கத்தோட போக்கே சரியில்லை. எதுத்தாப்புல பஸ்டாண்டு வேற இருக்குதா, எந்நேரமும் வெறிச்சு பார்த்துகிட்டே இருக்கான். அவனே சிரிச்சிக்கிறான். டீ சொன்னா கைக்கு வர்றதுக்கு அரை மணிநேரமாவுது. முதல்ல பஸ்ஸ்டாண்டை மறைக்கிற மாதிரி போர்டு வைக்கனும்,” என லிங்கத்தை கலாய்ப்பார்கள்.

பேருக்கு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு தன் வேலையை தொடர்வார் லிங்கம். தனக்குத்த்தானே பேசிக்கொள்வதற்கும், நாம் சொல்வது அவரது செவிகளைச் சென்று சேர்வதில் ஏற்படும் தாமதத்திற்கும் காரணம் பேருந்திற்காக காத்திருக்கும் இளம்பெண்களைப் பற்றிய நினைப்புகள் அல்ல. ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு தடவையாக வந்து சென்று கொண்டேயிருக்கும் டீத்துள், காபித்தூள், பிஸ்கட் கடைகாரன், பீடி சிகரெட் கடைக்காரன், கந்துவட்டிக்காரனுக்கு எடுத்துக் கொடுப்பதற்கு கல்லா இன்னும் நிரம்ப வில்லையே என்ற பயமும், என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்ற கவலையும்தான் காரணம் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். கைகள் அனிச்சை செயலாய் பாலையும் தேநீரையும் கலக்கிறது. அவரது மனமோ இந்தச் சிக்கலிலிருந்து என்றுதான் மீள்வோம் என்று குடைந்தெடுக்கிறது. முன்னதைப் போல இவையும் அனிச்சை செயலாகிவிட்டது இப்போது.

தண்டலுக்கு வாங்கி தண்டல் கட்டும் லிங்கத்தின் தற்போதைய சேமிப்பு கடையில் அட்வான்சாக இருக்கும் நாற்பதாயிரமும், போட்டிருக்கிற சட்டையும் கைலியும் தான். கடையில் பணியாளாய் அறுபது ரூபாய் சம்பளத்தில் பணியாற்றிய பொழுதுகூட அவ்வப்பொழுது ஊருக்குத் தொகை அனுப்பியிருக்கிறார். முதலாளி ஆன பிறகோ ஒற்றைப் பைசா கூட அனுப்பியதில்லை. இதனை நினைத்து வருத்தப்படுவதோடு மட்டுமின்றி தன்னால் தன் குடும்பத்திற்கு பைசா பிரயோசனமில்லை என்ற குற்ற உணர்வில் சொந்தங்களிடமிருந்து தூர விலகியே வாழ்ந்து வருகிறார்.

ஊரில் திருவிழா, விசேசம் உறவினர்களின் திருமணம் போன்ற நாட்களில் லிங்கம் ஊருக்கு செல்வதில்லை. இவரது கைபேசியும் அன்று முழுவதும் அணைக்கப்பட்டிருக்கும். இவர் சொந்த ஊருக்குப் போய் ஆண்டுகள் ஐந்து கடந்து விட்டன. சமீபத்தில் இவரது சொந்த அண்ணனின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முதல்நாள் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். பார்த்தவுடன் கணிக்க முடிந்தது. நீண்ட விசாரிப்புகளுக்குப் பின்னர்தான் அண்ணன் திருமணம் குறித்து சொன்னார். “மத்த விசேசத்துக்குத்தான் போகலை, அண்ணன் திருமணத்திற்காவது போகலாமில்லே… “என்றேன்.

“இல்லன்னா, ஊருக்கு போகவே புடிக்கலைன்னா. ஊருக்குப் போயி அஞ்சு வருசம் ஆவுது. இது வரைக்கும் வீட்டுக்குன்னு உருப்படியா ஒன்னுமே செஞ்சதில்லை. இப்ப எங்கிட்ட கையில காசும் எதுவுமில்லை. அண்ணன் கல்யாணத்துக்கு போகனும்னா கையில காசுல்லாம போன மரியாதையில்லைன்னா. நான் வெறும் ஆளுன்னா, போகவே புடிக்கலைன்னா.”

“ஒரு உண்மையை சொல்லட்டுமா, இன்னிய சூழ்நிலையிலை மாத்திக்க ஒரு சட்டை கைலியைத் தவிர என்னிடம் ஊருக்கு செல்ல துணிகூட இல்லை. ஒருத்தன்கிட்ட காசு கேட்டிருந்தேன், இன்னிக்கு சாய்ந்தரம் தரேன்னிருந்தான், கிடைச்சதும் ஒரு பேண்ட் சர்ட் ரெடிமேட்ல எடுத்துகிட்டு போலாம்னு இருந்தேன். கடைசியில அவனும் இல்லன்னுட்டான். அதான் ஒன்னுமே புரியல…” இதுதான் அவரது பதில். என் மனம் கேட்காமல் ஒரு ஆயிரத்தை எடுத்து கையில் திணித்து “முதல்ல ஊருக்கு கிளம்பிப் போங்க” என்றேன். அரைமனதோடு பெற்றுக் கொண்டார். இரவு பத்து மணிவாக்கில் என்ன கிளம்பியாச்சா என்று, சந்தேகத்தில் விசாரித்தேன். “இல்லைன்னா, என் சொந்தக்காரன்கிட்ட வீட்ல கொடுன்னு ஆயிரத்த கொடுத்துட்டு கோயம்பேடு பஸ்டாண்டோடு திரும்பிட்டேன்” என்றார். இதுதான் அவரது நிலைமை.

ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு மணிநேரமும் அவர் அனுபவிப்பது நரக வேதனையை. இன்னதுதான் என்று வார்த்தைகளில் அடக்கிடமுடியாதவை. இன்றைய நிலையில் அவர் வாங்கியிருக்கும் தண்டலுக்காக தினமும் ஆயிரத்து ஐநூறிலிருந்து ஆயிரத்து எழுநூறு வரை கட்ட வேண்டியிருக்கும். மாநகராட்சி வணிக வளாக காய்கறி அங்காடி தரைக்கடை வியாபாரிகள் சிலரது ஆலோசனைப்படி, தினமும் தண்டலுக்கான தவணைத்தொகையை கட்ட முடியாது, மூன்று நாளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கட்டுகிறேன். எத்தனை மாதம் ஆனாலும் முழுபணத்தையும் நான் நிச்சயம் கட்டிவிடுவேன். என்று அறிவித்து அதன்படி செய்துவருகிறார், லிங்கம்.

இவை, வெறும் வாய்வார்த்தைகளால் மட்டுமே சாத்தியமாகிவிடவில்லை. காலில் விழாத குறையாக கெஞ்சியும், அவன் வசைப்பாடலை எதிர்கொள்ள முடியாது அஞ்சியும், அவன் வரும் நேரத்தில் வேறெங்கேனும் சென்று ஓடி ஒளிந்தும்….தான் சமாளித்துவருகிறார்.

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் சமாளிப்பார் சொக்கலிங்கம்? இன்னும் எத்தனை நாளுக்குத்தான் நீடிக்கும் அவரது மனஉறுதி? கந்துவட்டிக்கும்பலின் அஸ்திரம் மாறுகிற போது லிங்கத்தின் முடிவில் மட்டும் மாற்றம் வராதா, என்ன?

விதர்பாவின் விவசாயிகளும், திருப்பூர் தொழிலாளர்கள் தாங்கள் இறுதியாய் பயன்படுத்திய தூக்குக்கயிறும், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உயிருடன் எரிந்த சடலங்களும், காலியான விசப்புட்டிகளும் உங்கள் நினைவுகளை இன்னும் கலைக்கவில்லையா?

___________________________________________________________

“தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், வாழ்வில் சாதிக்க வேண்டுமென்ற வேட்கையும் இருந்தால் வெற்றி நம்மைத் தேடிவரும்.” அப்துல் கலாம் தொடங்கி இறையன்பு வரைக்கும் இவர்கள் கிறுக்கித்தள்ளும் காகிதங்களிலெல்லாம் விரவிக்கிடக்கும் வார்த்தைகள் இவை.

இவற்றுள் எவையில்லை லிங்கத்திடம்?

தனியாளாய் காலை முதல் இரவுவரை ஓய்வின்றி மாடாய் உழைக்கும் லிங்கத்திடம் கடின உழைப்பு இல்லையா?

எத்தனைநாள்தான் எச்சில் கிளாஸ் கழுவியே பொழப்பை ஓட்டுறது என்றெண்ணி, கையில் பத்து பைசா இல்லாத போதும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, தண்டல் வாங்கி கடைப்பொறுப்பை ஏற்ற லிங்கத்திடம் வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற வேட்கையில்லையா?

தான் போட்ட மனக்கணக்கு ஓரிரு மாதங்களிலேயே பொய்த்துப் போனபோதும், கைநீட்டி பணம் வாங்கிய தண்டல் காரனிடம் தினம் தரும் தவணையை நிறுத்தக்கூடாது என்று, மற்றோர் தண்டல் காரனிடமே மீண்டும் தண்டல் வாங்கி தண்டல் கட்டிய லிங்கத்திடம் நாணயமும் நேர்மையும் இல்லையா?

இனி யாரிடமும் தண்டல் வாங்க முடியாது என்ற சூழல் வந்தபோதும், தன்னைப்பற்றி கவலை கொள்ளாது, தனது உணவுத்தேவைகளை சுருக்கிக்கொண்டும், தான் இதுவரை தங்கி வந்த அறையை காலிசெய்துவிட்டு மாநகராட்சி வணிகவளாகத்தின் நடைபாதையையே தன் புதிய இருப்பிடமாக்கிக்கொண்டும், இதன் மூலம் மிச்சம் பண்ணிய தொகையை கொண்டு தண்டல் கட்டிய லிங்கத்திடம் சோதனைகளை கண்டு விலகி ஓடாது அதனை எதிர்கொண்ட துணிவில்லையா? இல்லை, அர்ப்பணிப்பும், தியாகமும், விடாமுயற்சியும் தான் இதில் அடங்கியிருக்கவில்லையா?

இன்னும் எவைதான் இல்லை லிங்கத்திடம்?

நாட்டில் இவரைப்போலவே உழலும் எத்தனையோ கோடி சொக்கலிங்கங்களுக்கு நாம் தரும் பதில் என்ன? அய்யோ பாவம் என்பதும், ஐநூறோ ஆயிரமோ என்னால் முடிந்ததை தருகிறேன் என்பதும் அனுதாபத்தின், மனிதாபிமானத்தின் வெளிப்பாடுதானே தவிர, ஒரு போதும் இவை மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வாகிவிடுமா என்ன?

இந்த சமூக அமைப்பின் மீது சந்தேகம் கொள்ளாமல், அதன் மீது சினம் கொள்ளாமல், அதன் மீது காறி உமிழாமல், இதற்கான மாற்றைத் தேடாமல், நாம் ஒவ்வொருவரும் விலகிச் சென்று விட முடியுமா என்ன?

_____________________

– இளங்கதிர்
_____________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்