privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

“சுரணையற்ற இந்தியா”

-

“எத்தனை வருஷங்களுக்கு இந்த காரணத்தை சொல்லி மக்களை பலியிடுவார்கள்.
இந்த பாரதத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றது, பிரச்சனை எல்லாருக்கும் தான் வருகிறது. சும்மா நடந்ததையே நினைத்து நினைத்து யாரும் இப்படி அப்பாவி மக்களை பழிவாங்கிகொண்டிருக்கவில்லை.”—“வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள்” என்ற எமது முந்தைய கட்டுரைக்கு குந்தவை எனும் பதிவர் எழுதிய மறுமொழி இது.

நடந்ததை மறக்கச் சொல்லுகிறார் குந்தவை. பெரியார் கிரிட்டிக் எனத் தன்னை அழைத்துக் கொள்பவரோ நடப்பது சர்வதேச பயங்கரவாதம் எனச் சித்தரிக்கிறார். ஊடகங்களும் இத்தகைய கருத்தையே பரப்புகின்றன. “இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடாக இருந்தும், அவமானகரமாக அதை எதிர்க்கும் அரசியல் உறுதியைக் காட்ட மறுக்கிறது சுரணையற்ற இந்தியா” என்று கூறுகிறது இந்தியா டுடேயின் அட்டைப்படக் கட்டுரை. இந்தப் பதிவை எழுதி முடித்த பிறகுதான் இந்தியா டுடேயைப் பார்த்தோம். அந்தத் தலைப்பும் நன்றாகத்தான் இருக்கிறது….”சுரணையற்ற இந்தியா”.

“சும்மா நடந்ததையே நினைத்து அப்பாவிகளைப் பழிவாங்கலாமா?” என்று கேட்கிறார் குந்தவை. ஒரு சிறிய திருத்தம். குற்றவாளிகளைத்தான் பழிவாங்க முடியும். அப்பாவிகளைப் பழிவாங்க முடியாது. ஒருவேளை குற்றவாளிகள் பழிவாங்கப்பட்டிருந்தால் அது குறித்து நாம் கவலைப்படப் போவதில்லை. ஆனால், ஒரு பாவமும் அறியாத ஏழை எளிய மக்கள் வெடிகுண்டுகளால் பிய்த்தெறியப்படும்போது! அந்தக் கொடூரத்தை யார்தான் நியாயப்படுத்த முடியும் – சங்க பரிவாரத்தினரைத் தவிர.

‘சும்மா நடந்ததையே நினைத்து’,,,,

நடந்தது குழாயடிச் சண்டையல்ல, மறப்பதற்கு. 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை. இருந்தாலும், ‘அன்று நடந்ததற்காகத்தான் இன்று நடக்கிறது’ என்பதையாவது நேர்மையாக ஒப்புக் கொள்கிறாரே குந்தவை. அந்த வரையில் மகிழ்ச்சி.

ஆனால், குந்தவை ஒப்புக் கொள்ளும் இந்த உண்மையை, ‘பக்கத்து வீட்டு மாமி’ சுஷ்மா சுவராஜோ, ‘எழுச்சி பெற்ற இந்து’ வினய் கட்யாரோ ஒப்புக் கொள்ளவில்லை. “எம்.பி க்களை விலைக்கு வாங்கிய அயோக்கியத்தனத்திலிருந்து நாட்டைத் திசை திருப்பவும், முஸ்லிம்களின் ஒட்டுக்களை அறுவடை செய்யவும் காங்கிரசு நடத்தும் சதிதான் இந்தக் குண்டுவெடிப்பு” என்பது சுஷ்மா புலனாய்வின் முடிவு.

“அதெப்படி குண்டு வெடித்து 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கரெக்டாகக் கண்டுபிடிக்க முடியும்?” என்று கேட்காதீர்கள். கோத்ரா ரயில் பெட்டி எரிந்த மறுநாளே ‘இது ஐ.எஸ்.ஐ சதி’ என்று அத்வானி கண்டுபிடிக்கவில்லையா? “பிணங்களின் மீதேறி பதவி கைப்பற்றும் கலையை பாரதிய ஜனதாவிடமே போட்டுக் காட்டுகிறதா காங்கிரசு? திருப்பதிக்கே லட்டா?” என்று கேட்கிறார் சுஷ்மா.

சுஷ்மாவின் குற்றச்சாட்டின்படி அப்சல் குருவுக்கு அடுத்தபடியாக மன்மோகன் சிங்கைத் தூக்கில் போட வேண்டும். ‘துப்புக் கொடுப்பவர்களுக்கு 51 இலட்சம் சன்மானம்’ என்று மோடி அறிவித்திருக்கிறாரே, அதையும் மாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது. ‘அது அவரது தனிப்பட்ட கருத்து’ என்று மாமியைக் கழட்டி விட்டுவிட்டது பாரதிய ஜனதா தலைமை.

‘பயங்கரவாதி’ மன்மோகன் சிங்குடன் ஒன்றாக நின்று போஸ் கொடுக்கிறார் மோடி. “குஜராத் படுகொலைக்காகத்தான் இசுலாமியத் தீவிரவாதிகள் பழிவாங்குகிறார்கள்” என்ற குந்தவையின் கருத்தையும் கூட மோடி ஏற்கவில்லை. என்ன நடக்கிறது இந்த நாட்டில்? அப்பாவி ஹிந்துக்கள் இவ்வளவு பேர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருந்தும், குஜராத்தில் ஒரேயொரு முஸ்லிம் கூட பதிலுக்குக் கொல்லப்படவில்லையே! மோடிக்கு நியூட்டனின் விதி கூட ஞாபகத்துக்கு வரவில்லையே! பூனை சைவமாகி விட்டதா?

“நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை” என்பதனால்தான் குண்டு வெடிப்பு நடந்த கையோடு அதை மோடியே மறந்து விட்டாரா?! “மோடியே மறந்து விட்டார், அப்புறம் என்ன, 2002 குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் மறந்துவிட வேண்டியதுதானே” என்கிறாரா குந்தவை?

மறக்கலாம். ஆனால் அதற்கு ஒரு சிறிய முன்நிபந்தனை இருக்கிறது. அநீதியால் பாதிக்கப்பட்டவன் தனது பாதிப்பை மறக்க வேண்டுமானால், அந்த அநீதியை இழைத்தவனும், அவனைச் சார்ந்த சமூகமும், தான் இழைத்த அநீதியை நினைவில் வைத்திருக்க வேண்டும். நினைவில் வைத்திருப்பது மட்டுமல்ல, அதற்காக வருந்த வேண்டும். பரி காரம் தேட வேண்டும். அநீதி இழைத்த குற்றவாளிகளைத் தண்டிக்கவும் வேண்டும். இத்தனையும் நடந்த பின்னர்தான் பாதிக்கப் பட்டவர்களுக்கும் அவர்களது சுற்றத்துக்கும் தங்களுக்கு நடந்த அநீதி மறக்கத் தொடங்கும்.

ஆனால் நாம் காண்பது என்ன? 2002 இனப்படுகொலைக்குப் பரிசாக முதல்வர் பதவியை மோடிக்கு வழங்கினார்கள் குஜரத்தின் பெரும்பான்மை இந்துக்கள். கார்ப்பரேட் உலகத்தின் தாரகை மோடியை, டெவில்ஸ் அட்வொகேட் நிகழ்ச்சியில் நேர்காணல் செய்தார் கரண் தாப்பர். “குஜராத் சம்பவங்களுக்காக நீங்கள் ஒரு சின்ன ஸாரி சொல்லக்கூடாதா?” என்ற லெவலுக்கு இறங்கி ஒரு கேள்வி கேட்டார். உடனே பேட்டியை அத்தோடு முறித்துக் கொண்டு வெளியேறினார் மோடி.

ஒரு சின்ன ஸாரி. கலீலியோவை சித்திரவதை செய்ததற்கு வாடிகன் தெரிவித்தது போன்ற நயாபைசா பெறாத ஒரு ஸாரி. கரண் தாப்பர் கோரியது இவ்வளவுதான். ஆனால் 2002 இல் நடந்த்தை நினைவுபடுத்துவதைத்தான் மோடி விரும்பவில்லையே!

நடந்ததையெல்லாம் மோடி மட்டுமா மறக்க விரும்புகிறார்? மரண வியாபாரி என்று வாய்தவறி உளறியதை மறுநாளே மறக்க விரும்பினார் சோனியா. பாரதிய ஜனதாவின் நேற்றைய பங்காளிகளான தி.மு.க வும் பா.ம.க வும் சந்திரபாபு நாயுடுவும் ஒமர் அப்துல்லாவும் கூட குஜராத்தை மறக்கத்தான் விரும்புகின்றனர். அன்று படுகொலையை நியாயப்படுத்திய மாயாவதியும், இன்று மாயாவதியுடன் கூட்டு சேர்ந்திருக்கும் மார்க்சிஸ்டுகளும் கூட குஜராத்தை மறக்கத்தான் விரும்புகின்றனர்.

குந்தவை அவர்களே, இப்படி ஒரு பச்சை இரத்தப் படுகொலையை எல்லோரும் மறந்து விட்டதனால்தான், ‘அவர்கள்’ நினைவில் வைத்திருக்கிறார்கள்.

2002 இனப்படுகொலையின் போது பக்கத்து வீட்டை ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு தேசாயோ, படேலோ ‘அது சலீமின் வீடு’ என்பதைப் ‘பெருந்தன்மையுடன்’ மறந்துவிட முடியும். ஆனால் வீட்டைப் பறிகொடுத்து விட்டு, அதே ஊரின் அகதி முகாமில் கையேந்தி நிற்கும் ஒரு சலீம், தனது வீட்டை எப்படி மறக்க முடியும்? தான் புணர்ந்த சிறுமிகளின் உறுப்புகளையும், கொன்ற உடல்களின் முகங்களையும் ரிச்சர்டும், பாபு பஜ்ரங்கியும் (2002 இனப் படுகொலையின் போது தாங்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் பற்றி தெகல்காவிற்கு வீடியோ வாக்குமூலம் கொடுத்த கிரிமினல்கள்) மறந்துவிட முடியும். கொல்லப்பட்ட உடல்களின் உறவுகளும், உறுப்புகளின் உணர்வுகளும் எப்படி மரத்துவிட முடியும்?

மறக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் நீதி கேட்டு உச்சநீதி மன்றம் போகலாம். மனநோயாளி ஆகலாம். மருந்து குடித்துச் சாகலாம். ‘இந்தியன் முஜாகிதீன்’ ஆகலாம். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது வேறு விசயம். ஆனால் அவர்களால் ‘மறக்க முடியாது’ என்பதுதான் பொது அறிவுக்குக் கூடப் புலப்படும் உண்மை. ஆனால் குந்தவை போன்றோரால் மட்டும் புரிந்து கொள்ள முடியாத உண்மை.

ஐந்து வயது ஹீரோ தனது அப்பாவைக் கொன்ற வில்லனை ஞாபகம் வைத்திருந்து, அவனைக் கொல்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு, கிளைமாக்ஸ் காட்சியில் வெட்டிக் கொன்றால் அந்த ‘வெறி’ வெள்ளி விழா கொண்டாடுகிறது. என்ன செய்வது! நண்பன் தனக்கு இழைத்த அநீதியை ‘அண்ணாமலை’ மறக்கக் கூடாது. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் தனது கண் முன்னே மகளைக் கற்பழித்திருந்தாலும் அப்துல்லாவாக இருக்கும் பட்சத்தில் அவன் மறக்க வேண்டும்!

‘கோட்டா ஒழிக’ என்று இடஒதுக்கீட்டை எதிர்த்துக் குமுறி வெடித்த டெல்லி எய்ம்ஸ் மாணவர்களும் கூட மறக்கத்தான் சொல்கிறார்கள். “என்னுடைய கொள்ளுப்பாட்டனோ, எள்ளுப்பாட்டனோ எவனோ எப்பவோ யாருக்கோ செய்த அநீதிக்காக, அப்பாவிகளாகிய நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” என்று நியாயம் கேட்கிறார்கள். அந்த வரலாற்றைச் சொல்வதற்கு நமது வாய் திறப்பதற்குள், கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ‘நான்தான் எனது கொள்ளுப்பாட்டன்’ என்று தரிசனம் தருகிறார்கள்.

எனக்கொரு கிணறு, உனக்குத் தனிக்கிணறு; எனக்கொரு சுடுகாடு, உனக்குத் தனிச்சுடுகாடு; எனக்கு கிளாஸ், உனக்குக் குவளை; எனக்கு ஊர், உனக்கு சேரி.. ஆயினும் இந்துவே, தீண்டாமையை மறந்துவிடு! அப்சலுக்குத் தூக்கு, மோடிக்கு முதல்வர் பதவி – ஆயினும் மறந்துவிடு! சோம்நாத் ரதயாத்திரை முதல் மோடியின் கவுரவ யாத்திரை வரை அத்தனையையும் மறந்துவிடு!

சகோதரர்கள் சொத்துத் தகராறை மறந்து விட்டால், பங்காளிகள் வரப்புத் தகராறை மறந்து விட்டால், வங்கிக்காரன் கொடுத்த கடனை மறந்து விட்டால் இந்த நாடுகூட நீதிமன்றங்களையே மறந்து விடலாம். பணத்தை விட மலிவானவையா என்ன மானமும் உயிரும்? கைநீட்டி அடித்த புருசன் சும்மனாச்சிக்கும் ஒரு சாரி கூட சொல்லாவிட்டாலும், (அடித்ததையே நினைத்துக் கொண்டிருக்காமல்) அவனை அணைத்துக் கொள்ளும் மனைவிமார்கள் உண்டா, தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களிடம் அத்தகைய கற்புநெறியைத்தான் குந்தவை கோருகிறாரோ!

இந்து – முஸ்லிம், ஆர்.எஸ்.எஸ் – கம்யூனிஸ்டு என்ற முரண் எதிர்வுகளின் கருத்துமோதல் கிடக்கட்டும். தார்மீக உணர்வு தோற்றுவிக்கும் கோபத்தையும் கூட ஒதுக்கிவிடுவோம். குறைந்தபட்சம் பொது அறிவுக்குப் பொருந்தி வருகிறதா இந்த புத்திமதி?

ராமஜென்ம பூமி, தாஜ்மகாலில் சிவன் கோவில், ராமன் பாலம் என எதைச் சொன்னாலும் நம்ப வேண்டும். அதே ராமன் அதே இடத்தில் அந்த சமுத்திர ராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க ‘பொது நீர்நிலையில் தண்ணீர் எடுத்து தீட்டுப்படுத்திய தீண்டத்தகாத இழிமக்கள் மீது’ பாணம் போட்டு அழித்தான் என்கிறார் வால்மீகி. சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அதே வால்மீகி ராமாயணத்தின் அதே சருக்கத்தில்தான் இந்த ஆதாரமும் இருக்கிறது. ஆயினும் அதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. மறந்துவிட வேண்டும்.

‘மறக்கச் சொல்வதை மறக்க வேண்டும், நினைக்கச் சொல்வதை நினைக்க வேண்டும்’ என்று மனிதமனத்தை ஆட்டிப் படைக்க வேண்டுமானால் அது மாட்ரிக்ஸ் உலகில்தான் சாத்தியம். அதைத்தான் மோடியும் விரும்புகிறார்.

குஜராத்தின் பணவாடையை முகருங்கள், பிணவாடையை மறந்துவிடுங்கள் என்கிறார் மோடி. விதர்பாவை மறந்து விடுங்கள், பங்குச் சந்தையை நினைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் மன்மோகன். அபுகிரைபை மறந்து விடுங்கள், அதே சிறையில் நேற்று சதாம் நடத்திய சித்திரவதைகளை மட்டும் நினைவில் வையுங்கள் என்கிறார் புஷ்.

என்ன ஆச்சரியம்! குண்டு வைத்ததற்காகவும், வைக்க நினைத்ததற்காகவும் கைது செய்யப்படுபவர்களின் பெயர்கள் எல்லாம் இசுலாமியப் பெயர்களாகவே இருந்தும்கூட “இது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடுமோ’ என்ற சந்தேகம் சொல்லி வைத்தாற்போல யாருக்குமே வரவில்லை.

ஏனென்றால் இது சர்வதேச பயங்கரவாதமாம்! அமெரிக்காவில் வெடிக்கிறது, லண்டனில் வெடிக்கிறது, இராக்கில் வெடிக்கிறது, இங்கேயும் வெடிக்கிறதாம்!

இப்படி சர்வதேசங்களிலும் பயங்கரவாதிகளைத் தோற்றுவித்த சர்வதேச அகிம்சாவாதி யார்? பின்லாடனை உருவாக்கிய முன்லாடன் யார்? சர்வதேச பயங்கரவாதத்தின் தயாரிப்பாளராக சவூதி ஷேக்குகளைத் தயார்செய்த பைனான்சியர் யார்? பாகிஸ்தான் மதரஸாக்களுக்குத் தீவிரவாதப் பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்த வாத்தியார்கள் யார்?

அதையெல்லாம் கேட்கக்கூடாதாம். ஏனென்றால் இது பதிலி யுத்தமாம்! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிவீதம் ஏறிக்கொண்டே இருக்கிறதாம். ஐ.டி துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தைக் கண்டு டென்சனாகி பில் கேட்சுக்கே பி.பி ஏறுகிறதாம். இதையெல்லாம் பொறுக்க முடியாத வயிற்றெரிச்சலில்தான் பாகிஸ்தான் குண்டு வைக்கிறதாம்.

இதென்ன காப்டனின் வல்லரசு கதையைச் சுட்டா மா..திரி தெரிகிறதே என்கிறீர்களா? சுட்ட கதைதான். காப்டனின் கதையை மன்மோகன் சுட்டு, மன்மோகன் கதையை மோடி சுட்டு .. கிளைமாக்ஸ் காட்சியில் தீவிரவாதியைச் சுட்டு .. ஒரு வழியாகக் கதையை முடிக்கலாம் என்றுதான் முயற்சி பண்ணுகிறார்கள். முடியவில்லையே! ஏன்?

குந்தவை அவர்களே, ஒரிஜினல் வல்லரசு சொல்வதை ஒரே ஒரு முறையாவது காது கொடுத்துக் கேளுங்களேன்!

இராக்கில் பெண்கள் தற்கொலைப்படைப் போராளிகளாக மாறுவது அதிகரித்து வருகிறதாம். “பெண்கள் இப்படித் தற்கொலைப் படையில் சேருவதற்குக் காரணம் பழிவாங்கும் வெறி. அநேகமாக இவர்களெல்லாம் பெற்றோரையோ சகோதரர்களையோ பிள்ளைகளையோ பறிகொடுத்தவர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் இராக்கில் உள்ள பாக்குபா அமெரிக்கப் படைத்தளத்தின் கமாண்டர், கெவின் ரெயான்.

“பழிவாங்கும் வெறி என்பது ஒரு வலிமையான உந்து விசை. இதை பின் லாடனின் ஆட்கள் துல்லியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” – இது இராக் ராணுவ கர்னல் அலி அல் கார்க்கி யின் வாக்குமூலம். (டைம்ஸ் ஆப் இந்தியா, 02.08.08).
லஷ்கர் ஏ தொய்பா.. ஜிகாத்.. சர்வதேச பயங்கரவாதம்.. எல்லாம் உண்மைதான். யார் இல்லை என்றார்கள்? ஆனால் காம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி லஷ்கர் ஏ தொய்பாவில் எப்படியாவது பிளேஸ்மென்ட் வாங்கிவிட வேண்டும் என்பதற்காகப் பலர் முண்டியடிப்பதைப் போலவும், அவர்களையெல்லாம் அப்படியே கொத்தாக அமுக்கி பொடாவில் போட்டு விட்டால், பயங்கரவாதத்தை ஒரேயடியாக ஒழித்து விடலாம் என்பதாகவும் அத்வானி அண்டு கோ கூறிக்கொண்டிருக்கிறது.

மதரஸாக்களில் உருவாக்கப்படும் ஜிகாதிகளை அரசு பொடாவில் உள்ளே தள்ளலாம். ஏன், மதராஸாக்கள் மொத்தததையும் ரவுண்டப் பண்ணி பொடாவில் தள்ளி விடலாம். ஆனால் இந்துத்துவத்தின் சோதனைச்சாலையால் உருவாக்கப்படும் ஜிகாதிகளை எப்படிப் பொடாவில் போடுவது? காஷ்மீர் முதல் திருநெல்வேலி வரை அவர்களை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? அதைக் காட்டிலும் இந்துத்துவத்தை ரவுண்டப் பண்ணி உள்ளே தள்ளுவது புத்திசாலித்தனமில்லையா, குந்தவை அவர்களே!

அதாவது, நினைத்துக் கொண்டே இருப்பவர்களைத் தேடிப் பிடிப்பதை விட, மறந்து விடச் சொல்பவர்களை நோக்கி நமதுகவனத்தைத் திருப்பலாமே! இப்படிச் சொல்வதனால் தீவிரவாதி, கம்யூனிஸ்டு என்றெல்லாம் முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடாதீர்கள்.

இது கலப்படமில்லாத சுத்தமான பாரம்பரிய அறிவியல். “எரிகிறதை இழுத்தால் கொதிக்கிறது அடங்கும்” என்பது பழமொழி. பழமொழியைப் பொடாவிலும் போட முடியாது. என்கவுன்டரும் பண்ண முடியாது.

________________________________

  1. அற்புதமா எழுதறீங்க! மொடியின் இரண்டாவது வெற்றி (தொடர்ந்து) எப்படி நடந்தது என்று என் வட இந்திய நண்பரிடம் கேட்டேன். வியாபாரத்தை நல்ல நடத்த விடாரார் , பணம் பண்ணுவதே குறிக்கோள் குஜராத் வியாபாரிகளுக்கு என்றார். மீடியாவும் மிகவும் முயற்சி செய்தார்கள் (மொடியைத் தோற்கடிக்க) ஆனால் நடக்கக் கூடாதது நடந்தது சற்று கசப்பானது தான்.

    அபு கிரப்பில் நடந்ததுக்கு கண் துடைப்புக்காகவாது 4 பேர உள்ள தள்ளினாங்க. இங்கு அதுக்கு பதிலா பொது மக்கள் ‘மேல’ போராங்க. தன் குற்றத்தை உணர்ந்தவன் மனிதன். உணர மறுப்பவர் மொடி.

    எழுத்து டாப் கலாஸ். தொடருங்கள்.

  2. Isn’t this what we want….?
    THIS IS EXACTLY WHAT WE WANT…!
    can you ask for a better response…?
    YOU CANNOT BE MORE CONVINCING…!
    NO booms NO bangs STILL the nail is driven….
    CLEAR POLEMICS…..SANE POLITICS
    THIS IS A GUIDE ON RESPONSE TO MANY WHO WANTS TO USE IT
    Keep up the good work Vinavu.
    I expect Kundhavai and Periyar Critic to respond

  3. 2002ல் நடந்தது குறித்து நீங்கள் எழுதுங்கள்.மொகலாய படையெடுப்பில் நடந்ததிற்கு,இடிக்கப்பட்ட கோயில்களுக்கு பழி வாங்க,பழைய கணக்கைத் தீர்க்க பாப்ரி மசூதியை இடித்தோம் என்று அவர்கள் எழுதுவார்கள். இருவர் தர்க்கமும் ஒன்றுதான்,
    கால அளவுதான் மாறுபடுகிறது. 2002ல் குஜராத்தில் நடந்ததற்கோ அல்லது நூறாண்டுகள்
    முன்பு நடந்ததற்கோ இன்று பழிவாங்குகிறேன் என்று யாரையும் கொல்ல, பொதுச் செத்துக்களை சேதம் செய்ய, பிறருக்கு ஊறு விளைவிக்க யாருக்கும் உரிமை இல்லை.
    அதைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
    1979ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் தன் ஆதரவு அரசை நிறுவியது.
    அதுதான் முதல் தவறு. அதற்கு தொடர்ச்சியாக அமெரிக்கா-பாக் ஒத்துழைப்பில்
    இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பயிற்சி பெற்று, சோவியத் ஆதரவு அரசிற்கு
    எதிராக போரிட்டனர்.உங்கள் தர்க்கத்தின்படி மூலவினை சோவியத் செய்த
    செயல் என்றல்லவா கொள்ள வேண்டும். அதை வசதியாக மறைத்துவிட்டு
    எழுதுவீர்கள்.
    இந்த்துவம் இல்லாத பாகிஸ்தானில் ஏன் குண்டு வெடிக்கிறது, சூடானில் ஏன் இனப்படுகொலை நடக்கிறது,பாலஸ்தீனத்தில் ஏன் ஹமாஸும், PLO பிரிவும் மோதிக் கொள்கின்றன என்று கேட்டால் பதிலாக
    இந்தியா என்ற நாடு இருப்பதால்தான் குண்டுகள் வெடிக்கின்றன, இந்து என்ற மதம் இருப்பதே பழி வாங்கும் உணர்வை தூண்டுகிறது. எனவே இந்தியாவை
    ஜிகாதிகளிடம் கொடுத்துவிட வேண்டும், காஷ்மீரையும் அவர்களுக்கு கொடுத்துவிட
    வேண்டும், இந்துக்கள் இஸ்லாத்தினை ஏற்று கோயில்களை,தங்கள் வழிப்பாட்டுத்தலங்களை
    இடித்துத் தள்ள வேண்டும் என்று ‘தர்க்கபூர்வமாக’ நீங்கள் எழுதினால் நான் வியப்படையமாட்டேன்.

  4. தலிபான்கள் புத்தர் சிலைகளை இடித்தனர், இஸ்லாமியர அல்லாதோரை பாரபட்சத்துடன்
    நடத்தினர், துருக்கியில் ஆர்மினிய கிறித்துவர் இனஒழிப்பு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
    இதற்கெல்லாம் யார் சாரி சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் பிற மதத்தினர் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்குவீர்களா.

  5. அருமை, மிக அருமையான பதிவு…

    என்ன செய்வது, இப்படி பட்ட மக்களை மிடியாக்கள் முளை சலவை செய்கின்றன…

  6. ரவி – ஒரு சின்ன பதில். இது பழிவாங்கும் நிகழ்ச்சி என்ற வாதம் தான் இங்கு வைக்கபடுகிறது. எனவே கடைசியில் மொதிக்கொள்ளும் இருவரும் குருடனாகும் வாய்ப்பு தான் அதிகம். இரட்டை நிலைப்பாட்டை விட்டு சட்டத்தை மிதவாதிகள் அனைவரின் மீதும் பாரபட்ச்சமின்றி காட்டினால் தான் முதலில் கண்னை பரிகொடுத்தவனுக்கு நாம் செய்ய முயலும் கண் அறுவைசிகிச்சையின் (நஷ்ட்ட ஈடு)பலனை அனுபவிப்பான். தயவு செய்து இதில் சாதி சாயம் பூசாதீர்கள், ப்ளீஸ். அது மட்டுமல்ல இந்த பதிவில் உள்ள முக்கியமான கருத்து தவறுக்கு வருந்துங்கள் என்ற நல்ல கருத்தை பார்க்காமல் சொவியத் யூனியன், துருக்கியில் யார் மன்னிப்பு கேட்டார்கள் என்றால் பலரும் கண்களைப் பரிகொடுத்து குருடர்களாகத்தான் அலைவோம்.

  7. பழிவாங்குதலை நியாப்படுத்துகிறீர்கள்.
    அது உண்மையில் நியாயப்படுத்ப்பட வேண்டியதே.
    ஆனால் உண்மையில் நடக்கும் குண்டுவெடிப்புகள் அனைத்தும் பழிவாங்கும் படலங்கள் அல்ல.
    முஸ்லிம்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதற்கு பழி வாங்க ஆரம்பித்தால் நாட்டில் குண்டுச்சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் கேட்காது.

    முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த பரிவாரங்கள் மேலும் மேலும் அவர்களை முற்றாகத் துடைத்தெறிய செய்யும் சதிகளே இவை.

    முஸ்லிம்களையே குண்டுவைத்து கொன்று விட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீதே போட்டு அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் முறைகளில் ஒன்றுதான் இந்த குண்டுவெடிப்புகள்.

    நிச்சயம் இது தொடரும் ஆனால் தொடர்பவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களாக இருக்கமாட்டார்கள்.

  8. முற்போக்கின் முகமூடி அணிந்த இந்துத்துவ எழுத்துவன்முறை தமிழ்வலையுலகில் தன் கோரத்தை அழகு என்று ஆர்ப்பரித்த போது எரிவதைப் பிடுங்கினாலே கொதிப்பது அடங்கும் என்று நானும் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக இதை உணர விரும்பாத ஆளும் வர்க்கமே தீவிரவாதத்தின் தொடர்ச்சிகளுக்கு பொறுப்பாகும். இந்துத்துவம் நீர்த்துப்போவதில் தான் இந்தியாவின் அமைதி இருக்கிறது என்பதுவே நிஜம்.

    பதிவுக்கு நன்றி.

  9. LOOK at your back yard,
    law college- 2000 years of depression?
    Mind this-this mumbai incedent not going to stop
    World policy makers(who ?) won’t let india to stand on his foot
    May be another 25 year india wouln’t be india
    until lthen it will continue

    araon a
    TORONTO, canada.

  10. Dear Vinavu,
    Please write your article generaly. Do not include religion. Both congress and BJB receving money from Muslim countries to do mass crimes in India. So you need to blame peolple only. They should understand there is no relegion, all we are here to live our life peacefully. Simply if you hear that someone burn Kuran people start killing and creating scene. Let them burn Kuran or Bagavathgeetha or bible. You express kindness, you provide love to everyone. Why unnecesaaryly goping behind the religion. Only leaders getting benefit of religion. You beggers will fight in kashmir, iraque and also in internet. Hindus will madly ask rama temple as if it is going to serve poors in the nation. Muslims will ask masjid to serve human community. They said muslims as minority, but they became majority in many states. the day will come they will start ruling us and they will tell not to eat outside during ramadan. you hindu guys will have keep moth shut up during that times. Do one thing start killing everybody let us have only one religion either muslim or hindu. Why unnecessaryly two religion. Good or bad only one we need. atleast after you finishin killing ther will be some peace in the world.

  11. சதாம் கொன்று குவித்தது அப்பாவி பொதுமக்களை,அதுவும் சொந்த நாட்டு மக்களை…அபு கிரப் சிறையில் அமெரிக்கா சித்திரவதை செய்தது என்ன அப்பாவிகளயா?அடுத்தவன் கழுத்தை கத்தியால் அறுக்க அலையும் தீவிரவாதிகளை தானே…இதில் என்ன தவறு இருக்கிறது…

  12. இஸ்லாம் வந்ததே காபிர்கள் மீது ஜிஹாத் செய்யத்தான். காபிர்களை முஸ்லிம்களாக்கி, முஸ்லிமாகாத காபிர்களை அடிமையாக்குவதுதான் திருக்குரான் சொல்லும் நீதி. அதைத்தான் சவூதி 20 லட்சம் காபிர்கள் மீது செய்கிறது.

    1400 வருடங்களுக்கு முன்பு, புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து பிராமணர்கள் கிட்டத்தட்ட 2500 வருடங்களாக சிலைவணக்கம் செய்து வந்தனர். அந்த குறைஷிக்கள் எனும் பிராமணர் குலத்தில்தான் பெருமானாரை(ஸல்) அல்லாஹ் படைத்து ஏகத்துவ கொள்கையை எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டான்.

    அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டது. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.
    1940ல் இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் காபிர்கள் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி காபிர்களின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் காபிர்களால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.

    ஒன்று மட்டும் நிச்சயம். முஸ்லிம்கள் இரூக்கும் வரை காபிர்களால் நிம்மதியாக வாழவே முடியாது. பாரதமாதாவுக்கு புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பும் வரை முசல்மானுக்கும் நிம்மதி கிடையாது. ஆக ஹிந்துக்களும் முஸ்லிம்களூம் நிம்மதியாக வாழவேண்டுமானால், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவை பிரித்து 30 கோடி முசல்மான்களுக்கு இஸ்லாமிஸ்தானாக தந்து விடவேண்டும், அப்புறம் உங்களூடைய தூய ஹிந்து ராஷ்டிரத்தில் 3500 மேல்ஜாதி கீழ்ஜாதி ஹிந்துக்கள் எந்தையும் தாயுமாக, அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக கொஞ்சி குலாவி மகிழ்ந்தாலும் சரி, அடித்துக்கொண்டு செத்தாலும் சரி. உங்கள் வழி உங்களுக்கு , அவர்கள் வழி அவர்களுக்கு. “குல்யா அய்யுஹல் காஃபிரூன்”.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க