privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை!!

பெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை!!

-

பெண்ணாடம் பாரத்
படுகொலை செய்யப்பட்ட மாணவன் பாரத்

பெண்ணாடம் நகரத்திற்கு தெற்கில்,அரை கிலோமீட்டர் தூரத்தில்,மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வெளியில், கரும்புத்தோட்டங்களின் நடுவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம். வேறு எங்கும் இல்லாத அதிசயமாக நாலாபுறத்திலும் சுற்றுச்சுவர். சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தின் ஒரு மூலையில் அரசினர் ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி.மொத்தத்தில் விடுதியில் வேலை செய்யும் கொள்ளைகாரர்களின் மர்ம பங்களா இது!

இங்கு 02.09.2010 அன்று பகல் 12 மணி வாக்கில் பத்தாம் வகுப்பு மாணவன் பாரத் விடுதியில் இறந்து விட்டதாக நகரில் செய்தி பரவியுள்ளது. இச்செய்தி எரப்பாவூரில் இருந்த மாணவனின் பெற்றோருக்கும்,உறவினர்களுக்கும் கிடைத்து விடுதிக்கு ஓடி வந்துள்ளனர்.அங்கே இருந்த சமையல்காரர்கள் ராமச்சந்திரன் மற்றும் செல்வராசு ஆகிய இருவரும் சமையல் வேலை செய்து கொண்டே மேலே பிணம் கிடப்பதாக மிகவும் அலட்சியமாக கூறியுள்ளனர்.அப்போது விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜன் அங்கு இல்லை.அவர் 12 மணிவாக்கிலேயே போலிஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டார்.

பின்னர் பெற்றோரும்,உறவினர்களும் 1 மணி அளவில் போலிஸ் நிலையம் சென்றபோது அங்கு விடுதிக் காப்பாளரும்,போலிஸ்காரர்களும் சிரித்து பேசி கும்மாளம் அடித்துள்ளனர்.பெற்றோர் புகாரின் மீது போலிசார் எவ்வித அக்கரையும் செலுத்தாததாலும்,குற்றவாளியுடன் போலிசின் இணக்கமான போக்கையும் கண்ட மக்கள் 2 மணிவாக்கில் பெண்ணாடம் நகரில் சாலைமறியல் செய்துள்ளனர்.இதன் பின்னர் தான் விடுதிக்காப்பாளரும்.போலிசாரும் விடுதிக்கு வந்துள்ளனர்.அப்போது போலிஸ்காரர்களுக்கு சமையல்காரர்கள் டீ கொடுத்து உபசரித்துள்ளனர்.

இதன் பின்னர்தான் வட்டாட்சியர்,கோட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.விடுதிக் காப்பாளரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.பள்ளி,விடுதி ஆகிய இடங்களில் உள்ள வருகைப் பதிவேட்டில் மாணவன் பாரத்தின் வருகை பதிவிடத்தில் வெள்ளை பூசி அழித்திருப்பதை கண்ட கோட்டாட்சியர் அதிச்சியடைந்து அனைவரின் கண் முன்னாலேயே விடுதிக்காப்பாளரை பார்த்து “கொலையும் செய்து விட்டு,வருகை பதிவேட்டையும் திருத்தியுள்ளீர்களே” என் சாடிவிட்டு விடுதிக் காப்பளரை அடிப்பதற்கு கையை ஓங்கியுள்ளார்!

இதன் பின்னர் சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் சமரசப்பேச்சு,சந்தேக மரணம் என 174/3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு,விடுதிக்காப்பாளர்,சமையல்காரர்கள் கைது ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலிசின் வெளிப்படையான நடவடிக்கைகள்,சாலைமறியல் செய்தவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்போவதாக மிரட்டல்,அரசியல் கட்சிகளின் சமாதானம் ஆகியவைகளுக்கு பின்னர் மலை 5.30 மணிவாக்கில் மக்கள் சாலை மறியலை கைவிட்டுள்ளனர்.

பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் தெரியாமலேயே மாணவன் பிணத்தை ஊரின் பின்புற வழியாக கடத்திச்சென்ற போலிசு,விடுதிக்காப்பாளருக்கு சேலைக்கட்டி அழைத்துச்சென்றுள்ளது.அன்று இரவு 12 மணிவாக்கில் மாணவனின் பெற்றோரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததற்கான நகலை தந்துவிட்டு பிணம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருப்பதாக கூறிச் சென்றுள்ளனர். இதை நம்பிய பெற்றோரும்,உறவினர்களும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.மாணவனின் பிணம் அங்கு இல்லாததை கண்டதும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அங்கு மாணவனின் பிணம் இருந்துள்ளது.இப்படி வேண்டும் என்றே அவர்களை அலையவிட்டுள்ளது போலிசு.

தடியடி நடத்துவதற்கு தேவையான அளவிற்கு போலிசை குவித்துக்கொண்டுதான் மாணவனின் பிணத்தை பெற்றோரிடம் தங்துள்ளனர்.போலிசின் இந்த ஒரு நடவடிக்கையே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை காட்டிவிட்டது.அதிகாரிகளும்,பத்திரிக்கைகளும் இதை தற்கொலை என்று மூடிமறைக்க பார்க்கிறார்கள்.ஆனால் உன்மையோ நடந்தது கொலை தான் என்கிறது.நடந்த சம்பவங்களை நங்கள் தொகுத்துத் தருகிறோம்.நடந்தது கொலையா.தற்கொலையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு முன் தனது வீட்டுக்கு சென்ற மாணவன் “விடுதியில் வார்டனும்,சமையல்காரர்களும் என்னை அடிக்கின்றனர், பள்ளியில் வார்டனின் உறவினர் தையல்நாயகி டீச்சர் அடிக்கிறார், ஆகவே நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன்” என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். பையனின் பெற்றோரும் பெரியப்பாவும் சமாதானப்படுத்திதான் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர். பள்ளிக்கூடம் சென்ற மாணவனை தையல்நாயகி அடித்து வெளியே துரத்தியுள்ளார்.

மாணவன் பாரத் ஆறாம் வகுப்பில் இருந்தே இந்த விடுதியில் தான் தங்கி படித்துள்ளார்.இப்போதுள்ள விடுதி காப்பாளருக்கு முன் இருந்த காப்பாளரிடம் சமையல்காரர்களின் திருட்டுத்தனத்தையும்,பெண்களை அழைத்து வந்து கும்மாளம் போடுவதையும்,சாராயம் குடிப்பதையும் பற்றி முறையிடும் போது அவரும் சமையல்காரர்களை கண்டித்து வந்துள்ளார்.அதன் பின் வந்துள்ள தற்போதைய விடுதிக்காப்பாளர் சுந்தர்ராஜன் சமையல்காரர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவன் பாரத்தை பலமுறை அடித்தும்.,மிரட்டியும் வந்துள்ளார்.

இதனால் தனக்கு பலம் சேர்ப்பதற்காக இந்திய மாணவர் சங்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு,அச்சங்கத்தை விடுதியில் கட்டுவதற்கு பாரத் முயன்றுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த விடுதிக் காப்பாளர் தான் மட்டுமல்ல, தனது உறவினர் தையல்நாயகியையும் பயன்படுத்தி மாணவனுக்கு நெருக்கடி தந்துள்ளான்.சம்பவதினத்தன்று கூட மாணவனை கடைவீதியில் வைத்தே தலையில் கொட்டியுள்ளான்.

பள்ளியில் இருந்து தையல்நாயகியால் வெளியில் துரத்தப்பட்ட மாணவன் பாரத் விடுதிக்கு வந்துள்ளான்.நண்பகல் 11.15 வாக்கில் பள்ளி இடைவேளையின் போது பல மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக விடுதிக்கு வந்துள்ளனர்.இப்படி வருவது மாணவர்களின் அன்றாட நிகழ்வாகும்.ஆனால் அன்றைய தினம் மாணவர்களை உள்ளே வரவிடாமல் சமையல்காரர்கள் இருவரும் விரட்டியுள்ளனர். இதன் பின்னர் 12 மணி அளவில் தான் பெண்ணாடம் நகரம் முழுக்க மாணவன் இறந்த செய்தி பரவி பொதுமக்கள் விடுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது சமையல்காரர்கள் இருவரும் சிரித்துப் பேசி சமைத்துள்ளனர்.பொது மக்கள் மாணவன் எங்கே என்று கேட்டபோது ”மேலதான் கிடக்கரான் போயி பாருங்க” என்று எவ்வித நெருடலும் இல்லாமல் கூறியுள்ளனர்.இந்த நேரத்தில் விடுதிக்காப்பாளர் போலிசு நிலையத்தில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏன் என்றால் 11.15மணிக்கு மாணவர்களை கண்டு மிரண்ட சமையல்காரர்கள் 12 மணி வாக்கில் மிகவும் தைரியமாக பேசியுள்ளனர்.பொது மக்கள் மாடிக்கு சென்று பார்த்த போது மாணவன் உடல் தரையில் கிடந்துள்ளது.அதன் அருகில் சமையல்காரன் ஒருவனின் துண்டும் கிடந்துள்ளது. இந்த துண்டில் தான் மாணவன் சன்னலில் துக்குமாட்டிக்கொண்டதாக கூறியதன் மூலம் கேழ்வரகில் நெய்வடிகிறது நம்புங்கள் என்று இந்த கயவாளிகள் கூறியுள்ளனர்.

பெண்ணாடம்
5 அடி உயர மாணவன் தூக்கில் தொங்கியதாக சொல்லப்படும் 4.5 அடி உயர சன்னல்

தரைக்கும் சன்னலுக்கும் இடையில் உள்ள தூரம் இரண்டரை அடி,சன்னலின் உயரம் நான்கு அடி மொத்தம் ஆறரை அடி.துண்டின் நீளம் இரண்டு அடி,துண்டில் தூக்கு போட்டிருந்தால் ஒன்றரை அடி நீளம் சுருக்கு போடவே சரியாகிவிடும்.எஞ்சிய அரைஅடியில் சன்னலில் முடிச்சுப் போட முடியுமா?.சரி குதிரைக்கு கொம்பு முளைத்ததாகவே நம்புவோம்!.மொத்த உயரம் ஆறரை அடி பையனின் உயரம் ஐந்து அடி சன்னலில் தூக்கு போட்டிருந்தால் கழுத்துச்சுருக்குக்கும் சன்னலுக்கும் போட்ட முடுச்சுக்கும் இடையில் ஒரு அடியில் இருந்து ஒன்னரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் தான் சன்னலில் முகம் படாமல் சுருக்கை கழுத்தில் மாட்ட முடியும்,அப்படி மாட்டி இருந்தால் பையனின் கால் தரையிலேயே பதிந்திருக்கும்.தரையில் கால் பதிந்திருக்கும் போதே துக்குப்போட்டு சாக முடியுமா என்பதை,இதை தற்கொலை என்று கூறுபவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

சரி இப்போதும் நாம் நமது மூளையை கீழே கழற்றி வைத்து விடுவோம்!அந்த கத்தி போல் உள்ள சன்னலில்தான் மாணவன் தூக்குப்போட்டுக் கொண்டான் என்றால் பையனின் முகம்,சன்னலில் உராய்ந்து கடுமையான காயங்கள் எற்பட்டிருக்கும்.தூக்குமாட்டிக்கொண்டவனின் கால் மூட்டு கடுமையாக சுவற்றின் விளிம்பில் உரசி கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கும்.ஆனால் மாணவனின் முகம் மற்றும் கால் மூட்டில் சிறு உராய்வு கூட இல்லை.ஆனால் போலிசும்,பத்திரிக்கைகளும் இதை தற்கொலை என்று தான் சாதிக்கிறார்கள்.

இதற்கடுத்து மாணவன் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படும் இடத்திற்கும்,சமையல் கூடத்திற்கும் இடையே தெளிவாக பார்க்கும் வகையில் திறந்தவெளி உள்ளது.மாணவன் துக்குமாட்டிக்கொண்டு இருந்தால்,அங்கு பணியில் இருந்த சமையல்காரர்களுக்கு சத்தம் கேட்காமல் இருந்திருக்காது.அப்படி கேட்டிருந்தால் சமையல்காரர்கள் மாணவனை காப்பாற்ற ஏன் முயற்சிக்கவில்லை?

சரி, காப்பற்றுவது கிடக்கட்டும்.குறைந்தது ஒரு சாவு என்ற அடிப்படையில் அதிலும் தாங்கள் பணிபுரியும் விடுதியின் மாணவன் என்ற அடிப்படையிலாவது மாணவனின் சாவு அவர்களுக்கு துக்கத்தை தாரதது ஏன்?மாணவனின் சாவு காப்பாளருக்கும்,சமையல்காரர்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது எதனால்?இவர்களின் இப்படிப்பட்ட செயல்களே மாணவன் உடனான இவர்களின் பகையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

இறந்த மாணவன் பத்தாம் வகுப்பு படிப்பவன்.சிறுவயதில் இருந்தே அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவன்.தனது எதிரிகளைப் பற்றி தனது பெற்றோர்களிடமும்,உறவினர்களிடமும் கூறிய மாணவன்,தற்கொலைச் செய்வது என்று முடுவு எடுத்திருந்தால் அதைப்பற்றி நிச்சயம் ஒரு கடிதமாவது எழுதியிருப்பான் ஆனால் அப்படி ஒரு கடிதம் அவன் எழுதவே இல்லை.

ஆக மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் வைத்துப்பார்க்கும் போது நடந்தது தற்கொலையில்லை,கொலைதான் என்ற முடிவுக்கு வாராமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை!

ஆகவே விடுதிக் காப்பாளரும்,சமையல்காரர்களும் நன்கு திட்டமிட்டு தான் இந்தக் கொலையை செய்துள்ளனர்.ஏழையின் குரல் அம்பலம் ஏறாது. நாம் போராடாமல் நீதி கிடைக்காது!

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதியில் திருடுவது,தமது உரிமை என கருதுபவர்கள். அப்படி செய்வதற்காகவே குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து,போட்டியிட்டு இந்த பொறுப்பிற்கு வந்தவர்கள்.திருடுவதும்,திருடியதை தமது மேல் அதிகாரிகளுக்கு மாதா,மாதம் கப்பம் கட்டுவதும்தான் இவர்களின் திமிருக்கான,தைரியத்திற்கான அடிப்படைகளாகும்.இனிமேலும் இவர்கள் இப்படிதான் இருப்பார்கள்!

ஆகவே நம்து பிள்ளைகள் இப்படிப்பட்ட விடுதிகளில் தங்கி படிக்க வேண்டும் என்றால்,இந்த கழிசடைகளை எதிர்த்து போராடி இவர்களின் திமிரை நாம் அடக்க வேண்டும்.அது முடியாவிட்டால் நாம் நமது பிள்ளைகளை சூடுசொரணை அற்றவர்களாக,மானம் கெட்டவர்களாகத்தான் வளர்க்க வேண்டும்.இதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.நீங்கள் எதை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்!

________________________________________________________
–    தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம்.
________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. பெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை!! | வினவு!…

    நாலரை அடி சன்னலில் ஐந்து அடி மாணவன் தூக்கில் தொங்க முடியுமா? தற்கொலை அல்ல, இது திட்டமிட்டு நடந்த படுகொலை! ஏழையின் குரல் அம்பலம் ஏறாது போராடாமல் நீதி கிடைக்காது!…

  2. ///ஆகவே நம்து பிள்ளைகள் இப்படிப்பட்ட விடுதிகளில் தங்கி படிக்க வேண்டும் என்றால்,இந்த கழிசடைகளை எதிர்த்து போராடி இவர்களின் திமிரை நாம் அடக்க வேண்டும்.அது முடியாவிட்டால் நாம் நமது பிள்ளைகளை சூடுசொரணை அற்றவர்களாக,மானம் கெட்டவர்களாகத்தான் வளர்க்க வேண்டும்.இதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.நீங்கள் எதை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்!///
    parents should protest against this bloody murder

  3. ///மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் வைத்துப்பார்க்கும் போது நடந்தது தற்கொலையில்லை,கொலைதான் என்ற முடிவுக்கு வாராமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை///
    போராடுவோம் நீதி கிடைக்கும் வரை

  4. உச்சி வெயிலும்
    பொளக்காத
    என் மண்டையில
    அந்நேரம்
    இடி வந்து எறங்கியதே!

    என் உசுரு என்ன விட்டு
    போயிருச்சே!
    பெத்து பாத்த
    ஒம்மொகத்த
    செத்து எப்படி
    நான் பார்ப்பேன்!

    பதினஞ்சு வயசு புள்ளைக்கு
    தற்கொலைனா
    என்னனென்னும்
    அத செய்யுறது
    எப்புடினும்
    எப்புடியா தெரியும்?

    புழுத்த அரிசி சோத்த
    தின்னு செமிக்கும்போதே
    தற்கொலைக்கு
    தன்ன ஒப்புவிச்சவன்
    மறுபடியும் எப்புடியா
    தற்கொலைய
    செஞ்சிருப்பான்?

    இந்த மடசிருக்கி
    பரம்பரையில
    எல்லாரும்
    கலக்டரு உத்தியோகமா
    பாத்தாக?
    போகமாட்டேன்னு
    சொன்ன புள்ளைய
    திரும்ப அனுப்பிவச்சேன்

    சித்தாளு வேலைக்கு
    சேத்துவிட்டாவது
    நாலு நல்ல கறி
    ஆக்கிப் போட்டிருப்பேனே!

    களவாணித்தனம்
    செய்யவும்,
    குடிச்சிக் கூத்தடிக்கவும்,
    பொம்பளைய பொறுக்கித் திரியவும்
    பள்ளிகூட விடுதி
    எடமில்லன்னு போராட
    சங்கம் கட்டிய
    என் தங்கமே! உசுரே!

    பாவிங்க
    உன் கழுத்த நெரிச்சு
    மூச்சு முட்டயில
    அம்மாவை நெனச்சிருப்பியே!
    அந்தக் கன
    நெனப்பு வந்து
    என்ன சேரலியே!

    தானா
    தூக்கு மாட்டிக்கிட்டானாம்
    பிரச்சனை ஏதும் பன்னினா
    துப்பாக்கியால சுடுவானாம்!
    மிரட்டிப்பாக்குறான்
    போலிசு!

    அநியாயத்துக்கு
    சாட்சியமா
    எம்புள்ள செத்துக்கெடக்கான்
    உன் அராசகத்துக்கு
    சாட்சியமா
    சாவதுக்கு எனக்கென்ன?

    நல்ல சாவு வராதுடா
    பாவிகளே
    மண்ணைவாரி தூத்துறேன்
    நாசமாபோயிடுவீங்கடா!

    பெத்த வயிறு எரியுதே!
    கேக்குற உங்க நெஞ்சு
    கொதிக்கலையா?!

  5. நிச்சயமாக அந்த கொலையாளிகளின் முகத்திரை கிழிக்கப்படுவதோடு நில்லாமல் அனைவரையும் நடுரோட்டில் பொதுமக்களின் முன்னர் தூக்கிலிட வேண்டும் (அவர்களுடைய பாணியில் தற்கொலை செய்விக்க வேண்டும்). 15 வயது நிரம்பிய அந்த தம்பியினை வைத்து அவனின் பெற்றோர் கட்டிய மனக்கோட்டைகளை எல்லாம் தவிடு பொடியாக்கிய பாவிகள் நிச்சயமாக தண்டிக்கப் பட வேண்டும்.
    வேதனையுடன்
    ரஃபீக்.

  6. விடுதிகஅளில் அரிசி,பருப்பு போன்ரறவற்றை கொள்ளையடிட்த கும்பல் இன்று கொலைகலள் செய்ய தொடங்கிவிட்தா?

  7. VERY PATHETIC DEATH ; MY DEEPEST CONDOLENCES TO THE PARENTS OF THE CHILD;.

    Please ensure that justice is ensured ; It is disheartening to note that only dalits are employed in such hostels as cooks and wardens presuming that they’ll take care of these downtrodden in a better way.

    And these people are proving worse than their caste enemies…

  8. நடுத்தர வர்க்க குடும்ப குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளின் கல்விக்கொள்ளைக்கு எதிராக குரல் கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் பத்திரிக்கைகள் ஏழை குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக்கூடங்களில் நடக்கும் கொலை,கொள்ளைகளை கண்டுகொள்வதில்லை. நடுத்தர வர்க்க பிரச்சனைகளை ஆய்வுக்குட்ப்படுத்துவோம்,ஏழை மக்கள் பிரச்சனை என்றால் ஊத்திமூடுவோம் என்ற மோசமான செயலை செய்கிறது. கொலைகுக்காரணமானவர்களான அரசு,போலீசு,பள்ளிநிர்வாகம் என்ற வரிசையில் தன் சுயலாபத்தை பார்க்கும் பத்திரிக்கைகளுக்கும் பெரும்பான்மையயான பங்குண்டு என்பதை நாம் அறிந்து போராடாத வகையில் இன்னும் பல பாரத்துக்கள் கொள்ளப்படுவதை தவிர்க்க இயலாது. ( தக்க தருணத்தில் சரியாக ஆய்வு செய்து செய்தி வெளியிட்ட வினவிற்க்கு நன்றி. பாரத்தின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்,அநீதிக்கு எதிராக போராடி மாண்ட பாரத்திற்க்கு எனது வீரவணக்கம்) நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க