privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பிரசாத லட்டு கூட 'அவா' தான் பிடிக்கணும் - உயர்நீதிமன்ற தீர்ப்பு !

பிரசாத லட்டு கூட ‘அவா’ தான் பிடிக்கணும் – உயர்நீதிமன்ற தீர்ப்பு !

-

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்

பார்ப்பன சாதியை சேராதவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும்; சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறி, திமுக அரசு 2006ஆம் ஆண்டில் தொடங்கிய அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஒன்றரை ஆண்டுகாலம் பயிற்சி பெற்ற 207 மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என மதுரையைச் சேர்ந்த பார்ப்பன பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற இம்மாணவர்களை ‘அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்’ என சங்கமாக திரட்டியது மனித உரிமைப் பாதுகாப்பு மையம். உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று இச்சங்கத்தையும் ஒரு தரப்பினராக வழக்கில் இணைத்ததோடு பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உடனிருந்து வழிகாட்டி வருகிறது மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

1970இல் பொரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971ல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வந்தது திமுக அரசு. இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்; ‘அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமையைக் கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்’ என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ‘அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உயர்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியது. ‘இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும்’ என்று கூறி, சாதியையும், ஆலயத்தீண்டாமையையும் அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். 1972இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அடிப்படை மத உரிமை கூட இல்லாத பார்ப்பன இந்து மதத்தில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் பார்ப்பனமயமான மற்றொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.

பிரசாத லட்டு கூட ஆவா தான் பிடிக்கனும்
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.

பார்ப்பனரல்லாதோர், கோயிலில்; மணியாட்டினால் பூசை செய்தால் கடவுள் சிலையைவிட்டு வெளியேறிவிடுவார் என்று உச்சநீதிமன்றமும், பார்ப்பனரல்லாதோர் பிரசாதம் செய்தால், தண்ணீரெடுத்து சிலையை குளிப்பாட்டினால் இந்துமத உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது.

இத்தனை நடக்கும்போதும் சாதியா? அது பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது குழந்தைகளிடம் கேட்பதனால்தான் உருவானது என்பதுபோல் பார்ப்பன புரட்டையும் வெட்கமில்லாமல் பேசித்திரிகின்றனர் பார்ப்பன மற்றும் ‘கருப்பு’ அம்பிகள்.

இத்தகைய பார்ப்பன மயமான தீர்ப்பை வழங்கும் நீதிபதி நேர்மையானவராக, பார்ப்பனர் அல்லாதவராக இருந்தால் சரியான தீர்ப்பை வழங்கிவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையை இந்த தீர்ப்பு சாட்டையால் அடிக்கிறது. ‘காசு வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதினார்’  என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதவர் நீதிபதி சுகுணா! ஆனால், பிரச்சனை நீதித்துறை காவி மயமாக இருப்பது, நீதிபதி பார்ப்பன ஆதரவாளராக இருப்பது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்துக்கள் 13, 15 மற்றும் 26 ஆகியவை இந்து மதத்தின் தீண்டாமை, பிற்போக்குதனம், சாதி ஒழிப்பு என்பதை ஊறுகாய் போல தொட்டுவிட்டு, மதம் என்பது என்ன? சாதி என்பது என்ன? இந்து மதத்தின் சாதி தொடர்வது ஏன்? மதச்சார்பின்மை என்பது என்ன? என்பதையெல்லாம் விளக்காமல் சாதுர்யமாக பழைய கழிவுகளை கரண்டியில் அள்ளிப் பானையில் போட்டு பொங்கல் வைத்து சமத்துவம் பேசுகிறது ‘அரசியலமைப்புச் சட்டம்’. நீதித்துறை அதற்கு மகுடம் சூட்டுகிறது.

அதன் லட்சணம்தான் இன்று பல்லிளிக்கிறது. இந்துமத பழக்கவழக்கத்தின்படி, லட்டு, புந்தி கூட ‘அவா…’ செஞ்சாத்தான் லோகம் ஷேமமா இருக்கும்னு உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடிகிறது.

செயலாளர்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
சென்னைக் கிளை

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்