privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!

கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!

-

கே.ஜி.கண்ணபிரான் (1929 -2010) மனித உரிமைகளுக்கான போரின்  கலங்கரை விளக்கம்!
கே.ஜி. கண்ணபிரான். 1929-2010

அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கடந்த நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த முதுபெரும் மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான், நீரழிவு நோயினால் கடந்த டிசம்பர் 30 அன்று தனது 81-வது வயதில் காலமாகிவிட்டார்.

1960-களின் தொடக்கத்தில் ஆந்திர உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கிய கண்ணபிரான், ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தில் (APCLC) 15 ஆண்டுகளாகத் தலைவராகவும், பத்தாண்டுகளாகக் குடியுரிமைக்கான மக்கள் கழகத்தின் (PUCL) அனைத்திந்தியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தள்ளாத வயதிலும் தற்போது அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

1973-இல் தொடங்கப்பட்ட ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்தான் கண்ணபிரான். 1975-இல் இந்திராவின் அவசரநிலை பாசிச ஆட்சிப் பிரகடனப்படுத்தப்பட்டுப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில், கொடிய “மிசா” சட்டத்தை எதிர்த்து கண்ணபிரான் நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராட்டம் நடத்தினார். அவசரநிலை பாசிசத்துக்கு எதிரான முதல் சட்டரீதியான போராட்டமும் இதுதான். அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் ஆந்திராவின் நக்சல்பாரிப் புரட்சியாளர்களான தோழர்கள் பூமையா, கிஸ்த கவுடா ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர்கள் அரசியல் கைதிகள் என்பதால் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென சட்டரீதியாக மனு செய்து நீதித்துறையிடம் போராடினார். இப்பாசிச ஆட்சிக் காலத்தில்  சிறையிடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் மற்றும் சாமானிய மக்களுக்களின் விடுதலைக்காக அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் நடந்த போலீசின் மோதல் படுகொலைகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட தார்குண்டே கமிசனில் கண்ணபிரான் முன்னணிப் பாத்திரமாற்றினார். இப்படுகொலைகள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்கவா கமிசனில் கண்ணபிரான் வாயிலாக ஆதாரபூர்வமான உண்மைகள் செய்தித்தாள்களில் வெளிவரத் தொடங்கியதும், பீதியடைந்த அப்போதைய ஆந்திர முதல்வரான வெங்கல்ராவ், இந்த விசாரணையை இரகசியமாக நடத்தும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கண்ணபிரானும் ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகமும் இந்த விசாரணையில் பங்கேற்காமல் புறக்கணித்து, இம்மோதல் படுகொலையின் பின்னேயுள்ள பாசிச அரசியலை அம்பலப்படுத்திக் காட்டினர்.

1980-களில் ஆந்திராவில் நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கம் தெலுங்கானா பகுதியில் முன்னேறியபோது, அவற்றை ஒடுக்க மோதல் படுகொலைகளை போலீசு தீவிரப்படுத்தியது. போலீசின் இரகசிய கூலிப்படைகளால் புரட்சியாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வந்த இருண்ட காலம் அது. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழல் நிலவிய அக்காலத்தில், போலீசு பயங்கரத்துக்கு எதிராகத் துணிவோடு  கண்ணபிரான் தொடர்ந்து போராடினார். விசாரணைகள் மூலமும் வழக்குகள் தொடுத்தும் இப்படுகொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். 1997முதல் 2007 வரை ஆந்திராவில் 1800 மோதல் படுகொலைகள் நடந்துள்ளதை ஆதாரங்களுடன் அவர் அம்பலப்படுத்தியதால்,  இப்படுகொலைகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், சுயேச்சையான நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றும் ஆந்திர உயர் நீதிமன்றம் கூறியது. இது, போலி மோதல் படுகொலைகளுக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டத்தின் முக்கியமானதொரு வெற்றியாகும்.

போலீசின் பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான நக்சல்பாரி புரட்சியாளர்களின் நியாயமான போராட்டங்களையும் சமப்படுத்தி, இரண்டையும் “வன்முறை” என்று கூறும் சில மனித உரிமை அமைப்புகளின் போலித்தனமான ‘நடுநிலைக்கு’ மாறாக, அரசு பயங்கரவாதத்தை முதன்மை எதிரியாக அவர் உணர்த்தினார். “மக்களின் நல்வாழ்வுக்காகவும் சமத்துவத்துக்காகவும் மாவோயிஸ்டுகள்  உள்ளிட்டு பலதரப்பட்ட இயக்கங்கள் போராடி வருகின்றன. இவற்றுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமேயன்றி, இதைச் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகப் பார்த்து, போலீசுக்கும் உளவுத்துறைக்கும் எல்லையற்ற அதிகாரத்தை வழங்கி வன்முறைகளில் ஈடுபட அரசு  அனுமதிப்பதும், கிரிமினல் சட்டங்களை ஏவி அரசியல் இயக்கங்களை ஒடுக்குவதும் நியாயமென்றால், நமது ஜனநாயகத்தின் பொருள்தான் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

முற்போக்கு – ஜனநாயக இயக்கங்களின் மீது அரசால் சோடிக்கப்பட்ட சதிவழக்குகளையும், ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளையும் எவ்விதக் கட்டணமுமின்றித் தானே வழக்காடி, பாதிக்கப்பட்டோரை அடக்குமுறைகளிலிருந்து தோழர் கண்ணபிரான் மீட்டுள்ளார். சட்டிஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவரான தோழர் சங்கர் குகா நியோகி, 1993-இல் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, கூலிப்படையினர் மட்டுமல்லாது முதலாளிகளையும் கைது செய்ய வைத்துக் குற்றவாளிக் கூண்டிலேற்றினார்.

ஈழ அகதிகள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு இந்தியாவில் சிறையில் வதைக்கப்பட்டபோதும், வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டிப் பழங்குடியின மக்கள் “தடா” சட்டத்தில் வதைக்கப்பட்ட போதும், கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவர் நீதிமன்றங்களில் போலீசின் பயங்கரத்துக்கு எதிராகப் பல வழக்குகளில் வாதிட்டார். அக்கறையுள்ள குடிமக்கள் கமிட்டியின் சார்பில் அவர் குஜராத்தில் நடந்த இந்துவெறி பாசிச பயங்கரவாதப் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்தும் குழுவிலும் இடம் பெற்றார். சர்வதேச கடல் பகுதியில் பயணித்த விடுதலைப் புலிகளின் படகை அடாவடியாகக் கைப்பற்றி இந்திய அரசு வழக்கு தாக்கல் செய்த போது, பழ.நெடுமாறன் சார்பில் வாதிட்டு அந்த வழக்கில் வெற்றி பெற்றார். முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த போலீசு எஸ்.பி.பிரேம்குமார் மீதான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட தோழர் கண்ணபிரான், இப்போலீசு அதிகாரியின் சட்டவிரோத பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டித் தண்டிக்க வலியுறுத்தினார்.

தனது வாழ்நாள் முழுவதும் அரசு பயங்கரவாதத்துக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும்  தொடர்ந்து பாடுபட்ட உன்னதப் போராளி அவர். மறுகாலனியாக்கமும் பாசிச அடக்குமுறையும் தீவிரமாகிவரும் இன்றைய சூழலில், மனித உரிமைக்கான போராட்டங்களை ஏகாதிபத்தியங்கள் நிறுவனமயமாக்கிவரும் இன்றைய சூழலில், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடுவதுதான், நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. கே.ஜி.கண்ணபிரான் மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம் ! | வினவு!…

    கே.ஜி.கண்ணபிரான் காலமாகிவிட்டார். அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடிவந்த மனித உரிமைப் போராளி அவர்…

  2. கண்ணபிரான் போன்ற வழக்கறிஞர்கள் மனித உரிமை ஆர்வலர்கலால்தான் இந்த நாடு இன்னும் ஜனநாயக தேசமாக இருக்கிறது.கண்ணபிரானின் பணியை தொடர்வதுதான் நாம் அவருக்கு செய்யும் நன்றி.

  3. //முற்போக்கு – ஜனநாயக இயக்கங்களின் மீது அரசால் சோடிக்கப்பட்ட சதிவழக்குகளையும், ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளையும் எவ்விதக் கட்டணமுமின்றித் தானே வழக்காடி, பாதிக்கப்பட்டோரை அடக்குமுறைகளிலிருந்து தோழர் கண்ணபிரான் மீட்டுள்ளார்//

    மனித உரிமை போராளி கே.ஜி.கண்ணபிரானுக்கு வீர வணக்கங்கள்!

  4. அநியாங்களை ‘என்கவுன்டர்’ செய்து
    நியாயத்தை சட்டத்தின் இருட்டறையிலிருந்து
    பிடித்து இழுத்து வெளிக்கொணர்ந்தவர். ஆயிரம் அறிவிலிகளில்
    ஒரு அறிவாளி இருக்கத்தானே செய்கிறார்…!

  5. […] This post was mentioned on Twitter by வினவு, puthiyapamaran. puthiyapamaran said: கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!: http://t.co/RD7JIqF […]

  6. ///போலீசின் பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான நக்சல்பாரி புரட்சியாளர்களின் நியாயமான போராட்டங்களையும் சமப்படுத்தி, இரண்டையும் “வன்முறை” என்று கூறும் சில மனித உரிமை அமைப்புகளின் போலித்தனமான ‘நடுநிலைக்கு’ மாறாக, ////

    அப்படியா ? அவர் தலைவராக செயல்பட்ட PUCL அமைப்பின் வலைமனையில் இருந்து :

    http://www.pucl.org/Topics/Industries-envirn-resettlement/2010/maoist-kilings.html

    PUCL strongly condemns the brutal firing on the camp of the Eastern Frontier Rifle jawans killing 24 of them on 15 February 2010. It is a reprehensible act of gravest human rights violation by the group of CPI (Maoists) who claimed the responsibility of the act.

    PUCL believes that acts of violence like this have no place in a democratic society such as ours that has in it all the means of conflict resolution through negotiations. It is a long standing firm belief of PUCL that violence in any form can never be a means to achieve any end howsoever grand that might be.

    PUCL appeals to both the maoist and the state to suspend the hostilities and engage in negotiations to address the outstanding issues of the affected people like displacement, development and livelihood.

    — Pushkar Raj General Secretary, PUCL, 16 February 2010

    PUCL அமைப்பு நீங்க சொல்ற மாதிரி, (அல்லத் உஙகளை மாதுரி) மாவோயிஸ்டுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. நியாயப்படுத்துவதில்லை. மேற்கொண்ட உங்க ‘கருத்து’ அவர்களுக்கும் அப்ப பொருந்தும். மேற்கொண்டு அவர்கள் முன்னிலையிலேயே விவாதிக்க நான் தயார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க