எண்ணை யுத்தத்தின் பின்னணியில்… (பகுதி 1)

பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் போராடிப்பெற்ற சமூகப் பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை அந்த நாட்டின் கூட்டரசாங்கம், ஒவ்வொன்றாக அழித்து வருவதற்கு எதிராக ஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு மூலையில் மக்கள் போராடுகிறார்கள். சுகாதார சேவை தனியார் மயமாக்கப்படு, மக்களின் உயிர் பொருளாதார நெருக்கடிக்குள் ஊசலாடுகிறது. உயர்கல்வி கற்றுக்கொள்ள இனிமேல் பணம்படைத்தவர்களால் தான் இயலும் என கூட்டரசாங்கம் கூச்சமின்றி ஒத்துக்கொள்கிறது.

பிரஞ்சு நாடு முதலாளித்துவப் புரட்சிக்கும், முதலாளித்துவ ஜனநாயக உருவாக்கத்திற்கும் முன்னுதாரணமாக  முன்வைக்கப்படுகின்ற அரசு. வீரஞ்செறிந்த மக்கள் திரள் அமைப்புக்களின் போராட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தும் உரிமைகளை வென்றெடுக்க வழி செய்திருக்கின்றது. சீர்திருத்தப் போராட்டங்களாக முடிந்து போன இப்போராட்டங்கள், புரட்சியை நோக்கி வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதும், அதற்கான முன்நகர்வைத் தடுப்பதற்கு ஏகபோக அரசுகள் அழித்தொழித்த மனித உயிர்கள் ஆயிரமாயிரம் எனபதும் வேறானவை.

இன்று மக்கள் வென்றெடுத்த அடிப்படை உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. சார்க்கோசியின்(பிரான்ஸ் அதிபர்) கோரப்பிடியில் மக்கள் இழந்துகொண்டிருப்பது அவர்களின் உழைப்பும் எதிர்காலமும்.

ஸ்பெயினில் அரச ஊழியர்களுக்கு இனிமேல் ஊதிய உயர்வு கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது. வேலையற்றோருக்கான உதவித் தொகை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

கிரேக்கம், அயர்லாந்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து  போர்ச்சுக்கல் அரசு மீள முடியாத கடன் நெருக்கடிக்கு உள்ளானது. உடனடித் தேவையாக 80 பில்லியன் யூரோக்கள் வழங்கப்படாவிட்டால் போர்ச்சுக்கல் நாடு நிலைகொள்ள முடியாது உருக்குலைந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது அதன் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு அழிவின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டுவிடும்.

இதற்காக ஐரோப்பிய நாடுகளும் உலக நிதி நிறுவனமும் தமது உதவிக்கரங்களை போர்ச்சுக்கல்லுக்கு விரித்துள்ளன. அதாவது ஐரோப்பிய உழைக்கும் மக்களின் வரிப்பணமும், அவர்கள் வென்றெடுத்த வாழ்வாதரங்களும், மூன்றாமுலக நாடுகளில் வெளியக வியாபரம் என்ற பெயரில் சுரண்டப்படும் பணமும், உலகின் வளங்களை மனித உரிமையின் பெயரால் சுரண்டிச் சேகரிக்கும் பணமும் போர்ச்சுக்கல்லுக்கு வழங்கப்படும் 80 மில்லியன் யூரோக்களில் சோகமாய் மறைந்து கிடக்கிறது.

உலகின் பெரும்பகுதியான மக்கள் ஒரு நேர உணவிற்காக கையேந்தும் நிலை காணப்படும் நிலையில், அமெரிக்கத் தனியாதிக்கத்தால் சுரண்டப்படும் ஒரு பகுதியான 700 பில்லியன் டாலர்களை அமெரிக்க வங்கிகளையும் தனியார் உற்பத்தி நிறுவனங்களையும் காப்பாற்றுவதற்காகவும், சுரண்டல் அமைப்பை மறுசீரமைப்புச் செய்வதற்காகவும் அமரிக்க அரசு வழங்கியிருந்தது. “சட்ட ரீதியான” இதே பகற்கொள்ளை பிரித்தானியாவிலும், ஏனைய சில ஐரோப்பிய நாடுகளிலும் நடத்தி முடிக்கப்பட்டு இரண்டு வருட எல்லைக்குள் போர்ச்சுக்கல்லிற்கு மக்கள் பணம் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது.

மில்லியன்களை பதுக்கி வைத்திருக்கும் பெரு முதலாளிகளின் எந்த வகையான பங்களிப்பும் இவ்வாறு தாரைவார்க்கப்படும் பணத்தில் வழங்க்கப்பட்டதில்லை. இலாபத்தை அதிகரிப்பதே (profit maximising) முதலாளித்துவத்தின் இருப்பிற்கு அடிப்படையானது என்பதால் பெரு முதலாளிகளின் இலாபம் குறைக்கப்படுமானால் முதலாளித்துவத்தின் இயக்கம் நிறுத்தப்படும். ஆக, உழைக்கும் மக்களிடம் ஒட்டச் சுரண்டுவதைத் தவிர வேறு வழிகள் அதிகார வர்க்கத்திற்கு கிடையாது.

எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு மில்லியன்களை நாடுகளுக்கும் வங்கிகளுக்கும் வழங்கிக்கொண்டிருப்பது? போராட்ட மரபுடைய முன்னேறிய ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் முழு முனைப்புடன் தெருவிற்கு வருமானால் ஐரோப்பிய ஏகாதிபத்தியப் பொருளாதாரம் தனது சாவிற்கான நாட்களை விரல்விட்டு எண்ணிக்கொள்ளாலாம்.

இந்தப் பின்னணியில் தான் எரி பொருளுக்கான யுத்தத்தை அமரிக்க ஐரோப்பிய யுத்தப் பிரபுக்கள் மத்திய கிழக்கில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அழிவின் எல்லைக்குள் நகர்த்தப்பட்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை மீட்க இப்போது போரைத் தவிர ஏகாதிபத்தியங்களுக்கு மாற்று வழி அற்றுப் போயிருக்கும் நிலையில் உலகின் பணம் செழிக்கும் மத்திய கிழக்கைக் குறிவத்து அப்பாவிகளின் தலையில் குண்டுமழை பொழிகிறார்கள்.

இதில் கேவலம் என்னவென்றால் யுத்தத்தை நடத்தும் பணத்தைக் கூட மேற்கு ஏகபோகங்கள் செலவிடவில்லை. லிபிய அரசின் பணமாக பல பில்லியன் டாலர்களை அமரிக்க அரசு முடக்கியுள்ளது. சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கடாபியின் பணம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக  துனிசிய அதிபர் பென் அலியின் வைப்புப் பணமான சில பில்லியன்களை சுவிஸ் வங்கி முடக்கியிருந்தது.

எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் பணம், அவரின் பினாமிகள் ஆதரவாளர்களின் பணம், கடாபியினதும் பினாமிகளதும் தனிப்பட்ட சொத்துக்கள் என்று பல நூறு பில்லியன்கள் போர்ச் செலவிற்கு மேலதிகமாகவே அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் முடங்கிப் போகலாம் என கணிப்பீடுகள் கூறுகின்றன. லிபிய அரசிற்குச் சொந்தமான 30 பில்லியன் டாலர்கள் ஏற்கனவே அமரிக்காவால் முடக்கப்படுள்ளது. அவுஸ்திரிய மத்திய வங்கி லிபிய அரசின் 1.6 பில்லியன்களை முடக்கியுள்ளது. பிரித்தானியா அபகரித்துக் கொண்ட பணம் 3.3 பில்லியன் டாலர்கள். இவை தவிர பினாமிகளின் பணம் இதற்கும் அதிகாமாகலாம் என கூறப்படுகின்றது.

யுத்த முனைப்பிற்கும், அதன் பின்னான காலனிய நிர்வாகத்தைக் கட்டமைப்பதற்கும், புதிய சுரண்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கும் மத்திய கிழக்குச் சர்வாதிகாரிகளிடமிருந்தும், அரசுகளிடமிருந்தும் அபகரிக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் “மனிதாபிமான உதவி”  எனப் பெயரிட்டுக் கொள்வார்கள்.

– தொடரும்

_____________________________________________

சபா.நாவலன், இனியொரு
______________________________________________