privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர்கல்வி - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

-

மிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும்.  அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி பாடத்திட்டத்தின் மீது இறுதித் தீர்ப்பு சொல்லவேண்டும்.

சுருக்கமாக இதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் ஒரு முடிவை மேற்கொள்ளும்போது அது மக்கள் நலனுக்கானதாக இருக்கும் என்றே கருதவேண்டும். அவ்வாறின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு நோக்கம் கற்பித்து முடக்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. எனவே சமச்சீர் கல்வியை மேம்படுத்த எங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்கள்.

இதனை எதிர்த்து வாதாடிய பிரசாந்த் பூஷண் (மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில்), கிருஷ்ணமணி, ஹரீஷ் ஆகிய வழக்குரைஞர்கள் “மொத்தப் பாடங்களையும் முடக்கும் அளவுக்கு என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. NCERT மற்றும் NCFP ஆகிய அமைப்புகள் 2005 இல் கொடுத்த வழிகாட்டுதல் அடிப்படையில் துறைசார் வல்லுநர்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, கருத்தறியப்பட்டு இறுதியாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் அளவுக்கு இதில் என்ன பிரச்சினை என்று அரசு கூறவில்லை. 214 கோடி ரூபாய் வரிப்பணத்தை செலவு செய்து நூல்கள் தயாராக உள்ளன. இதனை நிறுத்திவிட்டு 2002 ஆம் ஆண்டு பாடத்திட்டத்தை அச்சிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது பிற்போக்கானது. உள்நோக்கம் கொண்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்த தனது 10.09.2010 தேதியிட்ட தீர்ப்பில், “அரசுகள் மாறும்போது, அவர்கள் தமது விருப்பங்களுக்கு ஏற்ப பாடத்திட்டத்தையும் பாடநூலையும் மாற்றுவதையும், பள்ளிகளையும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் பந்தாடுவதையும் இந்த நீதிமன்றம் அனுமதிக்க முடியாது” என்று கூறியிருக்கிறது. ஆனால் தற்போது தமிழக அரசு அதைத்தான் செய்கிறது” என்று வாதிட்டனர்.

“அதற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் ஏற்கெனவே சமச்சீர் பாடங்கள் அமலில் இருப்பதால் அது தொடரட்டும். மற்றவை குறித்து நிபுணர் குழு ஆராய்ந்து 3 வாரத்தில் உயர்நீதி மன்றத்தின் ஒப்புதலைப் பெறட்டும். பிள்ளைகள் 3 வாரம் விடுமுறையை அனுபவிக்கட்டும்” என்று தீர்ப்பளித்தார்கள் நீதிபதிகள்.

சட்டத்துக்கோ நீதிக்கோ இந்தத் தீர்ப்பில் இடமிருக்கிறதா என்பதை சட்ட வல்லுநர்கள்தான் கூறவேண்டும். நீதிபதிகளுக்குப் பின்னால் ஒரு அரச மரமும் முன்னால் ரெண்டு பித்தளை செம்புகளும் இருந்ததா என்பதை டெல்லிக்கு நேரில் சென்றவர்கள் கூறவேண்டும்.

என்ன எழவோ ஒரு பாடத்திட்டம். என்னிக்கி இஸ்கூலு தொறப்பான், அதச்சொல்லுஎன்று கேட்பவர்களுக்கு எமது விளக்கம் பின்வருமாறு:

இத் தீர்ப்பின்படி 1,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே உள்ள சமச்சீர் பாடம்தான் என்பதால் பள்ளிக் கூடத்தை திறந்து அவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தலாம்.

மற்ற வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பாடப்புத்தகத்துக்காக காத்திருக்க வேண்டும். 15 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பதும் திறக்காததும் புரட்சித்தலைவியின் விருப்பம். அல்லது நீதிபதிகள் போகிறபோக்கில் குறிப்பிட்டதைப் போல எல்லோருக்கும் 3 வாரம் லீவு விடலாம்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிபுணர் குழுவை தமிழக அரசு உடனே அமைத்துவிடும். பெரும்பாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் சில கல்வியாளர்களையும் கொண்டு இக்குழு அமைக்கப்படும். இந்த நியமனமே பிரச்சினைக்குரியதாக இருப்பின் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.

“நீக்க விரும்பும் பாடங்களை அரசு நீக்கிக் கொள்ளலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது. உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்துவது என்று தமிழக அரசு முடிவெடுத்திருந்தால், செம்மொழி வாழ்த்து, சென்னை சங்கமம் முதலான தனக்கு விருப்பமில்லாத பக்கங்கள் அனைத்தையும் கிழித்து விட்டு வெறும் அட்டையை மட்டும் கூட மாணவர்களுக்கு விநியோகித்திருக்கலாம். ஆனால் அப்பீலுக்குப் போய் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு தேடிப் பெற்றிருக்கிறது. இனி, பாடத்திட்டத்திலிருந்து மழித்தல், நீட்டல் எதைச்செய்தாலும் இறுதியாக அதற்கு உயர்நீதி மன்றத்தின் அனுமதியை தமிழக அரசு பெற்றாக வேண்டும். ஆட்சேபங்கள் உயர்நீதி மன்றத்தில் குவிந்தால், வழக்கு முடிவதற்கு எத்தனை காலமாகும் என்று சொல்ல முடியாது.

பாபர் மசூதி வழக்கிலாவது புராணம், தொல்லியல், வரலாறு ஆகியவற்றுடன் பிரச்சினை முடிந்து விட்டது. இதில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமின்றி, அனைத்துப் பாடங்களிலும் பிரச்சினை இருப்பதாக புரட்சித்தலைவியின் அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. எனவே இந்த வழக்குக்கு மட்டும் சிறப்பு நீதிமன்றம் போட்டு அன்றாடம் விசாரித்தாலும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சி முடியும்வரை விசாரித்து முடியுமா என்று தெரியவில்லை.

ஒரு வேளை 3 வாரத்தில் கமிட்டி அறிக்கை கொடுத்து, ஒரு வாரத்தில் தடலடியாக நீதிமன்றம் விசாரித்து முடித்து விட்டாலும், இறுதியாக்கப்படும் பாடங்களை அச்சிடுவதற்கு 4 மாதங்களாவது தேவை. மொத்தத்தில் நவம்பர் மாதம் பள்ளிக்கூடம் திறக்கலாம். அல்லது வேறு ஏதாவது சதிகாரத் திட்டம் இந்த அரசின் மனதில் இருக்கக் கூடும்.

உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது யார்?

“பாடத்திட்டத்தை அரசு எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளட்டும். 4 விதமான பாடத்திட்டங்கள் இனி கிடையாது. ஒரே பாடத்திட்டம்தான் என்று முடிவாகி விட்டதல்லவா? இது சமச்சீர் கல்விக்கு கிடைத்த வெற்றிதானே!  அந்த வகையில் பார்த்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நமக்குக் கிடைத்த வெற்றி தானே என்று கேட்டார் ஒரு நண்பர்.

இல்லை. இதனை வெற்றி என்று கருதுவது மயக்கம். சரியாகச் சொன்னால் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பும், போராட்டத்தின் தேவையும் இப்போதுதான் முன்னைக்காட்டிலும் அதிகரித்திருக்கிறது.

ஏற்கெனவே கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சமச்சீர் பாடத்திட்டத்தில் குறைகள் பல இருப்பினும், அது ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்த அனுபவம் பெற்றவர்கள். துறை சார் அறிவு கொண்டவர்கள்.

தற்போது அதனை மறுபரிசீலனை செய்ய இருப்பவர்களில் பெரும்பான்மயினர் கல்வித்துறை அறிவோ அனுபவமோ இல்லாத அதிகார வர்க்கத்தினர். உயர் வர்க்கத்தை சேர்ந்த இவர்களது பிள்ளைகள் பத்மா சேஷாத்ரி, டான் பாஸ்கோ முதலான மேட்டுக்குடிப் பள்ளிகளில் படிப்பவர்கள். எனவே அந்தப் பள்ளிகள் பின்பற்றும் பாடத்திட்டங்கள்தான் தரமானவை என்பதே இவர்களது கருத்தாக இருக்கும்.

சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கும் மசோதாவை அறிமுகப்படுத்திய கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உலகமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், ஐ.ஏ.எஸ் முதலான அனைத்திந்தியத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை தமிழக மாணவர்களுக்கு வளர்க்கும் விதத்திலும் நமது பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றார் கல்வி அமைச்சர்.

துக்ளக் சோ முதல் பார்ப்பன அறிவுத்துறையினர், முதலாளிகள், அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் காலம் காலமாகக் கூறி வருவது இதைத்தான். அமெரிக்க ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தேவையை ஈடு செய்யும் விதத்திலும், அவர்களுக்கு தரமான ஊழியர்களை உருவாக்கிக் கொடுக்கும் விதத்திலும் நமது கல்வி அமைய வேண்டும் என்பதுதான் இதன் பொருள். “”பிரவுன் சாகிப்புகளை”” உருவாக்குவது பற்றி மெக்காலே கேவலமான மொழியில் அன்று பச்சையாக கூறியதை, “உலகமயத்தின் சவால்” என்று ஜம்பமாக கூறுகிறார் கல்வி அமைச்சர்.

“ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பள்ளிக் கல்வி முடித்து வெளியே வருபவர்கள் 7 இலட்சம் பேர். இவர்களில் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அனைத்திந்திய தேர்வுகளுக்கு செல்பவர்கள் மொத்தம் 1000 பேர். இந்த 1000 பேரின் தேவைக்கு ஏற்ப 7 இலட்சம் பேரின் கல்வியை மாற்றியமைக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்புகிறார் கல்வியாளரும் சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவின் உறுப்பினருமான எஸ்.எஸ்.இராசகோபாலன்.

நமது நாட்டின் தேவை, மக்களின் தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டோ, வரலாறு முதல் பண்பாடு வரையிலானவற்றைக் கற்பித்து மனிதனை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டோ கல்வியை அணுகாமல், தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட் கொள்ளைக்கு ஏற்ப கல்வி மறுவார்ப்பு செய்யப்படுகிறது. இதயமில்லாத மனித எந்திரங்களை உருவாக்கும் அத்தகைய கல்வி முறையைத் திணிப்பதைத்தான் “மேம்படுத்துவது” என்று கூறுகிறார் கல்வி அமைச்சர்.

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜெ வுக்கு அளித்திருக்கிறது. புதிய பாடநூல்கள் அச்சிடுவதற்கு தாமதமாகும் என்ற பெயரில், “இப்போதைக்கு மெட்ரிக் பள்ளிகளின் தரமான பாடத்திட்டத்தையே வைத்துக்கொள்ளலாம்” என்று கூறி அவற்றைத் திணிப்பதற்கும், அவற்றையே மேம்படுத்தி அந்த திசையில் கல்வியை எடுத்துச் செல்வதற்குமான வாய்ப்பு அதிகம். உலகமயமாக்கலை முன்னேற்றம் என்று கருதுவோர், இந்தக் கல்வியையும் முன்னேற்றம் என்று கருத வாய்ப்புண்டு. அந்த வகையில் கடுமையானதொரு போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்