privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்சமச்சீர் கல்வி, டாஸ்மாக், ஜெயா, ஸ்பெக்ட்ரம் ஊழல் - கேள்வி பதில்!

சமச்சீர் கல்வி, டாஸ்மாக், ஜெயா, ஸ்பெக்ட்ரம் ஊழல் – கேள்வி பதில்!

-

இன்றைய சூழலில் சமச்சீர் கல்வி தேவையா?

_ எஸ். பிரபு

அன்புள்ள பிரபு

கல்வி தனியார்மயமாக்கப்பட்டிருப்பதும், காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நிலை உருவாக்கப்பட்டிருப்பதும்தான் இன்றைய சூழலில் நாம் கவலைப்பட வேண்டிய முக்கியமாக பிரச்சினைகள். 90களில் மறுகாலனியாக்கம் தீவிரப்படுத்த நாட்களில் கல்வி என்பது இனியும் அரசின் சேவைகளில் ஒன்றல்ல, அது விற்பனைக்குரிய பண்டம் என்பது அதிவேகமாக அமலாக்கப்பட்டது.

அதன் விளைவுதான் புற்றீசல் போல பெருகியிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள். மழலை பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை தனியார் முதலாளிகளே நாடெங்கும் ஆக்டோபஸ் போல ஆக்கிரமித்திருக்கின்றனர். ஏழைகள், நடுத்தர வர்க்கம் அனைவரும் தமது வருமானத்தில் கணிசமான பங்கை தனியார் கல்வியில் இழந்து வருகின்றனர். ஆங்கிலப் பள்ளிகளும், பொறியியல் கல்வியும் கற்காவிட்டால் தமது பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பாழாகிவிடும் என்று திட்டமிட்டு பரப்பப்படும் மூடநம்பிக்கைகட்க்கு அவர்களும் பலியாகியிருக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை என்பதே தனியார் முதலாளிகள் தமது இலாப நோக்கத்திற்காக செய்து வரும் முதன்மையான பிரச்சாரம். மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் கற்காவிட்டால் வாழ்க்கையே முடிந்து போய்விடும் எனுமளவுக்கு அவர்களது பிரச்சாரம் நடக்கிறது. இந்நிலையில் சமச்சீர் கல்வி வந்துவிட்டால் அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரே கல்வி என்றால் அவர்கள் இதுகாறும் கொள்ளையடித்து வந்தது ஒப்பீட்டளவில் பிரச்சினையாகும்.

அதனால்தான் சமச்சீர்கல்வியை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றம் வரை போனார்கள். மறுபுரம் கருணாநிதி கொண்டு வந்ததனால் மட்டும் ஜெயா இதை எதிர்க்கவில்லை. வர்க்கரீதியாக அவர் கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஆதரிக்கிறார். மற்றபடி சமச்சீர் கல்வி ஏன் வேண்டும், அது தரமற்றது என்று சொல்லப்படுவது உண்மையா என்பது குறித்தெல்லாம் வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. அவற்றை படித்துப் பாருங்கள்.

அனைவருக்கும் இலவசக் கல்வி எனும் நமது கோரிக்கையின் முதல் படி சமச்சீர் கல்வி. இன்று முதலாளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து பெற்றோர் வீதிக்கு இறங்கியிருப்பது உற்சாகமளிக்கும் சூழல். இரண்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது. அதை தலைமையேற்று நடத்துவதை புரட்சிகர அமைப்புகளின்றி வேறு யாரும் செய்யமாட்டார்கள்.

___________________________________

கேள்வி 1:
டாஸ்மாக்கை ஒழிக்க முடியுமா?

கேள்வி 2:
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் கூட்டணி கட்சிகளை வெளியேற்றுவது வாடிக்கைதான் என்பது கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியுமா?

 கேள்வி 3:

தயாநிதி மாறன், சிதம்பரம்… அடுத்தது?

– டி.பெருமாள்

அன்புள்ள பெருமாள்,

1. டாஸ்மாக்

உலகளவில் இந்தியாவும், இந்தியளவில் தமிழ்நாடும் குடிப்பதில் வேகமாக வளர்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கும், முதலாளிகளுக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் தரும் டாஸ்மாக் ஒரு அட்சயபாத்திரமாக விளங்குகிறது. எனவே எக்காலத்திலும் இதை ஒழிப்பதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள். அரசின் பெரும்பாலான நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக்கே கருவூலமாகத் திகழ்கிறது. அதை ரத்து செய்தால் அரசு திவாலாகிவிடும். அதாவது மக்களின் சட்டைப்பையில் காசை எடுத்து அதில் சிலவற்றை அவர்களுக்கே வீசுவது என்பதாக அரசு செயல்படுகிறது.

அரசு, முதலாளிகளது நிலை இதுவென்றால் எல்லா அரசியல் கட்சிகளது நிலையும் அதுதானென்று ஆகிவிடுகிறது. விதிவிலக்காக ஓரிரு கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் டாஸ்மாக்கை ஒழிக்க விரும்புவதில்லை. இன்னும் தேர்தல் காலங்களில் தொண்டர்களை திரட்டுவதற்கே அது தேவைப்படுகிறது. குடியை ஒழிக்க விரும்புவதாக சவுடால் அடிக்கும் பா.ம.க ராமதாஸ் தன் கட்சியில் குடிப்பவர் எவரும் இருக்க இயலாது என்று அறிவித்து விட்டாலே கூடாரம் காலியாகிவிடும்.

அடுத்தது குடி என்போது முன்னெப்பதைக் காட்டிலும் அநேக ஆண்கள் அன்றாடம் குடித்தே தீருவது எனும் வழக்கமாக மாறிவிட்டது. வர்க்க ரீதியாக உடலுழைப்பு செய்யும் ஏழை ஆண்கள் தங்களது வருமானத்தில் கணிசமான பங்கை குடிக்கு செலவழிக்கிறார்கள். வேலை கிடைக்காத நாட்களில் கடன் வாங்கி குடிக்கிறார்கள். இதனால் இத்தகைய குடும்பங்களில் வருமானமிருந்தும் வாழமுடியாத அவலம் நிரந்தரமாகிவிட்டது. அந்த வகையில் இது ஏழை குடும்பங்களின் பெண்களது பிரச்சினையாகிவிட்டது.

நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வாரம் ஒரு முறை, விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள், விருந்துகள் போன்றவற்றில் அதிகம் குடிக்கிறார்கள். இவர்களுக்கு பொருளாதாரம் பிரச்சினை இல்லை என்றாலும் சிலர் நாட்பட அன்றாடம் குடித்தே ஆகவேண்டிய குடிகாரர்களாக மாறுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் கெட்டுகெதர் நிக்ழவுகளில் குடிக்கவில்லை என்றால் நாகரிகம் இல்லை என்பதாக கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.

மறுகாலனியாக்கம் கடுமுழைப்பு நிறைந்த உதிரித் தொழிலையும், அதிக பணிச்சுமையையும், வீடு, குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது. அலவத்தில் உழலும் வாழ்க்கையை உரிமைக்கான போராட்டத்தில் மாற்றுவது போய் வலியை மறக்க குடிப்பது என்றாகி விடுகிறது.

மேற்குலக நாடுகளில் குடிப்பது என்பது தட்பவெப்பம், பண்பாடு, உணவுப்பழக்கம் காரணமாக ஒரு சமூகப் பண்பாக உள்ளது. அங்கேயும் குடிக்கு அடிமையான குடிகாரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சிறு எண்ணிக்கையில்தான் உள்ளனர். இங்கோ குடிப்பது சமூகப்பண்பாக இல்லாத நிலையிலும் குடிகாரர்களே அதிகம் உள்ளனர்.

ஆல்ககாலின் அளவு அல்லது காரம் குறைந்த கள் போன்றவையே நமது மரபில் இருந்தது. இன்று அதிக காரம் நிறைந்த வெளிநாட்டு மது வகைகளை நமது மக்கள் குடித்துப் பழகிவிட்டனர்.

எனவே குடிப்பதை ஒரு ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்காமல் சமூகப் பொருளாதார தளத்தில் வைத்துப் பார்ப்பதே சரியாக இருக்கும். குளிர் பிரதேசங்கள், கடுமுழைப்பில் ஈடுபடுவோர் போன்ற காரணங்களுக்காக குடிப்பது தவறில்லை. அதே போல என்றாவது ஒரு நாள் குடிப்பதும் பிரச்சினை இல்லை. ஆனால் இங்கும் கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்.

சென்னையின் சேரிப்பகுதிகளில் குடிக்கு அடிமையாகும் ஆண்கள் அனைவரும் 40, 50 வயதுகளில் இறந்து விடுகின்றனர். இந்தியாவின் ஆயுள் சராரசரி சேரிகளில் இல்லை. எனவே இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படும் ஏழைப்பெண்கள் விழித்தெழுந்து போராடும் வரை டாஸ்மாக்கை ஒழிக்க முடியாது. அத்தகைய போராட்டம் ஆந்திராவில் 90களில் நடந்தது. பல நகரங்களில் இருக்கும் மதுக்கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கி மூடினார்கள்.

இதைத்தவிர டாஸ்மாக்கை ஒழிப்பதற்கு வேறு வழி இல்லை.

_________________________

2. ஜெயலலிதா

அகில இந்திய அளவில் ஓட்டுக்கட்சி அரசியலில் தனி முன்னுதாரணம் படைத்தவர் ஜெயலலிதா மட்டுமே. இதில் மாயாவதி, மம்தா பானர்ஜி போன்றோர் கூட வெகுவாக பின்தங்கித்தான் உள்ளனர். ஆணவம், செருக்கு, அகம்பாவம், மேட்டிமைத்தனம், பழிவாங்குதல் என்று எல்லா டிகிரிகளிலும் கொட்டை போட்டவர் புரட்சித் தலைவி.

அம்மா அரசவையில் அகில இந்திய தலைவர்கள் பலரும் பம்மித்தான் நடந்து கொள்வர். காங்கிரசு, பா.ஜ.க கட்சிகளுக்கு இந்திய அளவில் தனிப்பெரும்பான்மை கிடையாது என்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் காலந்தள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஜெயாவை சகித்துக் கொள்கிறார்கள். அதே போன்று ஜெயாவும் இந்திய அரசியல் கனவில் ஒரு முக்கிய இடத்தை அடைய வேண்டுமென்று உறவு கொள்கிறார்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்காகவே அரைமனதாக கூட்டணியை அமைத்தவர் ஜெயா. கூட்டணி பேரம் முடியாமலேயே வேட்பாளரை அறிவித்து பின்னர் வேறுவழியின்றி மாற்றிதெல்லாம் திடுக்கிடும் விசயமல்ல. இப்படி நடக்கவில்லை என்றால்தான் ஆச்சரியமாக இருக்கும்.

இதெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், விஜயகாந்த், சரத்குமார், கிருஷ்ணசாமி அனைவரும் தெரிந்த ஒன்றுதான். இவர்களைப் பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் காலந்தள்ள முடியாது என்பதால் சகித்துக் கொள்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை சொந்தக் கொள்கை என்பது எதாவது செய்து அரசியலில் நீடிப்பது, அதையும் சொந்த பலத்தில் செய்ய முடியாது, மாறி மாறி கூட்டணிகளின் தயவில் நீடிப்பது என்று சீரழிந்து போய்விட்டார்கள். விஜயகாந்தைப் பொறுத்த வரை அவர் ஒரு ஆம்பளை ஜெயலலிதா என்பதால் பிரச்சினை இல்லை.

சட்டமன்றத் தேர்தலில் உள்ள நிர்ப்பந்தம் உள்ளாட்சித் தேர்தலில் இல்லை என்பதால் கூட்டணிகளை கழட்டிவிட ஜெயலலிதா தயங்கவில்லை. ஆனாலும் இந்த அளவுக்கு மோசம் போக மாட்டோம் என்று வேண்டுமானால் கூட்டணிக் கட்சிகள் நினைக்கலாம். மற்றபடி அவர்களுக்கும் இது ஒரு அதிர்ச்சியாக இருக்காது.

சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், காரியவாதம், போன்றவை கோலேச்சும் ஓட்டுக்கட்சி அரசியலின் யோக்கியதையை இந்த அளவுக்கு வெளிப்படுத்தியமைக்காக நாம் ஜெயலலிதாவை பாரட்டலாம். வேறு என்ன?

________________________________

3. ஸ்பெக்ட்ரம் ஊழல்

தயாநிதி மாறன் ஒரு அமைச்சராக பதவி இழந்திருக்கிறாரே தவிர ஒரு முதலாளி என்பதால் தண்டிக்கப்படவில்லை. அவர் இருக்கும் சன் குழுமத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ப.சிதம்ரம், பிரணாப் முகர்ஜி விவாகரத்தையும் தற்போது சுமூகமாக முடித்து விட்டார்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை என்பதாகவும், அரசின் கொள்கை முடிவில் வேறுபாடு இல்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

வினவில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஏற்கனவே வந்துள்ள கட்டுரைகளில் தெரிவித்த்து போல இந்த வழக்கை நீர்த்துப் போக வைப்பதே தற்போது நடந்து வருகிறது. இதை மேலும் மேலும் தோண்டினால் ப.சிதம்பரம் மட்டுமல்ல, மன்மோகன் சிங், இந்திய அரசு, அதன் கொள்கை முடிவுகள், பிறகு முதலாளிகள் என்று சகலரும் மாட்டுவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ராசா இதை கொஞ்சம் அம்பலப்படுத்தினாலும் அவரை மிரட்டுவது போன்ற குற்றப்பிரிவுகளை அரசு தொடுக்கிறது. அதனால் அவரும் தான் அரசையோ, பிரதமரையோ குற்றம் சாட்டவில்லை, தான் நிரபராதி என்றுதான் பேசமுடிகிறது. ஆகவே அடிப்படை விதிமுறையை மீறாமல் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் எனும் ஆட்டத்தை எப்படி ஆடுவது என்பதுதான் அரசுக்கும், இந்த வழக்கில் மாட்டியவர்களுக்கும் உள்ள பிரச்சினை.

அதன் வெளிப்பாடுதான் தற்போது நீர்த்துப்போகும் இந்த வழக்கு. இதற்கு இடையில் அண்ணா ஹசாரேவை வைத்து கொஞ்சம் பிரேக் விட்டார்கள். இதற்கு மேலும் இது சூடு பிடிக்காது எனும் போது வேறு யார் மாட்டப் போகிறார்கள்?