privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்மகளிர் காவல் நிலையத்தில்.... ஒரு நேரடி அனுபவம்!

மகளிர் காவல் நிலையத்தில்…. ஒரு நேரடி அனுபவம்!

-

தோழி ஒருவருக்காக ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. புகார் மனுவை  வக்கீல் எடுத்துவருவதாக சொன்னதால், காவல்நிலையத்துக்கு வெளியே  காத்திருந்தோம். என்ன மகளிர் காவல்நிலையமாக இருந்தாலும், ஒரு பெண்ணால் நேரடியாக கம்ப்ளெயிண்ட் கொடுத்து எப் ஐ ஆர் பதிய முடிவதில்லை.  ஒரு வக்கீல் வந்து இன்ஸ்பெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே  நடைமுறையில் ஓரளவிற்குச் சாத்தியமாகிறது. நாங்கள் சென்ற சமயத்தில், இன்ஸ்பெக்டர் வெளியில் சென்றிருந்தார். ஒரு ஏட்டு, ரைட்டர் மற்றும் நான்கைந்து  பெண் கான்ஸ்டபிள்கள் இருந்தனர். மாலை ஏழு அல்லது ஏழரை மணி இருக்கும்.

அப்போது கண்ணீரோடு ஒரு பெண்  விரைந்து வந்தார். இல்லை, ஓடி வந்தார் என்றே சொல்ல வேண்டும். உள்ளே சென்ற அவர், அங்கிருந்த போலிஸிடம், “மேடம், என் புருஷன் அம்மிக்கல்லை தூக்கி என்மேலே போடறாருங்க மேடம்,  கழுத்துலே பட்டுடுச்சு, தெனம் குடிச்சுட்டு ஒரே அடி,உதை” என்று அதற்கு மேல் பேச முடியாமல் விம்மினார்.

“வீடு எங்கே இருக்கு” என்று வினவிய இன்னொரு போலிஸ்காரரிடம்,   புறநகர்ப்பகுதி ஒன்றைக் கூறினார்.  “சரி, இப்போ எங்கியாவது போய் தங்கிக்கோ, நாளைக்கு காலையிலே வா, கண்டிப்பா விசாரிக்கறோம்” என்றதும்,  முகத்தில் ஏமாற்றத்துடன் பாவமாக “எத்தனை மணிக்கு மேடம்” என்றார் அவர். காலையிலே எட்டு மணிக்குக் கூட வா, நாங்க இருப்போம் என்று நம்பிக்கையளித்தும்,  தயக்கத்துடனே நின்றுக்கொண்டே இருந்தார்  அவர்.

“பயமா இருக்குங்க, மேடம்” என்றதும், “இவ்ளோ நாளா இருந்துட்டே இல்லேம்மா, ஒரு நாள் பொறுத்துக்கோ, அம்மா அப்பா வீடு எங்கே இருக்கு?” என்றார் ஏட்டு. “யாரும் இல்லைங்க மேடம் ” என்றதும்,  “யாராவது தெரிஞ்சவங்க வீட்டுலே போய் தங்கிட்டு காலையிலே வா, இப்போ உன் வீட்டுக்காரனை கூப்பிட்டு நாங்க இங்கே நைட் தங்க‌ வைக்க முடியாது, குழந்தைங்க இருக்கா” என்றதும் “இருக்குங்க மேடம், ஒரு பையன்” என்று சொல்லிவிட்டு  ஒருவித தயக்கத்துடன் வெளியேறினார்.  ஒருவேளை, இத்தனைநாட்கள அவ்வீட்டில் கழித்ததைவிட  இன்று இரவு  அங்கே கழிப்பது என்பது அவர் வாழ்க்கையில் மிகுந்த பயங்கரமானதாக இருக்கக்கூடுமென்ற பயம் காரணமாக இருக்கலாம் அல்லது எங்கு தங்குவது என்ற கலக்கமாகவும் இருக்கக் கூடும்.

அப்பெண் வெளியெறியவுடன்  ஏட்டு “கோயிலுக்கு போயிட்டு வந்துடறேம்ப்பா” என்று வெளியே சென்றார். அவர் திரும்பி வந்த‌போது கையில் ஒரு பாக்கெட் இருந்தது. உள்ளே இருந்த அனைவருக்கும் “அம்மன் என்னா அழகுப்பா” என்று சிலாகித்தபடி விநியோகித்தார். மற்ற பெண் போலிசுகளும் மிகுந்த பக்தியுடன் எடுத்துக்கொண்டனர். வெளியில் வந்து எங்களுக்கும் அந்த பொட்டலத்தை நீட்டினார். பிரசாதம். தோழி எடுத்துக்கொண்டார். “பக்கதுலேதான் இருக்கு, நல்ல தரிசனம் ” என்றார் எங்களிடம் சிரித்த முகத்துடன்.  எனக்கோ,  காவல், சட்ட‌ மற்றும்  மற்றும் நீதித்துறையில் இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்து அலுவலக நேரத்தில் இருக்கலாமா என்ற சந்தேகம் வந்தது. சடையை இரு புறமும் மடித்து காதோரம் குத்தி  முடியை தொங்கக்கூட விடாத அந்தக்கால பெண் போலிசுகள் நினைவில் எட்டிப் பார்த்தனர்.  மத அடையாளங்களை குறைந்தபட்சம் அலுவலக நேரத்திலாவது வெளிக்காட்டாமல் இருக்கலாம் என்ற நினைப்புடன் பிரசாதத்தை மறுத்து விட்டேன்.

எங்களுடன் இன்னொருவரும் காத்திருந்தார். அவரது பெண்ணுக்காக வந்திருக்கிறாராம். முன்பே புகார் கொடுத்திருக்கிறார்கள்.  மருமகனின் தந்தை,  பெண்ணை  அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், கழுத்தை பிடித்து நெரிப்பதாகவும், ரூமுக்குள் பூட்டி வைத்துவிடுவதாகவும் , அதனால் மகளிர் காவல் நிலையத்தை நாடியதாகவும் சொன்னார். அடுத்த நாள்,  அவரது பெண்ணையும் மருமகன் மற்றும் அவரது தந்தையை ஏசி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்போவதாக அது விஷயமாக விசாரித்துச் செல்ல வந்திருப்பதாகவும் பகிர்ந்துக் கொண்டார்.

இதன் நடுவின் இன்ஸ்பெக்டர் வந்துவிட எங்களை உள்ளே அழைத்து என்ன விஷயமென்று கேட்டுக்கொண்டார். தோழியும் தனது குறைகளைச் சொன்னார். கணவர் குடித்துவிட்டு கலாட்டா செய்வதாகவும், அவரது வீட்டார் தனது உடைமைகளை  வெளியே தூக்கிப் போடுவதாகவும், வீட்டை விட்டு வெளியேறச் சொல்வதாகவும், அதற்காக புகார் கொடுக்க வந்திருப்பதாகவும்  கூறினார். மேலும், தான் விவாகரத்துக்கு முறையீடு செய்யப்போவதாகவும் சொன்னார்.

தோழி மற்றும் கணவரது வேலை, படிப்பு விவரங்களை கேட்டுக்கொண்ட போலிசார், “சாஃப்ட்வேர்தான் சார், இப்போ எல்லாம் ஐடிக்காரங்கதான்…அதிகமா படிச்சிருக்காங்கன்னு சொல்றாங்க, ஆனா சண்டை போட்டுக்கிட்டு அசிங்கம் பண்றது அவங்கதான்” என்று புலம்ப ஆரம்பித்தார். ஒரு சில கேஸ் விவரங்களையும் பகிர்ந்துக் கொண்டார்.  தோழியின் வக்கீல் வந்து சேர்ந்தார்.  புகாரை வாங்கிக்கொண்டு இரவாகி விட்டதால் காலையில் வருமாறும், கணவரை அழைத்து விசாரிப்பதாகவும் வாக்களித்தார்.   கம்ப்ளெயிண்ட் பதிவு செய்து ஒரு ரசீது போன்ற ஒன்றைப் பெற்றுக்கொண்டு வெளியேறினோம்.

பெண் போலிசினால் பெண்ணுக்கு என்ன பயன்?

அடுத்தநாள் வந்தபோது, ஒருவர் ஆஜானுபாகுவான தோற்றத்தோடு அமர்ந்து தியானம், பக்தி பற்றி பேசிக்கொண்டிருந்தார். போலீசார் அனைவரும் மிகுந்த பயபக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். சந்தேகங்களையும் கேட்டுக்கொண்டார் ஒருவர்.  வெளியில் சென்றிருந்த இன்ஸ்பெக்டர் அதுவரை வரவில்லை.  தோழியை கண்டதும் ஏட்டு ஒரு கான்ஸ்டபிளை அழைத்து “இவங்க கூட போய் அவங்க வீட்டுக்காரரை கூப்பிட்டு வந்துடு” என்றார்.  தோழியும், கான்ஸ்டபிளும் சென்றுவிட நான் வெளியில் காத்திருந்தேன்.

நேற்று சந்தித்த அந்த பெண்ணின் அம்மா அங்கே நின்றிருந்தார். பார்த்ததும், “அவந்தாம்மா என் பொண்ணோட மாமனார், அவன் மேல தான் கம்ப்ளெயின் கொடுத்திருக்கேன், இவங்க என்னடான்னா அவனை உட்கார வைச்சு ஆன்மீகம் பேசுறாங்க, அவன் பேச ஆரம்பிச்சா அவனை மாதிரி நல்லவனே இல்லன்ற மாதிரி பேசு ஏமாத்திடுவான்” என்று அங்கலாய்த்தார். எத்தனை ஆனந்தாக்கள் வந்தாலும்……என்று நினைத்துக்கொண்டதை சொல்லவில்லை. அதிருப்தியை அவருடன் பகிர்ந்துக்கொண்டதோடு சரி!

இதன் நடுவில், அந்த புறநகர்ப்  பெண் வந்து நின்றுக்கொண்டிருந்தார். யாரும் அவரை விசாரிக்கவில்லை. ஆன்மீகத்தில் லயித்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் அதற்குள் வந்துவிட, குறிப்பிட்ட பெண்ணும் அவரது கணவர் மற்றும் பெண்ணின் சகோதரரும் எங்கிருந்தோ வந்தனர். அவர்களை ஜீப்பில் ஏறுமாறு சொன்னதும் அப்பெண் விசும்பத் தொடங்கினார்.  ஒரு போலிஸ், “அழாதே, உனக்கு என்ன வேணுமோ நாங்க பண்ணித்தரோம், ஒரு பொண்ணோட கஷ்டம் இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்” என்று சொல்லி அழைத்துச் சென்றார். இப்போது அவர்களின் கவனம் புறநகர் பெண்ணின் மீது திரும்பியது.

அந்த பெண்ணிடம், “நீ நேத்து வந்தே இல்ல, ஒரு பேப்பர்லே கம்ப்ளெயின் எழுதிக் கொடு ” என்று ஒரு பேப்பரை தந்தார் ஒருவர். அந்த பெண் மருண்ட படி, அதை வாங்கிக்கொண்டு என்னிடம் திரும்பினார். “அக்கா கொஞ்சம் எழுதி தர்றீங்களா” என்று விவரங்களை கூறத் துவங்கினார்.  எழுதப்படிக்க தெரியாதவர்களால் அல்லது வக்கீலை வைத்து புகார் மனு  கொடுக்க முடியாதவர்கள் நிலை இதுதானா? ரைட்டர் என்பவர் புகாரை எழுதிக் கொள்ள  மாட்டாரா?

இதன் நடுவில், இன்னொரு பெண்,  தனது கணவரை அவரது தாய்‍‍ தந்தை அழைத்துச் சென்றுவிட்டதாகவும், மாமியார் காலால் உதைத்ததாகவும்,  சாமான்களை எல்லாம் அவரது கணவர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் புகார் செய்தார். ஏறகெனவே எழுத்துவடிவில் புகார் கொடுத்திருப்பார் போல. “நீ என்னமா ஆசைப்படறே, வாழணும்னு விரும்பறியா” என்று போலிஸ் கேட்க அந்த பெண் ” ஆமா மேடம், நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அவர் கூட தான் வாழணும்னு ஆசைப்படறேன்” என்றதும் “உனக்கு என்ன வேணுமோ நாங்க பண்ணித்தரோம்” என்று உறுதியளித்தார் ஏட்டு.  அந்தப் பெண்ணுடன் இன்னொரு கான்ஸ்டபிளை அனுப்பி அந்த பெண்ணின் கணவரையும், அவர்கள் குடும்பத்தினரையும் அழைத்து வரும்படி சொன்னார் சப்‍இன்ஸ்பெக்டர். கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்துவிட விசாரணை ஆரம்பமாகியது.

சிறுபிள்ளைகள் போல இருதரப்பும் மாற்றி மாற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தபோது,  ‘என்ன இருந்தாலும் மருமகளை எதுக்குங்க அடிக்கறீங்க, அதான் கல்யாணம் பண்ணி வைச்சுட்டீங்க இல்ல, அப்புறம் அவங்க ரெண்டு பேரு வாழ்க்கை” என்றதும்  “அவ என் பையனை கை நீட்டி அடிச்சா, அதை பாத்துக்கிட்டு என்னை சும்மா இருக்க சொல்றீங்களா” என்றார் பெண்ணின் அம்மா.

திடுக்குற்ற  போலீஸ் அந்தப் பெண்ணிடம், “என்னம்மா,  அவங்க சொல்றது உண்மையா” என்றதும், “ஆமா மேடம், சண்டையிலே அவர் என்னை கீழே தள்ளுனாருங்க மேடம், நானும் கை ஓங்கி அடிச்சேன்” என்றார். பெருமைக்குரிய விஷயம்தான் இல்லையா…மேலும் வெகு இயல்பான கோபம்தான் அது. ஆனால், விசாரித்துக்கொண்ட போலீஸ்காரருக்கு அப்படி படவில்லை போலும். நூற்றாண்டுகளாக நமது மூளையில் பதிய வைக்கப்பட்டிருந்த அந்த உன்னத கேள்வி அப்போது போலீசு வாயில் இருந்து வெளி வந்தது ” என்ன இருந்தாலும் ஒரு ஆம்பிளைய நீ கை நீட்டி அடிக்கலாமா” என்பதுதான் அது!!  இப்போது அந்தப் பெண்ணிடம் பதிலில்லை.  பஞ்சாயத்து தொடர்ந்து நடந்து ஒரு வழியாக அப்பெண்ணும் அவரது கணவரும்  அதே ஏரியாவில்  இரு தெருக்கள் தள்ளி தனிக்குடித்தனம் வைக்கவேண்டும் என்ற தீர்ப்போடு சப்‍இன்ஸ்பெக்டர் அவர்களை அனுப்பி வைத்தார்.

இதற்குள் தோழியும், அவரது கணவரும் வந்துவிட  போலீஸ்காரர் இருவரையும் விசாரித்தார். தோழி சொன்னது, தோழியின் கணவர் தனது வக்கீலுடன் மாலையில் வருவதாக சொன்னதும் மாலை ஆறு மணிக்கு வருமாறு இருவரிடமும் கூறி திருப்பி அனுப்பிவிட்டன‌ர்.  மாலையில், நானும் தோழியும் திரும்பச் சென்றோம். காவல்நிலையத்தின் நுழைவாயிலின் அருகில் சென்றபோது  ஒரு ஆண் வெளியே வந்தார்.  பார்த்தால்  நடுத்தர வயது என்று சொல்லலாம்.   சற்று குட்டையான உருவம். சற்று பதட்டமாக இருந்தது போலிருந்தது.  வெளியே வந்த போலிசு, “எதுன்னாலும் பயப்படாதே, ராத்திரியிலே ஏதாவது பிரச்சினைன்னா உடனே 100 ஐ கூப்பிடு” என்றதும் அவர் தலையை ஆட்டியபடி சென்றார்.

இன்ஸ்பெக்டரும் இன்னும் சில போலிசுகளும் வெளியே வந்தனர். எங்களைப் பார்த்தும், “அதோ போற ஆளு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி “ஐயய்யோ வாங்க மேடம், என் வீட்டுக்குள்ளே வேற ஒரு ஆள் பூந்திருக்கான்”னு பதறியடிச்சுக்கிட்டு வந்தான். ஆளை அனுப்பினா, அவன் பொண்டாட்டி பிறந்தமேனியா வேற ஆள்கூட இருந்திருக்கா. சனியனுங்க….அப்புறம் துணியை போடவைச்சு இங்கே கூப்பிட்டு வந்திருக்கோம்..உள்ளேதான் இருக்குதுங்க ரெண்டும்..டைவர்ஸ் வாங்கிட்டு எவன்கூடயாவது போக வேண்டியதுதானே…ஒண்ணும் சொல்லிக்க முடியலை…அவ தெளிவா பேசறா…இவன் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க..பொம்பளைங்க சரியில்லைங்க இந்த காலத்துலே” என்று சொன்னபடி ஏதோ பந்தோபஸ்துக்காக செல்வதாக சொல்லிவிட்டுச் சென்றார்.

நாங்களும் தோழியின் கணவர் தரப்புக்காக காத்திருந்தோம். உள்ளே அந்த குறிப்பிட்ட ஜோடி நின்றிருந்தனர். அப்பெண்ணைப் பார்த்தால் ஒரு முப்பந்தைந்து மதிக்கலாம். மெலிந்த உருவம் கொண்டவராகவும், மொட்டையடித்து இரு இன்ச் வளர்ந்த முடியுடனும் முகத்தில் எந்த உணர்ச்சிகளும் அற்று நின்றிருந்தார். கண்டிப்பாக அவர‌து கணவருக்கும் இவருக்கும் குறைந்தது பத்து வருடங்களாவது இடைவெளி இருக்கலாம். சற்று தள்ளி,  28 வயது மதிக்கத்தக்க, சட்டையில் பட்டன்களை ஏறுக்குமாறாக போட்டபடி அவன் நின்றிருந்தான். முகம் இறுகிப் போயிருந்தது.

அப்போதுதான், ஒரு தம்பதி உள்ளே நுழைந்தனர். காலை தாங்கி தாங்கி நடந்தபடி அந்த அம்மா வர அவருக்கு கைலாகு கொடுத்து அழைத்து வந்தார் அவரது கணவர். ஒரு போலீசுக்கார பெண், அவர்களை பெஞ்சில் அமரச்சொன்னார். அந்த அம்மா, திரும்பி அந்த பையனைப் பார்த்து சட்டை பித்தான்களை ஒழுங்காக போடுமாறு சைகை காட்டினார். அவனோ அதை சற்றும் லட்சியம் செய்யவில்லை. அந்த பையனின் பெற்றோர் இவர்கள். அந்த வயதானவரிடம் விபரங்கள் கேட்டு, பெண் போலிசு ஒரு தாளில் எழுதத் தொடங்கினார். முடிக்கப் போகும் தறுவாயில் அந்த அம்மாள் எங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா என்று கேட்டார்.  எங்களிடம் சில நூறு ரூபாய்களே இருந்தன. அந்த அம்மாளின் கணவர் வெளியே சென்றுவாங்கி வந்தார். அந்த தம்பதியினரும், அந்த பெண் போலீசும் உள்ளறைக்குச் சென்றனர். சற்று நேரத்தில், அந்த தம்பதியினருடன் அந்த ஆளும் வெளியே வந்தனர்.

அந்த ஆளின் முகத்தில் எந்த பாதிப்பு தெரியவில்லை. மிக சாதாரணமாக ஒன்றும் நடக்காதது போலவே வெளியே வந்தார். கேட்டின் அருகில் மூவரும் சென்றதும், அந்த அம்மாள் மட்டும் திரும்ப உள்ளே வந்தார். அமர்ந்திருந்த அப்பெண்ணின் அருகில் சென்று குனிந்து கையை நீட்டி, “இனிமே ஏதாவது தப்பு நடந்தது கொன்னுடுவேன்” என்றும் “வெக்கமாயில்லே, உனக்கு ரெண்டு பசங்க இருக்கு இல்லே, ஒழுக்கமா இருக்கிற வழிய பாரு”  என்று கடுகடுப்பாக சொல்லிவிட்டு எங்களை நோக்கி “அவளுக்கு கொஞ்சமும் மானம் ரோஷம் இல்லே, எப்படி உட்கார்ந்திருக்கா பாருங்க‌” என்று  சொன்னபடி தாங்கி தாங்கி நடந்துசென்றார்.

நிச்சயம் இது ஆச்சரியமாக இல்லை. ஒழுக்கம் என்பது பெண்ணுக்கும் மட்டுமே, ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், மானம் ரோஷத்துடன் வாழ வேண்டியது பெண் மட்டுமே என்று சட்டங்கள் எழுதும் நாட்டில் இது ஒன்றும் ஆச்சரியமே இல்லை. போலீஸ் ஸ்டேஷன் என்ன? நீதிமன்றங்களில் கூட எழுதப்படாத சட்டங்கள் உயிருடன் தானே இருக்கின்றனர். முழு தவறுக்கும் பெண்ணே பொறுப்பு என்பது போல அந்த ஆணின் தாயே அப்பெண்ணை பழித்து தவறில் பங்கு பெற்றவனை பெருமை குறையாமல் அழைத்துச் செல்ல முடிகிறதே! அப்பெண்ணை திட்டிய மறுகையோடு அந்த ஆணையும் நாலு அடி செருப்பால் அடித்திருந்தால் அவர் சொல்லும் ஒழுக்கத்திற்கு அர்த்தம் உண்டு.

அந்த அம்மாள் சென்றபின்,  போலீசுக்காரர் “நல்லாவா இருக்கு இதெல்லாம், ஒழுங்கா இருக்க வேண்டியதுதானே, ரெண்டு பசங்க இருக்கு இல்லே” என்று தன் பங்குக்கு ஆரம்பித்தார். தனித்து விடப்பட்ட அவர் தனது செல்போனில் யாரையோ அழைத்தார். அவரை அழைத்துச் செல்ல யாராவது வரவேண்டுமே! “யாருக்கு போன் பண்றே, யாரும் இல்லேன்னே இல்லே, போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணு ” என்று தனது அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தார் போலிசுக்காரர். “இல்லே, எங்க சித்தி பொண்ணுக்கு…” என்று இழுத்ததும் போனை வாங்கி வைத்துக் கொண்டார். கதியற்று அமர்ந்திருந்த அப்பெண் அடுத்து என்ன நடக்கும் என்று அந்த போலிசிடமே வினவினார். “கோர்ட்டுல போகணூம்” என்று சொல்லிவிட்டு “அந்த ஜன்னலை எல்லா சாத்து, பின்னாடி கதவை மூடிட்டு வா” என்று வேலைகளை ஏவத் தொடங்கினார்.

எவ்வளவு மனித உரிமை மீறல்! அப்பெண் தவறு செய்தவளாகவே இருக்கட்டும், அவரைப் பற்றிய தீர்மானங்களை, முடிவுகளை,  தண்டனைகளை எடுக்க இவர்கள் யார்? போலிசாகத்தான் இருக்கட்டுமே! என் தோழியின் விஷயத்தில் பெண் காவல் அதிகாரிகளின் போக்கு  சுவாரசியமான, நிச்சயம் விவாதத்திற்கான சம்பவமே! பிறிதொரு முறை பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஆனால், மகளிர் காவல் நிலையங்கள் என்பவை ஆண் காவல் நிலையங்களில் அல்லது பொதுக் காவல் நிலையங்களின் மற்றுமொரு கையாகவே விளங்குகிறது.  அதாவது, பொதுக்காவல் நிலையத்தின் பணிச்சுமையை வேண்டுமானால் இந்த அமைப்பு குறைக்கலாமே தவிர இதனால் பெண்களில்/குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் அல்லல் சற்றும் குறையவில்லை.   இது, பெண்ணின் கைக் கொண்டு பெண்களை ஒடுக்குவதற்கே இவ்வமைப்பு உறுதுணையாக இருக்கிறது. சட்டமும், ராணுவமும், போலிசும் எப்படி ஒரு வர்க்கத்தை ஒடுக்க மற்றொரு வர்க்கமாக இருக்கிறதோ அது போல.  மகளிருக்கான  பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை  ஓரளவுக்கு தருவதாகக் கொண்டாலும், உரிமைகளை பாதுகாக்க ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍, ‍ குறைந்த பட்ச மனித உரிமைகளைக் கூட கொடுக்க முடியவில்லை. இதற்கு பெண் அதிகாரிகளின் போக்கும் முக்கியக் காரணம்.

ஏற்கெனவே சமூகத்தால் உண்டாக்கி வைக்கப்பட்ட கருத்துகளை தலையிலேற்றிக் கொண்டு அதை கட்டிக்காப்பதிலேதான் முனைப்பாக இருக்கிறார்களே தவிர வேறு எந்த சுதந்திரமான சிந்தனைகளோ முற்போக்கான எண்ணங்களோ நான் கண்ட காவல்நிலையத்தில் இல்லை.  சென்னையில் புறநகர் பகுதியிலே இப்படி  என்றால் தமிழகத்தின் கிராமப்புற/ஊராட்சிகளில் எப்படி இருக்குமென்று நீங்களே கற்பனை செய்துக் கொள்ளலாம்.  மேலும், குடும்பப் பிரச்சினைகளை வெளியே கொண்டு  வரும் பெண்களை‍ , படிக்காத அப்பாவி பெண்களை, குரல் உயர்த்தத் தெரியாத பெண்களை நடத்தும் முறை நிச்சயம் வேறுதான்.

பெரும்பாலும் இவை குடும்ப அமைப்புகளை கட்டிக்காக்கவே, குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை கட்டப்பஞ்சாயத்து முறையில் தீர்க்கவே முற்படுகின்றன.  புகாரை வாங்கிக் கொண்டு இருதரப்பிலும் எழுதி வாங்கிக்கொண்டு விட்டுவிடுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. அடிவாங்கி ரத்தம் சொட்ட வந்தாலொழிய இவர்கள் வன்முறை என்று நம்புவதில்லை. மனதளவில் நடந்தாலும் வன்முறை வன்முறையே! ஒரு கட்டத்தைத் தாண்டி இவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்,  குடும்ப அமைப்பினால் அழுத்தப்பட்டு, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு திசை தேடி வரும் பெண்களை மீண்டும் அவ்வமைப்பிற்குள்தான் தள்ளுவதுதான் இக்காவல் நிலையங்களின் கடமைபோலவே நடந்துக் கொள்கிறது.  “மகளிர் காவல் நிலையங்களினாலே விவாகரத்தின் எண்ணிக்கை கூடுகிறது” என்று ஹை கோர்ட்டின் நீதிபதி ஒருவர் தீர்ப்பெழுதி இருக்கிறார். அதனால், குடும்பப் பிரச்சினைகளை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதுவும் செய்து விட முடியாது என்று சால்ஜாப்பு வேறு இவர்களுக்கு இருக்கிறது.

பன்னெடுங்காலமாக, ஒடுக்கப்பட்ட பெண், சமூகத்தாலும் குடும்பத்தாலும் வஞ்சிக்கப்பட்ட பெண் சட்டத்தின் துணைக் கொண்டு  வெளிவே வரும்போது அவளுக்கு உதவாமல் குடும்பத்தை கட்டிக்காக்கும் கோர்ட்டுகளும் காவல் நிலையங்களும் எதற்காக?

ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் தனக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதியையும், வன்முறையையும் பேசமுற்படுவாராயின்….நிச்சயம் சிவில் போர்தான். முற்றிலும் ஆணாதிக்கத்தை தலையில் சுமந்துக் கொண்டிருக்கும், ஆணின் எண்ணங்களை உள்வாங்கிய பெண்கள் வேலை செய்யும் இடமே மகளிர் காவல் நிலையங்கள். இவற்றினால் என்ன பயன்?

_________________________________________________________

– கலா, வினவு வாசகர்
_______________________
_______________________________________