privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!

தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!

-

Ø  கூடுதலாக்கப்பட்டுள்ள கடுமையான வேலைப்பளு மற்றும், தொழிற்சாலையின் பணிச்சூழல் காரணமாக சமீப நாட்களில் பலர் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.

Ø  சில வாரத்திற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்ட தொழிற்சாலை ஆய்வாளர் தனது ஆய்வின் போது 7 தொழிலாளா்கள் முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து பதிவு செய்துள்ளார்.

Ø  பணிச்சுமையை கண்டித்து, கட்டாயப்படுத்திய பணி நேர நீடிப்பை கண்டித்து 30 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ø  சமரச நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வாருங்கள் என அறிவுறுத்துவதற்கு பதிலாக “என்ன அங்கே நடக்கிறது என கடுமையோடு வினவும் மாநில முதல்வர்”

Ø  உடல்நலமில்லை, பணியில் சிரமம் இருக்கிறது என தெரிவித்த தொழிலாளர்கள் பலர் அந்த தொழிற்சாலையின் அடுத்தடுத்த மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கு அதிரடி ஊர் மாற்றம்.

Ø  நிர்வாகத்தின் சார்பில் மாநில முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் வேலைநிறுத்தம் செய்யும் பணியாளர்களில் 250 பேரை டிஸ்மிஸ் செய்யப் போகிறோம் என பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கும் நிர்வாகத்தின் துணைத் தலைவர்  பி.பாலேந்திரன்.

Ø  இவையெல்லாம் எங்கே என்று யோசிக்கிறீர்களா?  வருடத்தில் ஒரு நாள் கூட இம்மாநிலத்தில் தொழிலாளாளர்கள் அமைதியின்மை (labour unrest) என்பதை பார்க்க முடியாது என பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்ம மாண்புமிகு பாசிச நாயகனான மோடியின் குஜராத்தில்தான் !!

__________________________________________________________

குஜராத்: ஜி எம் தொழிலாளர்களை ஒடுக்கும் மோடியும் முதலாளிகளும்!குஜராத்தின் ஹலோல் எனுமிடத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம் அமைந்துள்ளது.  இதில் செவ்ரோலெட் உள்ளிட்ட பல நவீன கார்கள், இறக்குமதி செய்யப்பட்ட உதிரிகளை வைத்து தயார் செய்யப்படுகிறது.  இந்த தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கும் பணியில் சுமார் 4000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த தொழிற்சாலையில் ஐஎன்டியுசி மற்றும் ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதன் விளைவாக டிசம்பரில் 3 வருடம் அமுலில் இருக்குமாறு பணிச்சுமை விபரங்களுடன் இணைந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

இருப்பினும் பணிச்சுமை மிகுதியின் காரணமாக, கட்டாயப்படுத்தி தொடர்ச்சியாக கூடுதல் நேரம் பணிபார்க்க கட்டாயப்படுத்தலின் காரணமாக பலர் தீராத முதுகு வலி மற்றும் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கிறார் மஹிர் தேசாய், பொதுச் செயலாளா், குஜராத் காம்டர் மண்டல் எனும் ஐஎன்டியுசி சார்பு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்.

குஜராத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையின் விளைவுகளை 2010-11- ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மேற்படி ஆண்டில் அதிகமான தொழிற்சாலை கதவடைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

ஹலோல் ஆலைப்பிரிவில் சுமார் 900 பணியாளர்கள் வருடத்திற்கு 85,000 கார்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.  கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தினால் சுமார் 1500 கார்கள் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 21-ம் தேதி பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஆதரவோடு “தர்ணா”ப்போராக தொடங்கியது, தொடர்ந்து வேலை நிறுத்தமாக மாறியது. வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு புறம் சட்ட விரோத வேலைநிறுத்தம் என்று வைத்துக் கொண்டாலும் அதிகமான அளவில் தொழிலாளர்கள் பங்கு பெறும் போது மாநிலத்தின் தொழிலாளர் துறை தலையிட்டு சமரச முயற்சிக்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.  ஆனால் அது போன்ற முயற்சி எதுவும் துவக்கப்படவில்லை.

ஐஎன்டியுசி சங்கத்தின் தலைவர்  நிஹின் மித்ரா தெரிவிக்கையில்  தொழிலாளர்களின் பணிச்சுமை என்பது ஒவ்வொருவருக்கும் சுமார் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் பலர் உடல் நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.  உடல் நலமில்லை என புகார் தெரிவிப்பவர்களில் பலா் இந்த ஆலையின் விற்பனை பிரிவுகளான டில்லி, குர்கான், சென்னை மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  மறுபுறம் 4 தொழிலாளா்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை தலையிட்டு தனது அடக்குமுறையை உபயோகித்து பல தொழிலாளர்களை வெளியேற்றியுள்ளது.  இது போன்ற வேலை நிறுத்தங்களுக்கான தொழிலாளர்களின் ஆதரவு பெருகும் சூழல் ஏற்பட்டால் அருகிலுள்ள மற்ற பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து பணியிலிருக்கும் தொழிலாளர்களின் பணி பறிபோய்விடும் என மிரட்டும் போக்கை கடைப்பிடிப்பது இங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வழக்கமாக உள்ள ஒன்று என்கின்றனர் இங்கு வேலை நிறுத்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதி கொடுத்தாலே இந்தியாவில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள் என்பதால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு தொழில் துவங்க வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திற்கு இதன் தொழிலாளர்களால் புகார் அனுப்பப்பட்டு தொழிலாளர் நலன் காக்கும் பணி இவரது பணியில் ஒரு பகுதி என்று கருதக் கூடிய மாவட்ட ஆட்சித்தலைவரை இது குறித்து விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

ரூ 7000 மட்டுமே சம்பளமாக பெறும் தொழிலாளியை மாநிலம் விட்டு மாநிலம் மாற்றினால் எவ்வாறு அவரது குடும்பத்தை பராமரிக்க இயலும் என்கின்றனர் இங்குள்ள தொழிற்சங்க தலைவர்கள். இந்த நிறுவனத்தின் உதவி தலைவர் பி. பாலேந்திரன் தெரிவிக்கையில் கடந்த ஊதிய ஒப்பந்தத்திற்கு பிறகு தொழிலாளர்கள் நல்ல முறையில் சம்பளம் பெற்று வருகின்றனர்.  இவர்களது வேலை நிறுத்தம் என்பது தேவையற்றது.  இந்த வேலை நிறுத்தத்தை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் இது சட்ட விரோத வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர்.  எனவே தொழிலாளர்கள் உடனடியாக வேலை நீக்கத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கிறார்.

இதன் நடுவில் பி.பாலேந்திரன் மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து கேட்ட போது சட்ட விரோத வேலை நிறுத்தம் தொடர்ந்து வருவதால் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது எனவே 250 பணியாளர்களை நிரந்தர பணி நீக்கம் செய்யப் போகிறோம் என அனுமதி கேட்கப்பட்டது என்ற செய்தியை மறுக்கவில்லை.

மற்றொரு புறம் இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையுத்திரவு பிறப்பிக்கப்பட்டு 4 பேர்கள் சேர்ந்து நின்றால் கூட காவல் துறையினரால் விரட்டியடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இது மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கை என்கின்றனர் தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இதன் தயாரிப்பு பணிகளை தற்காலிகமாக, மாநிலத்தின் எல்லைக்கருகிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலுமாக அமைந்துள்ள தலேகான் தொழிற்சாலைக்கு நிர்வாகம் மாற்றியுள்ளது.

இணைய தளங்களில் வெளியான இந்த வேலை நிறுத்தம் பற்றிய செய்திகள், மற்றும் வட மாநில ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த அளவிற்கு மட்டுமே விவரங்கள் நமக்கு தெரிய வந்துள்ளது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் விளைவுகளினால் இந்தியாவில் தாராளமாக திறந்துவிடப்பட்டுள்ள “சிறப்பு பொருளாதார மண்டலங்களின்” கீழ் வரும் பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்களை கையாள்வது, அவர்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் விடுவது, மிரட்டுவது, ஊர்மாற்றம் செய்வது, வேலைநீக்கம் செய்வது, என்பது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் என்பது மிகுதியாகவே இருந்து வருகிறது.  கையாலாகாத தொழிலாளர் துறை என்பது தலையிடுவதோ, தனது குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்துவதோ சுத்தமாக இல்லை என்பதே எதார்த்தம்.

“தொழில்துறையில் புரட்சி, வளர்ச்சியில் மின்னும் எங்கள் தேசத்தை பாருங்கள்” என்கிற மோடியின் குஜராத் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.  ஓட்டுக்கட்சி சங்க தலைமைகளை புறந்தள்ளி தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகவும் புரட்சிகர அரசியலின் கீழ் ஒன்றிணைந்து போராட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவிகரமாக இருக்கும்.

முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தாலாட்டும் மோடியின் குஜராத், தொழிலாளிகளின் உரிமையை எப்படி காலில் போட்டு மிதிக்கிறது என்பதற்கு இந்த செய்தியே போதுமானது. பாசிச மோடியின் இரசிகர்கள் என்ன சொல்வார்கள்?

________________________________________________

–  சித்ரகுப்தன்
________________________________________________

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: