privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்October 1928 - உலகை குலுக்கிய பத்து நாட்கள் - வீடியோ !

October 1928 – உலகை குலுக்கிய பத்து நாட்கள் – வீடியோ !

-

உலகை குலுக்கிய பத்து நாட்கள் (அக்டோபர் திரைப்படம்) – வீடியோ! இன்றைய சினிமாவில் நாம் பார்ப்பது என்ன? பொறுக்கி ஹீரோ, பாடலுக்காக – கவர்ச்சி உடையில் ஆட கதாநாயகி; பொய்யும் புரட்டுமான வரலாறுகள், தாலி முதல் மெட்டி வரை சகலவிதமான சென்டிமென்டுகள்,துப்பாக்கி எடுத்து சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டே இருக்கும் ஜேம்ஸ்பாண்ட், ஒரு வயதானவர் எழுந்து, நடந்து, திரும்பி படுப்பதை அரை மணி நேரம் காட்டும் கலைப்படங்கள், ஒருவர் பேசுவதையே அரை மணி நேரம் சுற்றி சுற்றி காட்டும் காமிரா (பிரச்சார படமாம்), பஞ்ச் டையலாக், ஃபாரின் லொக்கேஷன்….

இதில் உண்மையான  உழைக்கும் மக்கள் எங்கே? அவர்களின் எழுச்சி எங்கே? அவர்கள் ஏமாற்றப்படுவதை பற்றிய விழிப்பு எங்கே?

சுரண்டப்படும் வர்க்கத்தை, போதையில் ஆழ்த்தும் இன்னொரு அபினி தான் இந்த சினிமா. ஆனால், அந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எழுச்சியையும், போராட்ட குணத்தையும் ஊட்டுவதற்கு, உழைக்கும் வர்க்கத்தின் முதல் புரட்சியை ஆவணப்படுத்திய ஒரு படம் உள்ளது – அது தான் “உலகை குலுக்கிய பத்து நாட்கள் (அக்டோபர்).

ரஷ்ய தொழிலாளர் புரட்சியின், 10- ஆம் ஆண்டு நிறைவையொட்டி, 1927-ல் செர்ஜி ஐசன்ஸ்டீனால் உருவாக்கப்பட்ட மவுனப் படம் – ஆனால் உன்னத திரைப்படம்.

ஆண்டானுக்கு அடிமையாகவும், பண்ணையாருக்கு கூலியாகவும், முதலாளிக்கு தொழிலாளியாகவும் எப்பொழுதும் உழைத்து ஓடாய் தேய்ந்த பாட்டாளி வர்க்கம் ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிகாரத்தை கைப்பற்றும் என்றும் மனித சமூக வரலாற்றில் யாரேனும் நினைத்திருப்பார்களா? ஆனால், அந்த பாட்டாளி வர்க்க எழுச்சி நடந்தேறியது. ரஷ்ய காலண்டர்படி, அக்டோபர் 28- ம் நாள் – உலக பாட்டாளிகளின் பிரதிநிதிகளாக ரஷ்ய பாட்டாளி வர்க்கம், அதிகாரத்தை கைப்பற்றிய நாள். உலக முதலாளித்துவத்திற்க்கு சவால் விட்ட நாள். ஆயிரமாயிரம் காலம் அடிமைகளாக இருந்தவர்கள் நினைத்துப்பார்த்திருப்பார்களா, அவர்கள் ஆளுவார்கள் என்று? எவ்வளவு ரத்தம், எத்தனை துயரம், அத்தனையும் மீறி பாட்டாளி வர்க்கத்தின் செங்கொடி பட்டொளி வீசிப் பறந்த தினம்.

அமெரிக்காவில், ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த ஜான் ரீட், சோஷலிசத்தின்பால் ஈர்க்கப்பட்டு ஒரு பத்திரிக்கை நடத்தினார். மார்க்சியத்தை நன்கு உணர்ந்த ஜான், அமெரிக்காவில் சோஷலிச அரசை நிறுவ வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார்.

உலக சோஷலிஸ்டுகளின் நிகழ்வுகளை ஆய்ந்தறிந்து வந்த அவர் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் எழுச்சியடைவதையும், அங்கு போல்ஷ்விக் எனும் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கை புரட்சியை நோக்கியிருப்பதையும் கண்டறிகிறார்.

ரஷ்யாவில் நடந்த, முதல் புரட்சியின் பலனை மென்ஷ்விக்குகள் அறுவடை செய்ய முனைகிறார்கள். ஜார் மன்னனை விரட்டி முதலாளிகளை ஆட்சியில் அமர்த்தியதுதான் மிச்சம் என்கிற நிலையில், போல்ஷ்விக்குகள் தாக்கப்படுகிறார்கள். லெனின் தலைமறைவாகிறார்.ஆனால், போல்ஷ்விக்குகள் புரட்சியை நோக்கிய தங்கள் நகர்வை திட்டமிட்டு நடத்துகிறார்கள்.

முதலாம் உலக போரில் ஜார் மன்னனின் படையாக களத்தில் இறங்கும் ரஷ்ய ராணுவம், மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. துப்பாக்கியில்லை, குண்டுகள் இல்லை, உணவில்லை, போதுமான காலுறைகள் கூட இல்லை, மொத்தத்தில் ஏன் போராடுகிறோம் என்றே தெரியாமல் வெறுப்புற்றிருந்தனர். மொத்த உலகமும் போரில் கவனம் செலுத்தி வந்தது. முதலாளித்துவ நாடுகள் தங்களுக்கான காலனிகளை பிடிப்பதில் தீவிரமாக போரிட்டுக்கொண்டிருந்த்னர்.

ரஷ்யாவில் புதிதாக வந்த மென்ஷ்விக்குகளின் அரசு, மக்களுக்கு ஏதும் புதிதாக செய்யவில்லை, சுகபோகமாக இருப்பதிலேயே கவனமாக இருந்தனர். ராணுவத்தை பற்றியும் கிஞ்சித்தும் கவலை இல்லை.மேலும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர். இந்த நேரத்தில் போல்ஷ்விக்குகள் புரட்சியை நோக்கிய தங்கள் வேலைகளை மீண்டும் செய்துகொண்டிருந்த்னர்.

இதையெல்லாம் கேள்விபட்ட ஜான் ரீட் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு ரஷ்யா வந்தார். ரஷ்யாவிலேயே தங்கி ரஷ்ய புரட்சியின் ஒவ்வொரு நிகழ்வையும், ரஷ்ய மக்களின் நிலை, ராணுவத்தின் நிலைப்பாடுகள், அரசின் ஏகபோகம் என்று சகல விடயங்களையும் பதிவுசெய்துகொள்கிறார்.எந்த நேரத்திலும் புரட்சி வெடிக்கும் என்ற சூழ்நிலையில், அந்த நிகழ்வுகளை கண்காணிக்கும் ரீட், லெனின் தலைமையிலான ரஷ்ய பாட்டாளிவர்க்கத்தின் எழுச்சியை நேரிலேயே காண்கிறார்.

அமெரிக்கா திரும்பிய ரீட்,  இந்த நிகழ்வுகளை தன் அரசியல் பார்வையில் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். பிற்காலத்தில், லெனினாலேயே பாராட்டப்பட்ட அந்த புத்தகம் தான் “உலகை குலுக்கிய பத்து நாட்கள்”.

ரஷ்ய புரட்சியின், 10 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ரஷ்ய திரைப்பட இயக்குனரான செர்ஜி ஐஸன்ஸ்டின் தலைமையில், ரஷ்ய புரட்சியை பற்றிய படங்களை எடுக்க, அரசு கோரிக்கை விடுத்தது. ஐஸன்ஸ்டீனும், ”உலகை குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகத்தை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை இயக்கினார்.

ஜார் மன்னனை எதிர்த்து, அவனை வீழ்த்துவதிலிருந்து தொடங்கும் இந்த திரைப்படம் மென்ஷ்விக்குகளின் போலி அதிகார ஆடம்பரங்களை அம்பலபடுத்தி, அவர்கள் புரட்சியை கெடுக்க வந்த பாதகர்கள் என்பதை விளக்குகிறது. அதை தொடர்ந்து மக்களின் எழுச்சி, ராணுவத்தின் மக்கள் ஆதரவு,போல்ஷிவிக்குகள் இதை சரியாகக் கணித்துத் திட்டமிட்டு லெனின் தலைமையில் அதிகாரத்தை கைப்பற்றுவதுடன் படம் முடிவடைகிறது.

உலக வரலாற்றில் பாட்டாளிகளின் எழுச்சியை ஆவணப்படுத்தும் அதே நேரம், ஒரு சிறுபிழையோ, திருத்தலோ இல்லாமல் திரைப்படத்தை இயக்க வேண்டிய பெரிய பொறுப்பு ஐஸன்ஸ்டீனிடம் இருந்த்து. ரஷ்ய எழுச்சியை தொடர்ந்து, உலக பாட்டாளிவர்க்கத்தை தட்டி எழுப்ப வேண்டிய சீரிய கடமை ரஷ்ய பாட்டாளிவர்க்கத்திற்க்கு இருந்த்து.

சினிமா என்கிற இந்த விஞ்ஞான தொழில்நுட்பம், முதலாளிகளிடம் இருந்த போது வெறும் பொழுதுபோக்குக்காக பார்க்கப்பட்டதை கம்யூனிஸ்ட்டுகள் நன்கு அறிவார்கள். அதே நேரம், அந்த சினிமாவை ஊடகமாக மாற்றும் முயற்சியில் ரஷ்ய அரசு இயங்கியது. மக்களுக்கான பிரச்சார படங்களை தயாரிக்க முனைந்தனர். குறிப்பாக, ’கலை மக்களுக்காக’ என்பதை உணர்ந்து கலைப்படைப்புகளை உருவாக்கினார்கள்.

மோசமான உள்ளடக்கத்தை வைத்திருப்பவர்கள்தான், அதை மக்களுக்குத் திரும்பக் கொடுப்பதற்கு, வடிவத்தில் ஆடம்பரத்தையும், வித்தைகளையும், மாய்மாலங்களும் செய்ய வேண்டும். ஒரு சிறந்த உள்ளடக்கம் அதற்கு பொருத்தமான வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அதன்படி,ரஷ்ய படைப்பாளிகளிடம் இருந்த சிறப்பான உள்ளடக்கம் அதற்கு பொருத்தமான விஞ்ஞான வடிவத்தை தேடிக்கொண்டது.

முதல் காட்சியில், ஜார் மன்னனின் பெரிய சிலை மக்களால் அடித்து நொறுக்கப்படுகிறது. பின்னர், கெரன்ஸ்கி பதவியேற்றபோது அவரின் மோசமான ஆட்சியைக் குறிக்க ஐஸன்ஸ்ட்டீன் ஒரு எளிய உக்தியை கையாண்டார்- ரிவர்ஸ் ஷாட். மென்ஷ்விக்குகள் பதவியேற்றவுடன் அடுத்த காட்சியாக உடைந்த மன்னன் சிலை ரிவர்ஸ் ஷாட்டாக வந்து முழு சிலையாக காட்சியில் தோன்றும்.

கெரன்ஸ்கியை, அறிமுகம் செய்யும் போது, தொடர்ந்து, கெரன்ஸ்கியின் முகமும், நெப்போலியனின் சிலையும் காட்டப்படும். பிரஞ்சுப் புரட்சியை நசுக்கி, அதிகாரத்தின்  மூலம் ஆட்சியை பிடித்த நெப்போலியன் எப்படி புரட்சியை நசுக்கினானோ – அதேபோல்தான் ரஷ்ய மக்கள் எழுச்சியை தொடர்ந்த கெரன்ஸ்கியின் தலைமையும் என்பதை இரண்டு ஷாட்டில் சொல்லி முடித்துவிட்டார்.

பேட்டல்ஷிப் பொடம்கேனில் உள்ள ஒடேஸா படிகட்டுகள் காட்சியை போன்று இந்த படத்திலும் போல்ஷ்விக்குகளின் போராட்டம், அதை அடக்கும் மென்ஷ்விக் ராணுவத்தின் காட்சியைச் சொல்லலாம்.போராடும் மக்களை சிதைப்பதும் அதை மத்தியவர்க்கம் பார்த்து ரசிக்கும் காட்சியும் வர்க்க தன்மையையும், ரஷியாவின் அன்றைய நிலையையும் குறிக்கும் அழுத்தமான காட்சிகள்.

இறுதியில், லெனின் ரஷ்யான் அதிகாரத்தை கைப்பற்றி, அதை அறிவிக்கும் போது ஒரு வயதான ஏழை மனிதர் ஆனந்தமாக கை தட்டி மகிழும் காட்சியை காட்டியிருப்பார் ஐசன்ஸ்ட்டின். குறிப்பிடத்தகுந்த காட்சி அது. லெனினின் ஆட்சி – ஏழைகளின் ஆட்சி, பாட்டாளிகள் பதவிக்கு வந்துவிட்டனர். அதை உணர்த்துவிதமாக, அந்த ஏழை முதியவரின் பரவசத்தை பதியவைத்த ஒரு காட்சி போதும் – ஐஸன்ஸ்ட்டின் திரைப்பட ஆளுமையை சொல்ல;பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியை சொல்ல.

சினிமா என்பது கோடிகள் புரளும் ஒரு தொழில்,அங்கு பணம் முதலீடு செய்யப்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்பது தான் கொள்கை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எதையும் விற்கும் தேர்ந்த வியாபாரிகள் தயாரிப்பாளர்கள். ’குடியை கொடுத்து, குடியை கெடுத்தால் லாபம்’ என்றவுடன் அரசே டாஸ்மாக்கை நடத்தும் போது, எத்தகைய கீழ்த்தரமான படங்களையும் மக்களுக்கு காட்டி பணம் சம்பாதிப்பதா பெரிய குற்றமாகிவிடப்போகிறது?

ஆனால், சாதாரண மக்களையும், அவர்களின் வாழ்வையும், சுரண்டப்பட்டும் ஒடுக்கபட்டும் வாழும் அவர்களை எழுச்சியடையச் செய்து, போராட தூண்டும் படங்கள் தான் இப்போதைய அவசர தேவை. சமூகம் அவலமாக நாறிகிடக்கும் போது அழகை ரசிக்கும் மனநிலை என்பது ரோம்நகரம் பற்றி எரியும் போது பிடில்வாசித்த நீரோவின் மனநிலை. கலையில் இருக்கும் நீரோக்களை துரத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது..

பாட்டாளிவர்க்க சமூகத்தின் எழுச்சியை பாருங்கள், போராடுங்கள்!!

நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்!

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. படத்தை பார்த்தபோது சில காட்சிகளில் குழப்பமாக இருந்தது.விளக்கவுரையை படித்து பார்த்து திரும்பவும் பார்த்துபோது ரொம்ப பிடித்தது. தோழர்களுக்கு நவம்பர் தின புரட்சிகர
    வாழ்த்துக்கள்

  2. தோழர்களுக்கும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும்
    நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள் !

  3. அதன் பிறகு ஐசென்ச்டீன் இயக்கிய படங்கள் தீ இட்டு கொளுத்தபட்டதன் மர்மம என்னவோ?

  4. நவம்பர் 7 – புரட்சிகர நிகழ்ச்சி! – ஓர் அனுபவம்!

    காலச்சக்கரத்தை பின்சுழற்றி பார்க்கிறேன்.
    ஒரு சிறிய ஹால்.
    50,60 தோழர்கள்.
    பெரும்பாலும் ஆண் தோழர்கள்.
    புரட்சியை நேசிக்கும் தோழர்
    முதல் பாட்டாளிவர்க்க அரசின் சாதனைகளை
    கண்கள் பிரகாசிக்க சொல்வார்.
    முதலாளித்துவ கொடூரங்களின்
    உச்சங்களை சொல்வார்.
    இறுதியில்,
    ஒவ்வொருவரும் உறுதிமிக்க
    போல்ஷ்விக்காக
    உறுதி ஏற்கவேண்டும்! என்பார்.

    *****

    இன்றும் பார்க்கிறேன்.
    நிறைய இளம் மாணவர்கள்.
    சரிக்கு சரியாக இளம்பெண் தோழர்கள்
    இளம்தோழர்களின் அம்மாக்கள்,
    அப்பாக்கள்,
    அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
    குழந்தைகள்
    எல்லோருடைய வயதையும் கூட்டி
    எண்ணிக்கையால் வகுத்துப்பார்த்தால்
    வயது இருபதை தாண்டாது!
    ஆயிரத்திற்கும் அதிகமான நாற்காலிகள்.
    இடம் கிடைக்குமா என்ற பயம் வந்தது.
    இன்னும் வந்துகொண்டே இருந்தார்கள்.

    ****

    புரட்சிக்காக உயிரைக் கொடுத்த
    தோழர்களுக்கு
    உணர்ச்சிமிக்க பாடலால்
    வணக்கம் செலுத்தினார்கள்.

    ****

    ‘நான் உலகம்!
    தொழிலாளி – நானே உலகம்’
    பாடலுக்கு நடித்து
    உழைப்பால் உலகத்தைப் படைத்த
    தொழிலாளர்களுக்கு
    தன் அசுர பலத்தை உணரவைத்தார்கள்.

    ****

    நாடகத்தில்…
    குடித்துவிட்டு உதைத்த
    கணவன் மூஞ்சியில்
    தாலியை விட்டெறிந்தார்கள்.

    ****

    மாறுவேடத்தில்…
    இளம் பெரியாராக
    இளம் ஜான்சிராணியாக
    இளம் பகத்சிங்காக
    புதிய விடுதலை போருக்கு
    அறைகூவல் விடுத்தார்கள்.

    ****

    தங்களின் ஒற்றுமையால்; உறுதியால்
    புரட்சிகர சங்கத்தை கட்டியமைத்து
    முதலாளிகளின் திமிரை குறைத்த
    தொழிலாளர்கள் புதிய திமிருடன்
    கள அனுபவங்களை பகிர்ந்தார்கள்.

    ****

    அன்று பேசிய பேச்சு விதை!
    மக்களுடன்
    களத்தில் உறுதியுடன்
    போராடியதன் பயன்
    நக்சல்பாரி அரசியல்
    மக்களை பற்றிக்கொண்டுவிட்டது!
    மக்களே நக்சலைட்டுகளாக!
    இனி, எதிரிகளால்
    பிரித்து பேசமுடியாது!

    ****

    இதோ
    போராட்டங்களினால்
    கண்டெடுக்கப்பட்ட
    இளம் பெரியார்கள்
    இளம் அசரத் மகள்கள்
    இளம் பகத்சிங்குகள்!

    இனி,
    மெல்ல, மெல்ல
    எங்கும் பரவுவார்கள்.
    எட்டபர்களுக்கு
    காலம் நெருங்கிவிட்டது!

    நேற்று
    நிம்மதியாய் உறங்கினேன்!
    சுதந்திர தேசத்தில்
    செங்கொடி காற்றோடு
    ஜெயித்த கதை பேசுவதாய்
    கனவு வந்தது!
    விரைவில்
    கனவு நிஜமாகும்!

    ****

    http://socratesjr2007.blogspot.com/2011/11/7.html

  5. உழைக்கும் மக்கள்———– எங்கிருந்து இந்த வார்த்தைய கண்டுபிடிசிங்கலோ தெரியல ….. யோவ் போயா .. இதுக்கு மேல என்னால எழுத முடியல

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க