privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி !

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி !

-

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!இந்தியாவில் ஏற்கெனவே இயங்கிவரும் மற்றும் புதிதாக நிறுவப்படும் அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மையைக் கண்காணிக்கவும் உறுதி செய்யவும் புதிய சட்டத்தையும், அச்சட்டத்தின் கீழ் செயல்படத்தக்க புதிய ஆணையம் ஒன்றையும் உருவாக்கும் நோக்கத்தோடு அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதாவைத் தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைத்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  இதுநாள்வரை இந்தியாவிலுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத்தன்மையைக் கண்காணித்துவந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தைவிட, புதிதாக உருவாக்கப்படும் ஆணையம் எந்தவொரு அமைச்சகத்துக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகச் செயல்படும் என்றும்; அணுஉலைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவும், கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும்; அணு உலைகள் எந்த அளவிற்கு கதிர்வீச்சை வெளியிடலாம் எனத் தீர்மானிக்கவும்; அணு உலைகளை ஆய்வு செய்யவும், அணு உலைகளை இயக்கும் நிர்வாகத்திற்கு வழிகாட்டவும் உள்ளிட்டு இவ்வாணையத்திற்குப் பலவிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மைய அரசு தெரிவித்திருக்கிறது.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து அணு உலைகளைப் பற்றிய அச்சத்தை மக்கள் மத்தியில் மிகத் தீவிரமாக ஏற்படுத்தியிருப்பதால், அவர்களின் அச்சத்தைப் போக்கும்விதமாக அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணிக்க சுதந்திரமான ஆணையம் உருவாக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.  அந்த உறுதிமொழியைச் செயல்படுத்தும்விதத்தில்தான் இந்தப் புதிய சட்டமும், ஆணையமும் உருவாக்கப்படுவதாக காங்கிரசு கூட்டணி அரசு தெரிவித்திருக்கிறது.

அணு மின்சாரத்திற்கு மாற்று வேறு எதுவும் கிடையாது என ஆளும் கும்பலும் அதிகார வர்க்கமும் அடித்துப் பேசி வரும் நிலையில்; அமெரிக்கா மற்றும் பிரான்சிலிருந்து அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்; ஜெய்தாபூர், கூடங்குளம், கல்பாக்கம், கைகா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள் பரவிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை மசோதா மற்றும் அதன்கீழ் உருவாக்கப்படவுள்ள ஆணையத்தின் சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திரம், நடுநிலை, ஒளிவுமறைவற்ற தன்மை பற்றி அறிந்துகொள்வது  மிகவும் அவசியமானதாகிவிடுகிறது.

இம்மசோதாவின்படி அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அணு பாதுகாப்பு கவுன்சில் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.  இக்கவுன்சிலின் தலைவராக பிரதமரும், 5 அல்லது 6 மைய அமைச்சர்கள் அக்கவுன்சிலின் உறுப்பினர்களாகவும் இருப்பர்.  இந்த கவுன்சில் அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு தேடுதல் கமிட்டியை அமைக்கும்; அக்கமிட்டி அலசி ஆராய்ந்து ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி வாய்ந்த நிபுணர்களை கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கும்.  அப்பரிந்துரையின்படி கவுன்சில் ஆணையத்தை நியமிக்கும்.  இப்படிச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொன்னால், அணு பாதுகாப்பு கவுன்சிலுக்கு, அதாவது பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் நெருக்கமானவர்கள், அணுசக்தி தொடர்பான மைய அரசின் விருப்பங்களுக்குத் தலையாட்டுபவர்கள் மட்டும்தான் இந்த ஆணையத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் வரமுடியும்.

இவ்வாணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமல்ல, ஆணையத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் கவுன்சிலுக்கு உண்டு.  இக்கவுன்சில் தரும் வழிகாட்டுதல்களுக்கும் உத்தரவுகளுக்கும் ஆணையம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என இம்மசோதாவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  தற்பொழுது அணு உலைகளின் பாதுகாப்பைக் கண்காணித்துவரும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அணுசக்தி அமைச்சகத்துக்கும் அணுசக்தி கமிஷனுக்கும் கட்டுப்பட்டது என்றால், புதிதாக அமையவுள்ள ஆணையம் பிரதமரின் தலைமையில் அமைக்கப்படும் கவுன்சிலுக்குக் கட்டுப்பட்டது.  இதிலெங்கே சுதந்திரமும், ஒளிவுமறைவற்ற தன்மையும் உள்ளது? இவ்வாணையம் புதிய மொந்தை பழைய கள்ளு என்பது தவிர வேறெதுவும் இல்லை என்பதை இம்மசோதாவின் பல்வேறு விதிகளும் எடுத்துக் காட்டுகின்றன.

இவ்வாணையத்தின் செயல்பாடுகள் இந்திய அரசின் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காதவாறு இருக்க வேண்டும் என இம்மசோதாவின் 20ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.  அணு சக்தித் துறையைப் பொருத்தவரை இந்தியாவின் சர்வதேசக் கடப்பாடு என்பது அமெரிக்காவின் அணு ஆற்றல் மேலாதிக்கத்திற்குத் தாளம் தட்டுவது தவிர வேறெதுவும் கிடையாது.  மேலும், அமெரிக்கா மற்றும் பிரான்சைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை வாங்குவதற்குப் போடப்பட்டுள்ள இறக்குமதி வர்த்தக ஒப்பந்தங்கள், இது தொடர்பாக மைய அரசு அளிக்கும் வாக்குறுதிகளைக்கூட இந்த விதியின்படி இந்தியாவின் சர்வதேச கடப்பாடுகளாகி விடுகின்றன.  இதனால் பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள சர்ச்சைக்குரிய ஆறு அணு உலைகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பழைய தொழில்நுட்பத்தில் அமைந்த 10,000 மெகாவாட் திறனுள்ள  அணு உலைகளின் பாதுகாப்புத் திறன் குறித்து ஆணையம் கேள்வி கேட்க முடியாது என அம்பலப்படுத்தியிருக்கிறார், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன்.  அதாவது, இவ்விதியின்படி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகபோக நிறுவனங்கள் இந்தியாவிற்கு விற்கவுள்ள அணு உலைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ரப்பர் ஸ்டாம்பாக இந்த ஆணையம் செயல்படும் என்பதுதான்.

அணுசக்தி தொடர்பாகப் போடப்பட்டுள்ள 123 ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் அணு உலைகளை இறக்குமதி செய்வதற்கான வியாபார ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெறாமாலேயே கள்ளத்தனமாகப் போட்டுக் கொண்டு வந்த மன்மோகன் சிங் கும்பல், ஆணைய உறுப்பினர்கள் கடிதம் எழுதுவதற்குக்கூட சுதந்திரம் வழங்கவில்லை.  இம்மசோதாவின் பிரிவு 20 (ஞு)இல் அணு உலைகளின் ஆற்றல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கு இந்த ஆணையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அந்நிய நாட்டு நிபுணர்களுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்றால், அதற்குக்கூட அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘‘இந்த ஒழுங்குமுறை ஆணையம் நாட்டின் இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு, பாதுகாப்புக்கு, அந்நிய நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவுக்கு, பொது ஒழுங்கிற்கு, நன்னடத்தைக்கு, நன்னெறிகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது” என இம்மசோதாவின் 21ஆவது பிரிவு வரையறுக்கிறது.  அணு உலைகள் நாட்டு மக்களின் உடல் நலத்திற்கும், நாட்டின் சுற்றுப்புறச் சூழலிற்கும் கேடு விளைவிக்காதபடி இயங்குவதைக் கண்காணிக்க உருவாக்கப்படும் ஆணையத்திற்கு இத்துணை நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியமென்ன?  மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல அணு உலைகளின் பாதுகாப்புக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியமென்ன?

அணுக்கதிர் வீச்சின் அபாயங்களை முன்னிறுத்தி அணு உலைகளை எதிர்ப்பதை நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானதாகவும் நாட்டின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகவும் ஆளும் கும்பல் முத்திரை குத்துகிறது.  இந்த அடிப்படையில்தான் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மீனவர்கள் மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  எனவே, ஒழுங்குமுறை ஆணையம் நாட்டின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்ற நிபந்தனையின் பொருள் ஆணையம் சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகளையோ, மக்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளையோ காட்டி அணு உலைகள் இயங்குவதற்குத் தடை விதிக்க முடியாது என்பதுதான்.

ஆணையம் பொதுநலனுக்கு எதிராகச் செயல்படுவதாக மைய அரசு கருதினால், ஆணையத்தின் தலைவரையும் பிற உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்வதோடு, ஆணையத்தையே கலைத்துவிடுவதற்கும்; குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் பொறுப்புகளை மைய அரசு தானே எடுத்துக் கொள்ளுவதற்கும் ஏற்ப இம்மசோதாவில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஆணையத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தப்பித்தவறிக்கூட அரசின் அணுக் கொள்கைகளுக்கு எதிராக நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடுதான் இப்படிபட்ட எதேச்சதிகார விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இது மட்டுமின்றி, கலைக்கும் அதிகாரத்தை மைய அரசு தனது கையில் வைத்துக் கொண்டு, சுதந்திரமாகச் செயல்படும்படி ஆணையத்தை உருவாக்கப் போவதாகத் தம்பட் டம் அடிப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனம் தவிர வேறில்லை.

அணு உலைகள் அனைத்துமே நாட்டின் வளர்ச்சிக்காகவும் பொது நலனுக்காகவும்தான் செயல்படுத்தப்படுவதாகவும், அவற்றை எதிர்த்துப் போராடுபவர்கள் பொது நலனுக்கு எதிரானவர்களாகவும் ஆளுங்கும்பலால் சித்தரிக்கப்படுகிறார்கள்.  இந்த அடிப்படையில் பார்த்தால் பொது நலன் என்ற போர்வையில் அபாயம் நிறைந்த அணு உலைகளைத்தான் மைய அரசு பாதுகாக்கத் துடிக்கிறது என்பது விளங்கும்.

சிவில் அணு உலைகளைப் பெயரளவில் கண்காணிக்கும் அதிகாரம் கொண்டுள்ள இந்த ஆணையம், இராணுவ நோக்கங்களுக்காகச் செயல்பட்டு வரும் அணு உலைகள் இருக்கும் பக்கம் தலைவைத்துக் கூட படுக்க முடியாது; சிவில் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த அம்சங்களில்கூட, அவ்வணு உலைகள் தொடர்பான அனைத்து விசயங்களையும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்றும் இம்மசோதாவில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.  மேலும், அணு மின் நிலைய வளாகத்துக்குள் நடக்கும் விபத்துக்களுள் இந்த ஆணையம் முக்கியமானவையாகக் கருதுவதை மட்டும் வெளியுலகுக்கு அறிவித்தால் போதும் என்றும் இம்மசோதா தெளிவுபடுத்தியிருக்கிறது.  இது, அணு உலையில் இருந்து அவ்வப்போது வெளிப்படும் கதிர்வீச்சுக் கசிவால் ஏற்படும் சிறு சிறு விபத்துக்களையும், அதனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், அணு உலை இயங்கும் பகுதியில் வசிக்கும் மக்களும் பாதிக்கப்படுவதையும் குழிதோண்டிப் புதைக்கும் சதி தவிர வேறெதுவும் கிடையாது.

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!‘சுதந்திரமாக’ச் செயல்படவிருக்கும் இந்த ஆணையம், அரசாங்கம் அமைக்கும் விசாரணை கமிசன்களைப் போல, அரசின் ஊதுகுழலாகத்தான் செயல்படும்.  கூடங்குளம் அணு மின்நிலைய பிரச்சினையையொட்டி அமைக்கப்பட்டுள்ள முத்துநாயகம் கமிட்டியின் செயல்பாடுகளுக்கும் இந்த ஆணையத்தின் செயல்பாடுகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு எதுவும் இருக்கப் போவது கிடையாது என இப்பொழுதே நாம் அடித்துச் சொல்லிவிடலாம்.

இதுவொருபுறமிருக்க, நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள அணு விபத்து காப்பீடு சட்டத்தில், “அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில் அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடமிருந்து அந்த அணு உலையை இயக்கும் நிறுவனம் குறைந்தபட்ச இழப்பீடு கேட்பதற்கு” ஏற்ப விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.  இந்த விதிகளை அச்சட்டத்தில் மன்மோகன்சிங் தானே முன்வந்து சேர்க்கவில்லை.  போபால் படுகொலை தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த கோபமும், வெறுப்பும் இப்படிபட்ட விதியை அச்சட்டத்தில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தை மன்மோகன் சிங்கிற்கு ஏற்படுத்தியது.

இந்த விதியை அச்சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா கொடுத்த நெருக்குதலையடுத்து, இந்த விதியை நீர்த்துப் போகச் செய்துவிடும் திருத்தங்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகத் தற்பொழுது முன்வைத்துள்ளது, மன்மோகன் சிங் கும்பல்.  மன்மோகன் சிங் இந்தத் திருத்தத்தை அறிவித்துவிட்டுதான், ஒபாமாவைச் சந்திக்க கடந்த மாதம் விமானம் ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணு விபத்துக்களால் பாதிக்கப்படும் மக்கள் அணு உலைகளைத் தயாரித்து விற்ற நிறுவனத்திடமிருந்து நேரடியாக நட்ட ஈடு கோருவதற்கு வழிவகை செய்யும் பிரிவையும் இந்தச் சட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது.  மன்மோகன் ஒபாமாவைச் சந்தித்தபொழுது, அமெரிக்கா கோருவதையெல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அவரிடம் வாக்குறுதி அளித்துவிட்டுத் திரும்பியதோடு, இந்த மாதத்திற்குள் அணு விபத்து காப்பீடு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிடுவேன் எனச் சபதமும் போட்டுள்ளார்.

அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மை குறித்த தகவல்களையும் உண்மைகளையும் மூடிமறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மசோதாவை அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா என அழைக்கிறார்கள்.  அணு விபத்து காப்பீடு சட்டத்தில் இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் ஏகபோக நிறுவனங்களிடமிருந்து விபத்துக்கான நட்ட ஈடு பெறுவதைத் தடுக்கும் சட்டத்திற்கு அணு விபத்து காப்பீடு சட்டம் எனப் பெயரிடுகிறார்கள். இது, அருவெறுக்கத்தக்க பித்தலாட்டத்தனமும் கிரிமினல்தனமும் கொண்டதுதான் மன்மோகன் சிங் கும்பல் என எடுத்துக் காட்டுகிறது.

____________________________________________________

–    புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2011
_________________________________________________________

  1. ஒரு அரைக்காலனிய அரசாங்கம் இப்படித்தான் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக நடந்துகொள்ளும் என்பதில் ஆச்சரியமில்லைதான். ஆனாலும் இந்திய அரசாங்கம் கொஞ்சமல்ல பச்சையாகவே தன் மக்களுக்கு துரோகம் செய்கிறது. இவ்வளவு நடந்தும் மக்கள் காங்கிரஷா பி.ஜெ.பி யா என்பதிலேயே காலத்தை செலவிட்டு தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கின்றனர்.

  2. இந்த பிரச்சனைகளில் எல்லாம் காங்கிரசும், பாஜகவும் ஒரே நிலைபாடு எடுத்து வருகிறார்கள்… ஆனால் காங்கிரசுக்கு மாற்று பாஜக என்பார்கள்…

  3. இங்க பாருங்க
    இப்படியெல்லாம் பேசப்படாது.
    அம்மணமா திரியரதுன்னு முடிவு பண்ணியாச்சு.அதுல கைய மூடிகிட்டு திரிஞ்சா என்ன?
    காத்தாட திரிஞ்சா என்ன?

  4. இந்த மாதிரி இன்னும் பல புருடாக்கள், ஆராய்ச்சி என்ற பெயரில் வெளிவரும் பாருங்கள். புகுஷிமா விபத்தின் காரணமாக பரவிய கதிரியக்கத்தால், அமெரிக்காவில் 14000 குழந்தைகள் சாவு என்ற இந்த ஜல்லியடியை Scientific American பத்திரிகை தோலுரித்து காட்டியிருப்பதை இந்த சுட்டிகளில் பார்க்கவும்

    http://blogs.scientificamerican.com/observations/2011/06/21/are-babies-dying-in-the-pacific-northwest-due-to-fukushima-a-look-at-the-numbers/

    http://blogs.scientificamerican.com/observations/2011/12/20/researchers-trumpet-another-flawed-fukushima-death-study/

    அமெரிக்க Centre for Disease Control என்ற அமைப்பு வெளியிடும் வாரந்திர நோயுற்ற விகிதம் மற்றும் இறப்பு விகிதங்களை அடிப்படையாக கொண்டு இந்த முடிவுக்கு இந்த “ஆராய்சியாளர்கள்” வந்திருக்கிறார்கள்.
    http://www.cdc.gov/mmwr/mmwr_wk/wk_cvol.html

    புகுஷிமா விபத்து நிகழ்ந்தது 11 மார்ச் 2011 அன்று. அதற்கு முந்தைய 4 வாரங்களின் இறப்பு விகிதத்தை விட பிந்தைய 18 வாரங்களில் இறப்பு விகிதம் வாரத்திற்கு 9.25 லிருந்து 12.5 ஆக உயர்ந்து விட்டதாகவும் சொல்லுகிறார்கள். விபத்துக்கு முன் ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் இறப்பு விகிதத்தையும் சேர்த்து பார்க்கும் போது தான் உண்மை புலப்படும்.

    இந்த “ஆராய்சிக் கட்டுரையில்” உள்ள இன்னொரு புருடா கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2011 முதல் ஆறு மாதங்களில் 21 குழந்தைகள் Sudden Infant Death Syndrome காரணமாக திடீரென இறந்ததற்கு காரணம் புகுஷிமா கதிர்வீச்சு காரணமாக இருக்கலாம் என்று விஷமத்தனமாக ஒரு பிரச்சாரம் வேறு. Toronto Star கட்டுரையை பார்த்தால் குழந்தைகள் இறப்பிற்கு குப்புற படுத்து உறங்கும் போது ஏற்படும் மூச்சுத்திணறல் என்பது தெரியும்.

    நம்ம ஊர் கல்பாக்கம் புகழ் டாக்டர். புகழேந்திகள் போல அமெரிக்காவிலும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கல்பாக்கத்தில் ஆறு விரல் உடையவர்கள் அதிகம் அதற்கு காரணம் கதிரியக்கம் தான் என்று ஜல்லியடிப்பதற்கும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டுரைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

    http://www.thestar.com/news/canada/article/1020924–sudden-infant-deaths-on-rise-in-b-c

  5. Oru pattasu tholirchalayil kooda kuraintha patcha paathukaappu amsangalai niraivetra mudiaatha arasu, anu aalaiyil kilithuviduvom enbathai nambum alavukku namakku arivu malingi vidavillai enru ninaikiren!

Leave a Reply to selvaa பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க