privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !

கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !

-

கூடங்குளம்-மறியல்பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடந்த இரு  மாதங்களாக மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள,  போராட்ட ஆதரவு வழக்கறிஞர் குழுக்கள் அமைத்தல், சட்ட ரீதியான உதவிகள் எனப் போராட்ட ஆதரவுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த  21-01- 2012 அன்று திருநெல்வேலியிலும், அதனைத் தொடர்ந்து  01-2-2012 அன்று காலை 10.30 மணிக்கு  தூத்துக்குடி இராஜாஜி பூங்கா அருகில் மனித உரிமை பாதுகாப்பு மையம் தூத்துக்குடி கிளை சார்பில் மிகவும் எழுச்சிகரமான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தின் துவக்கத்தில் 31-01-2012 அன்று நெல்லையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினரை இந்து முன்னணி -பி.ஜே.பி, காங்கிரஸ் கும்பல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும், மக்கள் விரோத , தேசத் துரோக அமெரிக்க – இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும் மின்சாரத்திற்காக அணு உலை என்ற மோசடியை அம்பலப்படுத்தியும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் அணு உலைகளை மூடி வரும் நிலையில், பன்னாட்டு முதலாளிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி மக்கள் பணத்தை தூக்கிக் கொடுத்து 36 அணு உலைகளை, கமிசன் பெற்றுக் கொண்டு மன்மோகன் சிங் காங்கிரஸ் அரசு இந்தியா முழுவதும் அமைக்கவுள்ளதைக் கண்டித்தும், போராடும் மக்களின் மீது போடப்பட்ட 156 பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், காற்றாலை, கடலலை, சூரிய ஒளி என்ற மாற்று மின் தயாரிப்பு முறைகள் அமுல்படுத்தக் கோரியும், தொடர்ந்து கூடங்குளம் போராட்டடம் தொடர்பாக அணு சக்திக் கழகத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பொய்ச்செய்திகள், அதாவது அவதூறுகளை வெளியிட்டு வரும் தினமலருக்கு எச்சரிக்கை விடுத்தும் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பெரும் எண்ணிக்கையில் போலீசார், அதிரடிப்படையைக் குவித்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பங்கேற்பை தடுக்க முயற்சித்த தூத்துக்குடி நகரக் காவல்துறையை மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் எச்சரித்து அடக்கினர்.

தலைமை உரை ஆற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையம் தூத்துக்குடி மாவட்ட இணைச்செயலர் வழக்கறிஞர் அரிராகவன், கூடங்குளம் அணு உலை கட்டப்பட்டது, பன்னாட்டு முதலாலிகளின் இலாபம், இந்திய முதலாளிகளின் அணு குண்டு வல்லரசுக் கனவிற்காகத்தானே தவிர மின்சாரத்திற்காக அல்ல என்பதையம் இன்று உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் பெரும்பகுதி முதலாளிகள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செல்லும் நிலையில் அணு உலை மின்சாரம் வந்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு, விவசாயிகள், தொழிலாளிகளுக்கு கிடைக்காது என்பதையும் சுட்டிக்காட்டி புள்ளிவிவரங்களோடு உரை நிகழ்த்தினார்.

“ஓமியோபதி மருத்துவர் ஊசி போட்டால் போலி மருத்துவர் என்று போலீசு கைது செய்கிறது. ராக்கெட் என்ஜினியர் அப்துல்கலாம் அணு உலை பாதுகாப்பானது அறிக்கை விடுகிறார் அவரை போலி அணு விஞ்ஞானி என்று ஏன் கைது செய்யக்கூடாது? சுனாமி பாது காப்புக்காக அரை கிலோமீட்டர் தள்ளி குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என கடலோர சட்டம் சொல்லுது.அணு உலை மட்டும் அருகிலேயே கட்டியிருக்கிறான். யார் கேக்கிறது?.என பேசினார்.

அதன்பின் அனைவரும் இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. காங்கிரஸ் ரவுடிகளை கண்டித்தும், அம்பலப்படுத்தியும் போராட்டத்தில்   தமிழகத்தின் அனைத்து மக்களும் இணைய வேண்டியதன் அவசியத்தையம், போராடும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியம் உரை நிகழ்த்தினர்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.மனோதங்கராஜ், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 1987 லிருந்து நடைபெற்று வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்ட வரலாறையும், பேச்சிப்பாறை நீரை கூடங்குளம் அணு உலைக்கு எடுக்கக் கூடாதெனக் கோரி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடத்தியுள்ளதையும் விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய விடுதலை போராளிகள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு அதே காரணங்களுக்காக இன்றும்போடப்படுகிறது. காங்கிரசு, பி.ஜே.பி, தி.முக, அ.தி.முக. ஆட்சி மாறலாம், ஆனால் ஒரு போதும் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை. விளை நிலங்களை துப்பாக்கி முனையில் விவாசாயிகளிடமிருந்து பறித்து பன்னாட்டு கம்பெனிக்கு வழங்குகிறது  மத்திய மாநில அரசுகள். மக்கள் நலனை பற்றி சிறிதும் கவலைப்படாமல் கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள்.இது மக்கள் நல அரசு இல்லை.கூடங்குளம் மக்கள் தென்பகுதியில் பன்னாட்டு முதலாளியின் காலை இறுகப் பிடித்து விட்டார்கள்.அதன் கை உடம்பு தலை என ஏனைய பிரிவுமக்களான விவசாயிகள், தொழிலாளர்கள்,  மாணவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் போராடி பிடித்து அழுத்தி கீழே சாய்த்து விட முடியும், என பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசும்போது, அணுகுண்டை விட,  அணு உலை ஆபத்தானது.  அணு குண்டு வெடித்தால் தான் அழிவு ஏற்படும் அணு உலை வெடிக்காமலே ஆபத்து ஏற்படும். அப்துல்கலாம் எப்படி அணு விஞ்ஞானி என்று மக்களால் நம்பவைக்கப்பட்டாரோ அதுபோல திரும்ப திரும்ப பொய்ப் பிரச்சாரம் செய்து அணுஉலை பாதுகாப்பானது என நம்பவைக்கிறார்கள்.  அணு உலையை ஏற்றுமதி செய்து கோடி கோடியாக கொள்ளை லாபம் சம்பாதிக்ககும் அமெரிக்கா பிரான்ஸ், ரஷ்யா கடந்த 30  ஆண்டுகளில் புதியதாக அணு உலையை துவங்கவில்லையே ஏன்? யுரேனிய கையிருப்பில் உலகில் நான்கில் ஒரு பகுதியை வைத்துள்ள ஆஸ்திரேலியா ஒரு அணு உலையை கூட அமைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் கூடங்குளத்தில் மட்டும் அல்ல ஜெகதாப்பூரில் 10000 மெகாவாட்டில் உலகில் மிகப்பெரிய அணுஉலையை கட்ட முயற்ச்சிக்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்கூடங்குளம் அணுஉலையை திறப்பதில் மத்திய அரசு இனி என்ன வகையான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்பதற்கு முன்னோட்டமாக நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அணுஉலைக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் மீது  இந்துமுன்னணி ரவுடிகள் தாக்குதல் நடத்தி நாம் நாளை எப்படி போராட வேண்டும் என்பதை எதிரிகள் எச்சரித்து சென்றிருக்கிறார்கள்.  ‘ஜனநாயகம்’ என்பதற்கு உரிமைகள் என்ற பொருள் அல்ல. பெரும்பான்மையான மக்கள் மீது சுரண்டல் வர்க்கமாகிய சிறுபான்மையினர் கையாளும் வன்முறையை ஒழுங்குபடுத்துவதற்கு  பெயர் தான் ஜனநாயகம். மக்களின் கோரிக்கையை பரிசிலிப்பதற்கு பதிலாக போராடும் மக்களை போலீஸ் சட்டபூர்வமாகவே ஒடுக்குகிறது.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் பென்னிகுயிக் என்ற பொறியாளர் ஐந்து மாவட்ட மக்களின் பஞ்சத்தை போக்க முல்லை பெரியாறு அணையை கட்டினார். மழை வெள்ளத்தில் அணை அடித்து செல்லப்பட்ட போது மகனை பறிகொடுத்த தாய் போல் பென்னிகுயிக் வாய்விட்டு கதறி அழுதாராம். ஆனால் தன் சொந்த நாட்டு மக்கள் பட்டினியால் சாகும்போது வீணாகும் உணவு தானியத்தை கொடு என உச்சநீதி மன்றம் பேசியபோது   எதற்குமே வாய் திறக்காத மன்மோகன்சிங் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாதென பேசியதுடன் இலவசமாக கொடுக்க முடியாதென மறுத்தார்.

மக்கள் வரிப்பணத்தில் 50 %  ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாயை முதலாளிகளின் தொழிலை காப்பாற்ற மான்யமாக வாரி கொடுத்து வக்காலத்தும் வாங்குகிறார் மன்மோகன்சிங். சொந்த நாட்டு மக்களை பலியிடும் நயவஞ்சகன், துரோகி, அயோக்கியன், கல்நெஞ்சக்காரன்,  நம்பர் 1 கிரிமினல்தான் மன்மோகன்சிங். மின்சாரம் தயாரிக்கவா அணுஉலையை கொண்டுவந்தார்கள்?

1980 களில் வல்லரசு கனவிற்காக அணுசக்தி நீர்முழ்கி கப்பலை ரஷ்யாவிடம் வாங்க ஒப்பந்தம் போட்டபோது அணுஉலையை வாங்கினால்தான் கப்பல் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு வந்ததுதான் கூடங்குளம் அணுஉலை. இந்த தேசத்து மக்களை காவு கொடுத்து போடப்பட்ட ஒப்பந்தம்.

அணுஉலை பாதுகாப்பானது என அப்துல்கலாம் சொல்லலாம், மன்மோகன்சிங் சொல்லலாம்,  நாராயணசாமி சொல்லலாம், யார் நம்புவது?   நகராட்சி கழிப்பிடம் சுத்தமாக வைத்திருக்க துப்பில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க வக்கற்ற அரசாங்கம் அணு உலை கழிவை பல ஆயிரம் ஆண்டுகள் பத்திரமாக பாதுகாப்பானாம்?. வெள்ளை காக்கா வானத்தில் மல்லாந்து பறக்கிறது என்று நம்புகிறவர்கள் இதை நம்பலாம்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி ஜார்ஜ்புஷ் கூறுவது மன்மோகன்சிங் சாதனைகளில் மகுடம் வைத்தார்போல் உள்ளது என புகழ்ந்துள்ளார். உலகில் படுத்துப்போன அணுஉலை வியாபாரத்தை தூக்கி நிறுத்த 8 லட்சம் கோடிக்கு வியாபாரம் செய்ய மன்மோகன்சிங் போன்ற தேசத் துரோகிகள்தான் உகந்த நபர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதித்து கோடிக்ணக்கான வியாபாரிகளின் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். பெட்டிகடை வைக்க எதற்கு அன்னிய மூலதனம்?

கூடங்குளம் அணுஉலை மூடினால் 14 ஆயிரம் கோடி பற்றி கவலைப்பட வேண்டியது மக்கள்தான் அதைப்பற்றி உங்களுக்கென்ன? பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடி எஸ்பேண்டு ஊழல் 175000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி, சில இலட்சம் கோடி கருப்பு பணம் இன்னும் எண்ணற்ற ஊழல்கள் செய்யும் காங்கிரஸ் கட்சிதான் உரிமைக்காக போராடும் மக்களை கொச்சைப்படுத்துகிறது. இடிந்தகரை மக்கள் போராட்டம் அவர்களது போராட்டம் மட்டுமல்ல. மத்திய அரசின் மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என  அனைத்து மக்களுக்குமானது. மறுகாலனியாக்கத்திற்கு எதிரான இந்த போராட்டம் தேச விடுதலைக்கான போராட்டம், அனைவரும் இணைந்து போராட வேண்டும். என அறைகூவல் விடுத்தார்.

அணு சக்தி்க்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.உதயகுமார் பேசும் போது நாங்கள் இடிந்த கரையில் அணுஉலைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நேரிலே  வந்து ஆதரவு தருவதுடன் ஆலோசனைகளும் தந்து பங்களிப்பு செய்கின்ற மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிர்களுக்கு நன்றி கூறுகிறேன். கூடங்குளம் அணுஉலையை நாங்கள் ஏன் மூட சொல்கிறோம் “அமெரிக்கா காசு கொடுக்கிறது”  அன்னிய சக்திகள் தூண்டிவிடுகிறது கூடங்குளம் அணுஉலையை மூடிவிடு கோடி கோடியாகபணம் தருவார்கள் என அறுவறுப்பாக பொய் பேசி வருவது யார் என்று உங்களுக்கு தெரியும். இந்த திட்டம் இந்த மண்ணில் செயல் படுத்தினால் 8 கோடி தமிழர்களின் எதிர்காலம் அழிந்துபோகும். எம்.எல்.ஏ, எம்.பி ஆக வேண்டும் என்பதற்காக போராடவில்லை நாங்கள், இந்த மண்ணின் மைந்தர்கள். அணுஉலை பாதுகாப்பானது என அப்துல்கலாம் நாராயணசாமி மன்மோகன்சிங் பேசுகிறார்கள். சுனாமி நிலநடுக்கம் வராது என்கிறார்கள். சுனாமியும் நிலநடுக்கமும் சொல்லிவிட்டு வருமா?

ஜப்பானியர்களுக்கு தெரியாத எந்த தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது? கூடங்குளம் பகுதியில் நிலநடுக்கம் வந்திருக்கிறது. சுனாமியும் வந்திருக்கிறது. அந்த பகுதியில் பூமிக்கடியில் எரிமலை குழம்பு இருக்கிறது. அதற்கான கற்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பூமிக்கடியில் வெற்றிடம் இருக்கிறது. அதனால்தான் மழைநீர் கிணற்றுக்குள் போவது போல ஓடுகிறது. அந்த பகுதியில் பாறைகள் கடினமானவை அல்ல. அலை போன்று வண்டல் மண் குவியல் உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என கற்றறிந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்களே இதற்கு அணுசக்தி துறையினரிடம் பதில் இல்லையே.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்அணு உலையில் விபத்து வேண்டாம், தீவிரவாத தாக்குதல் வேண்டாம் நிலநடுக்கம் வேண்டாம் சுனாமி வேண்டாம், அவர்கள் சொல்வதுபோல் இயங்குவதாக வைத்துக்கொள்வோம். அணுஉலை புகைப்போக்கின் வழியாக அயோடின் சீசியம் சார்ட்டியம் என நஞ்சுத்துகள்கள் காற்றிலே பரவும். அந்த நச்சுக்காற்று 40 முதல் 60 வருடங்கள் காற்று வீசும் திசையெல்லாம் பரவும். அதை சுவாசிக்கும் நமது குழந்தைகள  பற்றி எண்ணி பாருங்கள். நம்மைபோல வாழ்வாங்கு வாழ வேண்டாமா. கூடங்குளம் அணுஉலையில் நாள் ஒன்றுக்கு கதிர்வீச்சு கழிவு, நச்சுநீர் எவ்வளவு வெளியாகும். இதில் காற்றில் எவ்வளவு கலக்கும், கடல் நீரில் எவ்வளவு கலக்கும் என கேட்டோம். பாதுகாப்பானது என்ற பதிலைத் தவிர எதுவும் அவர்கள் சொல்லவில்லை.

பிரதமரை சந்தித்தப்போது அணுசக்தி தலைவர் எஸ்.கே.ஜெயினிடம் கேட்டோம் சிறிதளவுதான் வரும் அதை உருட்டி உங்கள் வீட்டு வரவேற்பரையில் வைத்துக்கொள்ளலாம் என்றார்.  உலகத்தில் எந்த நாட்டிலும் கண்டுபிடிக்காத தொழில் நுட்பம் இது. பிறகு கூடங்குளம் அணுஉலை இயக்குநர் காசிநாத் பாலாஜியிடம் கழிவு எவ்வளவு வரும் என கேட்டோம். கொஞ்சமாக வரும் என்றார். விஞ்ஞானிகள் போலவா பேசுகிறார்கள். பிறகு மறுச்சுழற்சி  செய்கிறோம் கழிவு வராது என்றார்கள். அணுஉலையை விட மறுசுழற்ச்சி உலை  ஆபத்தானதே என நாம் கேள்வி எழுப்பியவுடன் சுதாரித்து இல்லை என்றார். அப்துல்கலாம் 25 சதவீதம் கழிவு வரும் என்றார்.  எதிலே 25 சதவீதம் என சொல்ல மறுக்கிறார்கள் இவர்கள் உண்மையை சொன்னதாக சரித்திரம் இல்லை. இப்படி நாம் கேள்வி கேட்டதால் இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்.

கூடங்குளம் அணுஉலையை குளிர்வித்து தண்ணீரை 24 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் வருடத்தில் 365 நாட்களும் 40 ஆண்டுகள்  12 டிகிரிக்கும் அதிகமாக சூடான நீரை  கடலுக்குள் கலப்பார்களாம் அதனால் எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள். பகுத்தறிவுள்ளவர்களே சிந்தித்துப் பாருங்கள் கடல்வளம் என்ன ஆகும் மக்களின் மீன் உணவு என்னவாகும் யோசித்துப்பாருங்கள். மன்மோகன்சிங் 46 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்று பேசுகிறார். சத்தில்லாத குழந்தை நன்றாக கல்வி கற்குமா முழு வளர்ச்சி அடையமா. தமிழகத்தில் கல்பாக்கம் கூடங்குளம் மேற்கு வங்கம் மகாராஷ்டிரா குஜராத் ஆந்திரா என இந்திய கடல் பகுதி முழுமைக்கும் அணுஉலையை அமைக்க இருக்கிறார். கூடங்குளம் அணுஉலையில் உள்ள பரத்வாஜ் அணுஉலைகழிவுகளை 10000 ஆண்டுகள் புதைத்து  பாதுகாப்பாக வைத்திருப்போம் என்கிறார். நமது தாத்தா பாட்டி பாட்டன்களை எங்கே புதைத்தோம் என தெரியாது. பரத்வாஜ் 10000 ஆண்டுகள் பக்கத்திலே உட்கார்ந்திருப்பாரா?

அணு கழிவின் கதிர்வீச்சு வீரியம் 48 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். அரைஆயுள் முடிய 24 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். மின்சாரம் நமக்கு தேவை ஆனால் கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியமா? மொத்த மின் உற்பத்தியில் இன்று அணு மின்சாரம் 2.5 சதவீதம் மட்டுமே. நாடு  முழுவதும் புதிதாக அணுஉலைகள் அனைத்தும் இயங்கினால் கூட 7 சதவீதம் மட்டுமே பூர்த்தி அடையும். தண்ணீயில் சூரிய ஒளி போன்ற மாற்று முறையில் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் . கூடங்குளம் அணுஉலையில் 20 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என குற்றம் சாட்டுகிறோம். ஊழல் செய்த காண்ட்ராக்டர்களும் பலன் அடைந்தவர்களும் அணுஉலைக்கு ஆதரவாக போராடுகிறார்கள். அணு சக்தி கழகம் அணுஉலை தொடர்பான கணக்கை காட்டட்டும் போராட்ட செலவை நாங்கள் காட்டுகிறாம். பன்னாட்டு கம்பெனிகளுக்கு நம்மையெல்லாம் விற்றுவிட்டு ஓடப் பார்க்கிறார்கள். அணு சக்தி கழகத்தின் சட்டையை பிடித்து பதில் சொல் என நடுத் தெருவில் நிறுத்தி இருக்கிறோம். இந்தியாவில் இது தான் முதல்முறை. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும், குஜராத்திலே ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போதும், 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் அமைதிகாத்த அப்துல்கலாம் இன்று யாழ் பாணத்திற்கு போய் பேச என்ன அருகதையிருக்கிறது?

இந்திய ரஷ்யாவுடன் 2008 ல் போடப்பட்ட அணுஉலை ஒப்பந்தப்படி விபத்து ஏற்பட்டால் ரஷ்யா இழப்பீடு கொடுக்க வேண்டாம். உலகத் தரம் வாய்ந்தது  உத்திரவாதமானது என்பவர்கள் ஏன் ஓட வேண்டும்? இந்திய மக்களின் பிரதமர் மன்மோகன்சிங் எவ்வளவு அதிக இழப்பீடு வாங்கித் தர முடியும் என முயற்சிக்காமல் எந்த இழப்பீடும் தர வேண்டாம் என ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் போடுகிறார். இதுபற்றி இந்து பத்திரிக்கையில் சித்தார்த்த வரதராஜன் என்பவர் ஒப்பந்த நகலை கைப்பற்றி விட்டோம் என  கட்டுரை எழுதினார். இழப்பீடு பெறுவது குறித்த ஒப்பந்த நகலை நமக்கு தர மறுக்கிறார்கள். ரஷ்யாவுக்கு கொடுக்கிறார்கள்.

போபால் விஷவாயு வழக்கில் கொலை குற்றவாளி ஆண்டர்சனை இழப்பீடு தண்டனை இல்லாமல் தனி விமானத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்த்து. காங்கிரஸ்சிக்கு கமிசன் ரஷ்யாவுக்கு லாபம் நமக்கு வாயில மண் இதை எதிர்த்து நாம் கேள்வி கேட்கிறோம். விவசாயிகள் மீனவர்கள் தொழிலாளர்களுக்கு கேள்வி கேட்க தெரியாது. ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். அணுசக்தி கழகம் தோன்றிய நாள் முதல் 65 ஆண்டுகாலமாக இரண்டரை சதவீத மின் உற்பத்திக்காக மக்களின் வரிபணத்தை ரத்தமாக உறிஞ்சிக் குடிக்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங்  வெள்ளைக்காரனின் அடிவருடியாக  அமெரிக்க அடிமையாக சிந்திக்காமல் இந்த நாட்டு மக்களின் பிரதிநிதியாக பேச வேண்டும்.  புகுஷிமாவில் அணுஉலை விபத்து நடந்தவுடன்  லட்சம் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு ஜப்பான் அரசு குடியமர்த்தியது. கூடங்குளத்தில் 30 கி.மீ. ருக்குள் 12 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் நகராட்சி கழிப்பிடத்தை பாதுகாப்பாக பராமரிக்க வக்கற்ற அரசாங்கம் என்ன செய்யும். என பேசினார்.

ஆர்பாட்டத்தில் மக்கள் கலை இயக்கக் கழகத்தின் மைய கலைக்குழு சிறப்பான நாடகமும், கலை நிகழ்ச்சியும் நடத்தியது மக்களைப் பெரிதும் கவர்ந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்தை கேட்டு ஆதரித்தனர்.

–    மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.