privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபுதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

-

ஐரோப்பாஉழைக்கும் மக்களின் போராட்டங்களால் ஐரோப்பா கண்டத்திலுள்ள கிரீஸ் நாடு மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. கிரேக்க நாட்டில் கடந்த பிப்ரவரி 12 அன்று நாடாளுமன்றத்தின் முன் நடந்த போராட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பங்கேற்று அரசின் சமூகச் செலவினக் குறைப்புத் திட்டத்துக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.

தீராத நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்த  கிரீஸ் நாட்டின் நெருக்கடிக்கு,  நலத்திட்டங்கள்  மானிய வெட்டு முதலான பொருளாதாரத் தாக்குதல்களையே  ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகிய மும்மூர்த்திகள் தீர்வாக முன்வைக்கின்றனர். இதனைச் செயல்படுத்தாவிட்டால் நாடு திவாலாகி பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்று நிர்ப்பந்தமாக இதனைத் திணித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திணிக்கப்பட்ட இத்தகைய நெருக்கடிக்கான தீர்வுத் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய மோசடி என்பதையும், வறுமையும் வேலையின்மையும்  துயரமும் தீவிரமாகிவிட்டதையும் தற்போதையை நிலைமேகளே நிரூபித்துக்  காட்டுகின்றன. தனியார் துறையில் 20 சதவீத அளவிற்கும், பொதுத்துறையில் 50 சதவீத அளவிற்கும் ஊதியங்கள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் பொருளாதாரம் 7 சதவீத அளவுக்கும், தொழிற்துறை உற்பத்தி 16 சதவீத அளவுக்கும் வீழ்ச்சியடைந்துள்ளது. மதிப்புக் கூட்டு வரி உயர்வால் ஒரு லட்சம் சிறு மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் திவாலாகிவிட்டன.

இத்தனையும் போதாதென்று, கடந்த பிப்ரவரியில் கொண்டுவரப்பட்ட புதிய சமூகச் செலவின வெட்டுத் திட்டத்தின்படி, 2015இல் இன்னும் கூடுதலாக ஒன்றரை லட்சம் அரசுத்துறை தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படவுள்ளனர். “ஒரு முழம் கயிறா, அல்லது ஒரு துளி விஷமா என்கிற வெவ்வேறு வடிவிலான மரணத்துக்கு இடையில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்குமாறு ஆட்சியாளர்கள் எங்களைத் தள்ளுகின்றனர்; இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று இத்தாக்குதலை எதிர்த்து கிரீஸ் மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.

கிரீஸ் நாட்டு உழைக்கும் மக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால், அது ஐரோப்பாவிலுள்ள பிற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துவிடும் என்று இந்த ஒன்றியத்தின் செல்வாக்கு மிக்க நாடுகளான ஜெர்மனியும் பிரான்சும் அஞ்சுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவின் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, விரைவாக  கிரீசை நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பெயரில் மானியவெட்டுகளைத் தீவிரமாக்குமாறு நிர்பந்தித்து,  கிரீசை தங்களது மேலாதிக்கத் திட்டங்களுக்கான சோதனைக் கூடமாகப் பயன்படுத்தி வருகின்றன.

ஐரோப்பா26 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாடு மட்டும்தான் நெருக்கடியில் சிக்கி திவாலாகும் விளிம்பில் இருப்பதாகவும், அதனைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் முதலாளித்துவ உலகம் சித்தரித்து வந்தது. ஆனால், இன்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கிரீசின் கதியை அடைந்து குடிமுழுகிக் கொண்டிருக்கின்றன என்பதை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே வேறுவழியின்றி இப்போது ஒப்புக் கொள்கின்றனர்.  தான் பட்டகடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றலில்  “ஏஏஏ” என்ற மிக உயர் தரத்தில் இருந்த உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, கடந்த 2011 ஆகஸ்டில் அத்தகுதியை இழந்து விட்டது என்று ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீடு நிறுவனம் அறிவித்தது. மற்றொரு பொருளாதார வல்லரசான ஜப்பானும் அத்தகுதியை இழந்து நீண்டகாலமாகிவிட்டது. எஞ்சியிருந்த ஐரோப்பிய ஒன்றியமும் இன்று அந்த நிலைக்குத் தள்ளப்பட்டு முழுகிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீட்டு நிறுவனம் கடந்த கடந்த ஜனவரி 12 இல் பிரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 9 நாடுகள் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை இழந்துவிட்டன என்றும், தற்போதைய நிலையில்  ஜெர்மனி, லக்சம்பர்க், பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஓரளவுக்கு தமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும், இந்நாடுகள் உதவினால்தான் ஐரோப்பிய பொருளாதாரத்தையும் யூரோ நாணயத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் அந்நிறுவனம்  அறிவித்துள்ளது.

தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலை 9 நாடுகள் இழந்துவிட்டதால், “ஏஏஏ” தரத்தில் நீடித்து வந்த “ஐரோப்பிய நிதிச் சீரமைப்பு ஏற்பாடு’’ (EFSF) என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் திவாலான நாடுகளை மீட்பதற்கான நிதியமைப்பும் இப்போது அதன் தரத்தை இழக்கத் தொடங்கியுள்ளது என்று அடுத்த நான்கு நாட்களில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் மக்களின் நுகர்வு குறைந்துள்ளதோடு, அரசின் வரிவருவாயும் குறைந்துவிட்டது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் உண்மைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐரோப்பாஏற்கெனவே அயர்லாந்தில் ஏற்றுமதி உபரி மூலம் நெருக்கடியைச் சமாளித்துவிட்டதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்தனர். ஆனால் நெருக்கடிக்கு முன்பிருந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை விட, இப்போது அந்நாட்டில் வேலையின்மை தீவிரமாகிவிட்டது. இதர நாடுகள் இறக்குமதி செய்தால்தான் அந்நாடு தனது நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் இருப்பதால், அது எந்நேரமும் திவாலாகும் நிலையில் உள்ளது. கிரீசும் அயர்லாந்தும் இரட்டை இலக்க பணவீக்கத்தால் தவிக்கின்றன. ஸ்பெயின் நாடு 23 சதவீத வேலையின்மையால் தத்தளிக்கிறது.

ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கக் கடன் பத்திரங்களும் இன்று மதிப்பிழந்து போய்விட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க இன்னொரு நாடான பிரிட்டன், 1930களில் நிலவிய பெருமந்த நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பிரிட்டனில், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டில்தான் மிக அதிகமாக 20.64 லட்சம் பேர் வேலையின்றித் தவிப்பதாகவும், இது 2012இல் 30 லட்சமாக உயரும் என்றும் அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

கூடுதல் விலைக்கு கடன்களை வாங்கி, தமது நாடுகளின் திவாலாகும் நிலையிலுள்ள வங்கிகளை மீட்குமாறு நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையிலுள்ள நாடுகளிடம் ஜெர்மனியும் பிரான்சும்  நிர்ப்பந்திக்கின்றன. இதன் விளைவாக, நிதித்துறையில் கடுமையான சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்;  இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து அரசின் வரி வருவாயும் குறையும் என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் இந்நாடுகளின் வங்கிகள் தடுமாறுகின்றன.

மொத்தத்தில் அமெரிக்கா, ஜப்பான் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியமும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் யூரோ நாணயத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த டிசம்பர் 9 அன்று பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடத்திய உச்சி மாநாடும் தோல்வியில் முடிந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியமே சிதைந்து சின்னாபின்னமாகிப் போகும் சூழல்தான் நிலவுகிறது. பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டுமொரு உலகப் பொருளாதார நெருக்கடி முற்றுவதற்கான அறிகுறிகளைத்தான் காட்டுகிறதேயொழிய, தீர்வதற்கான வாய்ப்புகளோ வழிகளோ தென்படவேயில்லை.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்