கூடங்குளம் குழந்தைகள் பெண்கள்

கூடங்குளம் போராட்டத்தின் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்கிவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதியன்று கூட்டப்புளியில் கைது செய்யப்பட்ட 178 பேரை திருச்சி சிறையிலும், கூடங்குளத்தில் கைது செய்தவர்களை கடலூர் சிறையிலும் வைத்திருக்கும் செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

கூட்டப்புளி மக்கள் 178 பேரில் 106 பேர் ஆண்கள், 42 பெண்கள், 30 சிறுவர்கள். அவர்கள் மீது இ.பி.கோ 143, 188, 353, 294-B, 506(2), 7 1(A) ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்திருந்தது போலீசு. ஆபாசமாக திட்டுவது முதல் வன்முறையில் ஈடுபடும் முயற்சி வரை பல குற்றப் பிரிவுகள் இதில் அடக்கம்.

இவர்களைப் பிணையில் விடக்கோரி உடனே மனு தாக்கல் செய்தார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள். பிணை மனு இன்றைக்கு வள்ளியூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் தோழர் ராஜுவும் அவருடன் பத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களும் கூட்டப்புளி மக்கள் சார்பில் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியவுடனே தனது வக்கிரமான அழுகுணி ஆட்டத்தை போலீசு தொடங்கியது. சிறை வைக்கப்பட்டிருக்கும் 178 பேரும், “அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது (பிரிவு 121), அவ்வாறு போர் தொடுக்க சதி செய்வது (பிரிவு 121-A), போர் தொடுக்கும் நோக்கத்துடன் இரகசியமாக மறைந்திருப்பது (பிரிவு -123)” ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அவை குறித்து தீவிரமாகப் புலன் விசாரணை செய்யவேண்டியிருப்பதால், இவர்களைப் பிணையில் விடக்கூடாது என்றும் தீவிரமாக ஆட்சேபித்தது போலீசு தரப்பு.

இபிகோ 121 க்கான அதிகபட்ச தண்டனைதூக்கு.                     
இபிகோ
121A, 123 க்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை.

சிறையில் இருப்பவர்கள் யார்? சாதாரணமான எளிய மீனவ மக்கள். மீனவப் பெண்கள். சிறையில் வைக்கும் அளவுக்கு வயதில்லை என்பதால் திருச்சி சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் 30 பள்ளிச் சிறுவர்கள்.

இவர்கள் உண்மயிலேயே செய்த குற்றம் என்ன? கூடங்குளத்தில் போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் ஊரில் உடனே சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். அவ்வளவுதான்.

அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை கேலி செய்த தோழர் ராஜு,  “போலீசு அதிகாரிதான் குற்றம் சாட்டுபவர், இந்த வழக்கில் சாட்சியமும் அவர்தான். எனவே கூட்டப்புளி மக்களை மட்டுமல்ல, நீதிமன்றத்தில் உள்ள எல்லா வழக்குரைஞர்களையும் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக அவர் கைது செய்ய முடியும்” என்று கூறி எள்ளி நகையாடினார். “இபிகோ 302 இல் கொலை வழக்கு போடுவதென்றால் பிணம் ஒன்றைக் காட்ட வேண்டும். பிணமே இல்லாமல் கொலை கேசு போடமுடியாது. அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக அன்றைக்கு சொல்லாத போலீசு இன்றைக்கு இவ்வாறு கூறுகிறதே, இடைப்பட்ட இந்த நாட்களில் இக்குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதையாவது, போலீசு நீதிமன்றத்திற்கு தந்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

வாதங்கள் எதற்கும் அரசு தரப்பு பதிலளிக்கவில்லை. வள்ளியூர் நீதிமன்ற வளாகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு போலீசு குவிக்கப்பட்டிருந்தது – அது மட்டும்தான் அரசு தரப்பின் வாதம். மக்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் சேர்த்து அரசு விடுத்த எச்சரிக்கைதான் அந்த போலீசு குவிப்பு.

நமது தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி, அரசு தரப்பு வாதத்தைப் பார்த்தார். பிறகு பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இனி நெல்லை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம். அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம்… மனு, நோட்டீசு, வாய்தா.. . ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி ஜாமீன் வாங்கி விட்டால், சிறையை விட்டு வெளியே வர முடியாமல் அடுத்தது புதிதாக ஒரு வழக்கு வரும்.

இது நாள் வரை கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டி, ஜெயலலிதா ஏமாற்றிக் கொண்டிருக்க, போராடும் மக்கள் மீது சரம் சரமாகப் பல பொய் வழக்குகளை போலீசு பதிவு செய்து வைத்திருந்தது. அம்மாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்துக்கு “கூடங்குளம் போராட்டம்” என்ற காய் தேவைப்பட்ட நாள் வரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. இப்போது காய்கள் வெட்டுக் கொடுக்கப்படுகின்றன.

“யாரையும் நாங்கள் ஊருக்குள் புகுந்து கைது செய்யப்போவதில்லை” என்று அன்பும் கருணையும் ஒழுகப் பேசியிருக்கிறார் ஏடிஜிபி ஜார்ஜ். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் எப்.ஐ.ஆர்களில் அந்தக் கருணை இல்லை. வஞ்சகம்தான் இருக்கிறது.

போலீசு பதிவு செய்து வைத்திருக்கும் டஜன் கணக்கிலான முதல் தகவல் அறிக்கைகள் அனைத்திலும், முதலில் உதயகுமார், சிவசுப்பிரமணியம் என்று சில முன்னணியாளர்களின் பெயர் இருக்கிறது. அதன் பின்னர் மேற்படி நபர்களுடன் கண்டால் அடையாளம் சொல்லத்தக்க இரண்டாயிரம் பேரும் சேர்ந்து என்ற மங்கல வாக்கியம் எல்லா எப்.ஐ.ஆர்களிலும் இடம் பெற்றிருக்கிறது. அந்த இரண்டாயிரம் பேர் யார், யார் என்பதை போலீசு இன்றைய தனது தேவைக்கு ஏற்றபடி எழுதிக் கொள்ளும்.

ஆபாச வசவுக்காக கைது செய்யப்பட்ட 178 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டாகிவிட்டது. திருச்சி சிறையிலிருக்கும் அந்த 178 பேருக்குள்ளேயே 25 பேர் மீது மட்டும் தனியாக வேறு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று இச்சகம் பேசி கழுத்தறுத்த அன்புச் சகோதரி, “அந்த 2000 பேரில் ஒருத்தியாக உன் பெயரையும் சேர்த்துக் கொள்ளட்டுமா?” என்று இப்போது மீனவப் பெண்களை மிரட்டுகிறார்.

“எங்களையும் சேர்த்துக்கொள்” என்று பல்லாயிரம் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒலிக்கச் செய்வோம்.

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: