privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஏன் வேண்டும் பொதுக்கல்வி? - பேரா லஷ்மி நாராயணன்.

ஏன் வேண்டும் பொதுக்கல்வி? – பேரா லஷ்மி நாராயணன்.

-

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டு உரை-2

கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட கல்வி தனியார் மய ஒழிப்புமாநாட்டில் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் பேரா லஷ்மி நாராயணன் பொதுப்பள்ளி, அருகாமைப் பள்ளியின் தேவைஎன்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து சில குறிப்புகள்.

பேராசிரியர் லஷ்மி நாராயணன் அகில இந்திய கல்வி உரிமை அமைப்பின் கல்வி பாதுகாப்புக் குழுவின் ஆந்திர மாநிலத் தலைவராகவும் செயல்படுகிறார்.  2010ம் ஆண்டு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது அந்த நாளை கறுப்பு நாள் என்று பிரகடனம் செய்து அதை எதிர்த்து போராடிய முன்னோடிகளில் ஒருவர்.

___________________________________________

புரட்சிகர மாணவர்-இளைஞர் மாணவர் முன்னணி நடத்தும் கல்வியில் தனியார் மயமாக்க எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கல்வியில் தனியார் மயத்தை ஒழிப்பது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருக்கும்.

இந்த மாநாட்டு நடக்கும் சென்னைக்கு ஒரு சிறப்பான வரலாறு உண்டு. 1950களில் ஈவேரா பெரியார் அவர்கள் அரசு பள்ளிகள் மூடப்படுவதை எதிர்த்து வீரமிக்க போராட்டம் நடத்திய மண் இது. அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி நிதி பற்றாக்குறையின் காரணமாக அரசு பள்ளிகளை மூடுவதாக அறிவித்தார். ‘மாணவர்கள் அரை நாள் பள்ளிக்கு வந்தால் போதும், அரை நாள் வேலைக்கு போகட்டும், தம் பெற்றோரின் சாதித் தொழிலை செய்யட்டும்’ என்று சொன்னார். குலக்கல்வி என்று அழைக்கப்படும் அந்த பிற்போக்குக் கொள்கையை எதிர்த்து பெரியார் அன்றைய சட்டசபைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்படி அரசு பள்ளிக்காக அன்றே போராடிய மண்ணிது.

இப்போது மத்திய அரசும், மாநில அரசும், கல்விக்கும், மருத்துவத்துக்கும், குடிநீர் வழங்குவதற்கும் பணம் இல்லை என்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான கட்டமைப்புகள் உருவாக்குவதில் நடந்த ஊழலில் கல்மாடி பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தார். ஆந்திராவில் ராஜசேகரரெட்டியும் சந்திர பாபு நாயுடுவும் மாற்றி மாற்றி கொள்ளை அடித்தார்கள். ‘ராஜசேகர ரெட்டி எப்படி 1 லட்சம் கோடி சம்பாதித்தார்?’ என்று சந்திரபாபு நாயுடு கேட்கிறார். ‘ஏன் சம்பாதித்தாய்?’ என்று கேட்கவில்லை, ‘எப்படி சம்பாதித்தாய்?’ என்றுதான் கேட்கிறார். அந்த விபரங்கள் தெரிந்தால் தானும் வாய்ப்பு கிடைக்கும் போது அதே போல சம்பாதிக்க வசதியாக இருக்கும் என்றுதான் அப்படி கேட்கிறார்.

ஆ ராசா முதலியவர்கள் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்தினார்கள். அந்தப் பணத்தை கல்வித் துறையில் செலவிட்டிருந்தால், நாட்டில் படிப்பறிவின்மையை இல்லாமல் ஒழித்திருக்க முடியும்.

அரசாங்கம் என்பது அதிகார வர்க்கத்துக்கான கருவியாக செயல்படுவதுதான். அவர்கள் பொதுமக்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என்று விரும்பவில்லை. இந்து பரம்பரையில் மனுவாதி தர்மத்தின் கீழ் சாதியின் பெயரால் பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது, ஆங்கிலேயர் ஆட்சிக்குப் வந்த பிறகு அவர்கள் நினைத்திருந்தால் வெகு விரைவில் நாட்டில் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்திருக்க முடியும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அப்படி ‘மக்கள் அனைவரும் கல்வி பெற்று விட்டால், தங்களது ஆட்சி 20 ஆண்டுகள் கூட நீடிக்க முடியாது, மக்களால் தூக்கி எறியப்பட்டிருப்போம்’ என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

அதே உள்நோக்கத்துடன்தான் 1947க்குப் பிறகு மத்தியிலும் மாநிலங்களிலும் அரசு நடத்திய காங்கிரஸ், பிஜேபி, சிபிஎம், சிபிஐ பிரதிநிதித்துவப்படுத்திய அதிகார வர்க்கமும் செயல்படுகின்றன. சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளுக்குப் பிறகு 66% மக்கள் மட்டுமே கல்வியறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். ஏழைகளில் 5% பேர்தான் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள். 95% ஏழை மாணவர்கள் போதுமான கல்வி அறிவு பெறாமலேயே இருந்து விடுகிறார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தரமான கல்வி அளிப்பதை சாத்தியமாக்க பொதுப்பள்ளி முறை உருவாக்கப்பட வேண்டும். எல்லாக் குழந்தைகளும் ஒரே பள்ளிக்கு போக வேண்டும். பொதுப்பள்ளியை கொண்டு வர வேண்டுமானால் தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்.

1970கள் வரை அரசு பள்ளிகள்தான் செயல்பட்டன, கூடவே அரசு உதவி பெறும் பள்ளிகள் நடத்தப்பட்டன. 1970களுக்குப் பிறகுதான் தனியார் மயம் ஆரம்பித்தது. 1971ல் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பால் எண்ணெய் விலை கடுமையாக ஏறி மேற்கத்திய முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கியது. 400 முதலாளித்துவ வரலாற்றில் அது ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொன்றுக்கு தள்ளாடிதான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பொருளாதார அறிஞர் மில்டன் ்பிரீட்மேன், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் போன்றவர்கள் திட்டம் வகுத்து தனியார் மயத்தை பரவலாக அமல் படுத்தும் கொள்கைகளை செயல்படுத்தினார்கள். இந்த சீர்திருத்தங்கள் உலகின் பிற நாடுகளுக்கும் புகுத்தப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியாக கல்வியில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டது. வியாபாரிகள், சாராய முதலைகள், மடம் நடத்தும் சாமியார்கள் எல்லாம் கல்வித் தந்தை ஆனார்கள். இப்போது அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள்.

1990களில் தனியார் மயத்தை எதிர்த்து உலகமெங்கும் மக்கள் போராட ஆரம்பிக்க செயல் உத்தியை மாற்றி பொதுத்துறை-தனியார் துறை கூட்டமைப்பு என்று ஆரம்பித்தார்கள். அதன் உண்மையான பொருள் நட்டம் பொதுத் துறைக்கு, லாபம் தனியாருக்கு என்பதுதான். உதாரணமாக ஆந்திராவில் 700க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன, அவர்கள் அரசிடமிருந்து 4000 கோடி ரூபாய் மானியமாக பெறுகிறார்கள்.

பொதுத்துறை-தனியார் துறை கூட்டு என்பது முழுக்க முழுக்க தனியார் மயத்தை கொண்டு வருவதுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கல்விக்கு மட்டுமின்றி உள்நாட்டு கட்டமைப்பு, குடிநீர், மருத்துவத் துறை என்று அனைத்து கொள்கை ஆவணங்களிலும் தனியார்-பொதுத் துறை கூட்டு முயற்சி என்பது இடம் பெறுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கொள்கையின் அடிப்படையில் தனியார் முதலாளிகளுக்கு நிலம், நீர் இலவசமாக கொடுத்து, வரி கட்ட வேண்டியதில்லை என்று சலுகை கொடுக்கிறார்கள். அதன் மூலம் முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து வெளி வர முயற்சிக்கிறார்கள். அதே போன்றுதான் பொதுத்துறை-தனியார் துறை பங்களிப்பில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பொதுச் செலவில் நிலம் கொடுத்து, பணம் கொடுத்து தனியார் லாபம் சம்பாதிக்க வழி செய்யப் போகிறார்கள்.

நான் ஏன் பொதுப்பள்ளி மற்றும் அருகாமைப் பள்ளி வேண்டும் என்று சொல்கிறோம்? ஏனென்றால் அதுதான் சமத்துவத்தை உறுதிப் படுத்தி சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.

பொதுப்பள்ளி கோரிக்கையில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன.

அ. கல்வியின் அளவு

– கல்வி பெறும் உரிமை சட்டம் கல்வியை கடைப்பொருளாக மாற்றுவதை அங்கீகரிக்கிறது.

– ஆறு வயதுக்கு முந்தைய இளம் பருவ கல்விக்கான பொறுப்பை அரசு தட்டிக் கழிக்கிறது.

பணக்காரர்களின் குழந்தைகள் இரண்டு வயதிலேயே பள்ளிக்கு அனுப்பப்படும் போது,  ஆறு வயதுக்கு மேல் பள்ளிக்கு வரும் உழைக்கும் மக்களின் குழந்தைகள் இடைவெளியை எப்படி சமன் செய்ய முடியும்?

– எட்டாம் வகுப்புக்குப் பிறகு கல்வி பெறும் உரிமையில் அரசுக்கு பொறுப்பு இல்லை.

ஆ. கல்வியின் தரம்

ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற உத்தரவாதத்தை கல்வி பெறும் உரிமை சட்டம் வழங்கவில்லை. ஆரம்பப் பள்ளியில் ஐந்து வகுப்புகளுக்கு ஐந்து ஆசிரியர்கள் தர மாட்டார்கள். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் 90 மாணவர்கள் வரை படிக்கும் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருப்பார்கள்.

மல்டிகிரேட் டீச்சிங் என்ற உலக வங்கி உருவாக்கிய உத்தியின் மூலம் ஒரே ஆசிரியர் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு பாடம் நடத்துவது என்று திட்டமிடுகிறார்கள். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆய்வுக் கூட வசதி வழங்குவதைப் பற்றிப் பேசவில்லை.

ஒரே ஆசிரியர் 3 மொழிகளை கற்பிக்க வேண்டும் என்கிறார்கள். தாய் மொழி, ஆங்கிலம், இந்தி மூன்றையும் ஒரே ஆசிரியர் கற்பிக்க வேண்டும்.

இ. கல்வியின் உள்ளடக்கம்:

– மக்களின் தேவைகளுக்கான கல்வியாக இருக்க வேண்டும்

– உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனைகளை பேசும் கல்வியாக இருக்க வேண்டும்

– அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பேசுவதாக கல்வி இருக்க வேண்டும்.

இதுதான் சமூக மாற்றத்துக்கு தேவை. கல்வி தனியார் மயத்துக்கு எதிராக போராடுபவர்கள் சோசலிச புரட்சி வந்த பிறகுதான் மாற்றம் சாத்தியம் என்று சொன்னால் இப்போதைய அதிகார வர்க்கத்துக்கு மகிழ்ச்சிதான். புரட்சியை நோக்கிய போராட்டமாக பொதுப்பள்ளி, அருகாமை பள்ளி முறையை கொண்டு வருவதற்கு தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

1. தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

2. தனியார் பள்ளிகளை ஒழிக்க வேண்டும்

3. அரசு பள்ளிகளை மேம்படுத்துதல் வேண்டும்.

இதற்கு பிறகு பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை செயல்படுத்த முடியும்.

இறுதியாக, கல்வி உரிமைக்காக போராடிய சிறு குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், தோழர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்த பணக்காரர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால், எந்த சொத்தும் வைத்திராத பகத்சிங் மக்களின் நினைவில் நிற்கிறார். பகத் சிங் போல போராடுங்கள். நீங்கள் வீரமிக்க போராட்டங்களை நடத்தும் போது நாங்களும் எங்கள் கரங்களை உங்களுடன் இணைத்துக் கொள்வோம்.

________________________________________________________

– வினவு செய்தியாளர்.

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________

_____________________________

_____________________________

_____________________________