privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகுமரி மாவட்டம்: கிறித்தவ இளைஞரைக் கொன்ற இந்துமதவெறியர்கள்!

குமரி மாவட்டம்: கிறித்தவ இளைஞரைக் கொன்ற இந்துமதவெறியர்கள்!

-

நித்திரவிளை-படுகொலை

ன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையை அடுத்துள்ள சிற்றூர் நித்திரவிளை. இங்கு வசிக்கும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உறவினர்கள். இரு மதபிரிவினரும் ஒரே சாதியாக இருப்பதால் திருமண பந்தம் செய்து கொள்வது, தொழில் கூட்டு அமைத்து கொள்வது, ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது போன்ற குமரி மாவட்டத்தின் பொது குணாதியசத்தை சித்திரவிளையிலும் காணலாம்.

மார்த்தாண்டம் – தேங்காய்பட்டணம் சாலையிலிருந்து நித்திரவிளைக்கு திரும்பும் சாலையின் இரு புறங்களிலும் ஓடும் நீர் ஓடைகள் நம்மை கரம் பற்றி அழைத்து செல்வதான உணர்வை ஏற்படுத்தும். சாலையின் வளைவு,நெளிவு ஊர்ந்து செல்லும் பாம்பை நினைவூட்டும். எந்த புள்ளியில் நின்று இயற்கையை நிமிர்ந்து பார்த்தாலும் ஒரு உற்சாகமான அமைதியை உணரலாம்.

பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேறியிருக்கும் இந்து மற்றும் கிறித்தவ நாடார்கள் இணக்கமாகத்தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களை மோத விடுவது தான் ஆர்.எஸ்.எஸ்.ன் திட்டம். மண்டைக்காடு கலவரம் மூலம் கிறிஸ்தவ மீனவர்களையும், இந்து நாடார்களையும் பிரித்த ஆர்.எஸ்.எஸ், நாடார் சாதியை துண்டாட சிறியதும், பெரியதுமாக பல கலவரங்களை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறது.

இதன் ஒரு உதாரணம் தான் நித்திரவிளையில் எட்வின் ராஜ் என்ற இளைஞரை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது. ஒரு வன்முறை அல்லது கலவரம்  நிகழப்போவதற்கான எந்த தூண்டுதலும், அறிகுறியும் இன்றி 26 ஆம் தேதி மதியம் வரையிலும் இருந்துள்ளது நித்திரவிளை. இவ்வூரின் சாத்தன்கோடையைச் சேர்ந்தவர் ஞானமுத்தன். ஆலங்கோட்டில் அமைந்திருக்கும் சி.எஸ்.ஐ சபையின் உறுப்பினர். சர்ச்சில் ஞாயிறு ஆராதனை முடிந்த பின்னர் தனது வீட்டில் மாலையில் மாதாந்திர வீட்டு(ஜெப) கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். அந்த கூட்டத்திற்கு 17 பேர் வருகை தந்துள்ளனர்.

கூட்ட ஏற்பாடுகளை கவனித்த ஆர்.எஸ்.எஸ் கும்பல், அந்த ஏழு பேரையும், மாவட்ட பா.ஜ.க தலைவன் தர்மராஜ் தலைமையில் ஞானமுத்தனை முந்தி கொண்டு ஆயுதங்களுடன் வரவேற்றுள்ளது. சிதறி ஓடியவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கியும், ஞானமுத்தன் மற்றும் அவர் மகனையும் அடித்து உதைத்துள்ளனர். பின்னர் பக்கத்து கிராமமான நடைக்காவு சென்று தையல் கடை நடத்தி வரும் ஜெயராஜை வம்புக்கு இழுத்து அவரது மகன் எட்வின் ராஜை தந்தையின் கண்ணெதிரே அடித்தே கொன்றுள்ளது, ஆர்.எஸ்.எஸ் கும்பல். எட்வின் சபை நடவடிக்கைகளில் ஆர்வமுடன் செயல்படும் இளைஞர் என்பதற்கு மேல் எந்த ‘புகாரும்’ அவர் மீது இல்லை.

இந்த கொலை ‘ஜெபமே ஜெயம்’ என்ற பாதிரிகளின் மூளை சலவையில் மயங்கிக் கிடந்த மக்களை உசுப்பிவிட்டத்தில் ஆச்சரியமில்லை. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை சென்று திரும்பிய எட்வின் சடலத்தை நடு ரோட்டில் வைத்து போராட துவங்கினர் மக்கள். போராட்டம் தொடங்கிய பிறகு ஹெலன் டேவிட்சன் எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஜான் ஜேக்கப், பிரின்ஸ் மற்றும் புஷ்ப லீலா, ஆல்பன் ஆகியோர் இணைந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஜனநாயக உரிமை போராட்டத்திலும் ஈடுபடுவிட கூடாது என்பதற்காக கூடங்குளம் பகுதியிலிருந்து 6 கம்பனி படைகளை இங்கே நித்திரவிளை, வாவறை, கொல்லங்கோடு, புதுக்கடை, முன்சிறை பகுதிகளில் இறக்கிவிட்டு பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது அரசு.

எனினும் பத்து மணி நேரம் 27 ஆம் தேதி கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல், பிணத்தை ரோட்டில் வைத்து மறியல் செய்துள்ளனர், மக்கள்.  இந்த கொலையில் நேரடியான தொடர்புடைய மாவட்ட பா.ஜ. க தலைவன் உட்பட வழக்கு தொடுக்கப்பட்ட 8 பேர் தலைமறைவாகி உள்ளனர். போலீஸ் இப்போது 5 தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வருகிறது. மாநில பா.ஜ. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர். இப்போது தர்மராஜ் பொன். ராதா தயவில் தான் எங்கோ சென்னையில் மறைந்திருக்க வேண்டும். ஒரு தனிப்படை சென்னை விரைந்துள்ளது. இந்த வழக்கில் நெற்றி பொட்டு பொன்.ராதாகிருஷ்ணனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். அப்போது தான் ஆர்.எஸ்.எஸ்-சின் அடுத்தடுத்த தாக்குதல் திட்டங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் குமரி மாவடத்தில் புதிய அலையாக இந்த தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆகஸ்ட் மாதம் 13  ஆம் தேதி இரணியலை அடுத்த மேல பரசேரியில் மூன்று கிறிஸ்தவ பெண் ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருகே இசுலாமியர்கள் வாழ்கின்ற இடாலக்குடியில் தாக்குதல் நடத்தி அவர்கள் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளனர். முன்சிரைக்கு கீழே அஞ்சுக்கண்கலுங்கு என்ற ஊரில் ஒரு குருசடியில் பிரார்த்திக்க இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து அந்த இடம் 24 மணி நேரமும் போலிஸ் பந்தோபஸ்து போடப்பட்டுள்ளது. இவை இந்த ஆகஸ்ட் ஒரு மாதத்தில் மட்டும் நடந்தவை. பொன்.ராதாகிருஷ்ணன் எம்.பியாக இருந்த போது தீவட்டி கொள்ளையர்கள் போல ஆர்.எஸ்.எஸ் — பா.ஜ.க கும்பல் தீக்கிரையாக்கிய ஜெபப்பிரைகள் ஏராளம்.

தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க சாத்தன்கோடு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும், போலிஸ் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுவர், குற்றவாளிகள் 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்படுவர் போன்ற வாக்குறுதிகளை பாதிரிகள் முன் நின்று நித்திரவிளை மக்களுக்கு கலெக்டர் அளித்த வாக்குறுதிகள். டி.எஸ். எலியட்டின் ‘மர்டர் இன் த கதீட்ரலில்’ வீர சாவை ஏற்கும் பாதிரியார் தாமஸ் பெக்கட் போன்ற பாதிரிமார்கள் இப்போது இல்லை. எட்வின் ராஜ் போன்ற ஜெப வீரர்களை அதற்கு ஆயத்தப்படுத்தியுள்ளனர் போலும். குமரி பேராயம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில் நித்திரவிளையில் தேவ சமாதனம் நிலவ  பிரார்த்திப்பபதாக கதைத்துள்ளார் பிஷப் தேவகடாட்சம். நித்திரவிளை கிறிஸ்தவ மக்களின் ரணத்தை ஆற்றுப்படுத்த போதுமான வேத வசனம் பைபிளில் இல்லை போலும்.

குமரி மாவட்டத்தி எம்.பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களே. எனினும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் வெட்கக்கேடான விஷயம் என்பதல்ல. ஆர்.எஸ்.எஸ் இன் பாசிச செயல் திட்டத்தை அரசியல் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களோடு துணிவோடு எதிர் கொள்ளும் போது மட்டுமே குமரி மாவட்டத்தின் பசுமையை ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ செடியின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியும்.