privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஆப்கான்: அமெரிக்கா வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது!

ஆப்கான்: அமெரிக்கா வளர்த்த கிடா மார்பில் பாய்கிறது!

-

செய்தி-70

கிடா
அமெரிக்க இராணுவத்திடம் பெற்ற பயிற்ச்சியைக் கொண்டு அவர்களையே திருப்பித் தாக்குகின்றனர் ஆப்கானிய வீரர்கள்

12 ஆண்டுகள் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பிறகும் அமெரிக்க ஏகாதிபத்திய படைகள் ஆப்கானிஸ்தானில் பயந்து நடுங்கிக் கொண்டே செயல்படும் நிலைமை தொடர்கிறது.

ஆப்கானிஸ்தானில் இப்போது 1.29 லட்சம் நேட்டோ படையினர் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உடன் பணி புரியும் ஆப்கானிய படையினர் நடத்திய 33 ‘உள்’ தாக்குதல்களில் இந்த ஆண்டு இதுவரை 42 நேட்டோ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2011-ல் 21 தாக்குதல்களில் 35 பேரும், 2010-ல் 11 தாக்குதல்களில் 20 பேரும் கொல்லப்பட்டனர்.  தம்மால் பயிற்றுவிக்கப்படும் ஆப்கானியர்களாலேயே அமெரிக்கப் படையினர் தாக்கப்படுவது ‘நீலத்தின் மீது பச்சை’ (கிரீன் ஆன் புளூ) என்று சிறப்பு பெயர் சூட்டப்படும் அளவுக்கு வழக்கமான செய்தி ஆகியிருக்கிறது.

அமெரிக்கா வெளியேறிய பிறகு பொறுப்பு எடுத்துக் கொள்ளவிருக்கும் ஆப்கானிய படைகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க படைவீரர்கள் பதட்டமான சூழலில் செயல்பட வேண்டியிருக்கிறது. ‘பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் கையில் ஆயுதங்கள் கிடைத்தவுடன் அவர்களின் முதல் இலக்கு தாமாகவே இருக்கலாம்’ என்ற அச்சத்துடனேயே அவர்கள் வாழ்கிறார்கள்.

‘சாரைப் பாம்பு ஒன்றுடன் தூங்குவது போன்றது இது. படுக்கையில் எங்கோ அது மறைந்திருக்கிறது என்று தெரிகிறது, எப்போது தாக்குமோ என்ற கவனத்துடனேயே இருக்க வேண்டியிருக்கிறது’ என்கிறார் ஒரு அமெரிக்க படைவீரர். ‘நம்முடைய முகாமுக்கு வெளியில் தாக்குதலை எதிர்பார்ப்பதற்கு தயாராகிக் கொள்ளலாம், முகாமுக்குள்ளும் தாக்கப்படலாம் என்பது எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது’ என்கிறார் இன்னொருவர்.

‘படையினர் ஆயுதங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’ என்றும், ‘அமெரிக்க அதிகாரிகள் ஆப்கானியர்களை சந்திக்க போகும் போது ‘பாதுகாப்பு தேவதைகள்’ எனப்படும் ஆயுதம் தாங்கிய அமெரிக்க படை வீரர் பாதுகாப்புக்காக உடன் போக வேண்டும்’ என்றும் இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. உதாரணமாக அமெரிக்க ஆப்கானிய படைகள் சேர்ந்து சாப்பிடும் நேரத்தில் ஒரு அமெரிக்க வீரர் மட்டும் உட்கார்ந்து சாப்பிடாமல் தனது சகாக்களுக்கு பாதுகாப்பாக ஆயுதத்துடன் நின்று கொண்டிருப்பார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த சாதாரண மக்கள் 20 பேரை ஒரு “மன நிலை பாதிக்கப்பட்ட” அமெரிக்க படை வீரர் கொன்றது, வெற்றிச் சின்னங்களுக்காக உடல் உறுப்புகளை அமெரிக்க படைவீரர்கள் வெட்டியது, பல குடும்பங்கள் எரித்துக் கொல்லப்பட்டது, பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு மருத்துவ வசதி மறுக்கப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டது, பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் நடத்தப்பட்ட பாலியல் கொடுமைகள், கொல்லப்பட்ட தாலிபான் மீது அமெரிக்க வீரர்கள் சிறுநீர் கழிப்பது, குரானை அமெரிக்க வீரர்கள் எரிப்பது என்று அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டுள்ள கொடுமைகள் ஆப்கானிய மக்கள் மத்தியில் கடுமையான வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

‘பரந்த பட்ட ஆப்கானிய மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிராக நிலவும் கோபம் மிகவும் ஆபத்தானது’ என்கிறார் ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தின் ஜேக்குலின் ஹேசல்டன். ‘அமெரிக்க ராணுவத்தின் நோக்கங்களுக்கும் ஆப்கானிய படைகளின் நோக்கங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை’ என்கிறார் அவர்.

‘ஆப்கானிய படைவீரர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும், உறவினர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டவர்கள் படையில் இருக்கிறார்களா என்பதை கண்டு பிடிக்க வேண்டும், குடும்பத்திலோ கிராமத்திலோ ஏதாவது தகராறு நடந்திருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும், ஒருவர் விடுமுறை ஏதாவது எடுத்திருக்கிறாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் தனது வீரர்களிடம் அறிவுறுத்துகிறது அமெரிக்க இராணுவம்.

தாலிபான் ஆப்கன் படைகள் மத்தியில் ஊடுருவி விட்டதும், அமெரிக்க-ஆப்கானிய கலாச்சார வேறுபாடும் இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் சொல்கிறார்கள். ‘அமெரிக்க படையினர் மீது வெறுப்பாக இருக்கும் ஆப்கானியர்கள் இந்த தாக்குதல்களை நடத்துகிறார்கள். அதனால் ஆப்கானிய போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்படுபவர்களின் பின்னணியை இன்னமும் கவனமாக பரிசீலிக்க வேண்டும்’ என்கிறார்கள் அவர்கள்.

2011 இறுதி வரை ஆப்கான் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை செலவழித்த மொத்த தொகை $468 பில்லியன் (சுமார் ரூ 25 லட்சம் கோடி). இந்த ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கை 44,000லிருந்து 84,000ஆக அதிகரித்து 2011ன் இறுதியில் 1.03 லட்சமாக வரை உயர்ந்தது.

‘2014 இறுதிக்குள அனைத்து படைகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்’ என்றும் ‘நாட்டின் பாதுகாப்பு ஆப்கான் படைகளிடம் ஒப்படைக்கப்படும்’ என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. 1970களில் வியட்நாமை போலவே ‘ஆலோசகர்கள்’ என்ற போர்வையில் அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடரும் என்பது திட்டத்தின் இன்னொரு பகுதி.

பெரும் பொருட்செலவோடு லட்சக் கணக்கிலான படைகளை அனுப்பி நடத்தப்படும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு தனது ஆதிக்கத்தை ஆப்கன் மக்கள் மீது நிலைநாட்ட முடியவில்லை என்பதோடு மக்கள் மத்தியில் வெறுப்பை மேலும் வளர்த்திருக்கிறது என்பதுதான் இந்தத் தாக்குதல்கள் காட்டும் உண்மை.

இதையும் படிக்கலாம்

______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: