privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!

மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!

-

செய்தி -100

கூடங்குளம்-முற்றுகைகூடங்குளம் அணு உலை முற்றுகை நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு மிகப்பெரும் தாக்குதலை நடத்துவதற்கு தயார் நிலையில் கூடங்குளம் அணு உலையைச் சுற்றி நிற்கிறது போலீசு  – ராஜேஷ்தாஸ், பிதாரி போன்றவர்கள் தலைமையில்.

இடிந்த கரையிலிருந்து புறப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் அணு உலையின் பின்புறம் கடற்கரை ஓரமாக திரண்டுள்ளனர். அணு உலையின் வாயிற்புறமான கூடங்குளத்தில், சுமார் 5000 மக்கள் வீதியில் திரண்டு நிற்கின்றனர். அவர்கள் இடிந்த கரை மக்களுடன் சென்று சேர்ந்து கொள்ள முடியாத வண்ணம் சாலையெங்கும் போலீசு தடைகளை அமைத்திருக்கிறது.

அருகாமை கிராமத்து மக்கள் சாத்தியமான அளவுக்கு கடல் வழியே இடிந்த கரை சென்றுள்ளனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும் கடல் வழியே இடிந்த கரை சென்று போராடும் மக்களுடன் களத்தில் இருக்கின்றனர்.

அங்கிருந்து அவர்கள் அனுப்பிய செய்தி இது.

தற்போது மதியம் சுமார் 1 மணி அளவில் கவச உடையணிந்த சில ஆயிரம் அதிரடிப்படை போலீசாரும் சுமார் பத்தாயிரம் மக்களும் நேருக்கு நேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

கையில் மெகா போனுடன் மக்களை நோக்கி வந்த போலீசு எஸ்.பி,

“உயர்நீதிமன்றம் நன்றாக ஆலோசித்து அணு உலையை திறக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வேண்டுமானால் நீங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் செய்யலாம். உங்கள் அச்சத்தை போக்க முதல்வர் ஒரு குழுவும் அமைத்திருக்கிறார். அவர்கள் அணுஉலை பாதுகாப்பானது என்று கூறியிருக்கின்றனர். இங்கே 144 தடை உத்தரவு போட்டிருக்கிறோம். நீங்கள் இப்படி கூடுவது சட்டவிரோதம். கலைந்து செல்லுங்கள்” என்று அறிவித்தார்.

மைக்கை அவர் கையிலிருந்து வாங்கிய ஒர் பெண், “இந்தக் கடல் எங்களுக்கு சொந்தம், இந்த மண் எங்களுக்கு சொந்தம். நாங்கள் உயிர் வாழ விரும்புகிறோம். நீங்கள் சொல்கின்ற யார் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எந்தக்குழுவும் நீதிமன்றமும் எங்களுடன் பேசவில்லை. நாங்கள் போகமாட்டோம்” என்று அறிவித்தார்.

உடனே, உதயகுமாரைக் கூப்பிடு என்றார்கள் போலீசு அதிகாரிகள். எங்களிடம்பேசு. நாங்கள் பேசுகிறோம் என்றார்கள் மக்கள்.

இதற்கிடையில் கூட்டத்தின் பக்கவாட்டில் நுழைந்து உள்ளே வந்த ராஜேஷ்தாஸ், “அணு உலையைப் பற்றி நான் விளக்குகிறேன். உதயகுமார் சொல்வதெல்லாம் பொய்” என்றார். “அணு உலையைப் பற்றி எங்களுக்குத் தெரியும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்கள் மக்கள்.

“உதயகுமாரைத் தூக்கிடுவேன்” என்று ராஜேஷ் தாஸ் சொல்லி முடிப்பதற்குள், “யாரைடா தூக்குவே..ங்கோத்தா” என்று கிளம்பியது ஒரு குரல்.

கல்லடி பட்ட போலீசு பின்வாங்கி, பாய்வதற்காக காத்திருக்கிறது.

முல்லைப்பெரியாறு போராட்டத்தின் மீது தொடுத்த தாக்குதலை ஒத்த ஒரு தாக்குதலைத் தொடுக்க தயார் நிலையில் இருக்கிறது போலீசு.

ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் ஒரு தரப்பாக அரசையும் அணு உலையையும் ஆதரித்து நிற்கும் இந்த சூழலில், கூடங்குளம் மக்கள் போராட்டத்தை ஆதரித்துக் குரல் கொடுப்பதும், அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதும் நம் கடமை.

சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுக்காதே!

கூடங்குளத்தை முற்றுகையிட்டிருக்கும் கொலைகாரப் போலீசு படைகளைத் திரும்ப பெறு!

அணு உலையை எதிர்ப்பது மக்களின் உரிமை!

கூடங்குளம் அணு உலையை மூடு!

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: