செய்தி -101

கூடங்குளம்-நள்ளிரவு

 

ப்போது இரவு 12 மணி. சில்லென்ற கடற்காற்று, எலும்பு வரை ஊடுறுவுகிறது.

கூடங்குளம் அணு உலையின் பின்புறம், அணு உலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட கடற்கரையில், சற்று வடக்குப்புறமாக, உலையிலிருந்து சுமார் 1000 மீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக, சுருண்டு படுத்திருக்கிறார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அடங்கலாக இடிந்த கரை ஊர் முழுவதும் இங்கே வந்துவிட்டது – நடக்கமுடியாத சில முதியவர்களைத் தவிர ஊருக்குள் வேறு யாரும் மிச்சம் இல்லை.

குளிரில் நடுங்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை அணைத்தபடி தாய்மார்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் இருள் கவியத் தொடங்கிய பின்னர்தான் அதிரடிப்படை சற்று பின்நோக்கி நகர்ந்தது. பதற்றம் நிறைந்த பகற்பொழுது ஒருவழியாக முடிந்தது.

இரவுக்கு உளுந்தங்கஞ்சி. பசியாறிய அயர்ச்சியில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்க, நாளைய சமையலுக்கான ஆயத்தங்களை சில இளைஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். வேறு சில இளைஞர்கள் கையில் டார்ச் விளக்குடன் சிறு சிறு குழுக்களாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் – போலீசின் ஊடுறுவலைத் தடுப்பதற்கும் அவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும்தான்.

ஆரவாரமோ கூச்சலோ இன்றி வேலைகள் நடக்கின்றன. கடற்காற்று பலமாக இருந்த காரணத்தினால் பகலில் பந்தல் போட முடியவில்லை. சில இளைஞர்கள் மீண்டும் முயன்று கொண்டிருந்தார்கள். பெண்களின் பயன்பாட்டுக்கான மறைப்புகளை சிலர் நிறுவிக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தண்ணீர் டிரம்களை ஆங்காங்கே கொண்டு வந்து வைத்து நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

நடுக்கும் குளிரில் “கையது கொண்டு மெய்யது பொத்தி” திட்டுத்திட்டாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள், சீட்டாடிக் கொண்டிருக்கும் சில இளைஞர்கள், அவர்ளைக் கடிந்து கொள்ளும் பெரியவர்கள்.. என்று போராட்டக் களமாகவும், திருவிழாச் சூழலாகவும் காட்சி தருகிறது இந்தக் கடற்கரை. “போராட்டமே மகிழ்ச்சி” என்பதை தங்களது நடவடிக்கைகள் மூலம் மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறார்கள் இந்த மக்கள்.

“இது மீன்பிடிக்கும் சீசன். கடலுக்குப் போனால் சுலபமாக வாரம் 5000 ரூபாய் சம்பாதிக்க முடியும். இப்போது விட்டால் அப்புறம் மீன் கிடைக்காது. இழப்புதான். ஆனால் அணு உலையை இப்போது விட்டால், அப்புறம் எப்படி தடுக்க முடியும்?” என்கிறார் ஒரு மீனவர்.

கடல் அலைகள் வந்து காலைத்தொட்டுச் செல்லும் கடற்கரை ஓரத்தில், வெட்டவெளியில் குளிரில் படுப்பதையோ, இன்னும் சில நாட்களை அங்கேயே கழிக்க வேண்டியிருக்கும் என்பதையோ யாரும், ஒரு பிரச்சினையாக கருதவில்லை. கைக்குழந்தைகளுடன் படுத்திருந்த தாய்மார்கள் முகத்தில்கூட இது குறித்த கவலை எதையும் காண முடியவில்லை.

கூடங்குளம்-நள்ளிரவு

“பெண்களும் குழந்தைகளும் கட்டாயப்படுத்தி அழைத்துவரப் பட்டிருக்கிறார்கள்” என்கிறது போலீசு. கட்டாயத்தின் பேரில் வந்திருப்பவர்கள் போலீசு படையினர்தான் என்பதை அவர்களது முகமே காட்டுகிறது. ஷு க்கள் மணலில் புதைய, “ஒரு புறம் முட்புதர்கள், மறுபுறம் கடல், எதிரில் மக்கள்” என்று விசித்திரமானதொரு சூழலில் நடக்க முடியாமல் நடந்து வந்து நின்று கொண்டிருக்கும் இரும்புத் தொப்பியணிந்த பெண் காவலர்களின் முகம்தான் பரிதாபத்துக்குரியதாக தெரிந்தது.

“போக விரும்புகிறவர்கள் போகலாம்” என்று அந்தப் போர்க்களத்தில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால், அத்தனை போலீசாரும் ஓடி விடுவார்கள் என்பது மட்டும் உறுதி. இந்தப்பக்கம் பத்தாயிரம் மக்கள். அந்தப்பக்கம் ராஜேஷ்தாஸ், பிதாரி இன்ன பிற அதிகாரிகள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

இதுதான் உண்மை நிலை. “கட்டாயப்படுத்தி கொண்டுவரப்பட்ட பெண்கள்” கடற்கரை திறந்த வெளியில் படுத்துக் கிடக்க, “கடமையாற்ற வந்த போலீசார்”, இரவு திருமண மண்டபங்களுக்கு அனுப்ப பட்டு விட்டார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு அணு மின்நிலையத்தின் விருந்தினர் மாளிகை.

விடிந்தவுடன் குளித்து, டிபன் சாப்பிட்டு, சீருடை அணிந்து வந்து “சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட” வேண்டுமே, இரவு நேரத்தை கடற்கரைக் குளிரில் கழிக்க முடியுமா?

“மண்டபத்திலேயே தங்கட்டும், அதுதானே அவர்களுக்குப் பாதுகாப்பு” என்று கூறி நக்கலாக சிரித்தார் ஒரு மீனவ இளைஞர்.

அணு உலையை முன்னிருத்தி இப்பிராந்தியம் முழுவதையும் ஒருவகை இராணுவக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன. தென்தமிழகத்தை ஒரு இராணுவ கன்டோன்மென்டாக, இன்னொரு காஷ்மீராக, வடகிழக்காக மாற்றும் பணி தொடங்கிவிட்டது.

உவரி, கூட்டப்புளி, கூடங்குளம் என்று எல்லா ஊர்களிலிருந்தும் வருகின்ற சாலைகள் அடைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் காட்டு வழியில், முட்புதர்களின் ஊடாக நடந்தும், கடல் வழியே படகுகளிலும் மக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அணு உலையின் வாயிற்புறமான கூடங்குளத்தில், தேவாலயத்தின் எதிரில் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கிறார்கள். அணு உலையின் வலப்புறமும் இடப்புறமும் நீண்டு செல்லும் கடற்கரையெங்கும் இருக்கும் கரையோர மக்கள் போராட்டத்தின் தீயால் தீண்டப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.

“அடித்தால் வாங்கிக் கொள்ளவேண்டும். திருப்பி அடிக்கக்கூடாது. அமைதி, அகிம்சை” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் உதயகுமார்.

“மக்கள் மேலே கைவெச்சா அப்படியே கடலுக்குள்ள போயிடுவோம். போகும்போது ஆளுக்கொரு போலீசுக்காரன கையில பிடிச்சுகிட்டுதான் போவோம்” என்றார் ஒரு நடுத்தர வயது மீனவர்.

“துப்பாக்கியை கீழே வச்சிட்டு, கையில தடிக்கம்ப எடுத்துகிட்டு வரட்டும். நாங்க வெறுங்கையா வாரோம். யாருன்னு பாத்துகிறுவோம்” என்றார் இன்னொரு இளைஞர்.

கடலுக்குள்ளே கட்டுமரத்தின் மேல் கால் பதித்து அவர் நின்று கொண்டிருப்பது போலவும். போலீசு படைகள் அலை மேல் மேவி நிற்க முடியாமல், துப்பாக்கியை ஊன்றுகோலாக்கி நின்று தடுமாறுவதைப் போலவும் வேடிக்கையான ஒரு மனச்சித்திரம் அவர் பேச்சைக் கேட்கும் போது நமக்கு எழுகிறது.

கடல் தொடும் இடத்துக்கு வந்துவிட்டதனாலோ என்னவோ மக்களின் முகத்தில் தைரியம் கூடிவிட்டது. போராட்டத்தில் கடலும் தங்களுக்குத் துணை நிற்பதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை போலும்!

இந்த நள்ளிரவில், நடுக்கும் குளிரில், கடல் அலையின் அச்சுறுத்தும் பேரிரைச்சலில், அமைதியாக உறங்கும் குழந்தைகளையும் தாய்மார்களையும் காணும்போது, அது உண்மையென்றுதான் தோன்றுகிறது!

________________________________________________________________

வினவு செய்தியாளர்கள், கூடங்குளம் கடற்கரையிலிருந்து

படங்கள் – வினவு செய்தியாளர்கள், மற்றும் டயாநூக்

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: