privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்பிச்சை புகினும் கற்கை நன்றே...

பிச்சை புகினும் கற்கை நன்றே…

-

பிச்சைக்காரர்கள் என்றால் நம்மிடம் இறைஞ்சி ஏதாவது ஒன்றைப் பெறுபவர்கள் என்று மட்டும் நினைத்துவிட முடியாது. வேறு ஏதாவது ஒரு பொருளில் அவர்கள் நமக்கு பிச்சையிடுபவர்களாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு நபரை தற்செயலாக ஒரு உறவினர் வீட்டு வாசலில் சந்திக்க நேர்ந்தது. இதோ நீங்களும்தான் அவரைச் சந்தியுங்களேன்…

“ஏங்க வீட்ல யாரு! கொஞ்சம் நேரத்தோட வாங்க! நாலு எடம் போவணும்!”

கறாரான பேச்சையும் இயல்பான உடையமைப்பையும் பார்த்து “சித்தப்பா யார்னு பாருங்க! ஏதாவது ஈ.பி. ரீடிங் எடுக்குறவரா” என்று அழைக்க, அவசரமாக வாசலை எட்டிப்பார்த்த சித்தப்பாவோ “இவனா, ஏடா கூடம் புடிச்சவனாச்சே! தம்பி பிச்சைக்காரம்ப்பா!” என்று அவரைப் பார்த்து எச்சரிக்கையானார்.

“பிச்சைக்காரர்ங்குறீங்க.. பாத்தா தெரியல!”

“நீ வேற பேச்சு கொடுத்தோம், வளவளன்னு பேசுவாம் பாரு! நீ ஈடு கொடுக்க முடியாது. பத்து அஞ்சோ கொடுத்து ஆள அனுப்பலேன்னா, நம்பள பேசியே பிச்சிருவான்…” என்று சித்தப்பா சொல்ல, அட இப்படியும் ஒரு ஆளா? என பேச்சு கொடுக்க ஆர்வம் வந்து “சித்தப்பா ஏதாவது பேசுங்க பார்ப்போம்” என்று வற்புறுத்தினேன்.

“சொன்னா கேக்க மாட்ட! அவன் டைப்பு உனக்குத் தெரியாது. நல்லா வாழ்ந்தவன்;  இப்ப மெண்டலாட்டம் ஆயிட்டதால வக தொகை இல்லாம பேசுவான்… வேணாம்” என்று பலவாறு மறுத்தவர் எனது விருப்பத்திற்கிணங்க பேச்சுக் கொடுத்தார்.

“என்ன மணி! நகராம பாத்துக்கிட்டே நிக்குற! எவ்ளோ பிச்சை போட்டாலும் நீயும் அப்படியேதான் இருக்க… ஆளு மாறக் காணோமே”

“நீ மட்டும் என்னாவாம்? டீ ஆறு ரூபா விக்குற காலத்துல நீயும் அதே அஞ்சு ரூபாதான் போடுற… நான் அன்னைக்கு பாத்த மாதிரிதான் நீயும் அப்படியே இருக்க… ஒண்ணும் முன்னேறக் காணோம்! விவசாயம் பாத்து நீயே மாற முடியல… நான் மாற முடியுமா?” இதுக்குதான் வேணாண்ணது! என்பது மாதிரி இடையே சித்தப்பா என்னை ஒரு பார்வை பார்த்தார்.

“அதுக்கில்லடா! ஊரு முழுக்க காசு வாங்குறியே! அப்படி என்னதாண்டா உனக்கு செலவு”

“ஒரு ரூபா, ரெண்டு ரூபா போட்டுட்டு ஒட்டு மொத்த வரவு செலவு கேளுங்க! அவளுக்கு ஓட்ட போட்டுட்டு எதையும் கேக்காத.. வூட்டுக்குள்ளயே இருந்துட்டு உலகம் தெரியாம இருக்கண்ணே நீ! கேக்குறியே ஒத்த ஆளுக்கு என்ன செலவுன்னு! ஒரு டீ என்னா வெல? ரெண்டு இட்லி என்னா வெல? உன்னாட்டம் ஒரு எடத்துலயா இருக்கேன்? பத்து எடம் சுத்துறேன். ஒடம்புல தெம்பு வேணாம்; சாங்காலம் டிபன் சாப்பிட வேணாம்; ராச்சோறு வேணாம்… என்னமோ உலகந் தெரியாம கெடந்து பேசுற! சிகரெட்டுக்கு மட்டும் தெனம் இருபது ரூபா ஆவுது; குவார்ட்டரு அறுபது ஆவுது… மனுசன் வாழ வேணாம்!”

வீம்புக்கு பேசுகிறாரா? இல்லை விவரமாகத்தான் பேசுகிறாரா?… என ஒரு கணம் மலைத்தும், திளைத்தும் போன நான் பேச்சு நீளவே நெருக்கமாக வந்து கேட்க ஆரம்பித்தேன். என்னையும் ஒரு முறை உற்றுப்பார்த்து விட்டு… “தம்பி நீதான் ஒரு பத்து ரூவா கொடேன்! பாத்தா படிச்ச புள்ளையாட்டம் தெரியுது! இந்த வூர்க்காரன்கிட்ட பேசிப் புரிய வச்சி பிச்ச எடுக்குறதுக்குள்ள வயிறு காஞ்சு போவுது!” கையை நீட்ட ஆரம்பிக்க, சித்தப்பா இடைமறித்தார்.

“திமிருதாண்டா உனக்கு! எடுக்குறது பிச்சை; இதுல தண்ணி, சிகரெட்டு இல்லாம இருக்க மாட்டியாக்கும்!”

“அதான பாத்தேன்! எப்பவாவது பத்து ரூவா போட்டுட்டு புத்தி சொல்ல ஆரம்பிச்சிடுவீங்களே! நீ போடுற காசுக்கு இப்புடிதான் செலவு பண்ணனும்னு கண்டிசன் வேறயா?

ஏன் கோவிந்தராசு.. நீ இந்த டிவி.ல படம் கிடம் பாக்க மாட்டியா? ஆயி பேச்ச அப்பன் கேக்க மாட்டேங்குறான், அப்பன் பேச்ச மவன் கேக்க மாட்டேங்குறான், பஞ்சாயத்து போர்டு டி.வி.ல போய் பாரு! உலகம் அப்படி போய்ட்டு இருக்கு…! நீ போடுற காசுக்கு நான் உன் பேச்ச கேக்கணுமாக்கும்! தண்ணியும், சிகரெட்டும் இல்லேன்னா எவன் இந்த ரோட்ல கெடக்க முடியும்! ஊராவா வச்சிருக்கீங்க? பன்னி கூட படுக்குமா இந்த ஊர்ல… வாயப் புடுங்காத பேசாம ரூபாயக் கொடு!

“என்னமோ கொடுத்து வச்ச மாதிரி கேக்குற?

“சொன்னா புரிஞ்சுக்கண்ணே! உன்ன மதிச்சு யாராவது சொந்தக்காரன் வந்து கேட்பானா? என்ன மாதிரி பழகுன ஆளு வந்தாதான் உண்டு! எனக்குந் தராம… அப்படி என்னதாண்ணே குடும்பம் நடத்துற?…

“என்னமோ சொன்னியே வாய பாத்தியா?… இவன பாத்தா நீ பிச்சக்காரன்னு சொல்லுவியா… இப்புடிதான் ஊர் பூரா பேசி சமயத்துல அடி வாங்கிட்டும் போவான்” என்னிடம் சித்தப்பா விவரிக்க, அவர் மேலே வானத்தை பார்த்து ஏதோ முனகிக் கொண்டு, வானத்தைக் கண்டிப்பது போல சைகையும் காட்டினார். “பாதிதான் மெண்டல். பாதி டூப்பு” என்று சித்தப்பா என்னிடம் விளக்க, அவரது தடாலடி உண்மைப் பேச்சு என்னை ஈர்த்தது.

“ஏங்க உங்களுக்கு வீட்டுக்காரம்மா இல்லியா? ஏன் இப்படி தனியா கெடந்து சுத்துறிங்க… வீட்ல இருக்கலாம்ல!”

“அதான் தம்பி! ஏண்டி வீட்ல கெடந்து கஷ்டப்படணும், வாடி பிச்சை எடுக்கலாம்னு கூப்பிட போயிதான் சண்டை வந்து என்ன துரத்திட்டா…!”

“அவங்க நெனக்கிறதுதான சரி! உழைச்சி வாழறத விட்டுட்டு, இப்படி பிச்சையெடுக்கலாமா?”

“என்னமோ உழைச்சி வாழறவன இந்த ஊர்ல எவனோ கவுரமா மதிக்குற மாதிரி, என்னா பேசுறீங்க நீங்க?!.. உழைச்ச நாம வாழ முடியாது தம்பி; நம்ம மொதலாளிதான் வாழுவான். என் கையப் பாரு! மோட்டாருக்கு காயில் கட்டி கட்டி கையே காப்புக் காச்சிருக்கு பாரு… நான் பொழுதுக்கும் காயில் கட்டி கட்டி என் மொதலாளி ஒரு கடைய நாலு கடையாக்கிட்டான். பொழுதுக்கும் நான் புரோட்டா பிசைய, மொதலாளி வீட்ட கட்டிட்டான்… உழைக்குறதால பத்து பைசாவுக்கு பிரயோசனமில்ல. நீயும் படிச்சு வேலைக்குப் போயி, எவனோ வாழ கஷ்டப்படாத! என்னப் போல பிச்சையெடுத்துப் பாரு! ப்ரியா இருக்கலாம்… நோட் திஸ் பாயிண்ட்”

“என்னா சித்தப்பா! இங்கிலீசெலாம் பேசுறாரு!?”

“அந்தக் காலத்துல நல்லா படிச்சவம்பா! குடும்பம் கவனிக்க முடியாம மெண்டலாய்ட்டான்.”

அவர் பேச்சில் சில ஏற்கவியலாத கருத்துக்கள் இருந்தாலும் நிச்சயம் அவர் மெண்டல் இல்லை என்று மட்டும் புரிந்தது.

“என்ன தம்பி! பின்னாடி கவலப்படாத… பேசாம எவனுக்கும் சிக்கிடாம பிச்சை எடுத்துப் பொழச்சுக்கோ!” தானே சிரித்தும் கொண்டார்.

“ஏய்! சீ, வீட்டுக்கு வந்த புள்ளய பிச்சை எடுன்னு! போடா! இதான் உங்கிட்ட ரொம்ப வச்சிக்கப்புடாது!”

“யாரு சம்பந்தம் போடச் சொன்னா? ஏதாவது கேக்குறீங்க.. அப்புறம் சொல்லிட்டன்னா பாயுறீங்க… பத்து ரூவா கொடுத்தா நான் பாட்டும் போகப் போறேன்… அண்ணே! குடுண்ணே! தம்பி வேற பாக்குது!”

“எல்லாம் வெலாவாரியா பேசுறீல்ல? பிச்சை எடுக்குறது தப்புன்னு உனக்கு புரியலியா? என்னடா! வீடு வாசல விட்டுட்டு, புள்ள குட்டிய விட்டுட்டு இப்படிச் செய்யறது தப்புன்னு நீ ஒத்துக்குறியா?”

“பாத்திங்களா தம்பி! இதான் இந்த ஊர்க்காரன் கிட்ட.. ஒரு பத்து ரூபா கொடுத்தா நாம அவங்கள ஒத்துக்கணும்பாங்க..!”

“சரி! வீட்ல புள்ளங்களும் வளர்ந்தவங்களா இருக்காங்க; வீட்லயும் மனைவி இருக்காங்க! போய் பேசாம வீட்டோட சேர்ந்துதான் இருங்களேன்.”

“நீங்களுமா தம்பி! சரி, பத்து ரூபா கொடுப்பீங்கன்னா சும்மா கொடுப்பீங்களா? பத்து கேள்வி கேக்கத்தான் செய்வீங்க. உங்களுக்கும் நான் ஆரம்பத்துலேர்ந்து ஹிஸ்டிரிய சொல்லி ஆவணும்.. பிச்சை எடுக்கறத விட கஷ்டம்… பிச்சைக்காரன் கிட்ட கேக்குற கேள்விக்கு அவன் பதில் சொல்றது…” ஏதேதோ பேசி “சரி! இப்ப நீங்க எவ்ளோ தரப் போறீங்க? இவ்ளோ கேள்வி கேக்குறீங்க!”  என்று அவர் சிரித்தபடி கேட்க, எனக்கும் சிரிப்பு வந்து விட்டது. உடனே சித்தப்பா குறுக்கிட்டார். “போ! போ! சும்மா திமிருப்பேச்சு பேசிக்கிட்டு.. பிச்சைக்காரன் மாதிரியா பேசுற நீ!” சித்தப்பா கோபப்பட்டார்.

“பாருங்க தம்பி! இவுங்களாம் ஏதோ கவுரமா குடும்பம் நடத்துற மாதிரி!… ரேசன்ல எலவச அரிசி, டி.வி, பேனு, அடுப்புன்னு… உங்களுக்கு ரேசன் கார்டு இருக்கு, என்கிட்ட இல்ல… அதான் வித்தியாசம். எனக்கொரு ரேசன் கார்டு இருந்தா நான் ஏன் உன்ன தேடி வரப் போறேன்! உன்ன மாதிரி பேசாம வீட்ல கெடக்க மாட்டேன்.” வெடுக்கெனப் பேசியபடி கையை நீட்ட, ஒரு பத்து ரூபாயை எடுத்துக் கொடுக்க, “நல்லா இரு தம்பி! இந்த ஊரோட சேர்ந்து நீயும் கெட்டுறாத!” என்று சிரித்தபடியே நகர்ந்தார்.

“அட ஏம்பா! நீ வேற… அவனே திமிரு புடிச்சவன். இப்புடி பேசித்தான் நேத்து கூட கடத் தெருவுல அடி வாங்கினான். கொடுத்தா திரும்பத் திரும்ப வருவான். ஏன் பணம் கொடுத்தே?!” சித்தப்பா வருத்தப்பட்டார். எனக்கோ கையில் பத்து பத்து ரூபாய் கொடுத்து இவரை எல்லோரது வீட்டுவாசலுக்கும் அனுப்பலாம் போல இருந்தது!

♦ ♦

பிச்சைக்காரர்களை இரங்கத்தக்கவர்களாக மட்டும் பார்த்துப் பழகியவரா நீங்கள்?  சில வேளைகளில் பிச்சைக்காரர்களிடம் வெளிப்படும் சமூக அக்கறை… அது இல்லாத பலரை இரங்கத்தக்கவர்களாக ஆக்கி விடுகிறது! அப்படி ஒரு அனுபவம்….

புதுக்கோட்டை பேருந்து நிலையம்… சிவப்புச் சட்டையுடன், பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. எனும் அடையாள அட்டைகளுடன் சில தோழர்கள் கையில் ‘போபால்.. நீதி வேண்டுமா? புரட்சிதான் பாதை’ எனும் சிறு நூலுடன்… “கொலைகார ‘டௌ’ வே வெளியேறு!” எனும் முழக்கத்துடன் ஒவ்வொரு பேருந்திலும் ஏறி

“அன்பார்ந்த உழைக்கும் மக்களே! போபால் நச்சுவாயுப்  படுகொலையில் நமது அருமை இந்திய உழைக்கும் மக்கள் 23000 பேரை படுகொலை செய்துவிட்டு, அமெரிக்க யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சன் இந்திய அரசின் ஆதரவுடன் பத்திரமாகத் தப்பித்துச் சென்று விட்டான். தலைமுறையே மரபணு சிதைந்து… தனிப்பட்ட முதலாளியின் இலாபவெறிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் விழிபிதுங்கி, முகம் சிதைந்து நீதிக்காக வீதியில் போராடுகிறார்கள். நீதி வேண்டாமா? இந்த  அரசும், சட்டமும்,  பாராளுமன்றமும்

முதலாளிகளுக்குத்தான் ஆதரவானது என்பதைப் போபால் படுகொலை நிரூபித்துள்ளது… பிறந்த குழந்தைகள், கருவிலேயே பிறக்காத குழந்தைகள் சிதைந்த கொடூரங்கள்…” எனத் தோழர்கள் மக்களிடம் பேசியபடி முற்றுகைப் போராட்டத்திற்கான பிரச்சாரம் மற்றும் நிதிவசூல் செய்து கொண்டிருக்க,

ஒவ்வொரு பேருந்திலும் தோழர்கள் பேச ஆரம்பிக்கும்போது இடையே வந்து ஒரு பிச்சைக்கார சிறுமியின் தட்டேந்திய குரலும் குறுக்கிடும். தோழர்கள் எந்தப் பேருந்தில் ஏறினாலும் அந்தச் சிறுமியின் பிச்சைக்கான குரலும் பிரச்சாரத்தின் இடையே குறுக்கிட்டு பின்தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. சிறுமியாக இருந்தபடியால் பிரச்சாரம் செய்த தோழர்கள் அவளை விரட்டாமலும், இடையூறு கண்டு ஆத்திரம் கொள்ளாமலும், ஆனால் சற்று சலிப்படைந்து சிறுமிக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தவித்தனர்.

அடுத்தடுத்த பேருந்துகளிலும் சிறுமியின் குறுக்கீடு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. திடீரென ஒரு பேருந்தில் தோழர்கள் வழக்கம் போல பேசிக்கொண்டே போக அந்தச் சிறுமியும், குரலும், குறுக்கீடும் இல்லாமல் அமைதி நிலவக்கண்டு தோழர்களுக்கு ஆச்சரியம்… ஏன் என்ன ஆனது? என்று சுற்றுமுற்றும் பார்த்தனர். பேருந்தின் கடைசிப் பகுதியில் அந்தச் சிறுமி தோழர்களின் போபால் பற்றிய கொடூர விவரணையை உருக்கமாகக் கேட்டபடி, வழக்கத்திற்கு மாறாக அமைதியாக நின்றிருந்தாள்.

தோழர்கள் பேருந்தை விட்டு இறங்கும்போது திடீரென கல்லாய்ச் சமைந்தவள் உயிர்பெற்றது போல அந்தச் சிறுமி அவசர அவசரமாக “அண்ணே! அண்ணே! இதையும் வாங்கிக்குங்கண்ணே!” என்று தான் பிச்சை பெற்ற தட்டில் உள்ள சில்லறைகளைத் தனது கையாலே பெருவிருப்பத்துடன் வாரி தோழர்களின் உண்டியலில் திணித்தாள். தோழர்களோ ஒரு கணம் செய்வதறியாது திகைத்தனர். இது நாள் வரைகாணாத உணர்ச்சிக்கு ஆட்பட்டவர் போல ஒரு கணம் ஆளாகிப் பின் “வேணாம் பாப்பா! நீயே வச்சுக்கோ!” “ஏண்ணே? என்ன மாதிரி எத்தன புள்ளைங்க செத்ததுக்கு நீங்க பேசறீங்க. என்ன மாதிரிதான அவங்களும்.. இந்தாங்கண்ணே வச்சுக்குங்க…” வலியுறுத்தி சிறுமி நிதியளித்தாள்.

யாருமற்ற அநாதையாக்கப்பட்டு, பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்ற ஒரு சிறுமி… வர்க்க உணர்வோடு ஒரு அமைப்பின் மீது வைக்கும் நம்பிக்கையும், விருப்பமும், தன் வர்க்கத்தை உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணமும் மனித குலத்தின் ஆழமான அர்த்தமான உணர்ச்சிகளில் ஒன்று. நிலை மறந்து மரத்துக் கிடக்கும் இந்த சமூகத்திற்கு அந்தச் சிறுமி போட்ட உணர்ச்சியின் பிச்சை அது!

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________