privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க அதிபர்: பில்லியன் டாலர் பதவி! பி.சாய்நாத்

அமெரிக்க அதிபர்: பில்லியன் டாலர் பதவி! பி.சாய்நாத்

-

பணத்தை பின் தொடர்! தலைவனைக் கண்டுபிடி! – பி.சாய்நாத்.

நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் தரப்பு $1.25 பில்லியன் (சுமார் ரூ 7,000 கோடி) வரை செலவழித்திருக்கும். வெற்றி பெற்றவர் நிதி தந்தவர்களுக்கு கைமாறு செய்வதற்கான வழிகளை ஏற்படுத்தித் தருவதிலேயே ஆட்சிக் காலத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.

ராக் ஒபாமா மறுபடியும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதோ, மிட் ரோம்னி ஜெயிக்க முடியுமா என்பதோ விஷயமில்லை. பில்லியன் டாலர்கள் இல்லாத யாரும் போட்டி போடுவதைப் பற்றி கனவு கூட காண முடியாது என்பதுதான் விஷயம். அந்த அளவு பணமிருந்தால் கூட போட்டி போடுவது மட்டும்தான் உத்தரவாதம், வெற்றி பெறுவது உத்தரவாதம் இல்லை. போட்டியாளர் அதிகம் செலவழிக்க முடிந்தால் வெற்றி கை நழுவிப் போய் விடும்.

மேட்டுக் குடியைச் சேர்ந்த மிகச் சிறு பிரிவினரைத் தவிர சேருவதற்கான விலையை கொடுக்க முடியாத மற்ற அனைவரும் இந்த விளையாட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். “1%த்தினருக்காக 1%த்தினர் நடத்தும்” ஜனநாயகம் என்று பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்ளிஸ் இதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்.

நவம்பரில் பரபரப்புகள் ஓய்ந்த பிறகு கணக்கு பார்த்தால் இரண்டு முக்கிய போட்டியாளர்களும், அவர்களது கட்சியினரும், ‘சுயேச்சையான குழுவினரும்’ மொத்தமாக $2.5 பில்லியன் செலவழித்திருப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்தச் செலவு $6 பில்லியனை (சுமார் ரூ 32,000 கோடி) தாண்டும் என்கிறது நாட்டின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கும் சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பொலிடிக்ஸ் என்ற அமைப்பு. 12 கோடி இந்தியப் பள்ளிக் குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகள் மதிய உணவு வழங்குவதற்கு போதுமான தொகை அது.

ஒரு சதவீதத்தை விட குறைவு

அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பும் சம அளவு பணம் செலவழிப்பதாக வைத்துக் கொண்டால், வெற்றி பெறும் தரப்பு எல்லா செலவினங்களையும் சேர்த்து $1.25 பில்லியன் செலவழித்திருக்கும். திரு ரோம்னி வெற்றி பெற்று 2016ல் மீண்டும் போட்டி போட விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அடுத்த தேர்தலில் போட்டியிட இதே அளவு தேர்தல் நிதியை திரட்ட வேண்டுமானால் நான்கு ஆண்டு பதவிக் காலத்தின் ஒவ்வொரு நாளும் சராசரியாக $850,000 (சுமார் ரூ 4.5 கோடி) சம்பாதிக்க வேண்டியிருக்கும்.

அந்த அளவு நிதி வழங்குபவர்கள் விரும்பும் சட்டங்களை நிறைவேற்றுவதை தவிர வேறு எதையும் செய்வதற்கு அவருக்கு நேரம் இருக்கப் போவதில்லை. இதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென்றால் திரு ஒபாமாவைக் கேட்டுப் பார்க்கலாம்! தேர்தல்களைப் பொறுத்த வரை 1 சதவீதத்திலும் குறைவான சிறு பகுதியினரே முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். (அளவிலும் வடிவத்திலுமான வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியத் தேர்தல்களுக்கும் இது பொருந்தும்).

அமெரிக்க அதிபர் தேர்தல் பணபலத்திற்கு பிணைக் கைதியாக இருப்பது இட்டுக் கட்டப்பட்ட விஷயமில்லை. CounterPunch.orgல் டேவிட் லிண்டார்ப் சுட்டிக் காட்டுவது போல 2008 ஒபாமா தேர்தல் பிரச்சாரத்துக்கு கார்ப்பரேட்டுகளைத் தவிர பெருமளவு பங்களித்தவர்கள் நிதி நிறுவனங்கள்தான். கோல்ட்மேன் சாக்ஸூம், ஜே பி மார்கன் சேஸூம், அரசியல் ஆர்வலர் குழுக்கள் மூலம் $2.5 மில்லியன் வழங்கிய சிட்டிகுரூப்பும் இவர்களில் அடங்குவர்.

இன்னொரு $1.5 மில்லியன் யூபிஎஸ் மற்றும் மார்கன் ஸ்டேன்லி போன்ற பெரிய வங்கிகளிடமிருந்து வந்தது. மக்கள் பணத்திலிருந்து வங்கிகளுக்கு அரசாங்கம் வாரி வழங்கிய மீட்பு நிதியில் ஒரு பகுதியை கைப்பற்றுவதற்காக வங்கி ஒன்றை விலைக்கு வாங்கிய ஜெனரல் எலக்ட்ரிக்கும் இதில் அடங்கும்.

திரு லிண்டார்ப் சுட்டிக் காட்டுவது போல திரு ஒபாமா தான் பட்ட கடன்களை எல்லாம் முறையாக அடைத்தார். டிம் கெயிட்னரை நிதி அமைச்சராக நியமித்தது அந்த கைமாறுகளில் ஒன்று. புஷ் ஆட்சிக் காலத்தில் நியூயார்க் மத்திய வங்கியின் தலைவராக இருந்த திரு கெய்ட்னர், “நிதி நெருக்கடிக்கு வழி வகுத்த, டெரிவேட்டிவ் மோசடிகளை  கண்டு கொள்ளாமல்“ இருந்து புகழ் பெற்றவர்.

லாரன்ஸ் சம்மர்ஸ் என்பவரை தனது தலைமை பொருளாதார ஆலோசகராக நியமித்தார் ஒபாமா. அந்த சம்மர்ஸ்தான் பில் கிளின்டன் ஆட்சியில் நிதி அமைச்சராக டெரிவேட்டிவ்கள் மீதான கண்காணிப்பை விலக்கியும், வங்கிகள் மூலதன வங்கிகளுடன் இணைவதற்கு அனுமதி அளித்தும் நிதி நெருக்கடிக்கு வித்திட்டவர்.  இன்னும் பல பதவிகளையும் நிதித்துறை ஆட்களுக்கு வாரி வழங்கினார் ஒபாமா. ஆனாலும், இந்த முறை திரு ரோம்னி திரு ஒபாமாவை விட அதிக அளவு வால்ஸ்ட்ரீட் நிதியை திரட்டியிருக்கிறார்.

2012ல் இரண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரங்களும் நேரடியாக செலவழிக்கும் தொகை 2008ல் செலவழித்ததை விட சிறிதளவு குறைவாக இருப்பதைப் போல தோன்றலாம். வேட்பாளர்களும் கட்சிகளும் செய்யும் செலவை மட்டும் கணக்கில் எடுத்தால் அப்படித் தோன்றுகிறது. ஆனால், சூப்பர் பிஏசிகள் எனப்படும் அரசியல் ஆர்வலர் குழுக்கள் தனியாக செலவழிக்கும் பணம் இதில் சேரவில்லை.

அந்த குழுக்கள் பெருமளவு நிதி திரட்டுவதற்கான சாத்தியங்கள் உடையவை. தமது பிரச்சாரங்களை வேட்பாளர்களுடன் ஒருங்கிணைத்து நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு அவற்றின் மீது பெயரளவில் உள்ளது. ஆனால், உண்மையில் வேட்பாளர்களின் நடைமுறை நீட்சிகளாகவே அவை செயல்படுகின்றன. கார்ப்பரேட்டுகள் நேரடியாக செலவழிப்பதன் மீதான கட்டுப்பாடுகளை 2010ம் ஆண்டின் உச்ச நீதி மன்ற தீர்ப்பு தூக்கி எறிந்து விட்ட பிறகு இன்னும் கூடுதல் பணம் பாய ஆரம்பித்திருக்கிறது.

பெரு நிறுவனங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் சூப்பர் பிஏசிக்கள் திரட்டக் கூடிய நிதிக்கு வரம்பு எதுவும் இல்லை. ஒரு வேட்பாளரை ஆதரிக்கவோ, அல்லது தோற்கடிக்கவோ எவ்வளவு செலவழிக்கலாம் என்பதற்கும் வரம்பு இல்லை. (அவை நேரடியாக ஒரு வேட்பாளருக்கு நிதி அளிக்க முடியாது. நன்கொடை அளித்தவர்களின் விபரங்களை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்).

சிஆர்பி மதிப்பீட்டின்படி அக்டோபர் 16ம் தேதி வரையில், “சூப்பர் பிஏசிக்களாக பதிவு செய்து கொண்ட 935 குழுக்கள் $433 மில்லியனுக்கும் அதிகமான நிதியை திரட்டியுள்ளன. 2012 தேர்தல் களத்தில் $375 மில்லியனுக்கும் அதிகமான செலவு செய்திருக்கின்றன.

‘வெளிப்புற சுயேச்சை குழுக்களால் செலவழிக்கப்பட்ட இந்தத் தொகையில் பெரும்பகுதி தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு போனது’ என்கிறது நியூயார்க் டைம்ஸ். அயோவாவில் மட்டும் இரண்டு பிரச்சாரங்களுடனும் தொடர்புடைய ‘சுயேச்சை’ குழுக்கள் மாநிலத்தின் ஆறு பிரதிநிதிகளை வெல்வதற்கான முயற்சியில் 100,000க்கும் அதிகமான விளம்பரங்களை ஒளிபரப்பின.

இதற்கிடையில் நிபுணர்கள் இரண்டாவது ஒபாமா-ரோம்னி விவாதம் சூடாக நடந்ததாக புளகாங்கிதம் அடைகின்றனர். இரு தரப்பினரும் தன்னெழுச்சியாக விவாதித்தனர் என்று பாராட்டுகின்றனர். அது ‘ஒரு அரங்கக் கூட்ட வடிவத்தில் இருந்தது’ என்று சிலாகிக்கின்றனர்.

பார்வையாளர்கள் கூட்டம் நடத்துபவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன் கூட்டியே மட்டுறுத்துனருடன் ஒத்திகை நடத்தியிருக்க, கேட்கப்படவிருக்கும் அனைத்து கேள்விகளும் முன் கூட்டியே பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்க அரங்கக் கூட்ட வடிவம் என்பதில்  எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.

விவாதத்தின் போது இரண்டு தரப்புமே ‘ஏற்றத் தாழ்வு’ என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. அந்தச் சொல்தான் சென்ற ஆண்டு நாட்டின் எண்ணற்ற நகரங்களில் ஆக்கிரமிப்பு இயக்க போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. பல முன்னணி பொருளாதார மேதைகளை கவலை கொள்ள வைக்கும் விஷயமாக அது இருக்கிறது. சமீபத்திய வருவாய்த் துறை தரவுகளில் அது வெளிப்பட்டிருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் வறுமை பற்றிய விபரங்களிலும் அது வெளியாகியிருந்தது.

“கார்ப்பரேட் கிரைம்” என்பதைப் போலவே இதுவும் ஒரு சொல்லக் கூடாத வார்த்தையாக மாறியிருக்கிறது. ‘ஒரே மாதிரியான வேலை செய்யும் பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பதில் 72 சதவீதம் சம்பளம் மட்டுமே வழங்கப்படுவது ஏன்’ என்று கேட்டவரிடமிருந்து இதைப் பற்றிய ஒரே குறிப்பு வந்தது. ‘திரு ரோம்னி மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தனிப்பட்ட விதிமுறைகளின்படி விளையாட அனுமதிக்க விரும்புவதாக குற்றம் சாட்டிய போது’ அந்த விஷயத்தை பேசுவதற்கு ஓரளவு அருகில் வந்தார். இரண்டு பேருமே கேள்விக்கு பதில் சொல்லும் போது கூட அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை.

‘சென்ற ஆண்டு வால் ஸ்ட்ரீட்டில் ஊதியங்கள் 4 சதவீதம் அதிகரித்து அவற்றின் மொத்த மதிப்பு $60 பில்லியனை (ரூ 3 லட்சம் கோடி) எட்டியது’ என்கிறது நியூயார்க் டைம்ஸ். 2007, 2008ம் ஆண்டுகளை தவிர்த்து மற்ற எந்த ஆண்டையும் விட அதிகமான தொகை இது. “நியூயார்க்கின் நிதித் துறை ஊழியர்களின் சராசரி சம்பளம் ($362,950 – சுமார் ரூ 1.88 கோடி) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட 16.6% அதிகம்”. இதே நேரத்தில் வேலை தேடும் 2.5 கோடி மக்களுக்கு வேலை இல்லை. உணவு கூப்பன்களை சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு உயர்ந்திருக்கிறது. 5 கோடி மக்கள் உணவு நிச்சயமின்மையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொருளாதார நிபுணர் பால் புஹ்ஹைட் சுட்டிக் காட்டுவது போல, அமெரிக்காவில் வாழும் “10 பணக்கார அமெரிக்கர்கள் சென்ற ஆண்டு ஈட்டிய பணத்தை வைத்து இந்தப் பூமியில் உள்ள பட்டினியால் வாடும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஆண்டு முழுவதும் உணவு தர முடியும்”.

அந்த விவாதத்தில் இன்னும் ஓரிரு விஷயங்கள் இந்தியர்களுக்கு ஆர்வமளிக்கக் கூடியவை. இரண்டு வேட்பாளர்களுமே பெட்ரோல் விலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விரும்பும் வாக்காளர்களை குறி வைத்து பெட்ரோல் விலை பற்றி கவலை தெரிவித்தார்கள். நம் நாட்டிலோ அவர்களின் சீடர்கள் ‘பெட்ரோல் விலையின் மீதான ஒழுங்குபடுத்தலை ஒழித்துக் கட்டி சந்தையில் தீர்மானிக்கும்படி விட வேண்டும்’ என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதை விட சுவாரஸ்யமானது எரிசக்தி தட்டுப்பாடு குறித்த விவாதத்தில், திரு ஒபாமா அணுசக்தியை ஒரு முறை கூட குறிப்பிடவில்லை என்பது. தூய்மையான ஆற்றல் என்ற வரிசையில் கூட அவர் அதைச் சேர்த்துக் கொள்ளவில்லை. (ஆனால், இந்தியா அந்த நம்பிக்கையில் திட்டங்களை செயல்படுத்துவதில் அவருக்கு மகிழ்ச்சிதான்). “காற்று, சூரிய ஒளி, உயிர் எரி பொருட்கள்” இதுதான் அவரது மந்திரம். திரு ரோம்னி அணுசக்தியை ஒரே ஒரு முறை குறிப்பிட்டாலும், அதற்கு சிறப்பான இடம் எதையும் கொடுக்கவில்லை.

விவாதத்தை கட்டி அமைத்தல்

‘யார் இந்த விவாதங்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் அவை எப்படி நடத்தப்படுகின்றன’ என்றும் பார்ப்போம். போன வாரம், ஒபாமா மற்றும் ரோம்னி பிரச்சாரங்கள் பேரம் பேசி ஏற்படுத்திக் கொண்ட ரகசிய ஒப்பந்தத்தைப் பற்றிய ரால்ப் நாடாரின் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் (சிபிடி) என்ற பிரச்சார குழுக்களின் கார்ப்பரேட் வாரிசு அந்த ஒப்பந்தப்படிதான் செயல்படுகிறது.  ‘விவாதங்களுக்கான நடைமுறையில் இரு தரப்பு பிரச்சார குழுக்களின் இரும்புப் பிடி மூச்சு முட்ட வைப்பது, நேர்மையற்றது, முழுமையானது’ என்கிறார் ரால்ப் நாடார்.

இது எப்போதுமே இப்படி இருந்ததில்லை. 1987 வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் தேர்தல் பிரச்சார விவாதங்களை பெண் வாக்காளர்களின் கூட்டமைப்பு நடத்தி வந்தது. அந்த நடைமுறை எப்படி மாறியது? சுயேச்சையான விவாதங்களை நடத்தி வந்த கூட்டமைப்பு, விவாதங்கள் மீதான தனது கட்டுப்பாட்டை எப்படி இழந்தது? 1987ல் அந்த பொறுப்பை கை விடுவதற்கு அது ஏன் கட்டாயப்படுத்தப்பட்டது? அல்லது அந்த முடிவு அதன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதா?

இது பற்றிய விபரங்களை கேட்டு எழுதியதும், அந்தக் கூட்டமைப்பின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பெட்சி கார்டனரிடமிருந்து உடனடியாக பதில் வந்தது. விவாத வடிவத்தை தேர்ந்தெடுப்பதிலும், மட்டுறுத்துனரை தேர்ந்தெடுப்பதிலும், கேட்கப்பட வேண்டிய கேள்விகளை முடிவு செய்வதிலும் கட்சிகளின் பிரச்சாரக் குழுக்கள் பெருமளவு அழுத்தத்தையும் கட்டுப்பாட்டையும் செலுத்தி வந்தன என்கிறார் அவர். கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் நேன்சி நியூமென் வெளியிட்ட அறிக்கையையும் அனுப்பி வைத்திருந்தார்.

அப்போது ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ்-மைக்கேல் டுகாகிஸ் போட்டி நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட நியூமேனின் அறிக்கை வேறு பல விஷயங்களுடன் இதையும் சொல்கிறது. “தொலைக்காட்சி கேமராக்கள் எதைப் படம் பிடிக்க வேண்டும் என்பதைக் கூட இரு தரப்பினரும் தமக்கிடையே முடிவு செய்து கொண்டானர். வேட்பாளர்களிடம் கேள்வி கேட்கவிருப்பவர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதையும் அவர்களே முடிவு செய்து கொண்டார்கள். அரங்கத்தை தமது ஆதரவாளர்களைக் கொண்டு நிரப்புவதாக அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். விவாத வடிவத்தையும் அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள்.”

“இரு தரப்பு பிரச்சாரக் குழுக்களின் ஒப்பந்தம் திரைமறைவில் செய்யப்பட்ட ஒரு உருவாக்கம். அந்த ஒப்பந்தம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒன்று என்றார்கள் அவர்கள். அதில் ஒப்பமிட்டு அதன் அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒத்துப் போக வேண்டியதுதான் நாங்கள் செய்ய வேண்டியது. அதைச் செய்யா விட்டால் விவாதத்தை நடத்தும் உரிமையை நாங்கள் இழந்து விடுவோம். வின்ஸ்டன்-சேலமில் மட்டுறுத்துனரின் ஆரம்ப உரையை தாங்கள் பார்த்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்கள் வலியுறுத்தினார்கள்.”

“கூட்டமைப்புக்கு இரண்டே வழிகள்தான் இருந்தன. விவாதம் இந்த கோல்மால்களை தாண்டி உண்மையாக நடக்கும் என்று நம்பி திரைமறைவு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வது அல்லது இந்த நாடகத்துக்கு எங்களது நம்பகமான பெயரை கொடுக்க மறுத்து வெளியேறுவது”

“எனவே, பெண் வாக்காளர்களுக்கான கூட்டமைப்பு அமெரிக்கப் பொது மக்களை முட்டாளாக்கும் அந்த முயற்சிக்கு துணையாக இருக்கப் போவதில்லை என்று அறிவிக்கிறது”

__________________________________________________________________________

– பி.சாய்நாத், நன்றி: தி இந்து
தமிழாக்கம் – செழியன்

__________________________________________________________________________