privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?

குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?

-

முன்னுரை: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியே வெற்றி பெறுவார் என்று பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. 2007 தேர்தலின் போதும் இது நடந்திருக்கிறது. 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த கலவரத்தின் நாயகன் மீண்டும் வெற்றி பெறக் காரணம் என்ன? இந்த வெற்றிக்கும் பாசித்திற்கும் என்ன தொடர்பு? 2008 இல் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை காலம் கடந்தும் குஜராத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. படித்துப் பாருங்கள்!

வினவு

மோடி-4

”இந்த முகமூடி எனக்கும் மக்களுக்கும் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. நான் தாக்கப்பட்ட போதெல்லாம், என் வலியை மக்கள் உணர்ந்தார்கள்.”

(மோடியின் பேட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், டிசம்பர்-25, 2007)

‘அண்ணனே, தளபதியே, அம்மா, அய்யா’ என்று தலைவனாகிய ஆண்டவனைத் தொண்டர்கள் தொழுது வழிபடும் ‘துவைத’ நிலையிலிருந்து. ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ‘அத்வைத’ நிலைக்கு, ‘நானே மக்களாக இருக்கிறேன்’ என்ற தூய பாசிச நிலைக்கு, இந்திய ஜனநாயகத்தை உயர்த்தியிருக்கிறார் மோடி.

தனது முகமூடிகளை இலட்சக்கணக்கில் சீனத்திலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை குஜராத் முழுவதும் விநியோகித்திருந்தார் மோடி. தலைவனை ‘முக’மாகவும், மக்களை வெறும் ‘பிரதிபிம்ப’மாகவும் மாற்றி விட்ட இந்த ‘அத்வைத’ நாடகத்தில், அரசியல் எதிரிகள் மோடியை விமர்சித்த போது, முகமூடிகள் வலியால் துடித்ததில் வியப்பில்லை.

முன்பு, வாஜ்பாயி எனும் ‘மிதவாத மூகமுடி’யை அணிந்து கொண்டு பாசிசம் ஆட்சி நடத்திய போது, அந்த முகமூடியின் மிதவாத ஒப்பனையைப் பாதுகாக்கும் பொறுப்பை, மதச்சார்பற்ற கட்சிகள் ஏற்றிருந்தன். அது பாசிசத்தின் முன்னுரை. இன்று ஒரு கொலைகாரனின் முகத்தைத் தனது முகமூடியாக அணிந்து கொண்டு, ஆனந்தக் கூத்தாடும் குஜராத் நமக்கு வழங்குவது பாசிசத்துக்கான பொழிப்புரை.

முஸ்லிம் இளைஞனை மணந்த இந்துப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை எடுத்து எரித்துக் கொன்றதையும், அண்டை வீட்டு முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவால் சிதைத்து, பின்னர் அவர்களைக் கசக்கிக் கொன்று போட்டதையும், குழந்தைகளைத் தீயில் வறுத்ததையும் பெருமை பொங்க அசைபோடும் கொலைகாரர்களை தெகல்கா படம் பிடித்துக் காட்டியபோது, ”இவர்கள் என்ன வகை மிருகங்கள்?” என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் பல வாசகர்கள். எந்த மண்ணில் அந்தப் பாசிசப் பிராணிகள் முளைத்து, தழைத்து வளர்ந்தனவோ அந்த குஜராத் மண், இந்த முகமூடிக் கூத்தின் மூலம் தன்னுடைய முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.

நீதி, கருணை அல்லது மனிதத் தன்மையின் சாயலையேனும் தமக்குள் காப்பாற்றி வைத்திருக்கும் ஒருவொருவரும், தெகல்கா இதழின் செய்தியைப் படித்த பின்னர் ‘எப்படியாவது மோடி தோற்றுவிட மாட்டானா!’ என்று தவித்தனர். தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக் கணிப்புகள், மோடியின் வெற்றியைத்தான் ஊகித்தன என்ற போதிலும், மோடி தோற்க வேண்டும் என்று ஏங்கினர். ஒருவேளை வெற்றியே பெற்றுவிட்டாலும், மோடியின் ஒரு முடியைக் கூடக் காங்கிரசு பிடுங்கப் போவதில்லை, என்பது தீர்க்கமாகத் தெரிந்திருந்தும், தெகல்கா கிளறிவிட்ட மனப்புண்ணின் ஆறுதலுக்காகவாவது, ‘மோடி தோற்க வேண்டும்’ என்று பலர் விரும்பினர்.

இனப்படுகொலையின் பிணவாடையை முகர்ந்தபடியேதான், குஜராத்தின் பெரும்பான்மை இந்துக்கள் 2002-ல் மோடிக்கு வாக்களித்தனர் என்ற போதிலும், ”அது கோத்ரா சம்பவம் தோற்றுவித்த தற்காலிகக் கிறுக்குத்தனமாக இருக்கக் கூடும்” என்று தமக்குத் தாமே சமாதானம் கூறிக்கொண்ட பலர், 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் குஜராத்தின் இந்து மனோபாவத்திற்கு புத்தி தெளிந்துவிடும் என்றும், அதன் அடிமனதிலிருந்து ‘அறவுணர்ச்சி’ மேலெழும்பி 2002-இன் அநீதிக்குப் பரிகாரம் வழங்கும் என்றும் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர்.

தெகல்காவின் பேட்டிகள், இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. இமை தாழாமல், சொல் தடுமாறாமல் தாங்கள் இழைத்த பஞ்சமா பாதகங்களை ‘திரைக்கதை’ போல வருணித்தார்கள் ‘குஜராத்தின் எழுச்சியுற்ற இந்துக்கள்’. ‘மாமிசம் தின்னும் ‘தமோ’ குணம் நிரம்பிய கீழ்சாதி அடியாட்படையின்’ வாயிலிருந்து மட்டுமல்ல, ‘சாக பட்சிணிகளும், இயல்பிலேயே ‘சத்வ’ குணம் நிரம்பியவர்களுமான’ பார்ப்பன – பனியா உயர்சாதி இந்துக்களின் வாயிலிருந்தும் ‘ரத்தக் கவிச்சு’ வீசியது. இருப்பினும், குஜராத்தின் உயர்சாதி இந்துக்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளவிலை. பெரும்பான்மை இந்து மனம், அதனைக் கண்டு அவமானத்தால் குறுகி, வெட்கித் தலைகுனியவில்லை. ‘வருந்துகிறோம்’ என்று மனதிற்குள் கூட முணுமுணுக்கவில்லை. முகம் என்ன செய்ததோ, அதையே முகமூடிகளும் பிரதிபலித்தன.

மோடி-3”2002 சம்பவங்களுக்காக வருந்துகிறேன் என்று நீங்கள் ஒரு வார்த்தை கூறினால் அது காயம்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கமல்லவா?” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நரேந்திர மோடியிடம் கேட்டார் கரண் தாப்பர் என்ற பத்திரிகையாளர். மறுகணமே அந்தத் தொலைக்காட்சிப் பேட்டியிலிருந்து வெளியேறினார் மோடி. தெகல்கா பேட்டிகளோ, குஜராத் தொலைக்காட்சிகளிலிருந்தே வெளியேற்றப் பட்டன. பிரதிபலிப்பு தோற்றவிக்கும் ‘இடவல மாற்றம்’ என்பது, இதுதான் போலும்!

குஜராத் தேர்தல் முடிவு, காந்திய மத நல்லிணக்கவாதிகளையே கூட அதிர்ச்சியுறச் செய்துள்ளது. ”குஜராத்தை ‘இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்று இனிமேலும் அழைக்க முடியாது; அது தொழிற்சாலையாகி விட்டது” என்கிறார் ஒரு பத்திரிகையாளர். ”குஜராத் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்” என்று எச்சரிக்கிறார் குல்தீப் நய்யார். ”இனி இந்தியாவே குஜராத் தான்” என்று இரண்டு விரலைக் காட்டிக் கொக்கரிக்கின்றன மோடியின் முகமூடிகள்.

அத்வானியின் கூற்றுப்படி, இது பாரதிய ஜனதாவுக்கு ஒரு திருப்புமுனை. இது ‘ஆம்பளை ஜெயா’வின் வெற்றி என்பதால், ஜெயலலிதாவைப் பொருத்தவரை இது அவரது சொந்த வெற்றி. ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் (anti – incumbency) மக்களின் மனோபாவத்தை மீறி மோடி வென்றிருப்பதால், இந்த வெற்றிக்கு இந்துத்துவத்தைத் தவிர வேறு என்ன காரணம்? என்பதே மற்ற ஓட்டுக்கட்சிகளின் அக்கறைக்கு உரிய விசயமாக இருக்கிறது.

சங்க பரிவார அமைப்புகளும், லூவா படேல் சாதியைச் சேர்ந்த கேசுபாய் படேல், கோர்தன் ஜடாபயா போன்ற பா.ஜ.க தலைவர்களும், தொகாடியா போன்ற வி.எச்.பி தலைவர்களும், மோடியை எதிர்த்த போதிலும், போட்டி வேட்பாளர்களை நிறுத்தியும், காங்கிரசை மறைமுகமாக ஆதரித்த போதிலும், மோடி வென்றது எப்படி? மாயாவதியின் கட்சி வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால், காங்கிரசு கூடுதல் தொகுதிகளில் வென்றிருக்கக் கூடுமா? மோடிக்கு மாற்றாக முதல்வர் பதவிக்கு காங்கிரசு சார்பில் யாரையும் முன் நிறுத்தவில்லை என்பதுதான், தோல்விக்கு அடிப்படையா? ஆதிக்க சாதியான படேல் சாதியினர் பா.ஜ.க வை எதிர்த்ததால், மற்றெல்லா சாதியினரும் பா.ஜ.க-வின் பக்கம் சாய்ந்து விட்டனரா? அல்லது உள்கட்சிப் பூசலால் பிளவுபட்டிருந்த இந்து ஓட்டு வங்கியை, தெகல்கா விவகாரம் தோற்றுவித்த இந்து உணர்வு, ஒன்றுபடுத்திவிட்டதா?…. என தும்பிக்கை, காது, வால் என்று பிரித்து ‘யானை’யைத் தடவுகின்றன, தேர்தல் முடிவு குறித்த ஊடகங்களின் ஆய்வுகள்.

குஜராத் இனப்படுகொலை குறித்த பெரும்பான்மை இந்துக்களின் மனப்போக்கு என்ன? மோடியின் மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்கள் குறித்த குஜராத் மக்களின் கண்ணோட்டம் என்ன? அவை இந்தத் தேர்தல் முடிவுகளின் மீது செலுத்திய தாக்கம் என்ன? – என்ற கேள்விகளையே இந்த ஆய்வுகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக, கேந்திரமான இவ்விரு பிரச்சினைகளையும், நமது பார்வையிலிருந்தே தந்திரமாக அகற்றி விடுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவல்ல, நமது பிரச்சினை. ஒருவேளை இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், அந்த வெற்றி, காந்திய மத நல்லிணக்க வாதிகளின் மனப்புண்ணுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமேயன்றி, நிச்சயமாக அது இந்துத்துவத்தின் தோல்வியாக இருந்திருக்காது. ‘குஜராத் – இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்ற நிலைமையை மாற்றுவதற்கான ஒரு துவக்கப் புள்ளியாகக் கூட இருந்திருக்காது.

***

குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மோடி விடுத்த ஒரு சவால் மிகவும் முக்கியமானது. ”என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் எல்லாக் குறுந்தகடுகளையும், ஒரு நடுநிலையாளர் குழுவிடம் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். அதில் மதவெறியைத் தூண்டக்கூடிய ஏதாவது ஒரு பேச்சைக் காட்டுங்கள். நான் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிசம்பர் 25, 2007)

பாசிஸ்டுகளின் வழக்கமான ‘வாய்ச்சவடால்’ என்று இதனை ஒதுக்கிவிட முடியாது. இந்து, இந்துத்துவம், முஸ்லிம் என்ற சொற்களைத் தனது பிரச்சாரத்தில், மோடி அநேகமாக உச்சரிக்கவே இல்லை. அவற்றை உச்சரிக்காமலேயே, அவை தோற்றுவிக்கும் விளைவுகளை மோடியால் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. காங்கிரசும், இந்தச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதுதான், குரூரமான நகைச்சுவை. (இந்து பயங்கரவாதிகள் என்று ஒரே ஒருமுறை ‘திக்விஜய் சிங்’ பேசியதைத் தவிர).

‘இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்று அறியப்படும் ஒரு மாநிலத்தில், கிராமம் முதல் நகரம் வரை, இந்து பாசிச அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில், இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசும் அமைப்புகள், திரைப்படங்கள், பத்திரிகைகள், கலைஞர்கள் யாராக இருந்தாலும், தாக்கித் துரத்தப்படுவார்கள் என்பது நிலைநாட்டப்பட்டிருக்கும் மாநிலத்தில், 2500 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, பல்லாயிரம் பேர் வீடு வாசலை இழந்து, கடந்த 5 ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழ வேண்டியிருக்கும் ஒரு மாநிலத்தில், ‘இந்து பாசிசம்’ என்ற சொல்லையே பயன்படுத்தாமல், அதன் கொடூரத் தன்மையை அம்பலப்படுத்தாமல், மோடிக்குப் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கும் மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பதில், காங்கிரஸ் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும்?

இந்துத்துவத்தை எதிர்ப்பது இருக்கட்டும், காந்திய மத நல்லிணக்கத்தைப் பேசினால்கூட குஜராத் இந்துக்களின் வாக்குகளை இழந்து விடுவோமென்று, காங்கிரசு அஞ்சியது. மோடி முகாமிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்களும், 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளுமான கோர்தன் ஜடாபயா, கேசுபாய் படேல், பிரவின் தொகாடியா போன்றோரை அரவணைத்துக் கொள்வதன் மூலம், படேல் சாதி வாக்குகளையும், மோடி எதிர்ப்பு இந்து வாக்குகளையும் அள்ளிவிடலாம் என்று கணக்கிட்டது. இது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும், காங்கிரசை விட்டால் இப்போதைக்கு வேறு நாதி இல்லை என்ற முஸ்லிம் மக்களின் பரிதாபமான நிலைமையை, காங்கிரசு மிகவும் வக்கிரமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது குஜராத் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு காங்கிரசு வகுத்த தேர்தல் தந்திரம் மட்டுமல்ல. காங்கிரசே ஒருமிதவாத இந்துத்துவக் கட்சிதான். அயோத்தி பிரச்சினைக்கு அடிக்கொள்ளியாக இருந்த ராஜீவ்காந்தி முதல், இன்று சேதுக் கால்வாய் விவகாரத்தில் பாரதிய ஜனதாவிடம் சரண்டைந்த சோனியா காந்தி வரை இதற்குச் சான்றுகள் பல உண்டு. 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளைச் சட்டப்பூர்வமாகத் தண்டிப்பதற்கு, ஒரு துரும்பைக் கூட காங்கிரசு எடுத்துப் போட்டதில்லை என்பது மட்டுமல்ல, கடந்த 5 ஆண்டுகளில் இந்த வழக்குகளை முடக்குவதிலும், மைய அரசு மோடிக்கு துணை நின்றிருக்கிறது என்பதே உண்மை.

எனவே பெயரைத் கூடக் குறிப்பிடாமல், ‘மரண வியாபாரி’ என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா குறிப்பிட்டாரே, அது மட்டும்தான் மோடியின் மீது காங்கிரசு தொடுத்த ‘அதிபயங்கரத் தாக்குதல்’! இதற்கு மோடி கொடுத்த பதிலடிதான், மோடிக்கும் முகமூடிகளுக்குமிடையிலான உறவை நமக்கு விளக்குகிறது.

”5 கோடி குஜராத் மக்களை ‘மரணவியாபாரிகள்’ என்கிறார் சோனியா. அது உண்மையா?” – ”இல்லை… இல்லை…”

”சோரபுதீன் ஷேக்கை என்ன செய்ய வேண்டும்?” – கொல்ல வேண்டும்… கொல்ல வேண்டும்”

”குஜராத்தில் நடக்கக் கூடாத சம்பவங்களெல்லாம் நடந்ததாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?” – ”இல்லை… இல்லை…”

மோடி-1மேற்கூறியவையெல்லாம், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி எழுப்பிய கேள்விகள். அவற்றுக்கு, கூட்டம் ஆரவாரமாக அளித்த பதில்கள். இது போன்றவையெல்லாம் எல்லாக் கூட்டங்களிலும் கட்சித் தொண்டர்கள் போடும் கூச்சல்தானே! என்று கருதிக் குறைத்து மதிப்பிட முடியாது. கூட்டம் அளித்த பதில் என்பது, குஜராத் இந்து உயர்சாதியினரிடம் உறுதியாக நிலவும் பொதுக்கருத்து. குஜராத் இந்து சமூகத்தின் பொது மனோபாவம்.

தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை, 5 கோடி குஜராத் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக திசை திருப்புவதில், மோடி எப்படி வெற்றி பெற முடிந்தது? பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, சாதிமறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு ‘தமிழன்’ என்ற சொல்லைப் பெரியார் பயன்படுத்தினாரென்றால், அதன் நேர் எதிரான பொருளில் ‘குஜராத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான் மோடி.

2002 தேர்தலின் போதே ‘இந்து’ என்ற சொல்லை, ‘குஜராத்தி’ என்ற சொல்லைக் கொண்டு தந்திரமாக மாற்றீடு செய்துவிட்டான் மோடி. 2002 இனப்படுகொலையைத் தொடர்ந்து, உலகமே இந்து பாசிஸ்டுகளைக் காறி உமிழ்ந்தபோது, தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வைத்த பெயர் ‘குஜராத் கவுரவ யாத்திரை’. ”கர்வ் சே கஹோ ஹம் ஹிந்து ஹை” என்ற ஆர்.எஸ்.எஸ்.-ஸின் முழக்கம், ‘குஜராத்தி கர்வமாக மாற்றப்பட்டுவிட்டது. முஸ்லிம்கள் அந்நியர்கள்’ என்ற உட்கிடையான பொருளைக் கொண்ட இந்த குஜராத்தி இனவாதம், இந்து பாசிச மனோபாவத்தைத் தன் இதயமாகக் கொண்டிருக்கிறது.

”சோரபுதீன் ஷேக் என்ற கிரிமினலை என்ன செய்யவேண்டும்?” என்று கூட்டத்தைப் பார்த்து மோடி எழுப்பிய கேள்வி

”முஸ்லிம் = கிரிமினல், முஸ்லிம் = பயங்கரவாதி” என்ற கருத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

”கொல்ல வேண்டும்” என்ற கூட்டத்தின் கூச்சல், 2002 இனப்படுகொலைக்கு ‘சங்கேத மொழி’யில் கூட்டம் வழங்கிய அங்கீகாரம்.

அரசாங்கம், போலீசு, நீதிபதிகள் மட்டுமல்ல, ”மொத்த இந்து சமுதாயமே எங்கள் பின்னால் இருந்தது.” என்று தெகல்கா நிருபரிடம், இந்து பாசிஸ்டு கிரிமினல்கள் அளித்த வாக்கு மூலத்தின் பொருள், இதுதான்.

2002 இனப்படுகொலைக்காக குஜராத்தின் இந்துப் பொதுக்கருத்து, கடுகளவும் வருந்தவில்லை, என்றே குஜராத்தின் எல்லா சமூகவியலாளர்களும், குறிப்படுகிறார்கள். ‘கோத்ரா சம்பவம்’ முஸ்லிம்கள் நடத்திய திட்டமிட்ட தாக்குதல், என்று நம்பியதால் உருவான பொதுக்கருத்து அல்ல. ”நாங்கள் ஒன்றும், நடந்ததை நியாயப்படுத்தவில்லை. இருந்தாலும் ஏன் அதையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? முஸ்லிம்கள் மட்டும்தான் இந்த சமூகத்தில் பாதிக்கப் பட்டிருக்கிறார்களா? டெல்லி சீக்கியர் படுகொலையின் குற்றவாளிகளைத் தண்டித்து விட்டார்களா?” என்று அடுக்கடுக்காக எதிர் கேள்வி கேட்டு, இறுதியில் படுகொலையை நியாயப்படுத்துவதில் வந்து முடிக்கிறார்கள், இந்த நடுத்தர வர்க்கத்தினர். இவர்களில் ‘மிகவும் நல்லவர்கள்’ என்று கூறப்படுபவர்கள் கூட ”2002-ஐ மறந்து விடுங்கள்” என்று அறிவுரை கூறுகிறார்கள். ‘மறப்பதா? வேண்டாமா? என்பதை பாதிக்கப்பட்ட மக்கள்தான் முடிவு செய்ய முடியும்’ என்ற எளிய நியாயம் கூட உரைக்காத அளவிற்கு, இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் அங்கே ‘சகஜநிலை’ திரும்பியிருக்கிறது.

மறக்க மறுத்தால்? மீண்டும் சகஜநிலை குலையும். தெகல்கா-வின் அம்பலப்படுத்தல்கள் வெளியானவுடனே, மீண்டும் ஒரு தாக்குதல் தொடங்கிவிடுமோ? என்று அகதி முகாம்களில் இருந்த முஸ்லிம்கள் அடைந்த அச்சம் இதற்குச் சான்று கூறுகிறது.

இத்தகைய சகஜ நிலையையும் அமைதியையும் நிலைநாட்டியிருப்பதே, இப்போது மோடியின் சாதனையாகி விட்டது.

”பாதுகாப்பு இல்லாமல், வளர்ச்சி எப்படி இருக்க முடியும்?” என்று கேட்கிறார் மோடி. யாரிடமிருந்து பாதுகாப்பு? என்ற கேள்வியை குஜராத் எழுப்பவில்லை. 2500 பேரைக் கொன்று போட்ட பிறகும், சிறு சலசலப்போ மும்பையில் நடந்ததைப் போன்ற பயங்கரவாத எதிர்த்தாக்குதலோ இல்லாமல், குஜராத் இந்து சமூகத்தை, குறிப்பாக அதன் முதலாளிகளையும், வணிகர்களையும் பாதுகாத்திருக்கிறார் அல்லவா, அந்தப் பாதுகாப்பைத்தான் கூறுகிறார் மோடி!

மோடி-6மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால், நாடே நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், பயங்கரவாதமும் தீவிரவாதமும் தான் இந்த வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், மன்மோகன் சிங் வழங்குகின்ற சித்திரம், பன்னாட்டு முதலாளிகள் நலனையும், இந்தியத் தரகுமுதலாளிகளின் நலனையுமே பிரதிபலிக்கிறது. மோடியும் அதையேதான் கூறுகிறாரெனினும், குஜராத்தின் குறிப்பான பின்புலத்தில், ‘ஆளும் வர்க்கத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பிலிருந்து, இந்துக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பிரிக்கவொண்ணாததாகி விடுகிறது.’ அதாவது, ‘எது ஆளும் வர்க்கத்தின் நலனோ? அதுதான் இந்துக்களின் நலன் என்ற கருத்து அதன் வர்க்க ரீதியான அர்த்தத்திலும், குஜராத் மக்களின் மனதில் பதியவைக்கப் பட்டிருக்கிறது.

”விமான நிலையத்துக்கே கார்களே அனுப்பிவைத்து, தொழிலதிபர்களை மகாராஜாக்களைப் போல வரவேற்கும் ஒரே முதல்வர், மோடி மட்டும்தான்” என்று கூறி, மோடியின் வெற்றியைக் கொண்டாடினார் ஒரு இந்தியப் பெருமுதலாளி. ”குஜராத் சாதித்திருப்பதையும், சாதிக்கவிருப்பதையும் எஞ்சியுள்ள இந்தியா, ஒருக்காலத்திலும் இனி சாதிக்க முடியாது” என்று கூறி மோடியின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள், வெளிநாட்டில் குடியேறிய குஜராத்திகள்.

இவர்களின் இந்தக் கொண்டாட்டத்துக்கு அர்த்தமிலாமல் இல்லை. போராட்டங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவியிருக்கும் மாநிலம் குஜராத். சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தை 2006-இல் மைய அரசு கொண்டுவருவதற்கு முன்னர், 2004-லேயே குஜராத்தில் அச்சட்டத்தைக் கொண்டு, வந்தவர் மோடி. ‘அடானி குழுமம்’ என்ற தரகு முதலாளிக்கு, சதுர கெஜம் 50 பைசா விலையில் (சதுர அடி 5 காசு) 33,000 ஏக்கர் நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விற்றிருக்கிறார் மோடி. அதை சதுர கெஜம் 1200 ரூபாய்க்கு விற்று, இந்த நிலவிற்பனை மூலம் மட்டுமே 20,000 கோடி ரூபாயை இலாபம் ஈட்டியிருக்கிறது அடானி குழுமம். சி.பொ. மண்டலத்தால், வாழ்க்கை இழந்த கூலி விவசாயிகளுக்கோ அங்கே எவ்வித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. இந்திய மக்கள் தொகையில் 5% உள்ள குஜராத், இந்திய பங்குச்சந்தையின் 30 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது. அதே குஜராத் கல்வியிலும், ஆரம்ப மருத்துவத்திலும் பின்தங்கியிருக்கிறது.

சராசரி தனிநபர் வர்மானத்தில், குஜராத்திற்கு இந்தியாவிலேயே 4-வது இடம். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலோ 15-வது மாநிலமாக இருக்கிறது குஜராத். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் ஊட்டச்சத்துக் குறைவினால் எடைகுறைந்து, சூம்பிக் கிடக்கின்றனர். தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில், முதல் 3 இடங்களிலேயே குஜராத் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொழில் மயமாக்கத்தினால் வெளியேற்றப்படும் பழங்குடிகளும் தலித் மக்களும், எவ்வித நிவாரணமும் இல்லாமல் கிராம்பபுறங்களிலிருந்து வெளியேற்றப்படுக் கொண்டிருக்கிறார்கள். ‘சூப்பர் ஹைவே’க்கள் எனப்படும் சாலைகள் குஜராத்தில் இருக்கின்றன; ஆனால், அந்தச் சாலைகளுக்குச் சுங்க வரி செலுத்த பணமில்லாமல், சாலையோரமாக ஒட்டகத்தில் பயணம் போகிறார்கள், மக்கள்.

மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால் தீவிரமடைந்திருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள், சுரண்டப்படும் மக்களிடம் கலக உணர்வைத் ‘தானே’ தோற்றுவித்து விடுவதில்லை. தேர்தல் ஆதாயத்துக்காகக் கூட, காங்கிரஸ் கட்சி இந்த வர்க்க முரண்பாடுகளை அம்பலப்படுத்துவதில்லை. ஆளும் வர்க்க நலனைப் பேணுவதில் அந்த அளவுக்கு ஒன்றியிருக்கும் பாரதிய ஜனதா – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே, அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதால், மக்கள் அரசியல் கண்ணோட்டமும் ஆளும் வர்க்கம் விதிக்கும் வரம்புகளைத் தாண்டுவதில்லை. வர்க்க ஒடுக்குமுறைக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறைக்கும் இடையிலான உறவுக்கு குஜராத்தில் தெளிவாக அடையாளம் காணத்தக்க பல வேர்கள் உள்ளன.

தொழிற்சங்க இயக்கத்தை முளையிகேயே கருக்கி, முதலாளிகளைத் தம் அறங்காவலர்களாகப் பார்ப்பதற்கு உழைக்கும் மக்களைப் பழக்கிய காந்தியம், வர்க்க ஆதிக்கத்துடன் சாதி ஆதிக்கத்தையும் மறைமுகமாக உறுதிப்படுத்தியது. 1980-களில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன் முதலாகப் போராட்டம் நடத்திய மாநிலம் குஜராத் என்பதும், அந்தப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் மோடியும் ஒருவர் என்பதும் அந்த மாநிலத்தில் நிலவும் ‘சாதி ஆதிக்க’ மனோபாவத்தைப் புரிந்து கொள்ள உதவும் வரலாற்றுச் சான்றுகள். மலம் அள்ள மறுத்த குற்றத்துக்காக, 80-களில் தலித்மக்கள் மீது, கட்டுப்பாடாக சமூகப் புறக்கணிப்பு நடத்திய மாநலமும் குஜராத் தான். ‘மலம் அள்ளுவதைக் கூட, ஒரு தியானமாகச் செய்யமுடியும்’ என்று மோடி பேச முடிவற்கான காரணம் இங்கே இருக்கிறது.

அன்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பின் தாக்குதல் இலக்காக தலித்துகள். இன்று குஜராத் கவுரவத்தின் தாக்குதல் இலக்காக முஸ்லிம்கள். இதில் தலித்துகளும் பழங்குடி மக்களும் இந்துத்துவத்தின் காலாட்படையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிய முன்னேற்றம்.

மறுகாலனியாக்க வளர்ச்சியை ‘உடலாக’வும், இந்துத்துவத்தை அதன் ‘ஆன்மா’வாகவும் ஒருங்கிணைக்க முடிந்ததில்தான், மோடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. சந்தைக் கடுங்கோட்பாட்டு வாதமும், மதக் கடுங் கோட்பாட்டு வாதமும் இணையும் புள்ளி இது. தனியார்மய ஆதரவு, தொழில் வளர்ச்சி, பங்குச் சந்தை, சிறுவணிகம் என்று தமது வர்க்க நலனைப் பார்க்கவோ ஏங்கவோ பழகியிருக்கும் குஜராத் சமூகத்தைப் பொருத்தவரை, ‘மதச்சார்பின்மை’ என்பது அதிகபட்சம் ஒரு அறக் கோட்படாக மட்டுமே இருக்க இயலும்.

ஆனால், மதச்சார்பின்மை என்பது வெறும் அறம் சார்ந்த விழுமியம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஜனநாயகத்துக்கான போராட்டங்களின் மூலம் மட்டும்தான், மதச்சார்பின்மையைத் தனது பண்பாடாக ஒரு சமூகம் கிரகித்துக் கொள்ள இயலும். ஆளும் வர்க்க அரசியலிலும், அரசியலற்ற வணிக மனோபாவத்திலும் ஊறப்போடப்பட்ட ஒரு சமூகம், பாசிசத்தைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வது தவிர்க்க இயலாதது.

தாராளவாதக் கொள்கை அளிக்கும் நவீன தொழில் வளர்ச்சியும், கல்வியும், பண்பாடும், தாராளவாத(liberal) விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. மாறாக, பழைமைவாதத்தையும். சுயநலத்தையும், ஆணவத்தையும், பாசிசத்தையும் மட்டுமே அவை வளர்க்கின்றன என்பதற்கு குஜராத்தும், குஜராத்தின் பாசிசத்தை டாலர் ஊற்றி வளர்க்கும் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களும், சான்றாக இருக்கிறார்கள்.

மோடி-5மோடியின் முகமூடிப் பிரச்சாரத்தைப் பார்த்து விட்டு, இது, ‘இந்துத்துவா’ அல்ல ‘மோடித்துவா’ என்கிறார்கள், சில பத்திரிகையாளர்கள். பாசிசம் தனியொரு கொள்கையாக இருப்பதில்லை. இட்லர், முசோலினி, அத்வானி, மோடி போன்ற பாசிஸ்டுகளின் வழியாகத்தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மோடி முகமூடி வருவதற்கு முன்னால், மோடி ஆணுறை வந்துவிட்டது. அரசு விநியோகிக்கும் ஆணுறைகளில் கூடத் தன்னுடைய படத்தை அச்சிட்டிருக்கிறார் மோடி. கேட்பதற்கே அருவருப்பாகத்தான் இருக்கிறது, எனினும் ஆணுறைகளில் அச்சிடத்தக்க ஆண்மகனாக, குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை, மோடியைக் கருதியிருக்கிறது என்பது, அதைக் காட்டிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

தெகல்கா நிருபரிடம், ‘பாபு பஜரங்கி’ என்ற இந்துத்துவக் கொலைகாரன் வியந்து கூறிய சொற்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ”மார்த் ஆத்மி ஹை!” –ஆம்பிள்ளைச் சிங்கம்யா! இந்தச் சொல்லின் வழியே தெறிக்கும் பன்முகம் கொண்ட பொருள், ‘குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை மோடியைத் தெரிவு செய்தது ஏன்?’ என்பதை விளக்குகிறது.

***

ந்த முகமூடியால், மோடிக்கும், குஜராத்தின் இந்துப் பெரும்பான்மைக்கும் இடையே ஏற்படுத்தியிருந்த ‘வலிமையான பிணைப்பின்’ பொருளும் விளங்குகிறது.

_________________________________________

புதிய கலாச்சாரம், ஜனவரி 2008

__________________________________________