privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஐடி: சம்பளக் குறைப்பும், ஆட்குறைப்பும்...

ஐடி: சம்பளக் குறைப்பும், ஆட்குறைப்பும்…

-

வேலை-இழப்பு2013-ல் இந்திய ஐடி நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகளை தொடர்ந்து குறைக்கவிருக்கின்றன. கல்லூரிகளிலிருந்து புதிய ஊழியர்களை எடுக்கும் திட்டங்களையும் குறைத்திருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இரட்டை இலக்க சதவீதங்களில் சம்பள உயர்வு வழங்கி வந்த இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு சம்பள உயர்வுகளை தொடர்ந்து இறுக்கிப் பிடித்து வருகின்றன. இந்த போக்கு 2013-ம் ஆண்டிலும் தொடரும் என்று மென்பொருள் சேவைகள் வழங்கும் இன்பினிட் டெக்னாலஜிஸ், மாஸ்டெக், மஹிந்திரா சத்யம், இன்போடெக் என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய ஐடி துறையின் மொத்த ஆண்டு வருமானம் சுமார் ரூ 5.5 லட்சம் கோடி. ஐடி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்களை கல்லூரிகளிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்கின்றனர்.  பொதுவாக, இந்திய ஐடி நிறுவனங்கள் நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சம்பள உயர்வுகளை கொடுப்பது வழக்கம். கல்லூரி மாணவர்களுக்கு நியமன கடிதங்களை நவம்பர்-டிசம்பரில் வழங்குவார்கள்.

சென்ற ஆண்டு இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி ஏற்றுமதியாளர் இன்போசிஸ் 20,000 புதிய ஊழியர்களுக்கு சேரும் கடிதங்கள் கொடுப்பதை தாமதப்படுத்தியது. 1.5 லட்சம் ஊழியர்களுக்கு வழக்கமான நேரத்தில் சம்பள உயர்வு கொடுக்கவில்லை. இன்போசிஸ்சின் போட்டியாளர் விப்ரோ ஆன்சைட் ஊழியர்களுக்கு 3 சதவீத சம்பள உயர்வும் ஆப்ஷோர் ஊழியர்களுக்கு 8 சதவீத சராசரி சம்பள உயர்வும் மட்டும் வழங்கியது.

2012-ம் ஆண்டு பெரிய நிறுவனங்களுடன் கடுமையாக போட்டி போட்டு வேகமாக வளர்ந்த நடுத்தர நிறுவனங்கள் 2013-ல் நெருக்கடியான சூழலை சந்திக்கின்றன.  பெரிய நிறுவனங்கள் கூட  வளர்ச்சியை நம்பகமாக கணிக்க முடியாத சூழலில் 2013-ல் அனைத்து நிறுவனங்களுக்கும் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்று ஐடி துறை பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுக்கு சுமார் ரூ 2,030 கோடி வருமானம் ஈட்டும் ஹெக்சாவேர் நிறுவன உலகளாவிய சேவையின் தலைவர் ஆர் வி ரமணன், “நிதித் துறை சேவைகளில் 2012-ஐ விட 2013-ல் வளர்ச்சி குறைவாகவே இருக்கும்” என்கிறார்.

“இந்த ஆண்டு சம்பள உயர்வுகள் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும்” என்கிறார் இன்பைனைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

“அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தாலும், அந்த நாட்டு வாடிக்கையாளர்கள் கட்டணங்களை குறைத்துக் கொள்ளும்படி தரும் அழுத்தத்தினாலும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு போன ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாகவே இருக்கும்” என்கிறார் இன்போடெக் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி வி ஆர் மோகன் ரெட்டி. ஹைதரபாத்தைச் சேர்ந்த இன்போடெக் என்டர்பிரைசஸில் சுமார் 10,000 பேர் பணி புரிகின்றனர்.

“புதிதாக ஆள் எடுப்பதும் சென்ற ஆண்டை விட குறைவாகவே இருக்கும்” என்கிறார் ரெட்டி. சென்ற ஆண்டு வாடிக்கையாளர் இடத்தில் பணிபுரியும் (ஆன்சைட்)  ஊழியர்களுக்கு 3 சதவீதமும், இந்தியாவிலிருந்து சேவை வழங்கும் (ஆப்ஷோர்) ஊழியர்களுக்கு 15 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கியது இன்போடெக்.

இன்னொரு ஹைதரபாத் நிறுவனமான மகிந்திரா சத்யம், நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில் இந்த ஆண்டு கல்லூரிகளில் ஆள் எடுப்பது 50 சதவீதம் வரை குறைக்கப்படும் என்கிறது. மஹிந்திரா சத்யம் சென்ற ஆண்டு ஆன் சைட் ஊழியர்களுக்கு 1.5 சதவீதம் சம்பள உயர்வும், ஆப் சைட் ஊழியர்களுக்கு 6.5 சதவீதம் உயர்வும் கொடுத்திருந்தது.  “இந்த ஆண்டு சுணக்கமானதாகவே இருக்கும்” என்கிறார் நிறுவனத்தின் ஊழியர்கள் தலைமை அலுவலர் ஹரி தலபள்ளி.

மும்பையைச் சேர்ந்த மாஸ்டெக் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பரீத் கசானி “இப்போது இருக்கும் நெருக்கடிகளின் காரணமாக இந்த ஆண்டு பெரிய அளவு சம்பள உயர்வுகள் இருக்காது என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம்.” என்கிறார்.  சம்பள உயர்வு பற்றிய இறுதி முடிவை இன்னும் ஒரு மாதத்துக்குள் எடுக்கப் போவதாக மாஸ்டெக் கூறுகிறது.

சம்பளங்கள் குறைக்கப்படுவதற்கான உண்மையான காரணத்தையும் சொல்கிறார் பரீத் கசானி.

“இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் சொற்ப சம்பள உயர்வு கொடுத்தும், புதிதாக ஆள் எடுப்பதை தள்ளிப் போட்டும் வருகையில் அடுத்தக் கட்ட நிறுவனங்கள் தமது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வது எளிதாகியிருக்கிறது. சம்பள உயர்வு கொடுக்கவோ, புதிய ஊழியர்களை சேர்க்கவோ எந்த அழுத்தமும் இல்லை” என்கிறார்.

அமெரிக்க ஊதியங்களை விட இந்தியாவில் பல மடங்கு குறைந்த ஊதியம் கொடுத்து அமெரிக்க ஊழியர்களின் வாழ்க்கையை பறித்து கொழுத்தன இந்திய ஐடி நிறுவனங்கள். அவர்களுக்குத் தேவைப்படும் லாப  “வளர்ச்சி”க்கு அமெரிக்க ரத்தம் போதாமல் போய் விட இப்போது கவனத்தை இந்திய ஊழியர்கள் மீது திருப்பியிருக்கிறார்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாய்களை கையிருப்பாக வைத்திருக்கும் இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அசீம் பிரேம்ஜி போன்றவர்களும் பஞ்சப்பாட்டு பாடி இந்திய ஊழியர்களை முடிந்த வரை கசக்கிப் பிழியவும் அதன் பிறகு நடுத்தெருவில் விடவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆடை ஏற்றுமதித் தொழில் மூலம் கொழித்த திருப்பூர் இன்று பிசாசு நகரமாகியிருப்பதைப் போல இந்திய ஐடி மையங்களும் மாறி வருகின்றன.

படிக்க: