privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஎம்.ஆர்.காந்தி தாக்குதல்: பாஜகவின் தேர்தல் ஒத்திகை!

எம்.ஆர்.காந்தி தாக்குதல்: பாஜகவின் தேர்தல் ஒத்திகை!

-

எம்.ஆர்.காந்தி
எம்.ஆர்.காந்தி

குமரி மாவட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த எம் ஆர் காந்தி தாக்கப்பட்டதை வைத்து ஒரு பெரும் வன்முறையை கட்டவிழ்க்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது. ஆங்காங்கே மதவெறித் தீயை ஊதி விட்டுள்ளனர். மக்கள் அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போய் கிடக்கின்றனர். எந்நேரமும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தோர் தாக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

எம்.ஆர்.காந்தி பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் பொன். இராதாகிருஷ்ணனால் ஓரங்கட்டப்பட்டவர். இது வரை நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் நாகர்கோவில் தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணனே போட்டியிட்டுள்ளார். ஒரு முறை தவிர்த்து மற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பா.ஜ.கவின் மதவெறி அரசியல் தந்திரம் அங்கு பலிக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது எம் ஆர் காந்தி ஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக நாகர்கோவில் வீதியெங்கும் போஸ்டர்கள் முளைத்தன.

பாராளுமன்ற தேர்தலை மிக அணுக்கமாக அனைத்து கட்சிகளும் உணரும் நிலையில், எம்.ஆர். காந்தியை 2014ல் நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட வைக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். காங்கிரஸ் — திமுக கூட்டணி உடைந்துள்ள நிலையில் தமது வெற்றி எளிதாக இருக்கும் என்று இந்து மதவெறி கூட்டத்தின் அனைத்து தரப்பும் நாக்கில் எச்சில் ஒழுகக் காத்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான் எம்.ஆர். காந்தியை அங்ககீனப்படுத்தும் இந்த முயற்சி அரங்கேறி உள்ளது.

வழக்கம் போல முஸ்லிம்கள் மீதோ அல்லது குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்கள் மீதோ, இல்லை முசுலீம்கள் மீதோ பழியை போட்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. உட்கட்சி மோதல் அரசியலில் தான் தி.மு.க.வின் தா. கிருட்டிணன் காலை நடை சென்ற போது கொல்லப்பட்டார். எம்.ஆர். காந்தி தாக்குதல் சம்பவமும் தா.கிருட்டிணன் கொலைச் சம்பவத்தையே பெரிதும் ஒத்திருக்கிறது.

கடையடைப்புஎம் ஆர் காந்தி தாக்கப்பட்டதை வைத்து பாரதீய ஜனதா கட்சி 22-ம் தேதி திங்கள் கிழமை குமரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி ஞாயிறு மாலையும், திங்கள் காலையிலும் பஸ்கள் மீது பாஜ குண்டர்கள் கல்வீச்சு நடத்தினர். மாவட்டம் முழுவதும் 50 பஸ்கள் உடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்கள், கல்லூரி பஸ்களும், வேன்களும் கல்வீச்சில் சேதம் அடைந்தன. குளச்சல் அருகே பஸ் மீது கல் வீசப்பட்டதில், டிரைவர் ராபர்ட் கிங்ஸ்லி என்பவர் படுகாயம் அடைந்தார்.

இத்தகைய வன்முறை செயல்களுக்கு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 850 போலீசார் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வழக்கம் போல எரியும் தீயில் குளிர் காய்வதற்கு தயாராகி விட்டனர் பாஜ கட்சியினர். தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் எம்.ஆர்.காந்தி மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார். பா.ஜ. தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இல.கணேசன் “நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். மத பின்னணி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்’ என்கிறார்.

இல கணேசன்
இல கணேசன்

குமரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மத பயங்கரவாதத்தை உரம் போட்டு வளர்த்து வரும் இந்துத்துவா கும்பல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதை வாக்குகளாக அறுவடை செய்யத் தயாராகிறது. சச்சரவுகளை ஊதிப் பெருக்கி, வன்முறை சம்பவங்களை உற்பத்தி செய்து, கலவரங்களை தூண்டி விட்டு இந்துக்களின் மனதிலும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்கள் மனதிலும் அச்சத்தை உருவாக்கும் வேலையை செய்து வருகிறது.

இதே போல கோவை மாவட்டத்திலும் கோவையை ஒட்டிய குன்னூர் பகுதிகளிலும் வன்முறை சம்பவங்களையும் தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகின்றன இந்துத்துவ அமைப்புகள். கோவையில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தகராறு செய்வது, முஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழும் பிரசுரங்களை வெளியிட்டு வினியோகிப்பது, கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக பொய் பிரச்சாரம் செய்வது, விநாயகர் ஊர்வலம் மூலம் பதட்டத்தை உருவாக்குவது என்று பல ஆண்டுகளாக நாடு முழுவதும் செய்து தேர்ந்த உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வன்முறை சம்பவங்கள், பதட்டம், கடையடைப்பு இவற்றின் மூலம் மக்கள் மனதில் பயத்தைத் தூண்டி விட்டு, தமது இந்து வாக்கு வங்கியை ஊதிப் பெருக்கி காட்டி கூட்டணி பேரம் பேசுவதற்கும், பேரம் படியா விட்டால் சில ஆயிரம் ஓட்டுக்களை பொறுக்குவதற்கும், மக்களை பிளவுபடுத்தும் இந்த கேவலமான தேசவிரோத செயலை செய்து வருகின்றன பாஜகவும் மற்ற இந்துத்துவ அமைப்புகளும்.

உழைக்கும் மக்கள் அனைவரும் நாட்டு மக்களை மதம் என்ற பெயரில் இரண்டாக பிளந்து போடும் இந்த தேச விரோத, பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பலின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் அவர்களை வேரறுக்க வேண்டும்.

மேலும் படிக்க
பாஜ நிர்வாகி மீது தாக்குதலை கண்டித்து குமரியில் கடையடைப்பு கல்வீச்சில் 50 பஸ் சேதம்