privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திரசியாவில் முதலாளித்துவ ஜனநாயகம் - ஒரு மர்மக் கதை!

ரசியாவில் முதலாளித்துவ ஜனநாயகம் – ஒரு மர்மக் கதை!

-

சென்ற மாதம் 22-ம் தேதி இங்கிலாந்தின் பெர்க்-ஷயரில் உள்ள அவரது முன்னாள் மனைவிக்கு சொந்தமான 20 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ 160 கோடி) மதிப்பிலான பங்களாவின் குளியலறையில் பிணமாக கண்டறியப்பட்டார் ரஷ்யாவின் பெரு முதலாளிகளில் ஒருவரான போரிஸ் பெரிசோவ்ஸ்கி. அவர் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அவரது அரசியல்/வணிக எதிரிகள் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பல விதமான ஊகங்கள் உலவுகின்றன.

போரிஸ் பெரிசோவ்ஸ்கி
பத்திரிகையாளர்களிடம் பேசும் போரிஸ் பெரிசோவ்ஸ்கி

67 வயதான போரிஸ் பெரிசோவ்ஸ்கி சாதாரணமான மனிதர் இல்லை; 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யாவில் ‘ஜனநாயக’த்தை வழி நடத்திய பெருந்தலைகளில் ஒருவர். ரஷ்ய பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ அமைப்பில் இணைக்கும் முக்கியமான கடமையை ஆற்றியவர்.

1970களின் சோவியத் யூனியனில் போரிஸ் ஒரு கணித பேராசிரியராக பணி புரிந்தார். அவரது ‘திறமை’யையும், ‘அறிவுக் கூர்மை’யையும் பயன்படுத்த வாய்ப்புகள் தராத அன்றைய சமூக அமைப்பிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தார். சொந்தமாக ஒரு கார் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் ‘ஏங்கி’க் கொண்டிருந்தார்.

1980களில் சோவியத் யூனியனின் (சமூக ஏகாதிபத்தியம் – சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம்) சரிவு ஆரம்பித்து 1990ல் தனித் தனி நாடுகளாக உடைந்த பிறகு ரஷ்யாவில் முக்கிய புள்ளியாக உருவெடுத்தார் போரிஸ்; நாடு முழுவதும் வீசத் தொடங்கியிருந்த முதலாளித்துவ ஜனநாயக காற்றில் வாய்ப்புகளை தேடிக் கொள்வதற்கான ‘சுதந்திர’த்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்.

அவரளவுக்கு ‘திறமை’ இல்லாத கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் அன்றாட உணவுக்குக் கூட போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அதே கால கட்டத்தில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை குவித்தார் போரிஸ். அரசுத் துறைகளான எரிசக்தித் துறை, ஊடகத் துறை, விமான போக்குவரத்துத் துறைகளை தனியார் மயப்படுத்தும் மோசடி திட்டங்களில் பெரும் லாபம் ஈட்டினார். ரோமன் அப்ரமோவிச் என்பவருடன் கூட்டாக சிப்நெப்ட் என்ற எண்ணெய் நிறுவனத்தை கைப்பற்றினார்.

பெரிசோவ்ஸ்கியும் குசின்ஸ்கியும்
பெரிசோவ்ஸ்கியும் குசின்ஸ்கியும்

இவரைப் போன்று பெருமுதலாளியாக உருவெடுத்தவர் விளாடிமிர் குசின்ஸ்கி. அவர் டாக்சி ஓட்டுனராக இருந்தவர். ரஷ்யாவின் ரூபர்ட் முர்டோச் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ரியல் எஸ்டேட் பேரங்கள், வங்கித் துறை நிதி பரிமாற்றங்கள் போன்ற சூதாட்டங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவில் தொலைக்காட்சி, செய்தித் தாள்கள், வானொலிகள் அடங்கிய பெருநிறுவனத்தின் அதிபதியானார்.

மிகயில் கோடர்கோவ்ஸ்கி என்பவர் ஒரு உணவகம் நடத்தி வந்தவர். ‘ஜனநாயகமும் சுதந்திரமும்’ ரஷ்யாவை வந்தடைந்த பிறகு ஒரு வங்கியை நிறுவினார். நாட்டின் எரிசக்தி துறை அமைச்சரானார். யுகோஸ் என்ற பெட்ரோலிய நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கினார். 10 பில்லியன் பவுண்டுக்கும் (ரூ 82,000 கோடி) அதிக மதிப்பிலான சொத்துக்களை குவித்து ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.

1996-ல் ஜனநாய முறைப்படி இரண்டாவது தேர்தல் நடக்க வேண்டிய காலம் நெருங்கியது. ஆனால், நாடு நெருக்கடியில் சிக்கியிருந்தது. கிரெம்ளினில் இரவு நேரங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. மருத்துவமனைகளில் மருந்துகள் கிடைக்கவில்லை. பள்ளிகளுக்கும், தீயணைப்பு நிலையங்களுக்கும் அரசு ஆதரவு நின்று போயிருந்தது. 40 சதவீத மக்கள் ஏழ்மையில் வாடினார்கள். மக்களின் மன உளைச்சல்களுக்கு மருந்தாக தொலைக்காட்சிகளில் போலி ஆன்மீக வாதிகள் தோன்றி உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நெருக்கடியிலிருந்து விடுபட மேற்கத்திய நாடுகளில் சில கம்யூனிஸ்ட் கட்சி (போலி கம்யூனிஸ்டு கட்சி)யைச் சேர்ந்த கென்னடி ஜூயுகானோவ் ஜனாதிபதி ஆவதை ஆதரிக்க ஆரம்பித்தன. ‘யெல்ட்சின் தோற்று விட்டால் ரஷ்யாவின் பல சிக்கல்கள் ஏற்படும். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்’ என்று ரஷ்யாவின் பெருமுதலாளிகள் பயந்தார்கள்.

1996-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தின் புகழ் பெற்ற சுகவாசஸ்தலமான டாவோஸில் நடந்த அரசியல், தொழில் துறை தலைவர்களின் கூட்டத்தின் போது போரிஸ் பெரிசோவ்ஸ்கியும், குசின்ஸ்கியும், கோடர்கோவ்ஸ்கியும் ‘1996 தேர்தலில் யெல்ட்சினை காப்பாற்றுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக வேண்டும்’ என்று முடிவு செய்தார்கள்.

யெல்ட்சினுடன் பெரிசோவ்ஸ்கி
யெல்ட்சினுடன் பெரிசோவ்ஸ்கி

யெல்ட்சினின் போட்டியாளர் ஜூயுகானோவுக்கு சாதகமான செய்திகள் தமது ஊடகங்களில் வெளியாவதை தடை செய்தார்கள். யெல்ட்சினுக்கு ஆதரவாக தொலைக்காட்சி விளம்பரங்களை கட்டவிழ்த்து விட்டார்கள். ‘ஜூயுகானோவ் வெற்றி பெற்றால் உள்நாட்டுப் போர் மூளும்’ என்று வதந்திகள் பரப்பப்பட்டன. ‘இதுதான் உணவு வாங்க கடைசி வாய்ப்பு. இன்றே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று எழுதப்பட்ட 10 லட்சம் போஸ்டர்கள் கடைகளில் ஒட்டப்பட்டன.

தேர்தல் அன்று வாக்குகளை எண்ணும் போது தேர்தலில் யெல்ட்சினுக்கு சாதகமாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பதிவு செய்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. ரஷ்ய ஜனநாயகத்தின் காவலர்கள் யெல்ட்சினை வெற்றி பெறச் செய்து விட்டார்கள். அதற்கு கைமாறாக ரஷ்யாவின் இயற்கை வளங்களை அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள பிரித்துக் கொடுத்தார் போரிஸ் யெல்ட்சின். சைபீரியன் ஆயில் நிறுனம் உள்ளிட்ட நாட்டின் தொழில்வளங்களில் சுமார் 60 சதவீதம் இந்த முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெறும் $300 மில்லியன் (சுமார் ரூ 1,600 கோடி) விலைக்கு நார்வேயின் எண்ணெய் வளங்களை விட அதிகமான வளங்களை கோடோர்கோவ்ஸ்கி கைப்பற்றினார். தொலைக்காட்சி அதிபர் விளாடிமிர் குசின்ஸ்கி, அரசு நிறுவனமான கேஸ்ப்ரோமிடமிருந்து $2.5 பில்லியனுக்கு (சுமார் ரூ 14,000 கோடி) அதிகமான மதிப்புக்கு கடன்களை பெற்றார்.

பெரிசோவ்ஸ்கி ரஷ்யாவின் பிரதான தொலைக்காட்சி சேனலையும் 1.9 பில்லியன் பவுண்ட் (சுமார் 16,000 கோடி) மதிப்பிலான சொத்துக்களையும் கைப்பற்றினார். அவர் உள்ளிட்ட 6 பெரும் பணக்காரர்கள் ரஷ்ய உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அவரது செல்வாக்கின் உச்சியில் இருந்த போது போரிஸின் வணிக நிறுவனங்களின் மதிப்பு $4.6 பில்லியன் (சுமார் ரூ 25,000 கோடி). ஆனால் தமது வாழ்வாதாரங்களை இழந்து உணவுக்குக் கூட போராடிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரஷ்ய மக்களைப் பொறுத்த வரையில் அவை வணிக நிறுவனங்கள் அல்ல கொள்ளைக் கூட்டங்கள்.

பெரிசோவ்ஸ்கி காதலியுடன்
பெரிசோவ்ஸ்கி தன் காதலியுடன்

இந்த கொள்ளைக்கார முதலாளிகள் ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன்களுடையவை போன்ற தீவுக் குடியிருப்புகளை உருவாக்கினார்கள். ஜார் காலத்து பங்களாக்களை சொகுசு ஓய்விடங்களாக மாற்றினார்கள். நெப்போலியன் காலத்து அறை அலங்காரங்கள், பிரெஞ்ச் சாம்பெய்ன் ஒயின் வழியும் செயற்கை ஊற்றுகள், பிக்காசோவின் ஓவியங்கள் என்று தமது பணத்தை வாரி இறைத்தார்கள். இளம் பெண்களை ஏவலுக்கு வைத்துக் கொண்டார்கள்.

குடிகாரரான ஜனாதிபதி யெல்ட்சின் பல நாட்கள் தொடர்ச்சியாக போதையில் நினைவற்று, தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தார். ரஷ்ய பொருளாதாரம் 1998-ல் திவால் ஆகும் நிலை ஏற்பட்டது. ரஷ்ய அரசு பெரிசோவ்ஸ்கிக்கும் அவரது சக முதலாளிகளுக்கும் முன் கூட்டியே தகவல் சொல்லி விட அவர்கள் தமது பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்தி பாதுகாத்துக் கொண்டார்கள். சாதாரண ரஷ்ய உழைக்கும் மக்கள் மேலும் கொடிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டார்கள்.

புத்தாயிரமாண்டு பிறப்பதற்கு முதல் நாள் கைகால்களும் உடம்பும் நரம்புத் தளர்ச்சியால் நடுங்கிக் கொண்டே யெல்ட்சின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் ஜனாதிபதியாக இருந்த 10 ஆண்டுகளில் 1.5 லட்சம் பேர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சந்தைப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு யெல்ட்சினுக்கு அடுத்து ஜனாதிபதியாக பொறுப்பு வகிக்க ஒரு இளம் தலைவரை தேடினார்கள், ரஷ்யாவின் பாதுகாவலர்களான முதலாளிகள். செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் அரசு அதிகாரியாக பணி புரிந்து வந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரி விளாடிமிர் புடினை ஆதரிக்க முடிவு செய்தார் போரிஸ் பெரிசோவ்ஸ்கி.

விளாடிமிர் புடின் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க பெரிசோவ்ஸ்கி பண உதவி செய்தார். 2001-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் ரஷ்ய ஜனாதிபதி ஆனார். ஆனால், ஜனாதிபதி ஆன உடனேயே புடின் அவருக்கு உதவிய முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். இது வளர்ந்து விட்ட முதலாளிகளை அரசின் குறைந்தபட்ச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாகும். முதலாளிகளின் நலனுக்காகத்தான் ரசிய அரசு செயல்பட்டாலும் பொதுவில் அது பலவீனமாக இருந்தது. அதை ஒரு வல்லரசுக்குரிய பலத்துடன் உருவாக்கினால்தான் நீண்டகால நோக்கில் ரசிய முதலாளிகளுக்கு சேவை செய்யும். புடினின் நடவடிக்கைகளை இத்தகைய பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.

2003ல் பெரிசோவ்ஸ்கி
2003ல் பெரிசோவ்ஸ்கி – அவரது காதலியுடன் இங்கிலாந்து மாளிகை முன்பு

பெரிசோவ்ஸ்கி ரஷ்யாவை விட்டு தப்பி இங்கிலாந்துக்கு ஓடினார். புடினுடன் பகைத்துக் கொண்ட குசின்ஸ்கி கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து ஏற்கனவே தப்பி விட்டிருந்தார். புடினை எதிர்த்த கொடோர்கோவ்ஸ்கி 2003-ல் கைது செய்யப்பட்டு சைபீரிய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

பெரிசோவ்ஸ்கி லண்டனின் மேட்டுக் குடியினர் வசிக்கும் மே்பேர் பகுதியில் குடியேறினார். புடினுக்கு எதிராக புரட்சி நடத்தி ரஷ்யாவுக்குத் திரும்பிப் போவதைப் பற்றி கனவு கண்டார். அவரது முன்னாள் கூட்டாளியான அப்ரமோவிச்சின் சொத்துக்களில் 3 பில்லியன் பவுண்ட் தனக்குரியது என்று லண்டன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது முன்னாள் காதலி எலனா கோர்புனோவா, 200 மில்லியன் பவுண்ட் சொத்துக்களை முடக்குமாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இறுதி நாட்களில் மனச் சோர்வடைந்திருந்த பெரிசோவ்ஸ்கி கொலை செய்யப்பட்டோ தற்கொலை செய்து கொண்டோ உயிரிழந்தார்.

முதலாளித்துவம் ரஷ்ய மக்களுக்கு கொண்டு வந்த சொர்க்கத்தின் யோக்கியதை இதுதான்.

மேற்கு ஐரோப்பாவில் 17,18-ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த முதலாளித்துவம் உள்நாட்டு உழைக்கும் மக்களை சுரண்டியும் வெளிநாடுகளை காலனிய ஆதிக்கத்தின் மூலம் கொள்ளை அடித்தும் வளர்ந்தது. அமெரிக்காவில் இயற்கை வளங்களை வளைத்துப் போடுவது, அரசு எந்திரத்தின் மீது பெருமளவு ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது, குறைந்த கூலி கொடுப்பது, போட்டியாளர்களை ஒழித்து விட்டு அதிக விலைக்கு பொருட்களை விற்பது, நிறுவனத்தின் பங்குகளை உயர் விலைக்கு விற்று சிறு முதலீட்டாளர்களை மோசடி செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் தமது மூலதனத்தை வளர்த்துக் கொண்ட 19-ம் நூற்றாண்டின் ராக்பெல்லர் போன்ற முதலாளிகள் கொள்ளைக்கார பிரபுக்கள் (robber barons) என்று அழைக்கப்பட்டனர்.

20-ம் நூற்றாண்டிலும் 21-ம் நூற்றாண்டிலும் புதுப் புது உத்திகளையும் நிதித் துறை கருவிகளையும் உருவாக்கி உலகையும் உழைக்கும் மக்களையும் சுரண்டி கொழுக்கின்றனர் பெருமுதலாளிகள்.

எங்கெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகம் நிலவுகிறதோ அங்கெல்லாம் பெயரளவில் அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் என்று பேசப்பட்டாலும் நடைமுறையில் கொள்ளைக்கார பிரபுக்களின் ஆட்சி என்பதாகத்தான் இருக்கும் என்பதற்கு துலக்கமான உதாரணம்தான் போரிஸ் பெரிசோவ்ஸ்கியின் வரலாறு.

படங்கள் உதவி : டெய்லி மெயில்

மேலும் படிக்க
Confessions of an Oligarch