அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் : தமிழ், தமிழர் மீதான பார்ப்பன ஜெயாவின் தாக்குதலை முறியடிப்போம்!

ஜெயலலிதா கையில் கல்விழிப்பறைகளும் “டாஸ்மாக்” கடைகளும் திறந்து வைப்பது தவிர தமிழக முதல்வர் “புரட்சித் தலைவி அம்மா” உத்திரவில்லாத அரசு நடவடிக்கை என்பதாக ஊடகங்களில் அறிவிக்கை எதுவுமே வருவதில்லை. பேச்சிப்பாறை – மணிமுத்தாறு கால்வாயின் மதகு திறப்புக் கூட தமிழக முதல்வர் “புரட்சித் தலைவி அம்மா” உத்திரவின் பேரில் நடப்பதாகத்தான் அறிவிக்கைகள் வருவதுண்டு. ஆனால், “கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இனித் தமது உள்தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்ற உத்திரவை எனது கவனத்திற்குக் கொண்டு வராமலேயே தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் வெளியிட்டுவிட்டது. இந்த உத்திரவைத் திரும்பப்பெற நான் ஆணையிட்டுள்ளேன். ஆங்கிலம் அல்லது தமிழ் என எந்த மொழி வழியில் பயின்றாலும், மாணவர்கள் தமிழில் உள்தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அவ்வாறு உள் தேர்வுகளைத் தமிழில் எழுத அனுமதிக்குமாறு நான் அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளேன். எனவே, அனைத்து மாணவர்களும் உள்தேர்வுகளை அவரவர் விருப்பப்படி தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், ஜெயலலிதா.

அனைத்து மாணவர்களும் உள்தேர்வுகளை மட்டுமல்ல, பொதுத்தேர்வுகளையே அவரவர் விருப்பப்படி தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம் என்பதுதான் ஏற்கெனவே இருந்த நிலை. இதை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவராமலேயே அதிகாரிகள் மாற்றிவிட்டார்களாம்; கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் நம்புவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் அ.தி.மு.க.காரர்களைப் போன்றவர்கள் அல்ல! எலிப்பொந்தில் வாலை விட்டுப் பார்க்கும் நரியைப் போல சில வாரங்களுக்கு முன்புதான், அனைத்து அரசுப் பள்ளிகளிலும், எல்லா மட்டங்களிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது, ஜெயலலிதா அரசு. தமிழினவாதக் குழுக்கள் ஜெயலலிதாவின் நம்பகமான விசுவாசிகளாகிவிட்ட நிலையில், கருணாநிதியின் ஈனக் குரலிலான எதிர்ப்பு மட்டுமே கிளம்பியது. இதனால், துணிச்சலுற்ற ஜெயலலிதா அரசு தமிழர்க்கும், தமிழுக்கும் எதிரான தாக்குதலுக்கு மீண்டும் துணிந்து, ஆங்கிலவழிக் கல்வித் திணிப்புக்கான வேலைகளில் குதித்தது. ஆனால், ஜெயலலிதாவின் எத்தனிப்புகளுக்கு எதிராக கருணாநிதியின் தொடர் கண்டன அறிக்கைகளும் உளவுத்துறைத் தகவல்களும் வந்ததால், இப்போதைக்குப் பின்வாங்கியுள்ளது.

சமச்சீர்க் கல்வி ஒழிப்பு, மதமாற்றத் தடைச் சட்டம், கிடா வெட்டத் தடைச் சட்டம், சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்ட முடக்கம், ஈழ எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்பு, நரேந்திர மோடியுடன் கூட்டு என்று தனது கோரமுகத்தை அவ்வப்போது காட்டும் ஜெயலலிதா பார்ப்பன பாசிசக் கொள்கை, கோட்பாடுகளை ஒரு போதும் கைவிடமாட்டார்; ஒருபுறம், தமிழாய்வு நிறுவன முடக்கம், ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு; மறுபுறம் நூறு கோடி ரூபாயில் தமிழ்த் தாய்க்குச் சிலை, தமிழ்ப் பூங்கா என்று தமிழ் மக்களை ஏய்க்கிறார். வெளிநாட்டு, வெளிமாநில வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் ஆங்கிலக் கல்வியால் அவற்றை அப்படியே கவ்விக் கொள்ளலாம் என்ற நடுத்தர வர்க்க மோகத்துக்குத் தொடர்ந்து பார்ப்பன ஊடகங்கள் தீனிபோடுகின்றன. ஓரளவு மக்கள் நலன் சார்ந்த சமச்சீர்க் கல்வி முறையை ஒழிப்பதில் தோற்றுப் போன ஜெயலலிதா அரசு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்துப் படிப்படியாக அதை விரிவுபடுத்தும் சதியில் இறங்கியுள்ளது. ஆரம்ப நிலையிலேயே, இச்சதியை உறுதியாக எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________