அஸ்கர் அலி எஞ்சினியர்
அஸ்கர் அலி எஞ்சினியர் : துயரம் நிறைந்த இழப்பு.

அஸ்கர் அலி எஞ்சினியர் : இந்து – முஸ்லீம் மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் !

தீவிர மதவெறி எதிர்ப்பு செயல் வீரரும், ஆய்வாளரும், உறுதிமிக்க இசுலாமிய சீர்திருத்தவாதியுமான அஸ்கர் அலி எஞ்சினியர் மே 14, 2013 அன்று தனது 73-வது வயதில் இயற்கை எய்தினார்.

1980-களில் தீவிரம் பெற்ற பார்ப்பன இந்து மதவெறியையும் அதற்கு எதிர்வினையாக வலுப்பெற்ற இசுலாமிய மதவெறியையும் எதிர்த்துப் போராடிய அறிவுத் துறையினரில் எஞ்சினியர் மிகவும் முக்கியமானவர். இந்து மதவெறியை மட்டுமின்றி, இசுலாமிய மதவெறி, கடுங்கோட்பாட்டுவாதத்தை எதிர்ப்பதற்கும் அவரது எழுத்துகள் பெரிதும் பயன்பட்டன.

ஷியா இசுலாமின் ஒரு உட்பிரிவான தாவூதி போஹ்ரா சமூகத்தில் பிறந்தவர் அஸ்கர் அலி எஞ்சினியர். சையத்னா என்ற தலைமை மதகுருவின் சர்வாதிகாரத்திற்கு பெயர் போனது இந்த உட்பிரிவு. சையத்னா மொகியுத்தீன் என்ற தலைமை மதகுருவை வணங்க மறுத்து, தன் இளம் வயதிலேயே கலகத்தைத் தொடங்கியவர் அஸ்கர். 70-களில் சையத்னாவின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து இவர் சமூக நீக்கம் செய்யப்பட்டு, சொந்த தாயைக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டார். ஆறு முறை அஸ்கரின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் சையத்னாவின் கூலிப்படையினர். அவருடைய வீடும் அலுவலகமும் சூறையாடப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. ஆனால், அஸ்கர் அலி எஞ்சினியர் இறுதிவரை பணியவில்லை..

அஸ்கர் இறை நம்பிக்கையாளர். நாத்திகக் கோட்பாடு என்ற காரணத்தினால் மார்க்சியத்தை ஒதுக்கியதாகவும், பின்னர் மார்க்சியம் தன்னை வென்றெடுத்துவிட்டதாகவும் அவர் சொல்வாரென்று குறிப்பிடுகின்றனர் அவரது நண்பர்கள். “ஒடுக்கப்பட்டோரின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம்” என்ற கோணத்தில் மதத்தின் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி மதிப்பிட்ட அஸ்கர், மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மதத்தை விடுவிக்க வேண்டுமெனக் கருதினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான இசுலாமை, பிரபுக்குலத்தினர் தம் வர்க்க நலனுக்கேற்ப வளைத்ததையும், பெண்ணுரிமையைப் பறித்ததையும், துணைக்கண்டத்தில் அஷ்ரப், அஜ்லப் என்ற மேல்சாதி – கீழ்சாதி பிரிவினை பேணப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார். காலனியாதிக்க எதிர்ப்பிலும் கூட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை முசுலீம்களும் உலமாக்களும்தான் முன் நின்றனரேயன்றி, மேட்டுக்குடி முஸ்லிம்கள் அல்ல என்பதையும் தனது ஆய்வுகளில் ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார்.

1980-களில் ஷா பானு வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அந்த மூதாட்டிக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதை எதிர்த்தும், முஸ்லிம் பெண்களின் மணவிலக்கு வழக்குகள் ஷரியத்தின்படி மட்டுமே தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் இசுலாமிய மதவாதிகள் எழுப்பிய கோரிக்கையை எதிர்ப்பதில் அஸ்கர் முன்னணியில் நின்றார். இந்தப் போராட்டம் இந்து மதவெறி சக்திகளை வளர்த்து விடுவதற்குத்தான் உதவும் என்று சாடினார்.

இந்து மதவெறியின் எதிர்விளைவாகத்தான் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதமும், தீவிரவாதமும் வலுப்பெற்றன என்ற போதிலும், சிறுபான்மை மதவெறியை அவர் மென்மையாக அணுகவில்லை. மதவெறியினால் ஏற்படும் பாதிப்புகளை, இந்து-முஸ்லிம் என்ற சட்டகத்திற்கு அப்பாற்பட்டு, உழைக்கும் வர்க்கத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ற கோணத்திலேயே அவர் முதன்மையாக அணுகினார்.

“பதிலடி தரவேண்டும் என்று சில முஸ்லிம் இளைஞர்கள் கருதுவது நியாயமாகவே தெரிகிறது” என்று பிவாண்டி கலவரத்தைப் பார்த்த பின்னர் அஸ்கரிடம் தான் கூறியதாகவும், அதை அவர் கடுமையாக மறுத்ததாகவும் நினைவு கூர்கிறார், பத்திரிகையாளர் ஜோதி புன்வானி. 1993-இல் மும்பையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்த அச்சுறுத்தும் சூழலில், மும்பையின் குடிசைப் பகுதிகள் முழுவதிலும் அவர் முன்நின்று நடத்திய நல்லிணக்க பேரணியில் அஸ்கர் ஆற்றிய உரைகள் வர்க்க ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன.

மதக் கலவரங்கள் தொடர்பான அஸ்கரின் ஆய்வுகள் முன்மாதிரியானவை. ஜபல்பூர் கலவரத்தில் தொடங்கி வட இந்தியாவில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கலவரங்களை அவர் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன விதமான வர்க்க முரண்பாடுகள் அல்லது சமூக பொருளாதாரக் காரணிகள் எப்படி மத முரண்பாடுகளாகத் திரிக்கப்பட்டன என்பதை அவர் நிறுவுகிறார்.

“நாலு பெண்டாட்டி, முஸ்லிம் வாக்கு வங்கி, மதமாற்றம்” என்பன போன்ற இந்துத்துவ சக்திகள் பரப்பிய இசுலாமிய எதிர்ப்பு புனைவுகளுக்கும் அரை உண்மைகளுக்கும் சராசரி இந்துக்கள் எனப்படுவோர் பலியாகியிருந்த சூழலில், அவற்றை முறியடிப்பதற்கு நமக்கு ஆதாரங்கள் தேவைப்பட்டன. அவற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி நம் கையில் ஆயுதமாக வழங்கியவர்களில் முக்கியமானவர் அஸ்கர்.

இந்தியாவின் வரலாற்றையே இந்து-முஸ்லிம் மோதலின் வரலாறாகத் திரித்துக் காட்டும் சதியை இந்துத்துவ சக்திகள் மிகத் தீவிரமாக அரங்கேற்றி வந்த காலத்தில், ஆதாரபூர்வமாக அவற்றை மறுக்கும் எழுத்துகள் அஸ்கரிடமிருந்து வந்தன. மன்னர்களை அவர்களுடைய வர்க்க நலன்தான் இயக்கியதேயன்றி, மதமல்ல என்பதை அவர் வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினார். மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உழைக்கும் வர்க்கத்திடம் நிலவி வந்த ஒற்றுமையின் சான்றாக, சுஃபி மற்றும் வட இந்திய பக்தி இயக்க மரபுகளிடையே காணப்படும் ஒற்றுமையை அவர் வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டினார்.

இசுலாமிய சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், எப்போதும் அவர் மதச்சார்பற்றவர்களுடன்தான் இணைந்து நின்றார். இறந்த பின்னரும் முற்போக்காளர்கள் துயிலும் இடுகாட்டில் தன்னைப் புதைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். “கொள்கையைக் கடைப்பிடிப்பதில் பாறை போன்ற உறுதியைக் கொண்டவர்” என்று தனது தந்தையை நினைவு கூர்கிறார் அவரது மகன் இர்பான் எஞ்சினியர்.

எனினும், மதவெறியை எதிர்த்த போராட்டத்திற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மனிதர், குஜராத் படுகொலை பற்றிய செய்திகளை மட்டும் கேட்க விரும்பவில்லை என்று கூறுகிறார் அவரது நண்பர் ஜாகிர் ஜன்முகமது. “அதில் அவருக்கு அக்கறையில்லை என்பதல்ல; எல்லா மனிதர்களுமே அடிப்படையில் நல்லவர்கள்தான் என்பது அஸ்கர் கொண்டிருந்த நம்பிக்கை. அவருடைய அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் இருந்தன குஜராத்திலிருந்து வந்த செய்திகள்” என்று குறிப்பிடுகிறார் ஜன்முகமது

மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்பன போன்ற அரூபமான நம்பிக்கைகள் தகர்வது தவிர்க்கவியலாததுதான். இருப்பினும், “பழகிய அண்டை வீட்டாரே கொலை செய்வது, வீடு புகுந்து சூறையாடுவது, கடைகளை அபகரித்துக் கொண்டு அகதிகளாகத் துரத்தியடிப்பது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொல்வது” போன்ற குஜராத் இனப்படுகொலையின் கொடூரங்களைக் கேட்டு அஸ்கரின் நல்லெண்ணமிக்க இதயம் நடுங்கியிருக்கக் கூடும்.

தனது ஆதாரமான நம்பிக்கை நழுவியதால் அவரை அழுத்தியிருக்கக் கூடிய துயரத்தின் சுமை, பொருள் முதல்வாதிகளாகிய நம் மீதும் இறங்குகிறது. அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரத்தைக் காட்டிலும் இது கனமானது.

– சூரியன்
_____________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
_____________________________________________________________________

14 மறுமொழிகள்

  1. //ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான இசுலாமை, பிரபுக்குலத்தினர் தம் வர்க்க நலனுக்கேற்ப வளைத்ததையும், பெண்ணுரிமையைப் பறித்ததையும், துணைக்கண்டத்தில் அஷ்ரப், அஜ்லப் என்ற மேல்சாதி – கீழ்சாதி பிரிவினை பேணப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார்//

    Dear vinavu, don’t you have any manasatchi? Did Islam started as a religion for poor and opressed? Muhammad is a member of Quarish tribe that had the control of mecca’s temple (he is poosari). Also Islam was used to suppress people like what happened to 900 Jews slaughtered by muhammad. Muhammad himself imposed rules like polygamy, burka, preventing women from travelling etc. Muhammad pronounced death penalty for apostates and also allowed lying and cheating to kill apostates (fitna). Why you pretend like original version of islam is like full of freedom and equality for women and only later corruption made it worse?

  2. இந்த கட்டுரை மிகமிக தாமதமாக எழுதபட்டிருக்கிறது. எனினும் சற்று விரிவாக அஸ்கர் அலி எஞ்சினியரை பற்றி உரைக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை கொண்டோருக்கு அவர் வேண்டப்படாத மனிதர். இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள், அஸ்கர் போன்ற மனிதர்களை இஸ்லாமிய சமூகத்திற்குள்ளே மதிப்பில்லாமல் செய்துவிட்டது. அஸ்கர் அலி எஞ்சினியரிலிருந்து ஹெச்.ஜி ரசூல் வரை முஸ்லிம்கள் மத்தியிலிருந்து எழும் ஜனநாயகக் குரலுக்கான ஆதரவை தடுத்து நிறுத்தும் வேலைகளை இஸ்லாமிய மதவாத அமைப்புகள் செய்கின்றன.

    பன்மை இந்திய சமூகத்தின் சிக்கல்கள், முஸ்லிம்களின் இருப்பு, இந்துத்துவம், உலகமயமாக்கம் போன்ற பிரச்சினைகளில் ஆனா, ஆவன்னா தெரியாத புண்ணாக்குகள் ஜாகிர் நாயக், பி.ஜெ போன்ற நபர்களல்ல; அஸ்கர் அலி எஞ்சினியர் போன்ற ஆளுமைகளே கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

  3. அஸ்கர் அலி இஸ்லாத்ததின் அசல்தன்மையை அறியாதவர் ,மற்றும் அறிந்துய் கொள்ள .முயற்சிக்காதவர் வட இந்திய முஸ்லிம்கள் பின்பற்றிய இஸ்லாத்திற்கு முரண்பட்ட சூபியிசமும் ,ஷியாக்களின் கொள்கைகளுமே இஸ்லாம் என்று கருதி அதேகேற்றவாறு செயல்பட்டவர் .அந்த கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அறியாமல் தனது சீர்திருத்த கருத்துகளுடன் இஸ்லாமியர்களை அணுகியிருக்கிறார். பீஜேவை விட முஸ்லிம்கள் அஸ்கர் அலிக்கு எதிரான நிலை எடுக்கவில்லை பீஜே இஸ்லாமின் உண்மைநிலையை மக்களுக்கு எடுத்துக் கூறி அதன் மக்களிடையே மனமாற்றத்தை உருவாக்கியுள்ளார்.பீஜேவின் ஆக்கபூர்வமான செயல்பாட்டினால் மத கலவரங்களுக்கு பதிலாக மக்களிடையே நல்லிணக்கமே அதிகரித்திருக்கிறது .இது சமூகத்தின் மீது அஸ்கர் அலி கொண்ட ஆர்வத்தை விட பன்மடங்கு அதிகம் அதனால் இன்று அவர் இஸ்லாமியர் மத்தியில் கொண்டாடப்படுகிறார்

      • ஷியாவுக்கும் சன்னிக்கும் கொள்கையில் வேறுபாடு ..ஷியா கொள்கையில் உடன்பாடு இல்லைஎன்றால் அவர் சந்நியாக மாறிக் கொள்வார்

        • //ஷியாவுக்கும் சன்னிக்கும் கொள்கையில் வேறுபாடு//

          அதைத்தான் என்ன வேறுபாடு எனக் கேட்கின்றேன்

  4. வாய்யா இபுராகிம்,அப்படிபோடு விரலை ஆட்டுர உங்க பிஜே 72 கூட்டத்துல எத்தனையாவது கூட்டத்துல கொண்டாடுராங்க?

  5. எஸ்.இப்ரகிம் இஸ்லாம் மதத்தைப் பற்றி மிக அழகாகக் கூறியுள்ளார்,எல்லோரும் புரிந்துகொள்ளுங்கள்! சிவில் பிரச்சினைகளுக்கு ஷரியத் பின்பற்றச்சொல்லும் முஸ்லிம்கள், கிரிமினல் பிரச்சினைகளிலும் இஸ்லாமிய,அரேபிய (கைய கால வெட்டுறது,கண்ணப் புடுங்குறது)சட்டங்களைக் கோர வேண்டும் என்று அஸ்கர் அலி இஞ்சினியர் கூறியிருந்தாரெனில் அவர் இன்னும் பெரிய மதவெறி எதிர்ப்பாளராக இருந்திருப்பார் !

  6. //துணைக்கண்டத்தில் அஷ்ரப், அஜ்லப் என்ற மேல்சாதி – கீழ்சாதி பிரிவினை பேணப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார்//

    எந்த மேற்கோளும் இல்லாமல், மேல்சாதி – கீழ்சாதி என புதிய ஜனநாயகத்தில் வெளிவந்திருக்கிறது. நீங்களும் அதை திருத்தலாமே!

  7. ஆடு மாடுகளைபோல் கறுப்பின மக்களை அடிமையாக்கி வைத்திருந்த அரபிகளிடம் சமத்துவத்தையும் ஏக இறைவன் கொள்கையை விளக்கியதால் துரத்தபட்டு, பின் விடாமுயர்சியால் புரியவைத்து. யூத கிறித்தவ மக்களுக்கும் சம உரிமையும் நீதியையும் நிலைநாட்டியவர் நபிகள் அவர்கள். நீங்கள் சாகா பயிற்சி முகாமில் இருந்து வந்தவர் போல் பேசுகிரீர்களே. சந்தேகம் இருந்தால் அபிசீனிய அடிமையாக பிறந்த “பிலால்” அவர்களின் வாழ்கை வரலாறு படித்து தெளிவுறுங்கள். இன்று உலகேங்கும் கேட் க்கும் பாங்கு என்னும் தொழுகை அழைப்பு ஒரு அடிமையின் குறலே.

    • முகம்மது நபிகள் முஸ்லீம்கள் அடிமைகளை வைத்திருப்பதை முற்று முழுதாக தடை செய்யவில்லை. அவர் கூட அடிமைகளை வைத்திருந்தார். அடிமைகள் தமது விடுதலையை வாங்குவதை (பணம் கொடுத்து) அனுமதித்தார். அவர்களும் மனிதர்கள் என்பதை உணர்ந்து அடிமைகளை அன்போடு நடத்துமாறும், அவர்களை விடுதலை செய்வது கூட அல்லாவுக்குப் பிடித்த செயல் என்றும் கூறினாரே தவிர, பன்றியிறைச்சியை உண்பது ஹராம் என்று கூறித் தடுத்தது போலக் கூட, அடிமைகள் வைத்திருப்பதை பாவம் என்று கூறி முற்றாகத் தடை செய்யவில்லை.

      முகம்மது நபிகள் கூட அடிமைகளை வைத்திருந்தார் ஆனால் அவர்களை அவர் தனது குடும்ப அங்கத்தவர்களைப் போல் அன்பாக நடத்தினாராம். அவரிடமிருந்த ஷாயிட் என்ற அடிமையை அவர் தனது வளர்ப்பு மகனைப் போலவே நடத்தியது மட்டுமன்றி, அவனுக்கு ஒரு கிறித்தவ அடிமைப்பெண்ணை மணமுடித்தும் கொடுத்தாராம்.

      இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் முகம்மது நபிகள் அடிமைகள் வைத்திருப்பதை தடுக்கவில்லை, ஆனால் அடிமைகளை வைத்திருந்த அமெரிக்காவின் தெற்குப்பகுதிகளிலிருந்த சில பெருந்தோட்ட முதலாளிகளைப் போல் அடிமைகளை அன்பாக நடத்தினார் என்பது தான்.
      அமெரிக்காவில் அடிமைகளை வைத்திருந்த சில வெள்ளையினப் பெருந்தோட்ட முதலாளிகள் கூட, நீக்ரோ அடிமைகளை அன்பாக நடத்தினார்கள், அவர்களுக்கு பல சலுகைகளைக் கொடுத்து அவர்களை தமது குடும்பத்தில் ஒருவராக நடத்தினர். சிலர் அவர்களின் மூலம் பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டனர். அந்த வீட்டு அடிமைகளின்(House Niggers) வாரிசுகள் இன்றும் நிறத்தில் மாநிறமாக, காணி நிலங்களைக் கொண்டவர்களாக, பணக்காரர்களாக விளங்குகின்றனர். ஆனால் ‘House Niggers’ களை அடிமையாக வைத்திருந்தாலும், அன்பாக நடத்திய அமெரிக்க அடிமை முதலாளிகள், அடிமை வியாபரத்தை வெறுத்தனர் அல்லது எதிர்த்தனர் என்று யாரும் வாதாடுவதில்லை, வாதாடவும் முடியாது.

      அமெரிக்க அடிமை வியாபாரத்தைக் கூட நடத்தி அதில் இலாபம் கண்டவர்கள் அரபுக்கள் தான். அவர்கள் தான் ஆபிரிக்க அடிமைகளை வாங்கி அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் விற்றனர். பிரிட்டனின் வற்புறுத்தலின் காரணமாகத் தான் சவூதி அரேபியாவும், யேமனும், அதுவும் 1962 இல் தான் அடிமைகளை வைத்திருப்பதைத் தடை செய்ததே தவிர இஸ்லாத்தின் அடிப்படையில் தடை செய்யவில்லை, இன்றும் பல ஆபிரிக்க முஸ்லீம் நாடுகளில் அடிமை வியாபாரம் அமோகமாக நடக்கிறது.

  8. அன்புள்ள வினவு,

    //ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான இசுலாமை…//

    மத்த மதங்கள பத்தி எழுதும் போது மட்டும் கவனமா இருக்கற நீங்க, இந்த மதத்தப் பத்தி மட்டும் யாரோ எழுதிக் கொடுத்தத அப்படியே போட்டிருக்கீங்களே.

  9. தம்பி பி.ஜோ.

    நமது நண்பர்களின் பாடு திண்டாட்டம்தான். இந்துத்வர்களையும் முகமதியர்களையும் ஒரே சேர சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு அனானியாக இருக்கும் வசதியிருப்பதால் நான் பலவற்றை தெளிவாக பேச முடிகிறது. ஆனால் அந்த வசதி நமது வினவு நண்பர்களுக்கு இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் வினவின் வரிகளைப் புரிந்து கொண்டு கண்ணியமான முறையில் வாதங்களை வைப்பதே நல்லது. புரிந்து கொள்வதற்கு நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க