பாகிஸ்தானின் கில்கிட் பகுதியில் உள்ள சிலாஸ் சிறுநகரத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது நிரம்பிய சகோதரிகள் நூன் பஸ்ரா மற்றும் நூர் ஷெஸா இருவரும் அவர்களது தாயும் ஐந்து நபர்களைக்கொண்ட கூலிப்படையினால் ஜீன் 23 அன்று கொலை செய்யப்பட்டுள்ளனர். சகோதரிகளின் மாற்றந்தாய் மகனான குதோரே என்பவன்தான் இக்கொலைகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளாதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் செய்த தவறு என்ன?

பஸ்ரா, சேசா

தமது வீட்டுக்கு வெளியில் மழையில் விளையாடியதை வீடியோ பிடித்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டனர்.

தாங்கள் சிரித்த முகமாய் மழையில் ஆடி மகிழ்ந்ததை அந்த சகோதரிகள் செல்போன் கேமிராவில் படம் பிடித்து நண்பர் வட்டத்தில் சுற்றுக்கு விட்டுள்ளனர். வீடியோவில் இருந்ததோ பாராம்பரிய உடை அணிந்த இரண்டு குழந்தைகள் சேரந்து விளையாடும், பார்ப்போர் உதட்டில் புன்னகை பூக்க வைக்கும் காட்சிகள்தான். ஆனால் பாகிஸ்தான மத வெறியர்களைப் பொறுத்த வரை, பெண்கள் ஆடுவது என்பது குடும்ப கௌரவத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் இழுக்கானதாகும். அந்த இளம்பெண்கள் விளையாட்டாக செய்த இச்செயல் அவர்களுக்கு மரணத்தைத் தந்துள்ளது. சுற்றுக்கு விடப்பட்ட வீடியோவின் அடிப்படையில், அந்நகரத்தின் மூத்தவர்களில் பலர் அந்த பெண்களின் நடத்தையின் மீது சந்தேகத்தை எழுப்பியதுதான் இக்கொலைக்கான துவக்கம் என்கிறார் மனித உரிமை ஆர்வலர் அதியா ஜெஹன்.

இறந்த பெண்களின் மற்றொரு சகோதரன், கொலையை தூண்டிய குதோரேயின் மீதும், கொலையை செய்த கூலிப்படையினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளான். ஆனால் கொலைகாரர்களுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு எதிரான வன்முறை பாகிஸ்தான் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. பாகிஸ்தானில், பெண்களின் மீது ஏவப்படும் குற்றங்கள் அனேகம் வெளிவராமல் இருப்பதோடு, மதம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக அக்கொடுஞ்செயல்கள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன. பல தற்கொலைகளாகவும், விபத்துக்களாகவும் சித்தரிக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றன.

பாகிஸ்தானின் குற்றவியல் நீதி அமைப்பு, பெண்களுக்கு எதிரான இத்தகைய அத்துமீறல்களை சரியாக விசாரணை செய்வதும் இல்லை, குற்றங்களுக்கான தண்டனையும் வழங்குவதில்லை என்பதுதான் அங்கிருக்கும் நிலைமை. போலீசும் பெரும்பாலும் இத்தகைய அநீதிகளுக்கு ஆதரவாகவே நின்று குற்றவாளிகளை தப்பிக்க உறுதுணையாக இருக்கின்றனர். தப்பித்தவறி நீதிமன்ற வாசலுக்கு வரும் வழக்குகள் பொதுவாக ‘ஆணுக்கு கொலை செய்யும் உரிமையுண்டு’ என்ற மத அனுமதி சீட்டுடன் வெளியேற்றப்படுகின்றன.

“பாகிஸ்தானில் இஸ்லாமிய பிற்போக்குவாதிகளால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் சில சம்பவங்கள் மட்டும்தான் எதிர்க்கப்பட்டு ஊடகங்களில் பதிவு செய்யப்படுகின்றன, அவைதான் நம் கண்ணில் படும் சில நூறு செய்திகள்” என்கிறார் அம்னெஸ்டி ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளர் கேரன் ட்ரென்டினி.

1998 முதல் 2004 வருடங்களில் பாகிஸ்தானில் 4,000-க்கும் அதிகமான இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன, 2,700 பெண்கள் 1,300 ஆண்கள் பலியாகியுள்ளனர். 2003 ஆம் ஆண்டு பஞ்சாபில் மட்டும் 1,261 பெண்கள் கௌரவக் கொலை செய்யப்பட்டனர். மனித உரிமை குழுக்களின் வருடாந்திர அறிக்கைப்படி, 2012 ஆம் ஆண்டு மட்டும் 943 பெண்கள் கௌரவக் கொலையினால் உயிர் இழந்துள்ளனர். அதில் 585 பெண்கள் கள்ள உறவு காரணமாகவும், 219 பெண்கள் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டதற்காகவும் கொல்லப்பட்டுள்ளனர். 943 பேரில் 20 பேருக்கு மட்டும்தான் சாவதற்கு முன் மருத்துவ உதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 1. லாகூர் வாசியான சாமியா சர்வார் என்ற பாகிஸ்தானி பெண் அவளது கொடுமைக்கார கணவரை விவாகரத்து செய்துவிட்டு அவளது அத்தை மகனை மணக்க குடும்பத்தினரிடம் அனுமதி கோரினாள். மறுப்பு கிளம்பவே, குழந்தைகளை விட்டுவிட்டு அத்தை மகனுடன் அங்கிருந்து வெளியேறினாள். கொந்தளித்த சாமியா சர்வாரின் பெற்றோரும் அவரது அத்தையும் ஒன்றாக சேர்ந்து அப்பெண்ணை ஆள்வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து புனிதத்தை காத்துக்கொண்டனர். இச்சம்பவம் 1999 ஏப்ரலில் நடந்தது, இதுவரை அப்பெண்ணைக் கொன்ற ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
 2. 2007-ல் தென் பாகிஸ்தான் பகுதியில் உள்ள டாது என்ற கிராமத்தில், கய்நத் சூம்ரோ என்ற 13 வயது சிறுமி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அவளால் ஏற்பட்ட அவமானத்திற்கு அவள் உயிரையே போக்க வேண்டும் என்று அக்கிராமத்து பெரியவர்கள் முடிவு செய்து அவளைக் கொல்ல உத்தரவு பிறப்பித்தனர். கய்ந்ததின் சகோதரன் குடும்ப கௌரவத்தை காப்பாற்றாமல் சகோதரியை பாதுகாத்து நின்றதற்காக கொல்லப்பட்டார். அவரது தந்தையும் படுதாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த ஆறு வருடமாக காராச்சியில் வசிக்கும் கய்ந்ததும் அவளது குடும்பம் விடாமுயற்சியுடன் இன்றுவரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு நீதி கிடைக்க போராடி வருகிறார்கள்.
 3. 2008-ல் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பதின்ம வயது சிறுமிகள், குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். விளைவு உறவினர்கள் அவர்களை தீக்கு இரையாக்கினர். உயிருடன் அவர்கள் ஏற்படுத்திய இழுக்கு அவர்களை உயிருடன் கொளுத்தி, சீர் செய்யப்பட்டது.
 4. மார்ச் 2008-ல், பாகிஸ்தான் கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ஹஜ்னா ஷாஎன்ற கிராமத்தில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த தாஸ்லிம் காட்டூன் சோலங்கி என்ற 17 வயது பெண்ணின் ஒழுக்கத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால், 8 மாத கர்ப்பவதியென்றும் பாராமல், மாமனாரின் ஏற்பாட்டின் பெயரில் சித்திரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார்.
 5. ஜனவரி 2009-ல், பாகிஸ்தானின் பாரம்பரிய நடனக்கலைஞரான ஷாபானா என்ற பெண்மணி, தாலிபான் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தான், ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரின் முக்கியமான இடமான கிரீன் ஸ்குவேர் என்ற இடத்தில், தோட்டாக்களால் செல்லரித்த அவரின் உடல் மீது பணமாலை, அவரது நடன வீடியோ பதிவுகளைக்கொண்ட குறுஞ்தகடுகள் மற்றும் புகைப்படங்கள் போடப்பட்டு, ஊர் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
  இக்கொலையை தாலிபான் படைதான் செய்தது என்று ஒப்புக்கொண்டு வானொலியில் பேசிய தாலிபான் தலைவர் ஒருவர், எங்களுடைய அமைப்பு இத்தகைய ‘இஸ்லாமியமற்ற தீமைகளை’ பொறுத்துக்கொள்ள முடியாது என்று எச்சரித்திருக்கிறார். மேலும் மற்ற பெண்கள் நகரின் இத்தகைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால் ‘ஒவ்வொருவராக’ கொலை செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டியிருக்கிறார்.
 6. 27 ஏப்ரல் 2010 அன்று பெஷாவரை சேர்ந்த அய்மான் உதாஸ் என்ற பஷ்துன் பாடகி தன் உடன்பிறந்த சகோதரர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அவரது விவாகரத்து, மறுமணத்திற்கான திட்டம், மேடைப்பாடகியான அவரது வாழ்க்கை முறை எல்லாம் சேர்த்து குடும்பத்துக்கும் மதத்துக்கும் தீங்கிழைக்கின்றன என்பதற்கான தண்டனை இது.
 7. 2012 மே மாதத்தில்,  கொஹிஸ்தான் மாவட்டத்தில், திருமணம் ஒன்றில் இரண்டு ஆண்கள் மத்தியில் கைத்தட்டி பாடிக்கொண்டு இருந்த 4 பெண்களை அப்பகுதியின் உள்ளூர் பழங்குடி பெரியவர்கள கொல்ல உத்தரவு பிறப்பித்து கொன்றும் விட்டனர். நீதிமன்றத்தில் அவ்வாறு ஒரு சம்பவம் நடை பெறவே இல்லை என்று வழக்கு விசாரணையை முடித்தும் விட்டனர். இருப்பினும் சர்வதேசிய மனித உரிமை பாதுகாப்பு நிறுவனமான அம்னேஸ்ட்டி அந்த விசாரணை பொய்யானது என்றும் அப்பெண்கள் கொல்லப்பட்டது உண்மை என்றும் கூறியுள்ளது.
 8. 2012 ஜூலை மாதம் பெண்கள் உரிமை ஆர்வலர் பரிதா அஃப்ரிதி பெண்கள் மனித உரிமை மேம்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால் பெஷாவாரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
 9. 2012 அக்டோபர் மாதம் தாலிபான் படை 15 வயது நிரம்பிய மலாலா யூசாப் என்ற சிறுமியை தலையிலும் கழுத்திலும் சுட்டனர். மருத்துவச் சிகிச்சையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மலாலா. தாலிபான் இரக்கமற்று பெண்கள் மீது ஏவும் அடக்குமுறைகளை எதிர்த்தும், முக்கியமாக சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான கல்வி வழங்கும் உரிமைகளை கோரி வந்ததுதான் அவரது குற்றம்.
 10. 2012 நவம்பர் மாதம் 15 வயதான அனுஷா, பெற்றோருடன் விதியில் நடந்து செல்கிறாள், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்துக்கொண்டிருக்கும் வாலிபனை எதேச்சையாக இரண்டு முறை திரும்பி பார்த்துவிடுகிறாள். இதை அவளது பெற்றோரும் கவனிக்கிறார்கள். வீட்டிற்கு சென்று ‘விசாரிக்கிறார்கள்’, நான் அதை வேண்டுமென்று செய்யவில்லை, இனிமேல் பார்க்கமாட்டேன் என்று அவள் கூறிமுடிப்பதற்குள் பெற்ற மகள் என்றும் பாராமல் ஈவுவிரக்கமின்றி அச்சிறுமியின் மீது அமிலத்தை ஊற்றி கொன்றுவிடுகின்றனர் தாய் ஜாஹினும் தந்தை முஹம்மது ஜாபாரும். சாகவேண்டியது அவளது விதி என்று கூறுகிறார் அனுஷாவின் தாய்.
கய்நாத் சூம்ரோ

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட கய்நத் சூம்ரோவுக்கு கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இப்படி எண்ணிலடங்கா கௌரவக் கொலைகளின் பட்டியலில், புதியதாய் சேர்ந்திருக்கிறது நடனம் ஆடியதற்காக சகோதரிகள் இருவர் கொலையுண்டு இருக்கும் இச்சம்பவம்.

1990 களில் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட கிசாஸ் மற்றும் தியாத் சட்டங்கள், குற்றத்தை பதிவு செய்யும் உரிமை முதல், கொலையாளியின் மீது குற்றம் சாட்டுவது அல்லது தியாத்படி நஷ்ட ஈடு கோருவது வரை, பெயரளவிலான உரிமைகளை மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறது. இது நம்மூர் காப் பஞ்சாயத்தை ஒத்ததொரு கட்டபஞ்சாயத்துதான். கொடுரமான குற்றங்களை செய்தவர்களைக் கூட இந்த முறையினால், சட்டரீதியான மீளாய்விலிருந்து தப்புவிப்பதோடு மட்டுமல்லாமல், குற்றவாளியை தண்டிக்கும் உரிமையைக்கூட கட்ட பஞ்சாயத்தார் கைவசம் ஒப்படைக்கிறது.

குற்றவாளிக்கு கிசாஸ் முறையில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கிய அதே வகையான தண்டனையை வழங்குவது அல்லது தியாத் முறையில் நட்ட ஈடு தொகையை நிர்ணயித்து பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது சட்ட பூர்வமான வரிசுக்கு அதை வழங்குவதாக உள்ளது.

பெரும்பாலும் சொந்த குடும்ப நபர்களால்தான் இத்தகைய கௌரவக் கொலைகளும், சித்திரவதையும் பெண்கள் மீது ஏவப்படுவதால், அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொலையாளியை மன்னித்து விடுவதும், அல்லது நட்ட ஈடு பணத்தை பெயருக்கு வாங்கிக்கொண்டு அவர்களுக்குள் பங்கிட்டு கொள்வதும்தான் நடக்கிறது. இறுதியில் கொலையாளிக்கு விடுதலை கிடைத்து விட, குடும்பத்தின் கௌரவமும் மதத்தின் புனிதமும் பேணிக் காக்கப்படுகிறது. இம்முடிவை கேள்வி கேட்கும் உரிமை கூட அரசுக்கு கிடையாது. இதுதான் இஸ்லாமிய மார்க்கம் தரும் சமூகநீதியின் யோக்கியதை.

தகப்பன், சகோதரன், கணவன், மகன், மாமன் என்று சகல வடிவிலான ஆண் உறவுகளும் நொடிப்பொழுதில் கொலை வெறித்தாக்குதலை தன் குடும்பத்து பெண்கள் மீது ஏவுவதற்கான உரிமையை அளித்திருக்கின்றன இந்த இஸ்லாமிய தேசத்தின் சட்டங்கள். ஜனநாயக சக்திகளுடன் பெண்கள் இணைந்து அரசியலிலிருந்து மதத்தை தூக்கியெறிய போராடாவிடில் இந்த புள்ளிவிவர எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதை தவிர்க்கவே முடியாது.

– ஜென்னி

மேலும் படிக்க