privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவாழ்த்து கூறும் எண்ணம் இல்லை : செங்கொடி

வாழ்த்து கூறும் எண்ணம் இல்லை : செங்கொடி

-

என் பார்வையில் வினவு – 20 : செங்கொடி

வோர்ட்பிரஸ் திண்ணையில் இடம்பிடித்த தொடக்க காலத்திலிருந்து வினவு தளத்தை படித்து வருபவன் எனும் அடிப்படையில் இதை எழுதுகிறேன். ‘என் பார்வையில் வினவு’ தொடர் கட்டுரைகளானாலும், வினவு குறித்த தமிழ் இணையப் பரப்பின் பொதுவான கருத்தானாலும் அது சிறந்த தளம், சிறப்பாக எழுதுகிறார்கள், துணிச்சலாக எழுதுகிறார்கள், சரியாக எழுதுகிறார்கள், இதைப் போன்ற தளம் வேறொன்று இல்லை அல்லது இன்னும் அதிகமாக வேண்டும் என்பதாக இருக்கிறது. சொந்த சுயநல அரசியலிலிருந்து வினவை ‘இணைய போலீஸ்காரன்’ எனபன போல் அடை கொடுக்கும் வெகுசிலரை இதில் நான் கொள்ளவில்லை. அதை வாசகர்களும் ‘கொள்ள’ மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

அண்மையில் தோழர் மருதையன் கூறியதை இதனுடன் ஒப்பிடலாம் என எண்ணுகிறேன். எல்லோரும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அப்படி இல்லாதது தவறாகவோ, குற்றமாகவோ தெரிவதில்லை. திருந்திக் கொள்ள வேண்டும் எனும் எண்ணமும் அதனால் தோன்றுவதில்லை. அவ்வாறு சரியாக இல்லாமல் இருப்பதே இயல்பு எனும் அளவுக்கு யதார்த்த நடைமுறை சென்று விடுகிறது. இந்த நிலையினின்று மாறுதலாக, ஒருவர் சரியாக இருந்தாலோ அவரை பாராட்டுவதும், புகழ்வதும் மதிக்கத்தக்க பண்புகளாகி விடுகின்றன. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அது வெறும் பண்பாக வெற்றுப் பாராட்டுதல்களாக கூறப்படும் போது தானும் அவ்வாறாக வேண்டும் எனும் நகர்வை மறுக்கும் அல்லது மறைக்கும் விதமாக அந்த பாராட்டுரைகளை பாவிப்பது நடக்கிறது. இது வெறும் சடங்காக இல்லாமல் உள்வசமாகவும் பயணிக்க வேண்டும். அப்படி பயணிக்க வைப்பதில் தான் வினவின் பயன் அடங்கியிருப்பதாக நான் கருதுகிறேன். நான் அப்படி பயணித்திருக்கிறேன். தமிழ் இணையப் பரப்பையும் அவ்வாறான சலனத்திற்கு வினவு ஆற்றுப்படுத்தியிருக்கிறது. இதுதான் வினவின் பயன்பாடுகளில் முதன்மையானதாக நான் கருதுகிறேன்.

வினவின் வளர்ச்சி மிகப் பிரமாண்டமானது. சிற்சில கட்டுரைகள் எனத் தொடங்கி தினம் ஒரு கட்டுரை எனும் அளவுக்கு வந்து இன்றில் ஒரே நாளில் பல கட்டுரைகள் செய்திகள் எனும் அளவிலும்; விமர்சனக் கட்டுரைகள் என்று மட்டுமல்லாது, கவிதை, கதை, செய்தி விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள், திரைப்பட செய்தி நறுக்குகள், பாடல்கள், கேள்வி பதில், மொழிபெயர்ப்புகள் என மிகப்பரப்பிலும் விரிந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் முதன்மையானது அளவு விரிய விரிய அதன் அடிநாதம் சற்றும் குன்றவில்லை என்பது தான். இது எப்படி சாத்தியமாயிற்று? தனி மனிதன், தன்னுடைய சிந்தனை, தான் கற்ற அறிவு, தான் பெற்ற அனுபவங்கள் இவைகளைக் கொண்டு செயல்படுவது மட்டும் போதுமானதல்ல. அவற்றைவிட கூட்டு சிந்தனையும், கூட்டு உழைப்புமே சரியானதும் அவசியமானது ஆகும் என்று தன் கட்டமைப்பின் மூலம், தன் பிரமாண்டத்தின் மூலம் வினவு உணர்த்திக் கொண்டு நிற்கிறதே, இதுவும் வினவின் பயன்பாடுகளில் முதன்மையானதாக நான் கருதுகிறேன்.

வரித்துக் கொண்ட வேலை நிமித்தம் அன்றாடம் சந்திக்கும் பலருக்கும் வினவை அறிமுகப்படுத்துகிறோம். அவர்களின் பார்வையிலிருந்து வினவுக்கு ஒற்றை வேண்டுகோள் மட்டும். செய்தி விமர்சனங்கள் தினமும் வரவேண்டும். அதிலும் வெறும் எள்ளலுடன் முடித்துக் கொள்ளாமல் விமர்சனம், தீர்வு என்று மேலும் ஓரிரு வரிகள் சேர்த்து வரவேண்டும். இதிலிருக்கும் சிரமங்களை உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் தமிழ் இணையப் பரப்பில் வினவு போன்ற தளங்களின் இன்றியமையாத் தன்மையை கருத்தில் கொண்டு அந்த சிரமங்களை எதிர்கொள்ளும் வழிகளை கண்டறியுமாறு கோருகிறேன்.

2008ன் மத்திய மாதங்கள் என எண்ணுகிறேன், சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி குறித்த கட்டுரை தான் என்னை வினவை கவனிக்க வைத்தது. அதிலிருந்து இன்று வரை வினவை படிப்பது சுவாசிப்பதைப் போல் ஆகிவிட்டது. செய்திகள் பார்த்துவிட்டு இது குறித்து வினவின் கருத்து என்ன? இந்த தலைப்பில் அப்போதோ முன்போ வினவு கட்டுரைகள் எழுதியிருக்கிறதா என்று பார்த்து விட்டுத் தான் வெளியில் செல்வது என்று ஆகியிருக்கிறது. செங்கொடி தளத்தில் பல தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி விட்டு வினவின் கருத்துடன் சில இடங்களில் உரசுகிறது என்றவுடன் சீர் தூக்கிப் பார்த்து வெளியிடுவதற்கு முன் அவற்றை மாற்றியிருக்கிறேன், அல்லது வெளியிடாமல் நீக்கி இருக்கிறேன். இதுபோன்ற தருணங்களின் இடைவெளி அதிகமாவது கண்டு “நான் வளர்கிறேனே மம்மி” என்று மனதிற்குள் பாடியும் இருக்கிறேன்.

தொடக்கத்தில் வினவின் பெரும்பாலான கட்டுரைகளில் என்னுடைய பின்னூட்டம் இருக்கும். பல பின்னூட்ட விவாதங்கள் நடத்தியிருக்கிறேன், குறிப்பாக இஸ்லாமிய மத விகாரங்களில். பின்னர் இஸ்லாமிய கட்டுரைகள் என்றாலே செங்கொடி வந்து விடுவான் எனும் கருத்தை மாற்ற வேண்டும் என எண்ணி பின்னூட்டமிடுவதை படிப்படியாக குறைத்து தற்போது பின்னூட்டமிடுவதே இல்லை, படிப்பதுடன் சரி என்றாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் என எண்ணியிருக்கிறேன், மட்டுமல்லாது இது போன்று தொடக்கத்தில் பின்னூட்ட வாள் சுழற்றிக் கொண்டிருந்த கேள்விக்குறி, ஏழரை போன்ற தோழர்களும் மீளாய்வு செய்ய வேண்டும்.

மற்றபடி, வினவின் ஆறாவது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் எண்ணமெல்லாம் என்னிடம் இல்லை. முதலாளித்துவ கருத்துகள் கோலோச்சிக் கொண்டிருக்கும் வரையிலும், அதை எதிர்த்து மக்களிடம் செல்ல வேண்டிய தேவை இருக்கும் வரையிலும் வினவு இயங்கிக் கொண்டிருக்கும். சூழலின் தேவையை வரித்துக் கொண்டு வளர்ந்து கொண்டிருக்கும். இதில் எனக்கு கொஞ்சமும் ஐயம் இல்லை.

செங்கொடி
http://senkodi.wordpress.com/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க