privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சென்னையின் சிவப்புத் தொழிலாளிகள் !

சென்னையின் சிவப்புத் தொழிலாளிகள் !

-

கேரள மாநிலத்தில் தொழிற்சங்க இயக்கங்களின் தாக்கத்தால் ஹோட்டல் தொழிலாளிகள் பணிவாக, கனிவாக நடந்து கொள்வதில்லை என்று ஜெயமோகன் எழுதியிருந்த பதிவைப் பற்றி 4 ஆண்டுகளுக்கு முன்பு வினவில் ஒரு விமர்சனம் வெளியாகியிருந்தது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையை இளக்காரமாக பார்க்கும் நடுத்தர வர்க்க அறிவு ஜீவி மனோபாவம், அவர்கள் சேவகர்களாக 90 டிகிரி குனிந்து தம் முன் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்டைத்தனம் இவற்றை விமர்சித்து எழுதப்பட்டிருந்த அந்த பதிவை ஒட்டி விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

இந்த பின்னணியில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பணி புரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றிய சென்ற வாரம் இந்து மெட்ரோ பிளஸில் வெளியாகியிருந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்.

தொழிலாளர்கள் தமது உடலை உருக்கி வாழ்நாள் முழுவதும் உழைப்பதையும், தமது வேலையில் அவர்களுக்கு இருக்கும் பெருமையையும் சித்தரிக்கும் இந்த கட்டுரை எந்த விதத் திட்டமிடலும் இல்லாமல் அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதையும், அதை எதிர் கொண்டு அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் எளிமையாக காட்டுகிறது.

“பேட்டி எல்லாம் குடுக்க முடியாது” என்று கடுகடுக்கிறார் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு வயதான சுமை தூக்கும் தொழிலாளி. இப்போதுதான் ஒரு ரயில் வண்டி வந்திருக்கிறது. இந்த நேரத்தில் அவர் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை. கூட்டம் நெரிக்கும் நடைபாதைக்குள் புகுந்து அவர் விரைகிறார், அவரது கண்கள் வாடிக்கையாளரைத் தேடி துளாவுகின்றன. ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் மெலிந்த உடல் வாகுடைய அவர் நொண்டிக் கொண்டே நடக்கிறார்.

கூர்ந்து கவனித்தால் வயதான சுமை தூக்கும் தொழிலாளிகளில் பலர் நொண்டுவது தெரிகிறது. பல ஆண்டுகள் கனத்த சுமைகளை தலையிலும் தோள்களிலும் தூக்கி நடப்பதன் விளைவு அது.

சுமை தூக்கும் தொழிலாளி
படம் : நன்றி தி ஹிந்து.

கசங்கிப் போன சிவப்புச் சட்டையும், கழுத்தைச் சுற்றி ஒரு துண்டும் அணிந்த 58 வயதான தேவராஜ் என்ற தொழிலாளி தகவல் பலகையின் அருகில் ஒரு தமிழ் நாளிதழை படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அடுத்து வரும் ரயில் வண்டியில் அவரது மதிய உணவுக்கான பணம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் அவர் காத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் ஒற்றை ஆளாக 60 கிலோ வரை எடையுடைய சுமைகளை தேவராஜ் தூக்கியிருக்கிறார். “இப்போது 30 கிலோதான் தூக்க முடிகிறது. வயதாகி விட்டதல்லவா” என்கிறார் அவர். ரயில் வண்டிகளின் சத்தம்; துரு, சிறுநீர், என்று பல வகை மனித உடல்களின் வாசனைகள்; வண்டிகளின் வருகை, புறப்பாடு பற்றிய காதைக் கிழிக்கும் அறிவிப்புகள்; இருப்புப் பாதைகள் மீது உலோகம் உராயும் கிரீச் சத்தம்; அன்பான முகங்களுடன் சில பயணிகள்; அவமதிப்பது போன்ற பாவனையுடன் சில பயணிகள்.. இத்தகைய ரயில் நிலையத்தின் சத்தங்களும் காட்சிகளும் தேவராஜை 40 ஆண்டுகளாக சூழ்ந்திருக்கின்றன.

இங்குதான் அவர் நட்புகளை ஏற்படுத்திக் கொண்டார்; பயணிகளுக்காக சுமை தூக்கி ஈட்டிய வருமானத்தில்தான் குழந்தைகளை வளர்த்தார். ஆனால், தனது பணிக்காலத்தில் இதே நிலையத்தில் அவரைப் போன்ற சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்த மிக மோசமான ஒரு எதிரியை அவர் சந்தித்தார் – அவைதான் சக்கரங்களுடன் கூடிய பைகள். சுமையை எளிதாக தள்ளிச் செல்ல அவை உதவுகின்றன. ஆனால் தேவராஜ் போன்ற சுமை தூக்கும் தொழிலாளிகளைப் பொறுத்த வரை சக்கரம் பொருத்திய பைகள் அவர்கள் சாப்பிட காசில்லாமல் கழித்த பல பொழுதுகளை குறிக்கின்றன. “இந்தப் பைகள் வந்ததிலிருந்து பலர் தமது பைகளை தாமே தூக்கிச் செல்ல விரும்புகிறார்கள்” என்கிறார் அவர். எந்தத் தொழிலாளியை கேட்டாலும் இதை முக்கியமாக குறிப்பிடுகிறார்கள்.

ஒரு ரயில்வே சுமை தொழிலாளிக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். சில நாட்களில் ரூ 500 சம்பாதிக்க முடிகிறது. சில நாட்களில் ரூ 100 மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போக வேண்டியிருக்கிறது. “இன்று போல சில நாட்களில் ஒரு கப் டீ குடிக்கக் கூட போதுமான அளவு சம்பாதிக்க முடியாமல் போய் விடும்” என்கிறார் குமார்.

சில நாட்கள் பரபரப்பு நிறைந்தவையாக இருக்கும். கடைசி நேரத்தில் தமது வண்டியைப் பிடிக்க ஓடும் பயணிகளின் தோள் சுமைகளையும் மனச் சுமைகளையும் சுமை தூக்கும் தொழிலாளிகள்தான் சுமக்கிறார்கள். “அவர்களது பைகளை தூக்கியபடி அவர்களுடன் ஓடுவோம்” என்கிறார் நந்தகுமார். “அவங்க ரயிலைப் பிடித்து விடுவதை உறுதி செய்வது எங்க பொறுப்பு, இல்லைன்னா டிக்கெட் வாங்குவதற்கு அவர்கள் செலவழித்த தொகை, அலுவலகத்தில் எடுத்த விடுமுறை எல்லாம் வீணாகி விடும்…”

மழைக் காலங்களில் நடைபாதைகள் வழுக்க ஆரம்பித்ததும் சுமை தொழிலாளிகள் படும் தொல்லைகள் அதிகமாகின்றன. “ஆனா, அதெல்லாம் வேலையில் ஒரு பகுதிதான்” என்கிறார் எக்மோர் நிலையத்தில் வேலை செய்யும் நடராஜன். “பல வருஷம் இந்த தொழில் செய்த பிறகு எங்க முட்டிகள் தேஞ்சு போகின்றன” என்கிறார் தட்சிணாமூர்த்தி.

இந்திய ரயில்வேயால் நேரடியாக வேலைக்கு அமர்த்தப்படா விட்டாலும், ரயில் நிலையத்தில் தமது சேவைகளை வழங்குவதற்கு உரிமம் பெற்றவர்கள் இவர்கள். ஒரு கட்டத்தில் இனிமேலும் வேலை செய்ய பலம் இல்லை என்ற நிலை ஏற்படும் போது ரயில் நிலையத்தில் வேலை செய்வதற்கு அனுமதி உரிமம் தந்தையிடமிருந்து மகனுக்கு அல்லது மருமகனுக்கு தரப்படுகின்றது. “நான் என்னுடையதை என் அப்பாவிடமிருந்து பெற்றேன். அவர் என் தாத்தாவிடமிருந்து பெற்றார்” என்கிறார் நந்தகுமார். சதீஷ் உரிமத்துக்கு விண்ணப்பித்து, உடல் நிலை பரிசோதனைக்குப் பிறகு பெற்றுக் கொண்டார். எழும்பூரில் வேலை செய்யும் 24 வயதான அவர் தன் வேலையை விரும்பி செய்கிறார். “அடுத்தவங்க சுமையை பங்கு போடுறது மூலம் அவங்களுக்கு உதவி செய்ய முடிகிறது” என்று ஒரு நாளின் கடின உழைப்புக்குப் பிறகு தனது சிவப்புத் துண்டால் விசிறிக் கொண்டே சொல்கிறார் அவர்.

“ஒரு நாள் ஸ்டேசனுக்கு வந்து நாங்க வேலை செய்வதை பாருங்க. தகவல் பலகைகள் இருந்தாலும் சில பயணிகள் வேக வேகமாக வந்து ரயில் வண்டி பற்றிய தகவலை எங்க கிட்ட கேட்பதை பார்க்கலாம்.” என்று புன்னகைக்கிறார் தட்சிணாமூர்த்தி.

மேலதிகாரிகள் சொல்படி ஆடுவது சலித்துப் போனதால் நல்ல சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையை விட்டு விட்டு சுமை தொழிலாளியாக முடிவு செய்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. “இப்போது எனக்கு நிம்மதி இருக்கிறது. நான் விரும்பிய நேரங்களில் நான் வேலை செய்ய முடிகிறது. நானே ராஜா, நானே மந்திரி” என்கிறார் அவர்.

தமிழாக்கம்: அப்துல்

நன்றி : தி இந்து  Men In Red