privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைவெரிக்கோஸ் வெயின்ஸ் பட்டாணி சுண்டல் !

வெரிக்கோஸ் வெயின்ஸ் பட்டாணி சுண்டல் !

-

வார விடுமுறையை மனதில் இருத்தி
கழித்துக் கொண்டிருந்த
ஒரு வெள்ளிக்கிழமை மாலை.
“அலுவலக வேலை, அவசரம்,
வள்ளுவர் கோட்டம் வரை போகவேண்டும்”
தயங்கி பார்த்தவாறு மேலாளர் கேட்டார்.

pattaniஎதிர்ப்பில்லாத என் சுபாவம்
அவருக்குத் தெரியும்தானே,
ஒப்புக் கொண்டேன்.
தூங்கி, துவைத்துக் கழியும்
சனி, ஞாயிறில் இழப்பதற்கு ஏது,
தேற்றிக் கொண்டேன்.

வள்ளுவர் கோட்டத்திலிருந்து தி.நகர்
செல்லும் பாதையில் எனக்கு வேலை.
சென்று பார்த்தால்
வேண்டியவர் இல்லை.
அழைத்துக் கேட்டால்
காத்திருக்கச் சொன்னார்.
அந்தச் சாலையில்
காத்திருப்போருக்கென்று இடமில்லை,
ஒரு பேருந்து நிறுத்தம் தவிர.

ஒரு தேநீர் அருந்தலாம் என்றால்
கடைகள் ஏதுமில்லை.
கோட்டத்திற்கு அருகில் சென்றால் இருக்கும்;
நெரிசலில் நீந்திக் கரையேற ஆயாசம்
சற்று தூரம் நடக்கலாமென
இறங்கினேன்.

‘டேஸ்ட் தி திரில் ஆஃப் கிரில்’
என்று
ஒரு உணவகத்தின் விளம்பரம்
கீழே கண்ணாடி தடுப்பினுள்
கம்பிகளில் எண்ணையின்றி
பொறிந்து கொண்டிருந்த கோழித் துண்டுகள்
மெல்லிய வெளிச்சத்தில்
கொறித்துக் கொண்டிருந்த மனித தலைகள்
வரவிலும், நாவிலும்
டயட்டில் இருப்பதால்
சப்புக் கொட்டிவிட்டு அகன்றேன்.

ஹபிபுல்லா சாலையின் திருப்பத்தில்
அந்தச் சுண்டல் கடை தட்டுப்பட்டது.
தேநீருக்கு மாற்றாகவும்
சிறு பசியாறவும் சரியான வழி!

வழுக்கைத் தலையுடனும்
சற்று கனத்த உடல்வாகுடனும்
நடுத்தர வயதில் இருந்தார் கடைக்காரர்
பாதிச் சுண்டல் (பட்டாணி) கரைந்து மாவாகியும்
மீதிச் சுண்டல்
மேகங்கள் சூழ்ந்த
மங்கிய நட்சத்திரங்களாகவும் சிமிட்டின.

மேன்மக்கள் உணவகங்களில்
வழியும் மெல்லிய வெளிச்சம்
இங்கே தெரு விளக்குகளின்
துணையோடு இலவசமாய் கிடைத்தன.

தொட்டடுத்த சாலையின் புழுதி
பட்டாணியில் கலக்காமல் போகாது.
என்றாலும் வயிறு கலங்கும்
என்ற எச்சரிக்கை
எனக்குள் முழுதாய் இறங்காத
அளவில்
நானொரு சுமாரான நடுத்தர வர்க்கம்.

சுண்டல் ஆர்டர் செய்து
நமக்கு மட்டும் ஒரு தேக்கரண்டி
அதிகம் விழுமோவென
பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்த பார்வையின் உளவியல்
அவருக்கு பழக்கமானதாலோ என்னவோ
எல்லோருக்கும் ஒரு கொசுறு கரண்டி உண்டு.
எதிரில் ஒரு வடகிழக்கு இளைஞனுக்கு
அவர் போடுவதைப் பார்த்தேன்.
இருந்தாலும் அவருக்கு நாம் மட்டும் ஸ்பெஷல்
என்பதை ஏன் மாற்ற வேண்டும்?

“ஐயா, வடை, பஜ்ஜி ஏதும் போடவா?”
கடைக்காரர் கேட்டார்.
சாருக்கு பதில் ஐயா என்று விளித்ததால்
நாம் வயதான தோற்றமா,
இல்லை அவரது கிராமப் பின்புலமா,
சென்னையில் இன்னும் கலந்து விடாத
தமிழ் பழக்கமா?

சூம்பிக் கிடந்த பஜ்ஜியும்
விரைத்துக் கிடந்த வடையும்
எண்ணெய் ஆகாது என்பதை
நினைவூட்டினாலும்
வடை போடுங்கள் என்றேன்.
வடையில்லாத பட்டாணி
லெக் பீஸ் அற்ற
பிரியாணி போலல்லவா?

சுண்டலைச் சுவைத்துக் கொண்டிருந்தேன்.
கீழே வண்டியோரம்
கடைக்காரரின் மனைவி அமர்ந்திருந்தார்.
கடைக்காரர் ஏதோ பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தார்.
அந்த அம்மா
“இப்ப தேச்சு விடவா” என்றார்.
“பஜ்ஜியை எடுத்து வைச்சுட்டு வாரேன்”
அவர் சொல்லும் போது
அந்த அம்மாள்
ஏதோ களிம்புருளையை எடுத்து
பிதுக்கி கையில் தேக்கி வைத்தார்.

அருகில் கடைக்காரர் வந்ததும்
அவரது முழங்கால் பின்புறத்தில் இருந்து
பாதம் வரை
தேய்த்து விட்டார்.
முழங்கால் பின்புறம்
நரம்புகள் இப்போதுதான்
சிறிய அளவில்
முறுக ஆரம்பித்திருந்தன.

varicose-veinsசட்டென்று பொட்டில் அடித்தது நினைவு
இது வெரிக்கோஸ் வெயின்ஸ்
தொழில் நிமித்தம்
நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும்
தொழிலாளிகளுக்கு ஏற்படும் நோய்!

நிற்பதில் வருடங்கள் கழிந்து
கால் நரம்புகள் முறுக்கிக் கொள்ள
பிறகு
நின்றாலே வலிக்கும்.
முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை
பிறகு நிற்பதை தவிர்க்க வேண்டும்.
இல்லையேல் மீண்டும் வரும்.
வலியா, வருமானமா
தீர்மானிப்பதற்குள்
வாழ்க்கை முடிந்து விடும்

வாடிக்கையான ஒரு
தேநீர்க் கடை மாஸ்டருக்கு
இந்த நோய் வந்த போதுதான்
வெரிக்கோஸ் வெயின்சையே கேள்விப்பட்டேன்.

உட்கார்ந்து கொண்டு
இளைப்பாற விரும்பும் உலகிற்காக
நின்று கொண்டிருப்போர் தரும் சேவை
வெரிக்கோஸ் வெயின்ஸ் இன்றி
சாத்தியமில்லை.

நான்
சுண்டல் விழுங்கிய நேரம்
அவரது மனைவி
களிம்பு தேய்ப்பதை
இன்னும் நிறுத்தவில்லை.

எனக்கோ வயிறு கலங்க ஆரம்பித்திருந்தது.

– காளமேகம் அண்ணாச்சி

  1. //வரவிலும், நாவிலும்
    டயட்டில் இருப்பதால்
    சப்புக் கொட்டிவிட்டு அகன்றேன்//

    சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்லும் கவிதை. நன்றி,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க