நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பான விவகாரம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு விற்கவுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் (என்.எல்.சி.) 3.6 சதவீதப் பங்குகளை ரூ. 500 கோடிக்கு வாங்கலாம் என்று இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து 13 நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.

தொழிலாளர் போராட்டம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து நடந்த தொழிலாளர்களின் போராட்டம்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் 2012-13-ம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ. 1,479 கோடி. இது சென்ற ஆண்டைவிட 3.5 சதவீதம் அதிகம். அப்படியிருந்தும் மைய அரசு ஏன் பங்குகளை விற்க வேண்டும்?

தொழில் நிறுவனங்களை அரசு நடத்தக்கூடாது; அனைத்தையும் சந்தைகளின் கட்டுப்பாட்டில் விட்டுவிட வேண்டும் – என்பதுதான் தனியார்மயக் கொள்கையின் தாரக மந்திரம். இதன்படி, நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலிருந்து அடுத்தடுத்து வந்த ஆட்சிகள் அனைத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் சொத்துக்களையும் அரசுத்துறை நிறுவனங்களையும் அடி மாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்த்தன. இதன் ஒரு பகுதியாக ஏற்கெனவே என்.எல்.சி. நிறுவனத்தின் 6.44 சதவீதப் பங்குகள், பங்குச் சந்தையில் விற்கப்பட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக்கப்பட்டது.

ஊழல் அரசியல்வாதிகள்தான் நாட்டின் வறுமைக்கும் பின்தங்கிய நிலைக்கும் காரணம்; எனவே தொழில் நிறுவனங்களையும் அவற்றின் சந்தை வர்த்தக நடவடிக்கைகளையும் நாடாளுமன்றமோ, அரசாங்கமோ கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கக் கூடாது; மாறாக தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்களை அறிந்துள்ள அதிகார வர்க்க நிபுணர்களிடம், துறை சார்ந்த வல்லுநர்களிடம் அதிகாரத்தை அளிப்பதன் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் – என்பதுதான் புதிய தாராளமயக் கொள்கையின் அடிப்படை விதி. இதன்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் – என அடுத்தடுத்து உருவாக்கப்பட்ட இத்தகைய அமைப்புகள் அனைத்தும் ஏற்கெனவே பெயரளவில் இருந்த அரசாங்கக் கண்காணிப்புகளை ஒழித்துக்கட்டி, முழுவதும் தனியார் முதலாளிகளின் சூறையாடலுக்கு ஏற்ப இயங்க ஆரம்பித்தன. இந்த ஒழுங்குமுறை ஆணையங்களும் வாரியங்களும் தீர்மானிக்கும் விதிகளைத்தான் யார் பிரதமராக இருந்தாலும், எந்தக் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் பின்பற்ற வேண்டும்; அதை எதிர்க்கவோ, மீறவோ கூடாது என்பதே எழுதப்படாத சட்டமாகியது.

குடிநீர் விநியோகம், குப்பைகளையும் கழிவுகளையும் அகற்றுதல், மின்சாரம், விவசாயம், கல்வி, தொழில் – என அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் இத்தகைய வல்லுநர்களிடமும் தொழில்முறை அமைப்புகளிடம் விடப்படுகின்றன. பங்குச் சந்தை மோசடிகள் புழுத்துப் போனபோது, பங்குச் சந்தையைக் கண்காணிக்க ஏற்கெனவே இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியத்தை (செபி) அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தும் சூப்பர் அரசாங்கமாக இத்தகைய ஆணையங்களும் வாரியங்களும் நிபுணர் குழுக்களும் திணிக்கப்பட்டு, அம்மணமான கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின் ஆட்சியை புதிய தாராளமயக் கொள்கை நிறுவி வருகிறது.

என்எல்சி பங்கு விற்பனைஇதன்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுமக்களின் (அதாவது தனியார் முதலாளிகளின்)பங்கு மூலதனம் கட்டாயம் இருந்தாக வேண்டும்; தனியார் நிறுவனங்களில் 25 சதவீத அளவுக்கும், பொதுத்துறை நிறுவனங்களில் 10 சதவீத அளவுக்கும் இருக்க வேண்டும் – என மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கெடு விதித்தது. அதை நிறைவேற்றாவிட்டால் ஏதோ உலகமே அழிந்துவிடப் போவதைப் போல அரசும் ஊடகங்களும் பரபரப்பூட்டின. ஆனால் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் கெடு விதிக்கப்பட்டும் கூட நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுவதைப் பற்றி இவை வாய் திறப்பதில்லை.

பொதுமக்களின் பங்கு மூலதனம் 10 சதவீதத்தில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் மட்டுமல்ல, செபி விதித்துள்ள நிபந்தனையால் 12 பொதுத்துறை நிறுவனங்களும் இதே சிக்கலில் உள்ளன. நடப்பு நிதியாண்டில் ஏறத்தாழ 5 லட்சத்து 28 ஆயிரத்து 163 கோடிகளை தனியார் முதலாளிகளுக்கு வரிச்சலுகையாக அள்ளிக் கொடுத்துள்ள மைய அரசு, வெறும் 466 கோடிகளைத் திரட்டுவதற்காக என்.எல்.சி.யின் பங்குகளை தனியாரிடம் விற்கத் துடிப்பதிலிருந்தே ஆட்சியாளர்களின் தனியார்மயமாக்க வெறியைப் புரிந்து கொள்ள முடியும். இப்படித்தான் மாருதி நிறுவனத்தில் 50 சதவீதப் பங்குகளைக் கொண்டிருந்த இந்திய அரசு, பா.ஜ.க. ஆட்சியின்போது எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாத போதிலும் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கிறோம் என்ற பெயரில் ஜப்பானிய ஏகபோக சுசுகி நிறுவனத்திடம் விற்றது. இப்போது முழுக்கவும் சுசுகியின் ஆதிக்கப் பிடிக்குள் மாருதி சென்றுவிட்டது.

தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக என்.எல்.சி.யின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் மைய அரசு கையைப் பிசைந்து கொண்டிருந்த நிலையில், எதிர்ப்புகளைச் சமாளிக்க இப்பங்குகளை தமிழ்நாடு அரசு நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளும் திட்டத்தை நயவஞ்சகத் தந்திரத்துடன் ஜெயலலிதா முன்வைத்துள்ளார். இதன்படி, என்.எல்.சி.யின் பங்குகளை வாங்கும் தமிழக அரசுத்துறை நிறுவனங்கள் அவற்றைப் பங்குச் சந்தையில் விற்கவோ, ஒரு ஆண்டுக்குப் பிறகு வேறு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு விற்கவோ எந்தத் தடையும் கிடையாது. இதை என்.எல்.சி. நிர்வாகம் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. எனவே, தற்போது பங்குகளை தமிழக அரசுத்துறை நிறுவனங்கள் வாங்கியிருந்தாலும், அவை தனியார் முதலாளிகளின் கைகளுக்குப் போகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாளையே தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை என்று காரணம் காட்டி, இந்தப் பங்குகளை ஜெயலலிதா விற்பனை செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது.

ஏற்கெனவே தமிழக காகித ஆலை நிறுவனத்தின் (டி.என்.பி.எல்.) பங்குகளை தனியாருக்குத் தாரைவார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், அரசியல் ஆதாயத்துக்காகவே இப்படி சூரத்தனம் காட்டுகிறார். இம்மோசடியை மூடிமறைத்து, “எனது தலைமையிலான அரசின் தொடர் நடவடிக்கையாலும், எனது தனிப்பட்ட முயற்சியாலும் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொழிலாளர் போராட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” என்று தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். அதற்கு ஆமாம் சாமி போட்டு, செபி போன்ற ஆணையங்களின் – நிபுணர் குழுக்களின் உத்தரவுகளை மீற முடியாது என்று கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குப் பக்கமேளம் வாசிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள். இம்மறுகாலனியாதிக்கச் சதியைத் திரைகிழித்து, தனியார்மய-தாராளமயத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே போராடும் மக்களின் இன்றைய மையக் கடமையாகியுள்ளது.

– குமார்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________