privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !

தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !

-

ருமபுரி சம்பவத்தைப் போலவே, பீகாரில் நிகழ்ந்துள்ள இன்னொரு சம்பவம், சாதி வெறியின் கோர முகத்தை அம்பலமாக்கியிருக்கிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் (பிற்படுத்தப்பட்ட) சாதியான குர்மி சாதிவெறியர்கள் (சத்திரிய குல குர்மிக்கள்) ரிது குமாரி என்ற தலித் பெண்ணின் மீது, மாநிலத் தலைநகர் பாட்னாவிலேயே இழைத்திருக்கும் வன்முறை இது.editorial

குர்மி சாதியைச் சேர்ந்த சிங் என்பவரின் பெண்ணான கல்லூரி மாணவி, தன்னுடன் படித்த தலித் மாணவனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி விட்டார். உடனே அந்தப் பெண்ணின் தாயார் முனிகா தேவி, பெண்ணின் தம்பி சிந்து சிங் மற்றும் மச்சான் அசுவினி குமார் சிங் ஆகியோர் அடங்கிய கும்பல், போலீசு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களுடன் அந்த தலித் மாணவனின் தங்கை ரிது குமாரியை வீடு புகுந்து தூக்கிச் சென்றிருக்கிறது. “அண்ணன் ஒளிந்திருக்கும் இடம் உனக்குத் தெரியாமல் இருக்காது” என்று கூறி அந்தப் பெண்ணை சுமார் 70 கி.மீ தூரம் கடத்திச் சென்று இடத்தைக் காட்டுமாறு துன்புறுத்தியிருக்கிறது போலீசு. போலீசு ஜீப்பில் போலீசோடு சேர்ந்த அந்த சாதிவெறியர்களும் சென்றிருக்கின்றனர்.

அது மட்டுமின்றி, போலீசின் கண் எதிரிலேயே அசுவினி குமார் சிங், ரிது குமாரியின் மேலாடையைக் கிழித்து மானபங்கம் செய்து, சிகரெட்டாலும் சுட்டு சித்திரவதை செய்திருக்கிறான். அந்தப் பெண்ணின் கண் எதிரிலேயே பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டு பாட்டில் சாராயத்தையும் போலீசுக்கு லஞ்சமாக கொடுத்திருக்கிறாள் முனிகா தேவி. “என் தங்கைக்கு என்ன நடந்ததோ அதை உனக்கு செய்வேன்” என்று கூறி சிந்து சிங் ரிது குமாரியை சித்திரவதை செய்வதை, முழு போதையில் இருந்த போலீசு பார்த்து ரசித்து சிரித்திருக்கிறது.

அன்றிரவு இரண்டு மணிக்கு “ஓடிப்போன” காதலர்கள் பிடிபட்டு விட்டனர். இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இருந்த போதிலும், “அவனும் (காதலனும்) நான்கு இளைஞர்களுமாகச் சேர்ந்து தன்னைக் கடத்திச் சென்று விட்டதாக அந்த குர்மி பெண் (காதலி) மாஜிஸ்டிரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாள் என்று சொல்கிறது போலீசு. காதலித்த தலித் இளைஞன் கடத்தல் குற்றத்துக்காக கைது செய்து சிறை வைக்கப்பட்டு விட்டான். 12 ஆம் வகுப்பு படித்து வந்த ரிது குமாரி படிப்பை நிறுத்தி விட்டாள். அந்தக் குடும்பமே உயிருக்கு அஞ்சி ஊரை விட்டு ஓடி விட்டது. தன் மீது போலீசாரே இழைத்த வன்கொடுமை குறித்து ரிது குமாரி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. “சம்மந்தப்பட்ட போலீசார் மீது ஏன் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை?” என்று செய்தியாளர் கேட்டதற்கு “அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்?  அவர்கள் ரிது குமாரிக்கு உதவியல்லவா செய்திருக்கின்றனர்” என்று பதிலளித்திருக்கிறார் போலீசு எஸ்.பி.

பிகாரிலிருந்து தருமபுரிக்கு வருவோம். திவ்யா பிரிக்கப்பட்ட பின், இளவரசன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்தான் என்ற “உண்மையை” திவ்யா-இளவரசன் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவைத் தோண்டி எடுத்து நிரூபிக்கிறது போலீசு. கூடுதலாக திவ்யாவிடமிருந்தும், இளவரசனின் நண்பர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு இந்த “உண்மை” உறுதி செய்யப்படுகிறது. கடைசியாக, “இளவரசன் மரணம் ஒரு தற்கொலைதான்” என்று விசாரணையில் தெரிய வருவதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விட்டார் தருமபுரி மாவட்ட எஸ்.பி.

இப்படி தோண்டியெடுக்கும் தேவையே இல்லாமல் மாமல்லபுரம் மேடையிலும், நத்தம் காலனியிலும், உயர்நீதி மன்ற வளாகத்திலும் தொலைக்காட்சி காமெராக்கள் முன்னிலையிலும் அரங்கேறிய சாதிய வன்முறை குறித்த உண்மைகள் இந்த மரணத்துடன் தொடர்பற்ற சாட்சியங்கள் ஆகி விட்டன. இந்திய ஜனநாயகம், பிகார் தலித் இளைஞனை கடத்தல் குற்றத்துக்காக சிறை வைத்து விட்டது. இளவரசன் “தற்கொலை” செய்து கொண்டு விட்டதால், அவனுக்கு சிறை செல்லும் வாய்ப்பை இந்திய ஜனநாயகத்தால் வழங்க இயலவில்லை.

-தலையங்கம்
__________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
__________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க