privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககார்னெட் கொள்ளை : தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்திற்கு தடை !

கார்னெட் கொள்ளை : தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்திற்கு தடை !

-

தாது மணல் கொள்ளை தொடர்பாக வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நடைபெறவிருந்த மனித உரிமை பாதுகாப்பு மைய பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை தடை!

அரசின் அனைத்துச் சட்டங்களையும் மீறி, மீனவர்களின் வாழ்வுரிமையை அழித்து, தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் வருவாய் இழப்பேற்படுத்திய வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட அனைத்து கார்னெட் மணல் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவ்வூழலில் தொடர்புடைய குற்றவாளிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக எதிர்வரும் 12.10.2013 அன்று மாலை 4 மணியளவில் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலையிலிருந்து பேரணியாகச் சென்று அண்ணா நகர் பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடத்த தூத்துக்குடி நகர காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

பொதுக்கூட்டம் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சி நாதன் தலைமையில்,சிறப்புரையாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜுவும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மருதையன் அவர்களும் பேச இருந்தனர். மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவின் கலைநிகழ்ச்சி திரு கோவன் தலைமையில் நிகழ்த்தப்பட இருந்தது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்க்கு தூத்துக்குடி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலர்,வழக்கறிஞர் இராமச்சந்திரன் அனுமதி கோரியிருந்தார்.

பொதுக்கூட்ட நோட்டிஸ்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பேரணி-பொதுக்கூட்டம்-கலைநிகழ்ச்சியையொட்டி கடந்த ஒரு வாரமாக பேருந்துப் பிரச்சாரம், துண்டறிக்கை விநியோகம் வீடு, வீடாகப் பிரச்சாரம் எனப் பணிகள் நடந்து வந்த நிலையில் 4.10.2013 அன்று பிரச்சாரம் செய்தவர்களைக் கைது செய்த தூத்துக்குடி காவல் துறை சிறையில் அடைப்பதாக மிரட்டியது. அதன்பின் தூத்துக்குடி மத்திய காவல் நிலைய ஆய்வாளர் “பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பட்சத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதாலும்,தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது ” எனத் தெரிவித்து கூட்டத்திற்க்கு அனுமதி மறுத்துள்ளார்.

தூத்துக்குடியில் பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தாது மணல் கொள்ளை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானதிலிருந்து பல்வேறு கட்சிகள், மீனவர் அமைப்புகள் கார்னெட் மணல் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கார்னெட் மணல் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் சில மீனவர் அமைப்புகள், இந்து முன்னணி, தென்னிந்திய திருச்சபை, சில நாடார் சங்கங்கள் போன்றவை ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. கடந்த 22.09.2013 அன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கார்னெட் மணல் கொள்ளை தொடர்பாக நடிகர் விஜயகாந்த் பொதுக் கூட்டம் நடத்தினார். இதையெல்லாம் அனுமதித்த காவல்துறை மனித உரிமை பாதுகாப்பு மையக் கூட்டத்திற்க்கு அனுமதி மறுப்பதன் பின்னணி என்ன?

தாது மணல் கொள்ளை தொடர்பான பிரச்சனை ஊடகங்களில் அம்பலமாகி, மக்கள் மத்தியில் போராட்டமாக உருவெடுத்து வந்த சூழலில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஓர் உண்மை அறியும் குழு அமைத்து 10 நாட்கள் கள ஆய்வு நடத்தி தாது மணல் கொள்ளையின் பல்வேறு பரிமாணங்களை விளக்கி விரிவான 30 பக்க உண்மை அறியும் குழு அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கை ஊடகங்களில் விரிவாக வெளியான பின்புதான் ககன்தீப்சிங் பேடி குழு அறிக்கை தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டது. அதன்பின் வேறு வழியின்றி விசாரணை மேலும் நான்கு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை பலர் கோரியும் பேடி குழு அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதுடன், அடுத்த கட்ட விசாரணையும் தொடங்கப்படவில்லை.

விசாரணையை வேண்டுமென்றே அரசு தாமதப்படுத்தும் சூழலில் மணல் கொள்ளையின் ஆதாரங்களை கார்னெட் நிறுவனங்கள் அழிக்க வாய்ப்புள்ளது. கடந்த 17.08.2013 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடற்பகுதிக்கு ஆய்வுக்காகச் சென்றபோது பி.எம்.சி நிறுவன ஊழியர்கள் கழிவு மணலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவசரமாக மூடிக்கொண்டிருந்தனர். மிக ஆழமாக தாது மணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் கழிவு மண்ணைக் கொட்டி மேடாக்கி கற்றாழையை நட்டு வைத்திருந்தனர். இவ்வாறு ஆதாரங்கள் அழிக்கப்படுவது அரசுக்குத் தெரிந்தே நடக்கிறது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி சாட்சிகளாக உள்ள மக்களை மிரட்டி சாட்சியங்களை வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்னெட் முதலாளிகள் கலைக்கவும் வாய்ப்புள்ளது. கிரானைட் ஊழல் விசாரணையின்போது பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட இதர கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சாட்சிகளை மிரட்டிய பி.ஆர்.பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் மாவட்ட காவல்துறையால் புகார் முகாம் நடத்தப்பட்டதில் மக்கள் ஓரளவு அச்சமின்றி புகார் அளித்தனர். ஆனால் கார்னெட் முதலாளிகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் குண்டர் சாம்ராஜ்யம் நடத்தி வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் அணு உலைப் போராட்டத்தில் முன்னணியிலிருந்த கூத்தன்குழி கிராமத்தில் வைகுண்டராஜனின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். இடிந்தகரையிலும் அதேபோன்று பிரச்சனையை உருவாக்குகிறார்கள். கார்னெட் மணல் கொள்ளை பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடே அரசு மற்றும் காவல்துறையின் துணையோடு இச்செயல்கள் நடந்து வருகிறது.

இத்தனை நடந்தும் வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்னெட் நிறுவன உரிமையாளர்கள் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. கார்னெட் மணல் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் – சொத்துக்கள் முடக்கப்படவில்லை. மேலும் கார்னெட் மணல் கொள்ளையின் முக்கிய குற்றவாளியான வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், ஜெயா தொலைக் காட்சியில் பங்குதாரராக இருந்து, கடந்த தி.மு.க ஆட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடந்த 19.04.2007-ல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஆகவே அ.தி.மு.க. அரசுக்கும் – வைகுண்டராஜனுக்கும் நெருக்கமான உறவிருப்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறான பின்னணியில்தான் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பேரணி-பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. எல்லோருக்கும் பேச்சுரிமை-எழுத்துரிமை-கருத்துரிமை உண்டு, எல்லோரும் சட்டத்தின் முன் சமம் என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் அவ்வுரிமைகள் நரேந்திர மோடி போன்றவர்களுக்கும், அம்மாவின் புகழ் பாடும் நாஞ்சில் சம்பத் போன்றோருக்குமே காவல்துறையால் வழங்கப்படுகிறது. மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற மக்களுக்கான அமைப்பினருக்கு இவ்வுரிமைகள் வழங்கப்படுவதில்லை

ஒவ்வொரு முறை கூட்டம் நடத்தும் போதும் காவல்துறை அனுமதி மறுப்பதும்- நீதிமன்றம் அலைவதுமே வாடிக்கையாக உள்ளது. கூட்டம் நடக்கும் நாள் வரை நிச்சயமின்மையை அரசு நீடிக்கச் செய்கிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும்? அரசு நிர்வாகத்தின் ஜனநாயக விரோதத் தன்மையைப் புரிந்து மக்கள் எழுச்சியுறும் நாளில் பேரணி-பொதுக்கூட்டம்-சாலை மறியல்-பந்த் உள்ளிட்ட அனைத்தும் நடக்கும்-அரசு-காவல் துறை-நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே!
————————————————————————–
பொதுக்கூட்ட நோட்டிஸ் உரை வடிவில் :

தாதுமணல் மாஃபியா வைகுண்டராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்! மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு!  பேரணி – பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி

பேரணி : 12-10-2013 சனிக்கிழமை மாலை 4.00 மணி
குரூஸ் பர்னாந்து சிலையிலிருந்து அண்ணாநகர் வரை

பொதுக்கூட்டம்: மாலை 6.00 மணி, அண்ணாநகர்

அன்பார்ந்த பெரியோர்களே, உழைக்கும் மக்களே,

இந்தியாவின் இயற்கை வளங்கள் வரைமுறையற்று கொள்ளையடிக்கப்படுகின்றன. முதலாளிகள் – அதிகாரிகள் – அரசியல்வாதிகளின் இந்தக் கூட்டுக் கொள்ளைக்கு எதிராக மக்கள் என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் விளைநிலங்களைப் பாழ்படுத்தி பல லட்சம் கோடி கிரானைட் கற்களைச் சட்டவிரோதமாகக் கொள்ளையடித்த பி.ஆர்.பி கும்பலின் திருவிளையாடல்கள் மக்கள் மனதிலிருந்து மறையும் முன்பே தென் கோடியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடற்கரையில் கொட்டிக்கிடந்த தாது மணலைக் கொள்ளையடித்த ’மண்ணாதி மன்னன்’ வைகுண்டராஜனின் கதை தற்போது அம்பலமாகியுள்ளது. பி.ஆர்.பழனிச்சாமி – வைகுண்டராஜன் கதைக் கரு ஒன்றுதான். களம் தான் வேறு வேறு. அது கிரானைட் மலை; இது தாது மணல்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மீனவர் குறைதீர் மன்றக்கூட்டங்களில் மீனவர்கள் தொடர்ந்து முறையிட்டதன் விளைவாக கலெக்டர் ஆஷிஸ் குமார் நேரில் சென்று பச்சையாபுரம், பெரியசாமிபுரம், வேம்பாறு, வைப்பாறு போன்ற கடற்கரை கிராமங்களில் ஆய்வு செய்தபோது கடற்கரையோர தாதுமணல் வகைதொகையின்றி அள்ளப்பட்டது தெரியவந்தது. அரசு புறம்போக்கு மற்றும் நிலஅளவை செய்யப்படாத பகுதிகளில் 2 முதல் 10 அடி ஆழம் வரை 3 கிமீ தூரத்திற்கு கடற்கரை மணலை சட்டவிரோதமாக அள்ளியும், வைப்பாறு கிராமத்தில் 2,39,712 மெட்ரிக் டன் கனிமங்களை அள்ளியும் தாதுமணல் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன” என்று அரசுக்கு அறிக்கை கொடுத்தார். இந்த அறிக்கை ஊடகங்களில் வெளியான உடனே அவர் இடமாறுதல் செய்யப்பட்டார். இதைப்போன்றே கிரானைட் முறைகேட்டை அம்பலப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயமும் மாற்றப்பட்டார்.

ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகளற்ற திறமையான, நேர்மையான நிர்வாகம் நடப்பதாகவும் குற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாகவும் பார்ப்பன ஊடகங்கள் பறைசாற்றுவது எவ்வளவு மோசடியானது.

கடந்த 25 ஆண்டுகளாக பகிரங்கமாக நடைபெற்று வருகின்ற இந்த பகல் கொள்ளை தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வரும் கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ மற்ற அரசியல் கட்சிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ தெரியாதது அல்ல. இதற்கு எதிராக கடலோர மக்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். 1996-ல் போராடிய மக்களை அப்போதைய நெல்லை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.ஜாங்கிட் மிருகத்தனமாக ஒடுக்கி பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியதோடு இதனை சாதிக் கலவரமாகவும் சித்தரித்தார். அடிப்படையிலேயே அதிமுக விசுவாசியான வைகுண்டராஜன் தற்போது ஜெயா டிவியின் பெரும் பங்குதாரர். அவர் மீது நடவடிக்கை எப்படி பாயும்? மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார், கிராம நிர்வாக அலுவலர் மூலமாக குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது இதுவரை வழக்கே பதிவு செய்யப்படவில்லை.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழு, பச்சையாபுரம் முதல் லீபுரம் வரை பல கிராமங்களை ஒரு வாரம் ஆய்வு செய்து அரிய உண்மைகளைத் திரட்டி ஓர் அறிக்கையாக கடந்த 12.09.13 அன்று மதுரையில் வெளியிட்டுள்ளது. வெளியே வராத உண்மைகள் பல அதில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கனிம வளங்களை எடுப்பதிலும், விற்பதிலும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை, சட்டதிட்டங்களை உருவாக்கியிருந்தாலும் அவையெல்லாம் மணல் நிறுவனங்களால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. அணுசக்தி துறை, கனிம வளத்துறை, காவல்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்புத்துறை, வருமானவரி, வணிக வரி ஆகிய அரசின் அனைத்து துறைகளும் கார்னட் ஊழலில் வைகுண்டராஜனின் பணியாளர்களாக மாறி அவருக்கு சேவகம் செய்து 25 ஆண்டுகளாகக் கூட்டுக் கொள்ளையடித்து வந்துள்ளனர்.

இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள் ஏழை, நடுத்தர மீனவர்கள். கனிமங்களைப் பிரிப்பதாகச் சொல்லி கடற்கரையைக் கரைத்து கடலில் விடுவதாலும், தாதுவைப் பிரிக்க வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் கடலோரம் வாழ்ந்த மீன்கள் காணாமல் போய்விட்டன. தண்ணீரே செந்நீராக மாறிவிட்டது.

கடல் அரிப்பைத் தடுக்க கடலோரங்களில் வனத்துறை வளர்த்திருந்த சவுக்கு மரங்கள், கன்னாச் செடிகள், பனை மரங்கள் அத்தனையும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. பல மீட்டர் தூரம் அத்துமீறி இரண்டாள் மட்டத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. அந்த இடங்களில் இப்போது கடல் நீர் ஊற்றெடுத்துப் பெருகியுள்ளது.

கீழவைப்பாறு கிராமத்தில் மீன்வளத்துறை கட்டிக்கொடுத்த கான்கிரிட் கட்டிடம் வரை இப்போது கடல் வந்துவிட்டது. இப்போது, கட்டிடம் இடிந்து விழும் நிலையிலுள்ளது. பல கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. சுற்றுச் சூழலும் சீர்கேடு அடைந்துள்ளது. கனிமம் நீக்கிய மணலை விதிகளுக்குப் புறம்பாக மலைபோல் குவித்து வைத்துள்ளதாலும் கண்ட இடங்களில் கொட்டியுள்ளதாலும் வெப்பநிலை உயர்ந்துள்ளதோடு கதிர்வீச்சு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பெரியதாழையில் மீனவர்களுக்காக ரூ.8 கோடி செலவில் அரசு கட்டிக்கொடுத்த தூண்டில் பாலம், வி.வி.மினரல்ஸ் கொட்டிய கழிவு மண்ணால் மூடப்பட்டுவிட்டது. கடலோரமும் மேடாகி விட்டது. படகுகளைக் கரையில் ஏற்ற முடியவில்லை. கழிவு நீரால் புதைகுழியாக மாறியுள்ளது கடற்கரை. கடலில் இருந்து கால்வாய் வெட்டி கம்பெனிக்குள் கொண்டுவந்து கடல் நீரை மாசுபடுத்துகின்றனர். ஆனால் ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றின் நட்டநடுவிலிருந்து சட்டவிரோதமாகத் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார் வி.வி.

மணல் கம்பெனி உள்ள கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் புற்றுநோய், கல்லடைப்பு, கருப்பை கோளாறு, கண்நோய், இதயநோய் போன்ற கொடிய நோய்களால் தாக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் பிறக்கின்றன.

வி.விக்கு எதிராக மூச்சுக்கூட விடமுடியாமல் ஏழை மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளனர். அச்சத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். தென்னிந்தியத் திருச்சபையின்(CSI)யின் பேராயர் ஜெயபால் டேவிட், வி.வியின் துணைக்கு வருகிறார். இந்து முன்னணியும் வி.வியை ஆதரிக்கிறது. இப்படியாக வி.வி ஒவ்வொரு ஊரையும் இரண்டுபடுத்தி வைத்துள்ளார்.

கூத்தன்குழி கிராமத்தை அவர் தனது கோட்டையாக மாற்றி வைத்திருக்கிறார். வி.வியை எதிர்க்கத் துணிந்த 40 குடும்பங்கள் வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டு ஊரைவிட்டே வெளியேற்றப்பட்டுள்ளனர். ஊர்தோறும் அடியாட்கள் ரூ.5,000, 10,000 சம்பளத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது வி.வியின் அடியாள் படை வேகவேகமாகத் தடயங்களை அழித்து வருகிறது. பெரியதாழை உவரி, நவ்வலடி போன்ற கிராமங்களில் மணலைக் கொட்டி, பள்ளங்களை மூடி அதில் கற்றாழைகளை நட்டு ஒன்றும் நடக்காததுபோல் நாடகமாடுகிறார்கள். இதற்கும் அரசு அதிகாரிகள் உறுதுணையாக நிற்கிறார்கள்.

இயற்கை வளங்களை இவ்விதமாகக் கொள்ளையிட அனுமதித்துவிட்டு பின்பு நடவடிக்கை எடுப்பது போல் பாசாங்கு செய்வது அண்மையில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. ஆனால் இதில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளைப் பெரிதுபடுத்திப் பேசுகின்ற ஊடகங்கள் முதல் பலரும் இயற்கை வளங்களை ஏன் விற்கவேண்டும், அதுவும் தனியாருக்கு ஏன் தாரைவார்க்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்புவதில்லை. அதனால் ஏழைமக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதில் இந்தக் கூட்டுக் கொள்ளையர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

கார்னெட், இல்மனைட், ஜிர்கான், ரூடைல், மோனோசைட் ஆகிய கனிமங்களில், அணு உலைக்கு எரிபொருளாகவும், யுரேனியத்திற்கு மாற்றாகவும், அணு ஆயுத தயாரிப்பில் மூலப்பொருளாகவும் உள்ள தோரியம், மோனோசைட்டில் கலந்துள்ளது. இதைப் பிரித்தெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பிற கனிமங்களில் அது இல்லை என்பதற்கு அணுசக்தித் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதோடு பல லட்சம் டன் மோனோசைட் சட்டவிரோதமாக உலகச் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் சுந்தரம் ஐ.ஏ.எஸ், புவியியல் அறிஞர் லால்மோகன் போன்றவர்களும் கூறுகின்றனர். சுந்தரம் ஐ.ஏ.எஸ் கணக்குப்படி கனிமங்களைத் திருடியதில் ரூ.2 லட்சம் கோடி வரை தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மோனோசைட் இழப்பு என்பது கணக்கிலடங்காதது. மேலும் மோனோசைட் சட்டவிரோதமாக யாருக்கு விற்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை. இது மிகப்பெரிய தேசத்துரோகம். இவ்வளவு ஊழல், மோசடி, பித்தலாட்டங்களைச் செய்த வைகுண்டராஜன் மீது நீதிமன்றங்களில் கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முந்திரா, போபர்ஸ் தொடங்கி பங்குச்சந்தை, முத்திரைத்தாள் வழியாகப் பயணித்து, ஸ்பெக்ட்ரம், எஸ்-பேண்டு, நிலக்கரி ஊழல் வழியாக முன்னேறிக் கொண்டிருக்கும் தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்பது ஊழல் மயம் என்ற அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது என்பது உண்மைதான் என்று நிரூபிக்கிறார்கள் பி.ஆர்.பியும், வைகுண்டராஜனும், ரெட்டி சகோதரர்களும்.

பசுமைத் தீர்ப்பாயம் தாதுமணல் அள்ள இந்தியா முழுவதும் தடைவிதித்துள்ளது. தமிழக அரசும் தற்காலிக தடை விதித்துள்ளது. ஆனால் தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி தொடர்ந்து நடைபெறுகிறது. மணல் அள்ள மட்டும் தான் அரசு தடை விதித்திருக்கிறது. ஏற்றுமதிக்கு அல்ல என்கிறார்கள் அதிகாரிகள். இன்னும் ஆயிரக்கணக்கான டன் கனிமங்கள் ஏற்றுமதிக்குத் தயாராக உள்ளது.

அரசின் அனைத்து துறைகளும் – நீதிமன்றம் உட்பட வைகுண்டராஜனோடு உள்ளனர். மக்களாகிய நாம் தனியாக உள்ளோம். நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் போராட்டம்தான். போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. கூடங்குளம், முல்லைப் பெரியாறு, பிளாச்சிமடா, சிங்கூர், நந்திகிராமம், நியம்கிரி மக்கள் போராட்டங்களின் வெற்றி நமக்கு இதைத் தான் கற்பிக்கின்றது. அச்சம் தவிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவோம்!

  • மக்கள் சொத்தைக் கோடி கோடியாகக் கொள்ளையடித்த வி.வி கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்! சிறையிலடை, சொத்துக்களைப் பறிமுதல் செய்!
  • தொழில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், புற்றுநோய், கருப்பை நோய், கல்லடைப்பு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
  • உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நேர்மையான தகுதிவாய்ந்த நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இழப்பைக் கணக்கிடு!
  • தடயங்களை மணல் மாஃபியாக்கள் அழிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்து!
  • தாது மணல் கொள்ளைக்குத் துணை போன அரசின் அனைத்து அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடு!
  • கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதி!
  • ஒப்புக்கு ஆய்வு நடத்தும் மாநில அரசின் கண்துடைப்பு நாடகத்தைப் புறக்கணிப்போம்!
  • நாட்டையே சூறையாடும் தனியார்மயம், தாராளமயம் உலகமயக் கொள்கையை எதிர்ப்போம்!
  • மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இந்த மிகப் பெரிய மனித உரிமை மீறலை எதிர்த்துக் கடலோர மக்களும் உள்நாட்டு மக்களும் இணைந்து போராடுவோம்! 

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
தூத்துக்குடி, நெல்லை மாவட்டக் கிளைகள்
தொடர்புக்கு: 9443527613, 9442339260, 9486643116