privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்

கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்

-

ச்சத் தீவை மீட்க வேண்டும் என்று சி.பி.எம். கட்சியைத் தவிர, தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் மீண்டும் உரத்த குரலெழுப்பி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி,  தமிழக மக்களால் வெறுத்தொதுக்கப்படும் காங்கிரசுக் கட்சியைத் தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விவகாரத்தைச் சூடேற்றி ஜெயலலிதாவும் இந்துவெறி பா.ஜ.க.வும் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றன.

ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம்
தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையினரின் தொடர் தாக்குதலையும் மைய அரசின் பாரா முகத்தையும் எதிர்த்து ராமேசுவர மீனவர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் (கோப்புப் படம்)

1974-இல் இந்திரா காந்தி தலைமையிலான மைய அரசு, கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது தவறு என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2011-இல் அவர் மீண்டும் முதல்வரானதும் தமிழக அரசே இந்த வழக்கை நடத்தத் தொடங்கியது. 2013-இல் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டுமெனக் கோரித் தனியாக ஒரு வழக்கைத் தொடர்ந்தார். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், நாட்டின் ஒரு பகுதி வேறொரு நாட்டுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதால் இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும், தமிழக மீனவர்களின் நலனைக் காக்கும் வகையில் கச்சத் தீவை மைய அரசு மீட்டெடுக்க வேண்டுமென்பதுதான் இம்மனுக்களின் கோரிக்கை.

கடந்த 30.8.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தனது பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்த இந்திய அரசு, 1974-இல் போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியாவுக்குச் சொந்தமான எந்த ஆட்சிப் பகுதியும் இலங்கைக்கு அளிக்கப்படவில்லை என்றும், எல்லை வரையறுப்பு இல்லாத நிலையில் கச்சத் தீவும் அதையொட்டிய கடற்பகுதியும் விவாதத்திற்குரிய ஆட்சிப் பகுதியாகவே இருந்தன என்றும், 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் இச்சிக்கலைத் தீர்த்து எல்லை வரையறுப்புக்கு வழிகோலின என்றும் கூறியுள்ளது. அதாவது, கச்சத்தீவு இந்தியாவின் பகுதியே அல்ல, அதனைத் திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்பதுதான் இதன் சாரம்.

கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததையும், 1947-க்குப் பிறகு அது இராமநாதபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே இருந்துள்ளதையும் ஆவணப் பதிவேடுகளே நிரூபித்துக் காட்டியுள்ள நிலையில், இதை விட ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், இப்படியொரு பகுதியே இந்தியாவின் எல்லைக்குள் இருந்ததேதில்லை என்று உச்ச  நீதிமன்றத்தில் சத்தியம் செய்கிறது காங்கிரசு கயவாளிகளின் அரசு. தமிழர்களின் நலனுக்கும் தமிழக மக்களின் உணர்வுக்கும் எதிரானதுதான் காங்கிரசு அரசு என்பதற்கு இன்னுமொரு சாட்சியமாக உள்ளது இந்தப் பிரமாணப் பத்திரம்.

நாட்டின் பாரம்பரியமான ஒரு பகுதியை அண்டை நாட்டுக்கு அளிப்பதாக இருந்தால், இதற்கேற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் எல்லை மாற்றம் பற்றிச் சட்டமியற்றப்பட வேண்டும். ஆனால், இந்திய அரசு 1974-இல் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி ஒரு விவர அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்துள்ளது. மேலும், காங்கிரசு கயவாளிகள் கூறுவது போல கச்சத் தீவும் அதையொட்டிய கடற்பகுதியும் எல்லை வரையறுப்பு இல்லாத தாவாவிற்குரிய ஆட்சிப் பகுதியாக இருந்தால், இரு நாடுகளின் கடற்கரையிலிருந்து சம தொலைவு அடிப்படையில் பிரித்து எல்லையை வரையறுக்க வேண்டுமென “கடற்பரப்பு குறித்த ஐ.நா.ஒப்பந்தம்-1958” தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி இராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான 30 கடல்மைல் தொலைவில் சமதொலைவு எல்லையானது 15 கடல்மைல் ஆகும். இராமேசுவரத்திலிருந்து 12 கடல்மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது. தலைமன்னாரிலிருந்து 18 கடல்மைல் தொலைவில் இருக்கிறது. இதன்படிப் பார்த்தாலும், கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தமானது.

எனவே, தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுடன் இலங்கையைத் தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்காக, அன்று இந்திரா தலைமையிலான இந்திய அரசு 1974 மற்றும் 1976-இல் இலங்கை அரசுடன் போட்டுக்கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தம் அநீதியானது; ஐ.நா.வின் வழிகாட்டுதலுக்கு முரணானது; இந்திய அரசு தானே வகுத்துக் கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது.

இம்மோசடி ஒப்பந்தப்படி இலங்கைக்குக் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட போதிலும், மீன்பிடிப்பு உள்ளிட்டு இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் ஈழத் தமிழினத்துக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து தமிழக மீனவர்களின் படகுகள் சிங்களக் கடற்படையால்  நாசமாக்கப்பட்டதோடு, மீனவர்களும் கோரமாகக்  கொல்லப்பட்டனர். ஈழத் தமிழின அழிப்புப் போர் முடிந்த பின்னரும் கூட இன்னமும் சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதும், வலைகளை நாசப்படுத்துவதும், மீனவர்களைக் கைது செய்து சிறையிலடைப்பதும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கைது செயப்பட்ட தமிழக மீனவர்கள் பின்னர் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது விசைப்படகுகளைத் திருப்பித்தர இலங்கை அரசு மறுக்கிறது.

இந்நிலையில், கச்சத் தீவு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை எப்போது முடியும் என்பதற்கு எந்த வரையறையுமில்லை. கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று ஒருவேளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அது இலங்கை அரசை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதும் தெளிவாக்கப்படவில்லை. கச்சத் தீவை இந்தியா மீட்டாலும், அதனால் தமிழக மீனவர்களின் பிரச்சினை தீருமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், “சர்வதேச கடல் எல்லையில்தான் மீன்வளம் அதிகமாக உள்ளது. அதனால் எல்லை தாண்டிப் போதான் மீன்பிடிக்க வேண்டியுள்ளது” என்பதை இராமேசுவர மீனவர்களே ஒப்புக் கொள்கின்றனர். பெரிய விசைப் படகுகளைக் கொண்டுள்ள சிங்கள பெருமுதலாளித்துவ மீனவர்களும் இதே போல நெடுந்தொலைவு வந்து மீன்பிடிக்கப் போட்டியிடுகின்றனர். இம்முதலாளிகளின் வர்க்க நலனுக்காகவே சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்கின்றனர்.

கொல்லப்பட்ட தமிழக மீனவர்
விசைப்படகுகளைப் பறித்து கைது செய்வது மட்டுமின்றி, சிங்கள கடற்படையினர் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதலின் கோரம் – கொல்லப்பட்ட தமிழக மீனவர் (கோப்புப் படம்)

பல நூறாண்டுகளாக இலங்கை-இந்திய கடற்பகுதியில் எல்லை பேதங்களே இல்லாமல் இரு தரப்பு மீனவர்களும் மீன் பிடித்துள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான மிகக்குறுகிய கடல் பகுதியில் 12 கடல் மைல்களிலேயே சர்வதேச எல்லை வந்துவிடுவதால் எல்லை தாண்டுவதைச் சட்டவிரோத கிரிமினல் குற்றமாக்கினால், ஏராளமான தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கத்தான் நேரிடும். எனவே, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான குறுகலான கடல் பகுதி  இரு நாட்டு மீனவர்களுக்குமான பொதுவான மீன்பிடி பிராந்தியமாக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கடல் வளத்தைச் சூறையாட பன்னாட்டு – உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத் தாராள அனுமதியளித்து, மீனவர்களின் வாழ்வுரிமையை முற்றாகப் பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கடல்சார் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட மசோதாவை முற்றாக ரத்து செய்ய வேண்டும்.

இதனை விடுத்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசு அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியுள்ள கொந்தளிப்பை காங்கிரசுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுப் பொறுக்கவே இந்துவெறி பா.ஜ.க. துடிக்கிறது. ஏற்கெனவே கச்சத் தீவைக் கைப்பற்றுவோம் என்று இராமேசுவரத்தில் கடல் முற்றுகைப் போராட்ட நாடகத்தை நடத்திய பா.ஜ.க., இப்போது கச்சத்தீவு விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவித்துள்ள மைய அரசுக்கு எதிராக  வழக்கு தொடுக்கப்படும் என்று உடுக்கையடிக்கிறது. கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மைய அரசு விவாதிக்க வேண்டுமென்று சவுண்டு விடுகிறார் பா.ஜ.க.வின் பொதுச்செயலர் வெங்கய நாயுடு.  கச்சத் தீவை மீட்டு தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று அர்ஜுன் சம்பத் போன்ற நாலாந்தர இந்துவெறியர்கள் கூட சாமியாடுகின்றனர்.

மறுபுறம், சிங்களக் கடற்படையினரால் கைது செயப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மைய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், இரு நாடுகளின் நல்லறவு பாதிக்காத வகையில் கச்சத் தீவை மீட்க மைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மைய அரசுடன் இந்த விவகாரத்தில் முரண்பட்டுத் தமிழக நலனுக்காக நிற்பதைப் போல தமிழக காங்கிரசுப் பெருச்சாளிகள் நாடகமாடுகின்றனர்.

இலங்கையில் சிறையிடப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குத் தனது கட்சித் தொண்டனைக் கூட அனுப்ப முன்வராத ஜெயலலிதா, இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க ஆவண செய்யுமாறும், தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முன்வந்துள்ளதாகவும், இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். கச்சத் தீவை இந்தியாவின் ஆளுமைக்குள் கொண்டு வர வேண்டுமென்று அவரே முன்மொழிந்து தமிழக சட்டமன்றத்தில் ஆரவாரமாக நிறைவேற்றப்பட்ட காகிதத் தீர்மானமோ குப்பைத் தொட்டியில் கிடக்கிறது.

இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தைச் சூடேற்றி தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டவராகக் காட்டிக் கொண்டு ஓட்டுப்பொறுக்கத் துடிக்கும் ஜெயலலிதாவின் பித்தலாட்டத்தையும், பா.ஜ.க.வின் திடீர்த் தமிழின ஆதரவு நாடகத்தையும், இவற்றுக்கு வாய்பொத்தித் துணை போகும் தமிழினப் பிழைப்புவாதிகளையும் அம்பலப்படுத்துவதே இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

மனோகரன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
_________________________________

  1. //தமிழர்களின் நலனுக்கும் தமிழக மக்களின் உணர்வுக்கும் எதிரானதுதான் காங்கிரசு அரசு என்பதற்கு இன்னுமொரு சாட்சியமாக உள்ளது இந்தப் பிரமாணப் பத்திரம்//

    காங்கரசின் கருவருப்பது, தமிழர்களளின் கடமை அல்லவா? திரு. மனோகரன் அவர்களே.

  2. அம்பிகளும்,அக்கிரகாரத்து அத்திம்பேர்களும் என்மீது கோபம் வேண்டாம்…
    தமிழ்நாடு தனி நாடாய் இருப்பது நல்லதுதானே…
    உலக வரைபடத்தில் கிட்டத்தட்ட 38 நாடுகளுக்கு கடல் என்றால் என்ன என்று தெரியாது…
    ந்மக்கு(தமிழ்நாடு) அற்புதமான கடல்-அதுவும் ஒரு பாதுக்காப்பு கவசம்தான்….
    உங்காத்து தினமலம்,ம(வு)ண்டு ரோடு மகாவிழ்னு…வைதியனாத ஐய்யர்வாள்…
    உலகத்துக்கே குறி சொல்லும் கோமாளி துக்லக்..இவாளையெல்லாம் இதுபற்றி பேச
    சொல்லப்படாதோ?
    என்னை தேச பக்தி இல்லாத பிண்டம் என்று அர்ச்சிக்காமல் இருக்கும்படி…விஜ்ஜாபனம்!

  3. ///இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான குறுகலான கடல் பகுதி இரு நாட்டு மீனவர்களுக்குமான பொதுவான மீன்பிடி பிராந்தியமாக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கடல் வளத்தைச் சூறையாட பன்னாட்டு – உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத் தாராள அனுமதியளித்து, மீனவர்களின் வாழ்வுரிமையை முற்றாகப் பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கடல்சார் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட மசோதாவை முற்றாக ரத்து செய்ய வேண்டும்///

    ஓட்டு பொறுக்கும் கும்பல், தமிழினவாதிகள் சிந்திக்கட்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க