privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம்

தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம்

-

னியார்மயம், தாராளமயம்,  உலகமயம் எனும் மரண மயக் கொள்கையால் அன்னிய கம்பெனிகள் முதல், உள்நாட்டுத் தரகு முதலாளிகள் கிரிமினல் மாஃபியா கும்பல்கள் வரை நமதுநாட்டின் கனிமவளம், நீர்வளம் மற்றும் விவசாயம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

தென் தமிழகத்தின் கடற்கரை பகுதிகள் தனது கொள்ளைக்காக மொத்த சமூகத்தையும் அரசையும் தனது கைக்கூலிகளாய் மாற்றி தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவன மயமாக்கியுள்ள வி.வி.மினரல் எனும் மணல் மாஃபியா வைகுண்டராஜனின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. தென்மேற்கு தமிழகமான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் இவனின் கண்சிமிட்டலுக்காக காலை நக்கிப் பிழைக்கின்றன போலிசும், அதிகார வர்க்கமும்.

இத்தகைய சூழலில் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் தாதுமணல் கொள்ளைக்கெதிராக கிராமம் கிராமமாக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

பேருந்து பிரச்சாரம்

garnet-propaganda-08பேருந்து பிரச்சாரத்திற்காக சென்றபோது வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனின் பெயரை அம்பலப்படுத்தி சொல்லும் போது ஒவ்வொரு பயணியும் நம் தோழர் பேசும் பேச்சை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தனர்.  வைகுண்டராஜனின் பெயரைச் சொன்னாலே அடியாட்கள் வந்து கடத்துவார்கள், மிரட்டுவார்கள், கொலையும் செய்வார்கள் என்ற அச்சத்தின் காரணமாக பயணிகளில் சிலர், “வி.வி.யின் பெயரை சொல்ல வேணாம் தம்பி, நீங்கள் தைரியமாக பிரச்சாரம் செய்வது ஆச்சர்யமாக உள்ளது. அவர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை வரும், எச்சரிக்கையாக இருங்கள். அவன் ஆட்கள் மோசமானவர்கள்” என்றனர்.

ஒரு பெண்மணி, நமது உண்டியலில் 100 ரூபாய் போட்டு விட்டு, “எதற்கும் உங்க ஆட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். நெல்லை பேருந்தில், “என்ன தைரியம் உங்களுக்கு? வி.வி. யை எதிர்த்து அவரின் பஸ்லியே அவரைப் பற்றி தரக்குறைவாகப் பேசிவிட்டு நன்கொடை வேறு கேட்கிறீர்கள்” என்றார் பஸ்சின் கண்டக்டர்.  “பஸ் அவருடையதாக இருக்கலாம் நிற்குமிடம் பொது இடம், பஸ்சில் உள்ளவர்கள் பொதுமக்கள் எனவே எங்கள் கருத்தைப்பேச நாங்கள் ஒன்றும் அச்சப்படத்தேவையில்லை” என்றார் ஒரு இளம் பெண் தோழர். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத அந்தக் கண்டக்டர் வேறு வழியின்றி,”நாங்கள் இருக்கிறோம், உங்கள் பிரச்சாரம் சிறக்க வாழ்த்துகிறோம், இந்தாங்க 50 ரூபாய்” என உண்டியலில் போட்டார்.

நெல்லை பஸ் ஸ்டாண்டில் வி.வி.யின் உறவினர், “ஒருவர் வி.வி.யின் கம்பெனியில் எத்தனை பேர் வேலை செய்யராங்க தெரியுமா? ஒழுங்காய் பேசு, வீணா வெட்டுப்பட்டு சாகாதே! வி.வியை எதிர்த்து இங்க ஒரு பயலும் உனக்காக வரமாட்டான்” என்றார்.  “உங்க வி.வி ஒன்னும் உழைச்சு சம்பாதிச்சி வேலை கொடுக்கல. ஏழைகளை ஏமாற்றி, மீனவர்களை ஏமாற்றி, அரசாங்கத்தை ஏமாற்றி, எதிர்க்கிறவங்களை மிரட்டி, தாது மணல் கொள்ளையடிக்கும் தேசத்துரோகி.  நாங்கள் நக்சல்பாரிகள், நாட்டுப்பற்றாளர்கள், எங்களுக்கு ஒன்னும் பயமில்லை. முடிஞ்சா எங்கள வி.வியே வந்து தடுத்துப் பார்க்கட்டும்” என்று சொல்லி விட்டு தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். அந்த பஸ்சில் உள்ளவர்கள் எழுந்து வந்து 50-100 என்று உண்டியலில் நிதி அளித்து அங்கீகரித்தனர்.

ஒவ்வொரு பஸ் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் டிவி ஆடியோவை நிறுத்தி ஒத்துழைப்பு அளித்ததோடு நாம் பேசி வசூலிக்கும் வரை பேருந்து பொறுமையாக காத்திருந்து சென்றனர்.  நமது பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட டிரைவரும் கண்டக்டரும் கூட நிதியளித்து ஆதரித்தனர்.  வி.வி யால் ஆதாயமடைந்து வரும் சிலர் மிரட்டினாலும், பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு நடந்த இப்பிரச்சாரத்தில் மக்கள் மனமுவந்து நிதியளித்து ஆதரித்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் வீடுவீடாக நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு டீ வாங்கி கொடுத்தும் உணவளித்தும் தாராளமாக நிதியளித்தும் தங்கள் பிள்ளைகளைப் போல் மக்கள் பாதுகாத்தனர்.

உவரி கிராமம்

உவரி கிராமத்தில் பிரச்சாரம் செய்தபோது பெரும்பான்மையான மக்கள் நம்மை கைகுலுக்கி வரவேற்று கட்டித் தழுவி அக்கறையுடன் நோட்டிசை வாங்கிப் படித்தனர்.  படிக்கத் தெரியாத பல மீனவர்கள் தங்கள் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி ஆர்வமுடன் கேட்டுவிட்டு முதலில் 10 ரூபாய் போட்டவர் வேகமாக ஓடிவந்து, “நீங்க சொன்னது தான் சரி, இந்த அரசாங்கமே விபச்சாரி பயலுக்குப் பொறந்தது, போலிசு, கலெக்டர் எல்லாம் அவன் பக்கமா இருக்கு, மணல் கம்பெனிக்கு ஆதரவா இருக்கு. உங்கள் பிரச்சாரம் தான் எங்க பக்கம் இருக்கு” என்றார்.

garnet-propaganda-17
கோப்புப் படம்

“வருகின்ற 7-ந்தேதி உவரி உள்ளிட்டு 25 கிராமத்தை சேர்ந்தவர்கள் முதலமைச்சரைப் பார்த்து மணல் கம்பெனி வேணும்ணு மனு கொடுக்க இருக்கானுங்க. இதுக்கு எங்க ஊர் தலைவர் ரேமண்ட் மக்கள் கிட்ட கையெழுத்து வாங்காம இதே ஊர்ல ஹெட் மாஸ்டராக இருக்கற தன் மனைவி மூலம் படிக்கிற பிள்ளைங்க கிட்ட கையெழுத்து வாங்கி இருக்காணுவ இவனுங்க இந்த மண்ணுக்குப் பிறந்தவனுங்களா என்று சந்தேகமா இருக்கு” என்றார்  சகாயமேரி என்னும் வயது முதிர்ந்த பெண்மணி.

“கூடங்குளம் அணு உலைப் பிரச்சனையில ஒன்றாக இருந்த எங்க ஊருல இப்ப தலைவரா இருக்கிற ரேமண்ட் வி.வி க்கு ஆதரவா பணத்த வாங்கி கிட்டு வேலை செய்யுறான்.  இவன் பங்காளிகளும் அடியாள வச்சிகிட்டு போலிசு துணையோட வி.வியை எதிர்க்கிறவங்க மேல கேஸ் போடுறான். உங்களையும் பார்த்தா அடிப்பானுவ, சில நாட்களுக்கு முன் நம்ம ஊரு பசங்க தாய் மண்னை விக்கிறவனும் தாயக் கூட்டிக்தறவனும் ஒன்னு தான் என்றும் வி.வி.யின் கைக்கூலி ரேமண்டே நீ உவரிக் காரனா இல்ல வெளியூர்காரனா என்றும் பிட் நோட்டிஸ் அடித்து  ஒட்டினாங்க. அப்பக் கூடவும் சொரண வராம இருந்தனுவ” என்றார் க்ளெமன்ஸ் எனும் நடு வயதுக்காரர்.

ஊர் தலைவர் ரைமெண்டின் வீட்டிற்கருகில் உள்ள தெருக்களிலும் பின்புறமுள்ள தெருக்களிலும் நோட்டிஸ் கொடுக்கும்போது மக்கள் நம்மை ஆதரித்து சிலர் பழச்சாறு கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

பீச்காலனி பகுதியில் நடுத்தெரு திரல் போட்டு கொடுத்தனர். ஒரு தெரு முடித்து விட்டு அடுத்த தெரு கொடுத்தபோது விவி யின் அடியாட் கும்பலை எதிர்கொள்ள நேர்ந்தது.  2 ஆண்கள் 3 பெண்கள் இருந்தனர், இதில் பெலிக்ஸ் என்பவர் எழுந்து, வேகமாக வந்து, “மணல் கம்பனிய எதிர்த்து நோட்டிஸ் தர்றீங்களா? சு… பயலுவளா தாது மணல்  பூ…. மணல் தே மவனுவலா வெட்டிக்கூறு போடப் போறோம் பாரு, இந்த சிவப்பு சட்டக்காரனுவளா தான் எல்ல ஊரும் இப்ப ரெண்டா கெடக்கு. ஒழுங்கா வந்த வண்டியில ஏறி ஊரு பக்கம் ஓடிப்போங்க. இல்லைன்னா வெட்டு வாங்கிப் போறிங்க” என்று மிரட்டினான்.

பொறுமையுடன் நமது தோழர்கள் விளக்கியும் அவன் கேட்கத் தயாராயில்லை. நமது வேலைக்கு இடையூறு செய்வான் என்பதை உணர்ந்து பக்கத்து தெருவில் பிரச்சாரம் செய்தோம். பிறகு அங்கும் வந்து இடையூறு செய்தான்.  ஆனால் இந்த முறை பின் வாங்காமல் எதிர்கொள்வது என்று முடிவு செய்து, “இங்குதான் பிரச்சாரம் செய்யப் போகிறோம்.  நீங்க வெட்டுனா அதையும் சந்திக்கத் தயார்.  இங்கேயே சாகிறோம்” என்று உறுதியுடன் பிரச்சாரத்தை துவங்கினோம்.  பின் சில நிமிடம் அசிங்கமாக கத்தியவன் போய் விட்டான்.  நமது பிரச்சாரம் தொடர்ந்தது. அன்று உவரி முழுவதும் சிறப்பான பிரச்சாரம் நடைபெற்றது.  மக்களில் கணிசமான நிதியளித்தனர்.

பெருமணல் பகுதி

இங்கே முதலில் நம்மை வரவேற்ற ஜான்சன் என்ற பெரியவருக்கு வயது 57, பிள்ளைகள் இல்லை.  ஒலிபெருக்கித் தொழில் செய்கிறார்.  பரம்பரைக் காங்கிரசுக்காரனான இவரது வீட்டில் எப்போதும் காங்கிரசு கொடி பறக்கும் கூடங்குளம் பிரச்சாரத்திற்குப் பின்பு அந்தக்கொடியின் கீழ் கருப்புக்கொடியையும் சேர்த்துக் கட்டி இருந்தார்.  இந்த கட்சியின் பொறுப்பாளராகவும் இருந்தார்.  ஆனால் கருப்புக் கொடியை கட்ட வேண்டாம் என்று நகரத்தில் உள்ள அவரது கட்சிக்காரர்கள் கேட்டுக் கொண்ட போதும் அவிழ்க்கவில்லை.  “எனக்கு கட்சியை விட என் கடமையும், ஊரும் மண்னும் தான் முக்கியம், மன்மோகன் சிங் ஏன் இந்த பிரச்சனையை பேசி தீர்க்க மறுக்கிறார்” என்று கேட்டு இருக்கிறார்.  இதில் கோபம் அடைந்த நகரப் பொறுப்பாளர்கள், “உடனே கருப்புக்கொடியை அவுருங்க, இல்லைன்ன நாளைக்கு நீங்கள் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என்றனர். “நாளைக்கா நீங்க என்னை நீக்கப் போறிங்க! அட இன்னைக்கே உங்க கட்சி பொறுப்பிலிருந்து விலகிக்கிறேன்” என்று சொல்லி விட்டு போனை கட் செய்தவர் தன் வீட்டு மாடியில் கட்டி இருந்த காங்கிரசுக் கொடியை அவிழ்த்து தூக்கி எறிந்தார்.

garnet-propaganda-06பிரச்சாரத்திற்கு சென்ற செஞ்சட்டைத் தோழர்களை தனது பிள்ளைகளைப் போல் கவனித்தார்.  இரவில் தங்க ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், “இந்த ஊரில் கம்பனிக்கு ஆதரவா உள்ள சில நாய்ங்க  உங்களிடம் வம்புக்கு வருவார்கள்” என்று கூறிவிட்டு இரவு தோழர்களுடன் தங்கி கொண்டார்.

உவரியிலிருந்து பெருமணலில் திருமணம் செய்துகொண்ட ஒருபெண், “எங்க ஊர் கொலைக்கார கும்பல்களிடமிருந்து எப்படி தப்பி வந்திங்க” என்று ஆச்சர்யத்துடன் கேட்டு நமது பிரச்சாரத்தை ஆதரித்து 100 ரூபாய் நன்கொடை அளித்தார். பிரச்சாரத்தின் போது வெயிலில் நா வறட்சியுடன் தண்ணீர் கேட்ட போது பலப்பெண்கள் தோழர்களுக்கு பழச்சாறு கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவருக்கு அந்தோணியார் கோயில் அருகில் உள்ளது வீடு. பெயர் சூசையெப்பா. “சிவப்பு சட்டை புள்ளையுங்க, நீங்கதான் உண்மையான போராளிகள். உங்க நோட்டிசை படித்தேன். உங்க காலில் விழுந்து வணங்கனும் போல இருக்கு” என்று சொல்லி அழுது கொண்டே விழ வந்தார்.

அதைத்தடுத்து இந்த மண்ணின் விடுதலைக்காக போராட துவக்கப் புள்ளியாயிருந்து 1996-ல் மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடிய போது எஸ்.பி. ஜாங்கிட்டின் கொலை வெறியாட்டத் தாக்குதலுக்கு அஞ்சாமல் பொய் வழக்கினையும் இன்றுவரை எதிர்கொண்டு போராடி வரும் ஒரு வீரம் விளைந்த மண்ணின் வீரப்புதல்வனான அந்தப் பெரியவரிடம் டம் தலை வணங்கியதற்காக பெருமை கொள்கிறோம்.

இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள வைகுண்ட ராஜன்கள், அம்பானிகள், டாட்டாக்களை எதிர்த்த உங்களை போன்றோரின் போராட்டம் ஓய்ந்து விடவில்லை.  உங்கள் உணர்வு சோர்ந்து விடவில்லை.  உங்கள் ரத்தம் உறைந்துவிடவில்லை.  உங்கள் குரல் ஓய்ந்துவிடவில்லை, உங்கள் பயணம் தடைபடவில்லை என்றும் உங்கள் பாதையில் இடைவிடாமல் உங்களின் தொடர்ச்சியாய் நாங்கள் நாட்டு விடுதலைப் போரைத் தொடர்வோம் என்றும் அன்று காலனி அடிமைத் தனத்திற்கு எதிராக கருவி ஏந்தியது உங்கள் முன்னோர்கள், இன்று அதே மண்ணில் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான உங்கள் போராட்டம் ஓய்வதில்லை.

ஏனெனில் உங்களின் தொடர்ச்சியாய்….. நாங்கள் நக்சல்பாரிகள்…..

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.

  1. தொடை நடுங்கி , அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு முன்னே செங்கொடி ஏழை எளிய மக்களுக்காக உச்சத்தில் பறக்கிறது . தோழர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் .

  2. மக்கள் போராளிகளை புரிந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது. இப்போதுதான் போராளிகளுக்கும் வேலை அதிகமாக உள்ளது. வெல்லட்டும் போராட்டம். வாழ்த்துகள்.

  3. தோழர்களே , அராஜகமும் அநியாயமும் தலைவிரித்தாடும் இது போன்ற கடுமையான நேரங்களில் , அரசும் அதிகாரமும் காவல்துறையும் நீதிமன்றங்களும் கைவிடும் சூழ்நிலையில் உங்களை பார்க்கும் போது நம்பிக்கை விதை வருகின்றது ! வளர்க நற்பணி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க